Tamilnadu

பொருளாதார அவசரநிலை பிறப்பிக்கப்படுமா? : பொதுமக்கள் அச்சம் - பிரதமர் மோடிக்கு ரவிக்குமார் எம்.பி கேள்வி!

பிரதமர் மோடியின், நேற்றைய பேச்சு நாட்டு மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. காரணம், வீட்டில் இருந்தே பணிகளை மேற்கொள்வது,

பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு பயன்பாட்டை மக்கள் குறைத்துக்கொள்ள வேண்டும், மெட்ரோ ரயில் மற்றும் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த வேண்டும். அடுத்த ஓராண்டு காலத்திற்கு தங்கம் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில், பிரதமர் மோடி இந்திய மக்களுக்கு விடுத்திருக்கும் வேண்டுகோள் இந்தியாவில் பொருளாதார அவசரநிலை பிறப்பிக்கப்படுமா? என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது என வி.சி.க எம்.பி ரவிக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து ரவிக்குமார் எம்.பி வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

அரசமைப்புச் சட்டத்தின் உறுப்பு 360 நாட்டில் பொருளாதார அவசரநிலையைப் ( financial emergency) பிறப்பிக்கும் அதிகாரத்தை ஒன்றிய அரசுக்கு வழங்குகிறது. “ இந்தியாவின் அல்லது அதன் ஆட்சிப்பகுதியின் ஏதேனும் ஒரு பகுதியின் நிதி நிலைத்தன்மைக்கோ அல்லது கடன் நிலைக்கோ அச்சுறுத்தல் ஏற்படும் வகையிலான ஒரு சூழல் உருவாகியுள்ளது என்று குடியரசுத் தலைவர் திருப்தியடைந்தால், அவர் ஒரு பிரகடனத்தின் மூலம் அத்தகைய அறிவிப்பை வெளியிடலாம்.” என அந்த உறுப்பு கூறுகிறது.

“ ஷரத்து (1)-இல் குறிப்பிடப்பட்டுள்ளவாறான ஏதேனும் ஒரு பிரகடனம் நடைமுறையில் இருக்கும் காலத்தில், அத்திட்டங்களில் குறிப்பிடப்படக்கூடிய நிதிசார் முறைமை நெறிமுறைகளைக் கடைப்பிடிக்குமாறு எந்தவொரு மாநிலத்திற்கும் அறிவுறுத்தல்களை வழங்குவதற்கும், அக்குறிப்பிட்ட நோக்கத்திற்காகக் குடியரசுத் தலைவர் அவசியமென்றும் போதுமானதென்றும் கருதும் பிற அறிவுறுத்தல்களை வழங்குவதற்கும் ஒன்றிய அரசுக்கு நிர்வாக அதிகாரம் இருக்கும்”

அதுமட்டுமின்றி ஒன்றிய மாநில அரசுகளின் ஊழியர்களது ஊதியத்தைக் குறைக்கவும் அது அதிகாரமளிக்கிறது. பொருளாதார அவசரநிலைப் பிறப்பிக்கப்பட்டால் மாநில அரசுகள் பட்ஜெட்டுகளை நிறைவேற்ற முடியாது. அதைக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்ப வேண்டும்.

இந்தியாவில் இதுவரைப் பொருளாதார அவசரநிலை பிறப்பிக்கப்பட்டதில்லை என்றாலும் இப்போது ஈரான்- அமெரிக்கா போர் மீண்டும் வெடிக்கலாம் என்ற நிலையிலும், போர் ஓய்ந்திருந்தாலும் ஹோர்முஸ் நீரிணையில் ஈரான் விதித்துள்ள தடையின் காரணமாகவும் அந்தச் சூழல் உருவாகியிருக்கிறது.

எண்ணெய், எரிவாயு உள்ளிட்டப் பொருட்கள் மட்டுமின்றி யூரியா முதலான விவசாய இடுபொருட்கள் இந்தியாவுக்குக் கிடைப்பதிலும் மிகப்பெரிய நெருக்கடி எழுந்துள்ளது.

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு எடுத்த இஸ்ரேல், அமெரிக்க ஆதரவு நிலைப்பாடு நமது நீண்ட நாள் நட்பு நாடான ஈரானின் கோபத்துக்கு ஆளாக்கியிருக்கிறது.

தற்போது இந்தியா எதிர்கொள்ளும் நெருக்கடிக்குக் காரணம் ஈரான் - அமெரிக்க போர் என்பதைவிட மோடி அரசின் வெளியுறவுக் கொள்கையின் தோல்வியே ஆகும்.

உலக அளவிலான நெருக்கடியிலிருந்து இந்தியாவைக் காப்பாற்றுவது எப்படி என சிந்திக்காமல் அந்த நெருக்கடியின் சுமையை மக்களின் தலையில் சுமத்துவதும், பொருளாதார நெருக்கடி நிலையைப் பிறப்பித்து மாநிலங்களின் நிதி அதிகாரத்தைப் பறித்துத் தன் கையில் வைத்துக்கொள்ள முயற்சிப்பதும் அப்பட்டமான சர்வாதிகார அணுகுமுறையே ஆகும்.

மோடி அரசின் இந்த முயற்சியை அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Also Read: “சட்டப்பேரவையில் இப்போதும் உடன்பிறப்புகள் உருவில் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்” : ப.திருமாவேலன்!