Tamilnadu

மீண்டும் அதிகாரப் போட்டி... தொடரும் கோஷ்டி மோதல்கள் – அதிமுகவின் உட்கட்சி மோதல் வரலாறு!

தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் உட்கட்சி பூசலுக்கு பெயர்போன ஒரு கட்சி என்றால் அது அதிமுக தான். அதிமுக தொடங்கிய காலத்தில் இருந்து தற்போதுவரை உட்கட்சி பூசலுக்கு பஞ்சமே இல்லாமல் கட்சி ஊசலாடும் நிலையில் இருந்து வருகிறது.

குறிப்பாக, அதிமுக வரலாற்றில் மிகப்பெரிய திருப்புமுனை 1987 டிசம்பர் 24 உருவானது. அன்றுதான் எம்.ஜி.ஆர் மறைந்தார். அந்த ஒரு நிகழ்வு தமிழ்நாடு அரசியலையே மாற்றியமைத்தது. எம்.ஜி.ஆர் உயிருடன் இருந்த காலத்தில் அவருக்குப் பிறகு யார் கட்சியை வழிநடத்துவார் என்ற கேள்வி திறந்தவெளியில் எழவில்லை. ஆனால் அவர் மறைந்த உடன் அதிமுகவில் அந்த குழப்பம் உருவானது.

அந்த நேரத்தில் கட்சிக்குள் இரண்டு அதிகார மையங்கள் உருவானது. ஒருபுறம் எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி ராமச்சந்திரனை ஆதரித்த அமைச்சர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் இருந்தனர். மறுபுறம், “அரசியல் வாரிசு நான்” என்ற நிலைப்பாட்டுடன் ஜெயலலிதா தனது ஆதரவாளர்களை ஒருங்கிணைக்கத் தொடங்கினார். இதன் விளைவாக அதிமுக இரண்டு பெரிய அணிகளாக உடைந்தது. ஒன்று ஜானகி அணி. மற்றொன்று ஜெயலலிதா அணி.

இந்த பிளவு முழுமையான அதிகாரப் போராக மாறியது. அப்போது இரட்டை இலை சின்னமே முடக்கப்பட்டது. இரு அணிகளும் தனித்தனியாக தேர்தலில் போட்டியிட்டன. சட்டமன்றத்திலேயே கடும் மோதல்கள் வெடித்தன. அது தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் மிகவும் பரபரப்பான காலகட்டமாக பார்க்கப்பட்டது.

1989 சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அணி குறிப்பிடத்தக்க அளவில் வெற்றி பெற்றது. ஜானகி அணி முற்றிலும் சரிந்தது. அதன் பின்னர் ஜானகி அரசியலில் இருந்து விலகினார். இதன் மூலம் ஜெயலலிதா அதிமுகவின் முழுமையான தலைவராக உருவெடுத்தார்.

ஜெயலலிதா தலைமையிலான காலம் அதிமுக வரலாற்றில் மிகவும் கட்டுப்பாடான அரசியல் அமைப்பாக பார்க்கப்படுகிறது. கட்சியின் அனைத்து அதிகாரங்களும் ஜெயலலிதாவிடம் மட்டுமே மையப்படுத்தப்பட்டிருந்தன. சசிகலா குடும்ப ஆதரவாளர்கள், பழைய எம்.ஜி.ஆர் விசுவாசிகள், தெற்கு மாவட்ட லாபி, மேற்கு மாவட்ட நிர்வாகிகள், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் என பல்வேறு உள்கட்சி வட்டங்கள் இருந்தன. இருப்பினும் ஜெயலலிதாவின் அதிகாரத்தால் வெளிப்படையான பிளவுகள் எழவில்லை என்றாலும் உள்கட்சி அதிருப்திகள் தொடர்ந்து இருந்ததாக கூறப்பட்டது.

ஆனால் 2016 டிசம்பரில் ஜெயலலிதா மறைந்ததும் அதிமுக மீண்டும் மிகப்பெரிய அரசியல் நிலநடுக்கத்தை சந்தித்தது. அந்த மறைவு கட்சிக்குள் மறைந்திருந்த அனைத்து அதிகாரப் போட்டிகளையும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது. முதலில் ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக அறிவிக்கப்பட்டார். பின்னர் சசிகலா கட்சியின் முழு கட்டுப்பாட்டையும் கைப்பற்ற முயன்றார். இதுவே அதிமுகவின் இரண்டாவது பெரிய அதிகாரப் போருக்கு காரணமானது.

2017ல் ஓ.பன்னீர்செல்வம் திடீரென ஜெயலலிதா நினைவிடத்தில் தியானம் செய்து, “என்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்தனர்” என்று கூறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை “தர்மயுத்தம்” என்றார். அந்த ஒரு சம்பவத்திற்குப் பிறகு அதிமுக வெளிப்படையாக பல அணிகளாகப் பிரிந்தது.

ஒருபுறம் சசிகலா அணி. மறுபுறம் ஓ.பன்னீர்செல்வம் அணி. பின்னர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிகார மையம் உருவானது. சசிகலா சிறைக்கு சென்றபின், அவரது ஆதரவுடன் எடப்பாடி பழனிசாமி முதல்வராக்கப்பட்டார். இதன் மூலம் அதிமுக மூன்று முக்கிய அதிகார மையங்களைக் கொண்ட கட்சியாக மாறியது.

இந்த காலகட்டத்தில் கட்சிக்குள் தினமும் பரபரப்பு நிலவியது. எம்.எல்.ஏக்கள் எந்த அணிக்கு ஆதரவு தருகிறார்கள் என்ற குழப்பம் தொடர்ந்தது. அமைச்சர்கள் மாற்றி மாற்றி கருத்து தெரிவித்தனர். இந்த குழப்பத்தின் மத்தியில் டி.டி.வி.தினகரன் தனியாக செயல்படத் தொடங்கினார். “உண்மையான அம்மா அணி நாங்கள்” என்ற கோஷத்துடன் அவர் தனது ஆதரவாளர்களை ஒருங்கிணைத்தார். பின்னர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கி, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரன் பெற்ற வெற்றி அதிமுக தலைமையை கடுமையாக அதிர்ச்சியடையச் செய்தார்.

பின்னர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி அணிகள் இணைக்கப்பட்டன. சசிகலா குடும்பம் கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்டது. ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்வரானார். எடப்பாடி பழனிசாமி முதல்வராக தொடர்ந்தார். வெளிப்படையாக கட்சி ஒன்றுபட்டது போல தோன்றினாலும், உள்ளுக்குள் அதிகாரப் போட்டி தொடர்ந்தது.

2017 முதல் 2022 வரை அதிமுக “இரட்டை தலைமை” அமைப்பில் செயல்பட்டது. ஆனால் அந்த அமைப்பு நீண்ட காலம் நிலைக்கவில்லை. மெதுவாக கட்சியின் அமைப்பு அதிகாரம் முழுமையாக எடப்பாடி பழனிசாமி பக்கம் செல்லத் தொடங்கியது. மாவட்ட செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், அமைப்பு நிர்வாகிகள் பலரும் அவரது தலைமையை ஆதரிக்கத் தொடங்கினர். இதனால் ஓ.பன்னீர்செல்வம் படிப்படியாக தனிமைப்படுத்தப்பட்டார்.

2022ல் “ஒற்றை தலைமை வேண்டும்” என்ற கோரிக்கை அதிமுகக்குள் வெடித்தது. எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் பொதுக்குழு கூட்டத்தில் பழனிசாமி நிரந்தப் பொதுச்செயலாளராக ஆக்கப்பட்டார். அப்போது பழனிசாமி தரப்பை கண்டித்து போராட்டம் நடந்தது. பின்னர் அந்த கூட்டம் மோதலாக மாறியது. ஓ.பன்னீர்செல்வம் அவமானகரமான சூழலில் வெளியேற்றப்பட்டார். பின்னர் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதன் மூலம் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பிரதான தலைவராக முழுமையாக நிலைநிறுத்தப்பட்டார்.

ஆனால் அதிமுகவின் உள்கட்சி அரசியல் அங்கேயே முடிவடையவில்லை. தேர்தல் தோல்விகள், பாஜகவுடன் ஆன கூட்டணி அரசியல் குறித்த அதிருப்தி, வாக்கு வங்கி சரிவு, தலைமை செயல்பாடு குறித்த விமர்சனங்கள் ஆகியவை தொடர்ந்து கட்சிக்குள் புதிய அதிருப்திகளை உருவாக்கின. தொடர்ந்து 11 தேர்தல்களில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக தோல்வியை தழுவியது. ஆனால் 2026 சட்டமன்ற தேர்தலில் எதிர்க்கட்சியாக இருந்த அதிமுக 3ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டது. பல இடங்களில் டெபாசிட் கூட பெற முடியாத நிலையை அதிமுக சந்தித்தது.

இந்நிலையில், பழனிசாமிக்கு தலைமை வகிக்கும் தகுதியோ, வலுவான கூட்டணி அமைக்கும் திறமையோ இல்லை என மூத்த அதிமுக நிர்வாகிகள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இந்த உச்சக்கட்ட மோதலால் அதிமுக மீண்டும் உடைந்துள்ளதாக கூறப்படும் நிலையில், எடப்பாடி பழனிசாமியை சட்டமன்றக் குழுத் தலைவராக நியமிக்க வேண்டும் என 17 எம்.எல்.ஏக்கள் கடிதம் வழங்கியுள்ளனர்.

மற்றொரு தரப்பில், எஸ்.பி. வேலுமணி - சி.வி. சண்முகம் அணிக்கு 30 எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருப்பதால், சட்டமன்றக் குழுத் தலைவர் பதவியை தங்கள் அணிக்கு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் “அதிமுக மீண்டும் பிளவின் விளிம்பிலா?” என்ற கேள்வி மீண்டும் எழுந்துள்ளது.

Also Read: ச்சீ... பெண்களை இழிவு செய்யும் அதிமுக நிர்வாகிகள்.. வேடிக்கை பார்க்கும் அதிமுக - பாஜக பெண் உறுப்பினர்கள்!