Tamilnadu

கொ.ம.தே.க-விற்கு 2 சீட் ஒதுக்கீடு: கொங்கு மண்டலத்தில் தி.மு.க மிகப்பெரிய வெற்றி பெறும் - ஈஸ்வரன் பேட்டி!

தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்கம், அசாம் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வரும் வாரங்களில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், தேர்தல் பணிகள் தமிழ்நாட்டில் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி அமைந்திருக்கிறது. கடந்த 9 ஆண்டுகளாக இக்கூட்டணி கம்பீரமாக நிலைத்து வரும் நிலையில், கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த அண்மையில் கழகப் பொருளாளரும், மக்களவை குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது.

இந்த குழுவில் உறுப்பினர்களாக கழக முதன்மைச் செயலாளரும், அமைச்சருமான கே.என்.நேரு, உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினர்களான அமைச்சர்கள் எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், துணைப் பொதுச் செயலாளர்களான எம்.பி.க்கள் திருச்சி சிவா, ஆ.ராசா மற்றும் அமைப்புச் செயலாளரும், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்நிலையில் அந்த குழுத் தலைமையில் தொகுதி உடன்பாடு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த பேச்சுவார்த்தையின் மூலம் சில கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி ஒதுக்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளதாக தி.மு.க. தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

அதன்படி மனிதநேய மக்கள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் தலா 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகளும், மாநிலங்களவைத் தேர்தலில் ஒரு இடமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் தேமுதிக கட்சிக்கும் மாநிலங்களவைத் தேர்தலில் ஒரு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், ம.தி.மு.க.விற்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அந்த 4 தொகுதிகளில் 3 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்திலும், ஒரு தொகுதியில் ம.தி.மு.க.விற்கு ஒதுக்கப்படும் சின்னத்திலும் போட்டியிடுவதென முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிக்கு தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. அந்த ஒப்பந்தத்தின் படி, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த இரண்டு தொகுதியிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் சந்தித்து பேசுகையில், “கூட்டணியின் நலனை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் நல்ல ஆட்சி அமைக்கவும், வரவிருக்கும் தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெறவும் என்ற நல்ல நோக்கத்தில் பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடிந்தன.

அதன் அடிப்படையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் எங்கள் கட்சிக்கு இரண்டு சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அந்த இரண்டு தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட ஒப்புக்கொண்டுள்ளோம். தமிழ்நாட்டில் கொங்கு மண்டலத்தில் திமுக கூட்டணிக்கு நல்ல ஆதரவு உள்ளது.

பிரதமர் மோடி, எம்.ஜி.ஆர். ஆட்சியைப் புகழ்கிறார்; அம்மையார் ஆட்சியையும் பாராட்டுகிறார். ஆனால் நான்கு ஆண்டுகள் முதலமைச்சராக இருந்த பழனிசாமி தலைமையிலான ஆட்சியைப் பற்றி ஒரு வார்த்தையும் அவர் கூறவில்லை. இ.பி.எஸ். தனது ஆட்சியை ‘பொற்கால ஆட்சி’ என்று கூறுகிறார்; ஆனால் கூட்டணியில் உள்ள மற்றவர்கள் யாரும் அதைப் பற்றி பேசவில்லை. எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தி தேர்தலை சந்திப்பது எவ்வளவு சிரமமான நிலைமை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

வரவிருக்கும் தேர்தலில் கொங்கு மண்டலத்தில் தி.மு.க கூட்டணி கண்டிப்பாக மிகப்பெரிய வெற்றியைப் பெறும். கொங்கு மண்டலத்தில் இலவச மின்சாரம் மூலம் மக்கள் அதிக பயன் பெற்றுள்ளனர். விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடியும் அவர்களுக்கு பெரும் உதவியாக இருந்துள்ளது. இவ்வாறான பல நடவடிக்கைகள் தி.மு.க ஆட்சியில் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதை மக்கள் அனைவரும் நன்றாக அறிந்துள்ளனர்.

வரவிருக்கும் தேர்தலை நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியுடனும் நம்பிக்கையுடனும் எதிர்கொள்கிறோம். 2021ஆம் ஆண்டை விட 2026ஆம் ஆண்டில் கொங்கு மண்டலத்தில் அரசியல் சூழ்நிலையில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அதனால் அந்த பகுதியில் தி.மு.க கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெறும்,” என அவர் தெரிவித்தார்.

Also Read: மாநிலங்களவை தேர்தல் : தி.மு.க மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் மனுத்தாக்கல்!