Tamilnadu
கஞ்சா போதையில் கும்பல் தாக்குதல்: நண்பனை காப்பாற்றச் சென்ற இளைஞர் படுகொலை - பதைபதைக்கும் தூத்துக்குடி!
தூத்துக்குடி மட்டக்கடை பகுதியை சேர்ந்தவர் ஸ்னோவின். இவர் ஐஸ் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இவரது நண்பர், தூத்துக்குடி பூபாலராயபுரம் 4வது தெருவை சேர்ந்த சூசை.
நேற்று இரவு, ஸ்னோவினும் அவரது நண்பர் சூசையும் தூத்துக்குடி மேட்டுப்பட்டி சங்குகுளி காலனி பகுதியில் டீ கடைக்குச் சென்றுள்ளனர். அப்போது, கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சூசையுடன் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படும் மேட்டுப்பட்டி சங்குகுளி காலனியை சேர்ந்த கருப்பு, சந்தனராஜ், முத்துக்குமார், மணிகண்டன் உள்ளிட்ட 7 பேர் கொண்ட கும்பல் அப்பகுதியில் கஞ்சா மற்றும் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
அந்த பகுதிக்கு வந்த சூசையை பார்த்தவுடன், அந்த கும்பல் அரிவாளால் தலை, முகம் உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக வெட்டியது. அப்போது அங்கிருந்த ஸ்னோவின், தனது நண்பரை காப்பாற்ற முயன்றுள்ளார்.
இதையடுத்து, ஆத்திரமடைந்த கும்பல் ஸ்னோவினையும் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில், சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் ஸ்னோவின் பரிதாபமாக உயிரிழந்தார். தலை மற்றும் வாய்ப்பகுதியில் வெட்டுக்காயமடைந்த சூசை, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக தாளமுத்துநகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும். இல்லையெனில் ஸ்னோவினின் உடலை பெற்றுக்கொள்ள மாட்டோம் என அவரது உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், கடந்த மாதம் ஸ்னோவினின் தங்கை கணவர் ஜாய் என்பவரும் திரேஸ்புரம் பகுதியில் ஒரு கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. நண்பரை காப்பாற்ற முயன்ற இளைஞர் கஞ்சா போதை கும்பலால் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தூத்துக்குடி மக்களிடையே சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
அதேநேரத்தில், நேற்று முன்தினம், நேற்று மற்றும் இன்று என தொடர்ந்து மூன்று நாட்களில் மூன்று கொலைகள் நடைபெற்றுள்ளதால், தூத்துக்குடி மக்களிடையே பாதுகாப்பு குறித்த அச்சம் அதிகரித்துள்ளது.
Also Read
-
“குதிரை பேரம் குறித்து முதல்வர் விஜய் மறுப்பு தெரிவிக்காதது ஏன்?” : திமுக எம்.பி வில்சன் காட்டம் !
-
அரசின் அனுமதி வாங்கி தருவதாக பண மோசடி.. தவெக பிரமுகர் அதிரடி கைது!
-
“லிஃப்ட்” தருவதாக கூறி 40 வயது பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு... திருவள்ளூரில் நடந்த பகீர் சம்பவம்!
-
“சூரியன் ஒருபோதும் மறையாது திரும்ப உதித்தே தீரும்” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
“ரூ.1000 கூட தராம இழுத்தடிக்கிறதுதான் உங்க மாற்றமா?” : முதலமைச்சர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் கேள்வி!