Tamilnadu
”பழனிசாமிக்கு அருகதை இருக்கிறதா?” : அதிமுக ஆட்சியின் அவலங்களை பட்டியலிட்டு வெளுத்து வாங்கிய முதலமைச்சர்!
கழகத் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (02-04-2026) ஈரோட்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துப் பேசிய உரையின் விவரம்;
பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் பிறந்த மண்ணில் நின்று, தமிழ்நாட்டிற்கு புதிய விடியலைத் தந்திருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு ஆதரவு கேட்டு நான் இங்கே வந்திருக்கிறேன்.
இது, பெரியார் பிறந்த ஊர் மட்டுமல்ல; பேரறிஞர் அண்ணாவும் - முத்தமிழறிஞர் கலைஞரும் வாழ்ந்து வளர்ந்த ஊர், இந்த ஈரோடு!
பெரியார் இல்லை என்றால் அண்ணா இல்லை! அண்ணா இல்லை
என்றால் கலைஞர் இல்லை! கலைஞர் இல்லை என்றால் நாம் எல்லாம் இல்லை! அந்த வகையில், அனைத்திற்கும் தொடக்கமாக விளங்கும் திராவிடப் பேரூர்தான், இந்த ஈரோடு!
திராவிடப் பேரூரில் நின்று நான் கேட்கிறேன்... மீண்டும் திராவிட மாடல் ஆட்சிக்குத் தயாரா? தயார் (மக்கள்). மகிழ்ச்சி! அதற்காகத்தான், இந்த மாவட்ட வேட்பாளர்கள் இங்கே உங்கள் முன்னால் நின்று கொண்டிருகிறார்கள்.
ஈரோடு மேற்கு சட்டமன்றத் தொகுதியில் நமது வெற்றி வேட்பாளர் மாவட்டக் கழகத்தின் செயலாளர் – அமைச்சர் – நம்முடைய அன்புச் சகோதரர் சு. முத்துசாமி நிற்கிறார். மிக நீண்ட அரசியல் அனுபவம் கொண்டவர். அமைதியாகப் பேசி எதையும் சாதிக்கக் கூடியவர். அதேபோன்று, என்னிடம் பேசி இந்த ஈரோடு மாவட்டத்திற்குப் பல்வேறு திட்டங்களைப் பெற்று செயல்படுத்திக் காட்டியவர். எனவே, ஈரோடு மேற்கு தொகுதி மக்கள், அவருக்கு உதயசூரியன் சின்னத்தில் உங்களின் பொன்னான வாக்குகளை வழங்க வேண்டும் என்று நான் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
அடுத்து, பவானிசாகர் சட்டமன்றத் தொகுதியில் நமது வெற்றி வேட்பாளர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பி.எல். சுந்தரம் அவர்கள். முன்பே சட்டப்பேரவையில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் அவர். பவானிசாகர் தொகுதி மக்களுக்கு நன்கு அறிமுகமானவர். பி.எல். சுந்தரம் அவர்களுக்கு நீங்கள் எல்லாம் கதிர் அரிவாள் சின்னத்தில் உங்களின் பொன்னான வாக்குகளை அளிக்க வேண்டும் என்று நான் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
அடுத்து, மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் நமது வெல்லும் வேட்பாளர் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த செந்தில்நாதன் அவர்கள். பொறியியல் பட்டதாரியான இவர், மக்கள் பணிகளைச் செய்யக் களம் காண்கிறார். கூட்டணிக் கட்சி வேட்பாளராக இருந்தாலும் நம்முடைய வெற்றிச் சின்னத்தில் நிற்கும் அவருக்கு, கழகத்தின் சார்பில் இருக்கும் நண்பர்கள் கடுமையாகக் களப்பணி ஆற்ற வேண்டும். செந்தில்நாதன் அவர்களுக்கு, மொடக்குறிச்சி மக்கள் உதயசூரியன் சின்னத்தில் உங்களின் பொன்னான வாக்குகளை அளிக்க வேண்டும் என்று நான் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
அடுத்து, பெருந்துறை சட்டமன்றத் தொகுதியில் நமது வெல்லும் வேட்பாளர் மாவட்டப் பொறுப்பாளர் தோப்பு வெங்கடாசலம் அவர்கள். இவரது பெயரையே பெருந்துறை வெங்கடாசலம் என்று சொல்லும் அளவிற்குத் தொகுதி மக்களோடு இரண்டறக் கலந்தவர். பெருந்துறை தொகுதி மக்கள் தோப்பு வெங்கடாசலம் அவர்களுக்கு, உதயசூரியன் சின்னத்தில் உங்களின் வாக்குகளை அளித்து வெற்றி பெற வைக்க வேண்டும் என்று நான் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
அடுத்து, அந்தியூர் சட்டமன்றத் தொகுதியில் நமது வெல்லும் வேட்பாளர் எம். சிவபாலன் அவர்கள். ஒன்றியக் கழகச் செயலாளராகச் சிறப்பாகச் செயல்படக் கூடிய ஒரு நல்ல இளைஞர். அந்தியூர் தொகுதி மக்களுக்காகப் பணியாற்ற உங்களிடம் நிற்கிறார். சிவபாலன் அவர்களுக்கு நீங்கள் எல்லாம் உதயசூரியன் சின்னத்தில் உங்களின் பொன்னான வாக்குகளை அளித்து வெற்றி பெற வைக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
அடுத்து, கோபிசெட்டிபாளையம் சட்டமன்றத் தொகுதியில் நமது வெல்லும் வேட்பாளர் மாவட்டச் செயலாளர் என். நல்லசிவம் அவர்கள். நான் இளைஞரணியின் செயலாளராக பொறுப்பேற்றுப் பணியாற்றிய நேரத்தில், இளைஞரணியில் இருந்து கழகப் பணியைத் தொடங்கி, இன்றைக்கு மாவட்டச் செயலாளராக அவர் உயர்ந்திருக்கிறார். தொகுதி மக்களுக்கு நன்றாக பணி செய்ய நல்லசிவம் நிற்கிறார். அவருக்கு கோபிசெட்டிபாளையம் மக்கள் உதயசூரியன் சின்னத்தில் ஆதரித்து அவரைப் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும்.
அடுத்து, பவானி சட்டமன்றத் தொகுதியில் நமது வெல்லும் வேட்பாளர் கே.ஏ. சந்திரசேகர் அவர்கள். ஒன்றியச் செயலாளராக இருந்து கழகத்தை வளர்ப்பவர். இப்போது பவானி தொகுதியை வளர்க்க உங்கள் ஆதரவைக் கோரி நிற்கிறார். அவரையும் நீங்கள் உதயசூரியன் சின்னத்தில் ஆதரவளித்து வெற்றி பெற வைக்க வேண்டும் என்று நான் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். அடுத்து, ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் மூத்த தலைவர் மறைந்த அண்ணன் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்களும், அவரது அன்பு மகன் திருமகன் ஈவேராவும் நின்று வென்ற தொகுதி. விரைவில், நம்முடைய அருமைச் சகோதரர் ராகுல் காந்தி அவர்கள் வேட்பாளர் பெயரை அறிவிக்க இருக்கிறார். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அந்த
வேட்பாளருக்கு, கை சின்னத்தில் உங்களின் பொன்னான வாக்குகளை அளிக்க வேண்டும் என்று நான் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். அதேபோன்று, நம்முடைய அமைச்சராக இருக்கும் சாமிநாதன் அவர்கள், காங்கேயம் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் நிற்கிறார். அவருக்கும் நீங்கள் ஆதரவு தர வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். இந்த மாவட்டத்தில் நிற்கும் 9 வேட்பாளர்களை நீங்கள் சட்டமன்றத்திற்கு அனுப்ப தயாராகிவிட்டீர்களா? நன்றி!
உங்களால் உருவாக்கப்பட்ட இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அன்போடும் உரிமையோடும் உங்களிடத்தில் கேட்டுக் கொள்கிறேன். வெற்றி உறுதியா? வெற்றி உறுதி. வேட்பாளர்கள் உட்காரலாம்.
கடந்த 5 ஆண்டுகளாக நான் நடத்திய ஆட்சியை நீங்கள் எல்லாம் நன்றாக கவனித்திருப்பீர்கள். திராவிட மாடல் என்று சொன்னோம். அது, டெவலப்மெண்ட் மாடல்! அதுவும், வளர்ச்சி என்பது, அனைத்துத் துறை வளர்ச்சியாக - அனைத்துத் தரப்பு மக்களுக்குமான வளர்ச்சியாக - அனைத்து மாவட்டங்களுக்கான வளர்ச்சியாக இருக்க வேண்டும் என்று திட்டமிட்டு, ஒவ்வொரு திட்டத்தையும் நாங்கள் செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம். அந்த வகையில், நம்முடைய ஈரோடு மாவட்டத்திற்குச் செய்யப்பட்டிருக்கும் திட்டங்களில் சிலவற்றை மட்டும் உங்களுக்கு நான் தலைப்புச் செய்திகளாக நினைவுபடுத்த விரும்புகிறேன்...
அ.தி.மு.க. ஆட்சியில், விவசாயிகளின் பல்வேறு போராட்டங்களால் கொண்டு வந்த மேற்கு மண்டல மக்களின் கனவுத் திட்டமான, அத்திக்கடவு - அவினாசி திட்டத்தை முழுமையாக நிறைவேற்றிக் காட்டிய ஆட்சிதான், நம்முடைய திராவிட மாடல் ஆட்சி.
ஆட்சிக்கு வந்த அடுத்த ஆண்டே ஈரோட்டில் மஞ்சள் ஆராய்ச்சி மையத்தைத் திறந்து வைத்தேன். ஈரோடு மக்களின் இருபது ஆண்டுகாலக் கோரிக்கையை நிறைவேற்ற சிக்கய்ய நாயக்கர் தனியார் கல்லூரியை அரசுக் கல்லூரியாக இன்றைக்கு மாற்றியிருக்கிறோம்.
ஈரோடு மாநகராட்சி பேருந்து நிலையம். அதேபோன்று, பவானிசாகர் மற்றும் அந்தியூர் பகுதியில் அணை கட்டுவதற்காக நிலம் கொடுத்தவர்களின் எஞ்சியுள்ள நிலங்கள் நிபந்தனைப் பட்டாக்களை அயன் பட்டாக்களாக மாற்றி, நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றித் தந்ததுதான், திராவிட மாடல் ஆட்சி!
நாட்டிற்காகவும், நாட்டு மக்களுக்காகவும் உழைத்த தலைவர்களை போற்றி, நினைவுச் சின்னங்கள் அமைத்து மரியாதை செலுத்துவதில் தி.மு.க. அரசுக்கு இணையாக, எந்த அரசையும் சொல்ல முடியாது. அதற்கு எடுத்துக்காட்டாகதான், ஜெயராமபுரத்தில் விடுதலைப் போராட்ட வீரர் பொல்லான் அவர்களுக்கு முழு உருவச் சிலையுடன் அரங்கம் கட்டியிருக்கிறோம்!
அதேபோன்று, அரச்சலூர் ஓடாநிலையில் விடுதலைப் போராட்ட மாவீரர் தீரன் சின்னமலை அவர்களுக்கு, குதிரை மேல் அமர்ந்துள்ள வெண்கலச் சிலை அமைத்திருக்கிறோம்!
அந்தியூரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுரி தொடங்கியிருக்கிறோம்! முடுக்கந்துறையில் உத்தம தியாகி ஐயா எம்.ஏ. ஈஸ்வரன் அவர்களுக்கு முழு உருவச் சிலையுடன் கூடிய அரங்கத்தைத் திறந்து வைத்திருக்கிறோம்!
சித்தோடு ஆவின் வளாகத்தில் பால்வளத்தந்தையாக விளங்கிய எஸ்.கே. பரமசிவம் அவர்களுக்கு முழு உருவச் சிலை திறந்து வைத்திருக்கிறோம்! அட்டவணைப்பிடாரியூரில் விடுதலைப் போராட்ட வீரர் கொடிகாத்த குமரன் அவர்களுக்கு முழு உருவச் சிலையுடன் அரங்கம் அமைத்துக்கொண்டு இருக்கிறோம்.
அந்தியூரில் அரசு மற்றும் கலை கல்லூரி தொடங்கியிருக்கிறோம். தாளவாடியில் அரசு மற்றும் கலை கல்லூரி தொடங்கியிருக்கிறோம். ஈரோடு, சத்தியமங்கலம், மற்றும் கோபிசெட்டிபாளையத்தில் அறிவுசார் மையங்களை அமைத்திருக்கிறோம்.
பேரூராட்சிகள் சார்பில் 70 பூங்காக்கள் அமைத்திருக்கிறோம். ஈரோட்டில் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூடுதல் கட்டடம். அரசு மருத்துவமனைக் கட்டடம். மத்திய பேருந்து நிலையத்தில் வணிக வளாகம், கனி மார்க்கெட், காலைமாடு சிலை வணிக வளாகம்.
கால்நடை மருத்துவமனை. வ.உ.சி பூங்கா மைதானத்தில் செயற்கை இழை ஓடுதளம். அரசினர் பொறியியல் கல்லூரியில் உள்விளையாட்டு அரங்கம். சித்தோடு ஒழுங்குமுறை விற்பனைக் கூடம். மொடக்குறிச்சி கூட்டுக் குடிநீர்த் திட்டம். பெருந்துறை கூட்டுக் குடிநீர்த் திட்டம். சென்னிமலை கூட்டுக் குடிநீர்த் திட்டம். சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மலைப் பாதையைத் தார் சாலையாக ஆக்கியிருக்கிறோம். அடிவாரத்தில் பேருந்து காத்திருப்புக் கூடம் – இப்படி பலவற்றை அமைத்திருக்கிறோம்.
இதுமட்டுமல்ல, பவானி ஆற்றின் குறுக்கே 8 தடுப்பணைகளை ஏற்படுத்தி இருக்கிறோம். அந்தியூர் தேனிமடுவு பள்ளத்தின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட இருக்கிறது.
கங்காபுரத்தில் நியோ டைடல் பார்க் வர இருக்கிறது. இன்னும் லிஸ்ட் என்னிடத்தில் பெரிதாக இருக்கிறது. இப்படி, வேளாண்மை, உட்கட்டமைப்பு, தகவல் தொழில்நுட்பம், கல்வி என்று எல்லா துறைகளிலும் உங்களுக்கான வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றிக் கொடுத்திருக்கும் உரிமையோடும் பெருமையோடும்தான் உங்களிடத்தில் கம்பீரமாக வாக்கு கேட்க வந்திருக்கிறேன். நம்மை எதிர்த்து வாக்கு கேட்பவர்கள், நாம் மக்களுக்கு என்ன செய்தோம் என்று கேட்கிறார்கள்? அதைப் பார்க்கும்போது, கேட்கும்போது நமக்குச் சிரிப்பாகத்தான் இருக்கிறது. கேள்வி கேட்பவர்களுக்கு, நான் தெம்போடு
சொல்கிறேன்... தமிழ்நாடு முழுவதும் எங்களுடைய திட்டங்களால் பயனடையும் பயனாளிகள் வீட்டிற்கு ஒருவராவது நிச்சயம் இருக்கிறார்கள். அவர்கள் சொல்வார்கள் உங்களுக்கு, இந்த திராவிட மாடல் அரசு என்ன செய்தது என்று. அந்தளவிற்கு ஒவ்வொரு திட்டத்தையும் உன்னிப்பாக கவனித்து எல்லோருக்கும் திட்டங்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம்! சுருக்கமாகச் சிலவற்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன்.
ஒரு கோடியே 31 இலட்சம் மகளிருக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை, மகளிருக்குக் கட்டணமில்லா விடியல் பயணம் திட்டம், கல்லூரி மாணவியருக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமைப்பெண் திட்டம், அதேபோன்று, மாணவர்களுக்குத் தமிழ்ப்புதல்வன் திட்டம், மகளிர் பாதுகாப்பாகத் தங்குவதற்குத் தோழி விடுதிகள், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு
சுழல்நிதி, தாய்சேய் நலப் பரிசுப் பெட்டகத் திட்டம், கர்ப்பிணிப் பெண்களுக்கான தடுப்பூசித் திட்டம், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினப் பெண்களுக்கான நுண் கடன் திட்டம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினப் பெண்களுக்கான தொழில் முனைவோர் திட்டம், மலைவாழ் மக்களுக்கான மருத்துவ சேவைத் திட்டம், கைக்குழந்தைகள் மற்றும் இளங்குழந்தைகளுக்கான ஊட்டச்சத்துத் திட்டம் என்று இந்தத் திட்டங்களைப் பற்றி நான் நாள் முழுவதும் இங்கே சொல்லிக் கொண்டிருக்க முடியும்!
அதனால்தான், நான் செல்லும் இடங்களில் எல்லாம் தாய்மார்கள், சகோதரிகள், மாணவிகள், இளைஞர்கள் என்று எல்லோரும் கூடி, அளவில்லா அன்புடன் வரவேற்கிறார்கள்! குடும்பத்தில் ஒருவராக நினைத்துப் பாசத்தைப் பொழிகிறார்கள். மகளிர் சிறந்து விளங்கினால் அவர்களின் குடும்பம் மட்டுமல்ல, ஒட்டுமொத்தச் சமூகமும் சிறந்து விளங்கும் என்று, மகளிரின் உயர்வுக்கும், பொருளாதார சுதந்திரத்திற்கும் நாம் எடுத்திருக்கும் முன்னெடுப்புகள், பல மாநிலங்களுக்கு வழிகாட்டியாக இருக்கப்போகிறது!
உரிமைத்தொகை - விடியல் பயணம் - புதுமைப்பெண் - தோழி விடுதி மட்டுமல்ல, பெண்கள் பெயரில் பதியப்படும் சொத்துகளுக்கு பதிவுக் கட்டணத்தில் ஒரு விழுக்காடு குறைத்திருக்கிறோம்! அதேபோன்று, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் புதிதாக வீடு ஒதுக்கும்போது, அந்தக் குடும்பத்தின் பெண்கள் பெயரில்தான் வீடுகளை இன்றைக்கு ஒதுக்கீடு செய்து கொண்டிருக்கிறோம்.
அதேபோன்று, குழந்தைத் திருமணம், குழந்தை பாலியல் வன்கொடுமை, குடும்ப வன்முறை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண, பாலின வள மையங்களை உருவாக்கியிருக்கிறோம். சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் அளவிற்குச் சட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறோம். டிஜிட்டல் குற்றங்களுக்கும் கடுமையான தண்டனைகள் கொடுக்கும் சட்டங்களை நிறைவேற்றியிருக்கிறோம்.
ஒரு குற்றம் நடந்தால் எவ்வளவு துரிதமாக நடவடிக்கை எடுத்து, குற்றவாளிகளைத் தண்டிக்கிறோம் என்பதில்தான், ஒரு அரசின் செயல்பாடு மதிப்பிடப்படும். அப்படிப் பார்த்தால், 86 விழுக்காட்டிற்கு மேலான வழக்குகளில் 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது இந்த திராவிட மாடல் ஆட்சியில்தான். இந்தியாவிலேயே பெண்கள் அதிகமாக வேலைக்குச் செல்வது, நம்முடைய தமிழ்நாட்டில்தான்! இங்கு சட்டம் - ஒழுங்கு சரியாக இருக்கிறது; பெண்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள்! அதனால்தான், தைரியமாக வேலைக்குச் செல்கிறார்கள்! ஏராளமான தொழிற்சாலைகளும் தமிழ்நாட்டை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள்.
தமிழ்நாட்டின் இந்த வளர்ச்சி, பா.ஜ.க.வின் கிளைச் செயலாளரான பழனிசாமி அவர்களுக்கு எரிச்சலைத் தருகிறது; வயிறு எரிகிறது. அவரின் எண்ணவோட்டம் என்ன தெரியுமா? “என்னடா, கால்களில் தவழ்ந்து, கால்களை வாரிவிட்டு ஆட்சிக்கு வந்தோம். இந்த தி.மு.க.வும் - ஸ்டாலினும் ஒரு தேர்தலில்கூட வெற்றிபெற விடமாட்டேன் என்கிறார்கள் என்ற பொறாமையில், பொய்யையும் - புரளியையும் பரப்புகிறார்.
பெண்கள் பாதுகாப்பைப் பற்றி பேசுவதற்குப் பழனிசாமிக்கு அருகதை இருக்கிறதா? அ.தி.மு.க.வின் பொல்லாத ஆட்சிக்கு ‘பொள்ளாச்சியே சாட்சி’ என்று ஒட்டுமொத்தத் தமிழ்நாடும் சொல்லியதே! “அண்ணா அடிக்காதீர்கள் அண்ணா – வலிக்கிறது” என்று அப்பாவிப் பெண்கள் கண்ணீருடன் கதறியது இப்போதும் நம்முடைய காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அந்தக் கதறல்கூட பழனிசாமியின் மனச்சாட்சியை உலுக்கவில்லையா... பொள்ளாச்சி வழக்கில் எப்படிப்பட்ட நாடகங்களையெல்லாம் நடத்தினார் பழனிசாமி. முதலில் வழக்கு போடாமல் இழுத்தடித்தார்... பிறகு, சம்பந்தப்பட்ட குற்றவாளியைத் தப்பிக்க விட்டார்கள். பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர்களைப் பொதுவெளியில் சொல்லி, மிரட்டல் விடுத்தார்கள். ஆனால், அந்த வழக்கையும் முறையாக நடத்தி, குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வாங்கித் தந்து, 85 லட்சம் ரூபாய் இழப்பீட்டையும் இன்றைக்கு வாங்கித் தந்த ஆட்சிதான், திராவிட மாடல் ஆட்சி.
பொள்ளாச்சி வழக்கு மட்டுமா? ஒரு பெண் எஸ்.பி.-க்கே பாலியல் தொல்லை கொடுத்த டி.ஜி.பி.யைப் பாதுகாத்தது, அன்றைக்கு முதலமைச்சராக – இன்றைக்கு எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் பழனிசாமிதானே? அந்தப் பெண் எஸ்.பி.யை வழிமறித்து, ஒரு டி.ஜி.பி.யே மிரட்டியது பழனிசாமி ஆட்சியில்தானே? இந்த வழக்கில்கூட தண்டனை வாங்கிக் கொடுத்தது நம்முடைய ஆட்சியில்தான்.
இதெல்லாம் மட்டுமல்ல, பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கும் அ.தி.மு.க. ஆட்சிகளுக்கும் பெரிய ஹிஸ்டரியே இருக்கிறது. தருமபுரியில் பேருந்தில் மூன்று மாணவிகள் எரிக்கப்பட்டார்களே... பெண் ஐ.ஏ.எஸ். மீது ஆசிட் வீச்சு என்று பெண்களுக்கு எதிராக அ.தி.மு.க.வினர் செய்த படுபாதகங்களைப் பெரிய லிஸ்ட்டே போடலாம். ஆனால், பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு மரண தண்டனையே கொடுக்கும் அளவிற்கு சட்டங்களை நிறைவேற்றியிருப்பது நம்முடைய ஆட்சிதான், திராவிட மாடல் அரசு!
பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியானது பழனிசாமி ஆட்சியில்! பெண்களைப் பாதுகாத்து கல்லூரிகளுக்கும் - வேலைகளுக்கும் அனுப்பி தலைநிமிர வைத்து, உற்ற தோழனாக இருப்பது திராவிட மாடல் ஆட்சிதான்! இந்த உண்மைகளை எல்லாம், பொய்ச் செய்திகளையும் -அவதூறுகளையும் பரப்பி மறைக்கலாம், திசைதிருப்பலாம் என்று கருதி, பா.ஜ.க.வின் என்.டி.ஏ. ஆட்சியை கொண்டுவந்து தமிழ்நாட்டை கபளீகரம் செய்துவிடலாம் என்று கற்பனைக் கோட்டையில் இன்றைக் அவர் உலா வந்து கொண்டிருக்கிறார்.
தன்னுடைய அரசின் சாதனைகள் என்று சொல்லப் பழனிசாமியிடம் எதுவும் இல்லை; தமிழ்நாட்டிற்கு எலக்ஷன் டூர் வரும் பிரதமரிடமும் எதுவும் இல்லை! சாதனை என்று சொல்லிக் கொள்ளலாம் என்று நினைத்தால், மதுரை எய்ம்ஸை செங்கல் செங்கல்லாகக் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதுதான் சாதனை... அவர்களிடம் சாதனை லிஸ்ட்டே இல்லை. ஆனால், நம்மிடம் அவர்களின் துரோக லிஸ்ட் இருக்கிறது. சொல்லட்டுமா...
நீட் துரோகம்! மெட்ரோ ரயில் திட்டங்களைத் தராமல் துரோகம்! நூறு நாள் வேலைத்திட்டத்தை ஒழித்த துரோகம்! சிறுபான்மையினருக்கு சி.ஏ.ஏ. துரோகம்! விவசாயிகளுக்கு வேளாண் சட்ட துரோகம்! அமெரிக்க வரிவிதிப்பில் நெசவாளர்களைக் காப்பாற்றத் தவறிய துரோகம்!
மேற்காசியப் போரில் சிறு, குறு நடுத்தரத் தொழில் நிறுவனங்களை முடங்க வைத்திருக்கும் துரோகம்! இந்தி மொழியைத் திணிக்க, நம்முடைய குழந்தைகளுக்குச் சேர வேண்டிய கல்வி நிதியைத் தராத துரோகம்!
ஜி.எஸ்.டி இழப்பீடு தராத துரோகம்! மாநில உரிமைகளை பறிக்கும் துரோகம்! இவ்வாறு துரோகங்களின் முழு உருவமாக இருப்பதுதான், பழனிசாமியும் - அவரின் கூட்டாளி பா.ஜ.க.வும்! குற்றங்களுக்கு மேல் குற்றங்கள் செய்து, தமிழ்நாட்டு மக்கள் முன்பு குற்றவாளி கூண்டில் நிற்பது என்.டி.ஏ. கூட்டாளிகள்! மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி அமைத்தோம். இங்கே அண்ணன் முத்தரசன் வந்திருக்கிறார். கொள்கை மாறாமல் இன்றைக்கு நாங்கள் பயணம் செய்து கொண்டிருக்கிறோம். எப்படிப்பட்ட பயணம், மாநில உரிமைகளைக் காக்க - தமிழை உயர்த்த - இனமான உணர்வைப் போற்ற - தமிழ்நாட்டின் தனித்துவத்தைக் காக்க - கொள்கைகளால் நாங்கள் ஒன்று சேர்ந்திருக்கிறோம்!
ஆனால், என்.டி.ஏ. கூட்டணியைப் பாருங்கள். 2016-இல் அமித் ஷா என்ன சொன்னார். அ.தி.மு.க. அமைச்சரவைதான் ஊழல்வாதிகள் நிறைந்த அமைச்சரவை என்று சொன்னார். ஆனால், அந்த ஊழல்கூட்டம் மொத்தமும் இப்போது அதே அமித்ஷாவுடன் நிற்கிறது. சம்பந்திக்கு டெண்டர் கொடுத்த பழனிசாமி தொடங்கி, அவருடன் இருந்த ஒவ்வொரு அமைச்சரும் ஊழல் குற்றவாளிகள் என்பதற்கு உதாரணம் ஒன்றா? இரண்டா? குட்கா குற்றவாளி - உள்ளாட்சி டெண்டர் குற்றவாளி - இப்படி ஒரு டஜன் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்களைச் சொல்லலாம். அவர்கள் மட்டுமல்ல... அவர்களுடன் கூட்டணி வைத்திருப்பவர்களைப் பாருங்கள்.
ஒருவர் தேர்தல் ஆணையத்திற்கே இலஞ்சம் கொடுக்கும் வழக்கில் சிக்கியவர். இன்னொருவர் மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி கொடுப்பதில் மாட்டியவர். உதிரிகளைப் பற்றியெல்லாம் நான் சொல்ல வேண்டுமா? இப்படி குற்றவாளி கூண்டில் நிற்க வேண்டியவர்கள் கூட்டணியாக வந்து, இன்றைக்குத் தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றப் பார்க்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டு மக்கள்தான், அவர்களுக்கு ஏமாற்றத்தைத் தரப் போகிறார்கள். இந்த மேடையில் இருந்து சொல்கிறேன். என்.டி.ஏ எனும் துரோகக் கூட்டணியை தமிழ்நாட்டு மக்கள் ஏப்ரல் 23-ஆம் நாள் நிச்சயம் தூக்கி எறிவார்கள். அது, உறுதி! உறுதி!
டபுள் எஞ்சினாவது, டப்பா எஞ்சினாவது! தமிழ்நாட்டை வீழ்த்த வேண்டும் என்ற எண்ணத்துடன் நுழைய நினைத்தால், தடம் புரளுவது மாதிரி விரட்ட வேண்டும்! நம்முடைய போராட்டம்; தி.மு.க.வின் வெற்றிக்கு மட்டுமல்ல; கூட்டணியின் வெற்றிக்காக மட்டுமல்ல, ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டின் வெற்றிக்காக! மறந்துவிடாதீர்கள்.
எனவே, தாய்த் தமிழ்நாட்டைக் காக்க, அனைவரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை நீங்கள் ஆதரிக்க வேண்டும் என்று அன்போடு கேட்கிறேன்; உரிமையோடு கேட்கிறேன்; ஏன் கலைஞரின் மகனாகக் கேட்கிறேன்.
ஈரோடு மேற்கு சட்டமன்றத் தொகுதியில் நம்முடைய சு. முத்துசாமி அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்திலும், அதேபோன்று, பவானிசாகர் சட்டமன்றத் தொகுதியில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பி.எல். சுந்தரம் அவர்களுக்குக் கதிர் அரிவாள் சின்னத்திலும், மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் ம.தி.மு.க.வைச் சேர்ந்த செந்தில்நாதன் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்திலும், பெருந்துறை சட்டமன்றத் தொகுதியில் தோப்பு வெங்கடாசலம் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்திலும், அந்தியூர் சட்டமன்றத் தொகுதியில் எம். சிவபாலன் அவர்களுக்கும், கோபிசெட்டிபாளையம் சட்டமன்றத் தொகுதியில் என். நல்லசிவம் அவர்களுக்கும், பவானி சட்டமன்றத் தொகுதியில் நமது வெல்லும் வேட்பாளர் கே.ஏ.சந்திரசேகர் அவர்களுக்கும் உதயசூரியன் சின்னத்தில் நீங்கள் எல்லாம் ஆதரவளிக்க வேண்டும்.
அதேபோன்று, காங்கேயம் சட்டமன்றத் தொகுதியில், வேட்பாளராக நிற்கும் சாமிநாதன் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்திலும், ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் இன்று இரவுக்குள் நம்முடைய ராகுல் காந்தி அவர்கள் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரை அறிவிக்க இருக்கிறார். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அந்த வேட்பாளருக்கு, கை சின்னத்திலும் உங்களின் வாக்குகளைப் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.
தமிழ்நாடு தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் நடைபோட நீங்கள் ஆதரவைத் தந்திட வேண்டும்! அமையவுள்ள திராவிட மாடல் 2.0 ஆட்சியில் தன்னிகரில்லாத தமிழ்நாட்டை உருவாக்குவோம்! உலகமே திரும்பிப் பார்க்கும் அளவிற்கு உயர்த்துவோம்!
எனவே, ஆதரிப்பீர் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி
வேட்பாளர்களை! வெல்வோம் ஒன்றாக! வெல்வோம் ஒன்றாக!
வெல்வோம் ஒன்றாக!
Also Read
-
சிறுபான்மைத் தொண்டு நிறுவனங்களின் நிதியை முடக்கும் ஒன்றிய பாஜக அரசு : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
கொரோனாவிலும் ஊழல் செய்த பழனிசாமி, இப்போது கப்சாக்களை அடித்து விடுகிறார்... - முரசொலி விமர்சனம்!
-
”வெளியான கருத்துக்கணிப்பு முடிவுகள்... வடக்கு முதல் மேற்கு வரை முந்தி நிற்கும் திமுக” : முழு விவரம் அறிய!
-
தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணத்தை சூப்பர் ஃபாஸ்டாகத் தொடரபோகும் திமுக 2.0 : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
NDA-வை புறக்கணிக்க வேண்டும்! அதுதான் தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்கு நல்லது : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!