Tamilnadu

“பா.ஜ.க-வுக்கு எப்போதும் தமிழ்நாடு அடிபணியாது” : தேர்தல் பரப்புரையில் ராகுல் காந்தி எம்.பி பேச்சு!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான மச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து இன்று காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி எம்.பி தமிழ்நாட்டில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.

பென்னோரியில் நடந்த தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி ”தமிழ்நாட்டுக்கு வருவதும் இங்கு உரை நிகழ்த்துவதும் எனக்கு எப்போதும் ஒரு பெரும் மரியாதைக்குரிய, மகிழ்ச்சிக்குரிய விஷயம்.

காலந்தொட்டு தமிழ்நாட்டு மக்களுடனான என்னுடைய உறவு மேம்பட்டு வளர்ந்திருக்கிறது.

தமிழ்நாட்டு மக்கள் மீது மட்டுமல்ல, தமிழ் மொழியின் மீதும் எனக்குக் காலந்தொட்டு அன்பு அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

தமிழ்நாட்டில் நான் பிறக்கவில்லை என்றாலும், என் குடும்பம் தமிழ்நாட்டில் இல்லை என்றாலும், தமிழ் மண்ணுடன் என்னுடைய உணர்வு ஒன்றியுள்ளது.

எப்போதெல்லாம் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் தமிழ்நாட்டைத் தாக்குகின்றனவோ, அப்போதெல்லாம் நான் ஒரு தமிழனாகவே உணர்கிறேன்.

மகளிர் இடஒதுக்கீடு மசோதா என்ற பெயருக்குப் பின்னால், தொகுதி மறுவரையறைத் திட்டத்தை ஒளித்து வைத்திருந்தது பாஜக. நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டுப் பிரதிநிதிகளின் குரலை ஒடுக்க வேண்டும் என்று அவர்கள் நினைத்தார்கள்.

தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் அந்த எண்ணத்தையும் சட்டத்தையும் நேற்று நாம் எல்லோரும் ஒன்றிணைந்தது தோற்கடித்தோம்.பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளால் தமிழ் மக்களை ஒருபோதும் தொட முடியாது.

தமிழ்நாட்டில் பா.ஜ.க-விற்கு ஒரு கூட்டாளி தேவை. அது எப்படிப்பட்ட கூட்டாளி என்றால், தமிழ்நாட்டை டெல்லியில் இருந்து ஆள்வதற்கு வசதி செய்துகொடுக்கும் ஒரு கூட்டாளியாக அவர்கள் இருக்க வேண்டும்.அமித் ஷாவின் உத்தரவுகளைப் பெற்றுச் செயல்படும் ஒரு பொம்மை முதலமைச்சர் அவர்களுக்குத் தேவைப்படுகிறார்.

தமிழ்நாட்டு மக்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும்; பா.ஜ.க, அ.தி.மு.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் ஆகிய அமைப்புகள் அடிப்படையிலேயே தமிழினத்திற்கு எதிரானவர்கள் என்பதை உணர வேண்டும்.

இந்தத் தேர்தலில் நாம் செய்ய வேண்டிய முக்கியமான காரியம், பா.ஜ.க-வையும் ஆர்.எஸ்.எஸ்ஸையும் இந்தத் தமிழ் மண்ணில் நுழையவிடாதபடி தடுத்து, மகத்தான வெற்றியைப் பெறுவதுதான்.

நாங்கள் விரும்புவதெல்லாம், தமிழ்நாட்டின் எதிர்காலத்தைத் தமிழ்நாட்டு மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும் என்பதுதான்.

தமிழ் மொழி பாதுகாக்கப்பட வேண்டும். தமிழைத் தொடுவதற்கு இந்த மண்ணில் எந்தச் சக்திக்கும் துணிவில்லை.

நரேந்திர மோடி ஒவ்வொரு முறை தமிழ்நாட்டிற்கு வரும்போதும், அவர் தமிழ்நாட்டை டெல்லியில் இருந்து ஆளவே விரும்புகிறார் என்பதைத் தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள்.

எங்களுடைய கூட்டணிக் கட்சிகளை நாங்கள் சமமாகவே பார்க்கிறோம். எங்களுடைய கூட்டணிக் கட்சிகளை மிரட்டுவதற்கோ, உருட்டுவதற்கோ நாங்கள் எப்போதும் எந்த முறையற்ற வழிகளையும் பயன்படுத்தியதில்லை.

பிரதமர் மோடி யாரை வேண்டுமானாலும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரலாம். ஆனால் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ஒருபோதும் அடிபணிய வைக்க முடியாது.

அ.தி.மு.கவை முற்றிலுமாக முடக்கி வைத்துள்ளது பா.ஜ.க. அ.தி.மு.க என்று ஒன்று இப்போது தமிழ்நாட்டில் இல்லை; நரேந்திர மோடியும் அமித் ஷாவும் அ.தி.மு.க-விற்குள் நுழைந்துவிட்டார்கள்.

அ.தி.மு.க ஒரு வெற்று இடமாக உள்ளது. இன்று அ.தி.மு.க என்பது ஒன்றுமே இல்லை; அ.தி.மு.க அழிந்துவிட்டது. இந்த மேலோட்டமான அ.தி.மு.க என்பது வெறும் முகமூடிதான். பா.ஜ.கவின் முகமூடியை அ.தி.முக அணிந்துள்ளது.

அ.தி.மு.க தொண்டர்களையும் தலைவர்களையும் கொடிகளையும் பார்க்கும்போது, அவர்கள் முழுமையாக நரேந்திர மோடி மற்றும் அமித் ஷாவிடம் சரணடைந்துவிட்டது தெரிகிறது.

தங்களுடைய ஊழல் காரணமாக அவர்கள் சரணடைந்துவிட்டார்கள். பா.ஜ.க, அ.தி.மு.கவை முழுவதுமாக அழித்துவிட்டது.

உங்கள் ஆதரவைக் காங்கிரஸ் கட்சிக்கும், தி.மு.கவிற்கும், கூட்டணிக் கட்சிகளுக்கும் பெருமளவில் வழங்க வேண்டும். ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவின் தாக்குதலைத் தடுத்து நிறுத்துங்கள்.

தந்தை பெரியாரின் கொள்கைகளை நாம் நிலைநாட்ட வேண்டும். அவர்கள் பெரியாரின் தத்துவங்களை நசுக்கவும், சமூக நீதிக் கொள்கையை அழிக்கவும் பார்க்கிறார்கள். இது கொள்கைக்கான போர்; அதற்குப் பிறகுதான் இது அரசியல் போர். இது அடக்குமுறைக்கும், ஒன்றுபட்டுச் செல்பவர்களுக்கும் இடையிலான போர்.

தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மாபெரும் வெற்றி பெறும்.” என தெரிவித்துள்ளார்.

Also Read: ”ஆபத்தான அரசியல் நோக்கம்.. அதிகாரத்தை தக்கவைக்க பாஜக போட்ட திட்டம்.. படுதோல்வியால் கலக்கம்!”