Tamilnadu
தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணத்தை சூப்பர் ஃபாஸ்டாகத் தொடரபோகும் திமுக 2.0 : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
கழகத் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று கரூரில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துப் பேசினார்.
அப்போது தி.மு.கவின் தேர்தல் அறிக்கையில் உள்ள முக்கியான வாக்குறுதிகள் குறித்து மக்களுக்கு எடுத்துரைத்தார். அதன் விவரம் வருமாறு:-
தமிழ்நாட்டு மக்களான நீங்கள் என்னுடன் இருக்கும் வரைக்கும், டபுள் எஞ்சின் - டப்பா எஞ்சின் என்று யாரும் தமிழ்நாட்டைச் சீரழிக்க உள்ளே வர முடியாது! அதைத் தடுத்து நிறுத்தி, தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணத்தை சூப்பர் ஃபாஸ்டாகத் தொடரத்தான், திராவிட மாடல் 2.0-வுக்கான சூப்பர் ஸ்டார் களத்திற்கு வந்திருக்கிறார். அதுதான், என்.டி.ஏ.வின் தூக்கத்தை கெடுத்து பழனிசாமிக்கு பதட்டத்தை கொடுத்திருக்கும் தி.மு.க. தேர்தல் அறிக்கை! அதில் நான் சொல்லியிருக்கும் அறிவிப்புகளை எல்லாம் நீங்கள் செய்திகளில் பாத்திருப்பீர்கள். ஹைலைட்டாக, பெரும் வரவேற்பை பெற்றிருக்கும் சில முத்தான வாக்குறுதிகளை மட்டும் நான் சொல்லப் போகிறேன்.
மாதம்தோறும் 1,000 ரூபாய் மகளிர் உரிமைத்தொகை என்பதை டபுள் மடங்காக இனி 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப் போகிறோம்! என்ன மகிழ்ச்சிதானே? மகிழ்ச்சி (மக்கள்).
புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன் திட்டத்தில் கல்லூரிக்கு செல்லும் மாணவர்களுக்கு இப்போது மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கி வருகிறோம். இனி அது ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
அதேபோன்று, ஏற்கெனவே 5-ஆம் வகுப்பு வரை இருந்து காலை உணவுத் திட்டத்தை 8-ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப் போகிறோம்! மேலும், 15 இலட்சம் மாணவர்கள் பயன்பெறப்போகிறார்கள். இன்னும் அதிகமான தாய்மார்கள் காலையில் சீக்கிரம் எழுந்து சமையல் செய்யும் சுமை குறையப் போகிறது.
இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சி தரும் இன்னொரு சூப்பர் டூப்பர் வாக்குறுதியையும் கொடுத்திருக்கிறோம். இல்லத்தரசிகள் தங்களின் வீட்டிற்குத் தேவையான வாஷிங் மெஷின், ஃபிரிட்ஜ், டி.வி., கிரைண்டர், மிக்சி, மைக்ரோ-வேவ் அவன், மின் அடுப்பு போன்ற வீட்டு உபயோகப் பொருட்களை புதிதாக வாங்கவும் அல்லது ஏற்கெனவே பயன்படுத்தி வரும் இத்தகைய பொருட்களைக் கொடுத்துவிட்டு அதற்கு பதிலாக வேறு வாங்கிக் கொள்ளவும், ‘இல்லத்தரசி’ என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும். அதுவும் நீங்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள உங்களுக்குப் பிடித்த கடைகளிலேயே உங்களுக்குப் பிடித்த கம்பெனி, உங்களுக்கு பிடித்த மாடலாக பார்த்து, இந்தப் பொருட்களை நீங்கள் வாங்கிக் கொள்ளலாம். இதற்காக ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 8 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கூப்பன் கொடுத்துவிடுவோம். இன்றைக்கு தமிழ்நாடு முழுவதும் இந்தத் திட்டத்தைப் பற்றிதான் ஒரே பேச்சாக இருக்கிறது. நம்முடைய பெண்கள் ஒரு சேலை வாங்கினால் கூட, அவர்களுக்குப் பிடித்த கடையில், அவர்களுக்குப் பிடித்த டிசைனில், அவர்களுக்குப் பிடித்த கலரில் வாங்க வேண்டும் என்று நினைப்பார்கள். அதை மனதில் வைத்துதான் இந்தத் திட்டத்தை உருவாக்கி இருக்கிறோம். இல்லத்தரசி திட்டத்தில் என்ன வாங்க வேண்டும், எப்படி வாங்க வேண்டும், எல்லாமே ‘உங்கள் சாய்ஸ்’!
அதேபோன்று, உலகிற்கே உணவு அளிக்கும் உழவர்களை மகிழ்விக்க ஒரு மாபெரும் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறோம். இலவச மின்சாரம் பெறும் 20 இலட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு, எந்த வித மீட்டரும் பொருத்தப்படாத நவீன மின்சாரப் பம்பு செட்டுகள் வழங்கப்படும். அனைவரும் பழைய பம்பு செட்டு வைத்திருப்பீர்கள். சில பம்புசெட்டுகள் அடிக்கடி ரிப்பேர் ஆகும். அதிக விலை கொடுத்து வாங்க முடியாத நிலையில் இருப்பீர்கள். அதை நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில் அரசே இனி வாங்கித் தரும்.
நெல் கொள்முதல் விலை குவிண்டால் ஒன்றுக்கு 3 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
கரும்பு கொள்முதல் விலை டன் ஒன்றுக்கு 4 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு 5 ரூபாய் உயர்த்தி வழங்கப்படும்.
முதியோர் உதவித்தொகை இனி மாதம் 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை 2 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
இன்னும் இருக்கிறது,
மீன்பிடித் தடைக்காலச் சிறப்பு நிவாரணத் தொகை 8 ஆயிரம் ரூபாயிலிருந்து 12 ஆயிரம் ரூபாயாக, மீன்பிடிக் குறைவுக்காலச் சிறப்பு நிவாரணத் தொகை 6 ஆயிரம் ரூபாயிலிருந்து 9 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
மகளிர் சுய உதவிக்குழுவைச் சார்ந்த சகோதரிகள் நிறைய பேர் இங்கு வந்திருப்பீர்கள். உங்களை எல்லாம் பிசினஸ்-வுமனாக முன்னேற்றும் வகையில் பிணை எதுவும் இல்லாமலேயே, 5 இலட்சம் ரூபாய் வரை மானியத்துடன் வங்கிக் கடனுதவி வழங்கப்படும்.
பேரிடர் கால இழப்பீடுகளாக இறவைப் பாசன பயிர்கள் மற்றும் நெல் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 25 ஆயிரம் ரூபாயும் நீண்டகாலப் பயிர்களுக்கு 27 ஆயிரம் ரூபாயும், மானாவாரிப் பயிர்களுக்கு 12 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும்.
உயர்கல்வி படிக்கும் 35 இலட்சம் மாணவர்களுக்கும் அடுத்த 5 ஆண்டுகளுக்குள் லேப்டாப் வழங்கப்படும்.
10 ஆயிரம் புதிய பேருந்துகள் இயக்கப்படும்.
அனைத்துச் சட்டமன்றத் தொகுதிகளிலும் முதல்வர் படைப்பகங்கள் அமைக்கப்படும்.
தமிழ்நாட்டின் ஒவ்வொரு மண்டலத்திற்கும் தனித்தனியாக சிறப்பு வளர்ச்சி திட்டங்கள்!
இப்படி ஏராளமான வாக்குறுதிகளை இந்த அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறோம். நாங்கள் சொன்னால் செய்வோம். செய்வதைத்தான் சொல்வோம். நான் கலைஞரின் மகன். சொன்ன வாக்குறுதிகளை மறக்கவும் மாட்டேன், மறுக்கவும் மாட்டேன்.
Also Read
-
NDA-வை புறக்கணிக்க வேண்டும்! அதுதான் தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்கு நல்லது : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
இன்று முதல் அமலாகும் புதிய விதிகள்… எத்தனை துறைகள்… என்னென்ன மாற்றங்கள்? முழு விவரம் அறிய!
-
பழனிசாமியின் அரசியல் அனுபவம் இதுதான் : தேர்தல் பரப்புரையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி!
-
தேர்தலுக்கு பிறகு விஜயுடன் கூட்டணி.. திட்டத்தை ஓப்பனாக உடைத்த பாஜக கூட்டணி இணையமைச்சர் ராம்தாஸ் அத்வாலே!
-
“மக்களை கசக்கி பிழியும் ஒன்றிய பா.ஜ.க அரசு” : சுங்கச்சாவடி கட்டண உயர்வுக்கு ஜவாஹிருல்லா கண்டனம்!