Tamilnadu
தமிழ்நாடு அரசின் 'தமிழரசு' மின் இதழ்... Web Application மற்றும் Mobile Application.. அசத்தல் திட்டம்!
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்கள் இன்று (10.3.2026) சென்னை, தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளியிடப்பட்ட ‘தமிழரசு’ மின்னிதழின் இணையதள பயன்பாடு (Web Application) மற்றும் கைபேசி செயலியை (Mobile App) தொடங்கி வைத்தார்கள்.
தமிழ்மொழியின் தொன்மை, சிறப்பு மற்றும் தமிழ்சார் அறிவுச் செல்வங்களைப் பாதுகாத்து, அவற்றைக் காலத்திற்கேற்ற நவீன தொழில்நுட்ப வடிவில் உலகம் முழுவதும் கொண்டு சேர்க்கும் நோக்கில், தமிழ்நாடு அரசின் சார்பில் வெளியிடப்பட்டு வரும் ‘தமிழரசு’ இதழ், தற்போது முழுமையான மின்னிதழ் (e-Book / e-Magazine) வடிவிலும் வெளியிடப்பட்டுள்ளது.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் ஆட்சிக் காலத்தில், 1970 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ‘தமிழரசு’ இதழ், கடந்த பல ஆண்டுகளாக தமிழ்சார் ஆய்வுகள், அரசியல், சமூக, பண்பாட்டு மற்றும் இலக்கியச் செய்திகளைத் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. தமிழறிஞர்கள், எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள், சமூக சிந்தனையாளர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்களின் கருத்துகளைப் பொதுமக்களிடம் கொண்டு சேர்ப்பதில் இந்த இதழ் முக்கியப் பங்காற்றி வருகிறது.
தற்போது முழுமையாக டிஜிட்டல் வடிவமாக மாற்றப்பட்டுள்ள ‘தமிழரசு’ மின்னிதழ், தமிழ் மொழியின் தொன்மை மற்றும் வரலாறு, தமிழ்ச் சாகித்ய மரபுகள், மொழியியல், கல்வி, சமூக மாற்றங்கள், பண்பாட்டு பாரம்பரியம், ஆய்வுக் கட்டுரைகள் உள்ளிட்ட தரமான உள்ளடக்கங்களை வழங்குவதுடன், முதலமைச்சரின் உரைகள், சட்டமன்றப் பேரவையில் ஆற்றப்படும் முக்கிய உரைகள், அரசின் முக்கிய அறிவிப்புகள், சிறப்பு மலர்கள் மற்றும் நினைவுச் சிறப்பிதழ்கள் ஆகிய அனைத்தும் இனி மின்னிதழாகவும் வெளியிடப்படும்.
மேலும், ஒவ்வொரு மாதமும் வெளியிடப்படும் இந்த மின்னிதழில், போட்டித் தேர்வுகளுக்கான கேள்வித்தாள்கள், கட்டுரை எழுதும் போட்டிகள் ஆகியவையும் இடம்பெறுகின்றன. இப்போட்டிகளில் பங்கேற்கும் தேர்வாளர்களுக்கு, செய்தி மக்கள் தொடர்புத் துறையின் (DIPR) சார்பில், ‘தமிழரசு’ இதழின் ஆசிரியர் மற்றும் துறை இயக்குநரின் கையொப்பத்துடன் கூடிய அதிகாரப்பூர்வ சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.
இந்தத் தமிழரசு மின்னிதழ் மாதம் ஒரு பிரதிக்கு ரூ.7/- மற்றும் ஆண்டு சந்தா ரூ.84/- என்ற கட்டணத்தில் வழங்கப்படுகிறது. மேலும், மாணவர்களுக்கு மட்டும் சிறப்புச் சலுகையாக, ஆயுள் சந்தாவாக (பத்து ஆண்டுகள்) ரூ.588/- என்ற கட்டணத்தில் வழங்கப்படுகிறது. மாணவர்கள் அல்லாத பொதுவாசகர்களுக்கு, ஆயுள் சந்தா ரூ.840/- என்ற வழக்கமான கட்டணமே நடைமுறையில் இருக்கும்.
தொழில்நுட்ப அணுகல் வசதியாக, Android இயங்குதளத்தில் செயல்படும் கைபேசிகளுக்காக ‘தமிழரசு’ மொபைல் செயலி (Mobile Application) Google Play Store-இல் பதிவிறக்கம் செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. iOS இயங்குதளத்தைப் பயன்படுத்தும் வாசகர்கள், சந்தா பெற்ற பின்னர் இணையதளப் பயன்பாட்டின் (Web Application) மூலம் ‘தமிழரசு’ மின்னிதழை அணுகிப் பயனடையலாம். (இணையதள முகவரி; www.tamilarasu.org)
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்கள் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் ’தமிழரசு மின்னணு இதழினை (e-Book/Magazine) இன்றைய தினம் தொடங்கி வைத்துள்ளார்கள்.
இந்தத் தமிழரசு மின்னணு வெளியீடு, வளர்ந்துவரும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கேற்பப் பொதுமக்கள் மற்றும் சந்தாதாரர்கள் எளிதில் அணுகக்கூடிய வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம், அரசின் தகவல்கள் மற்றும் பயனுள்ள உள்ளடக்கங்கள் விரைவாகவும், விரிவாகவும் மக்களிடம் சென்றடையும் என்பதில் ஐயமில்லை.
தமிழ் மொழியைப் பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல், அதை அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் நவீன ஊடகங்களுடன் இணைத்து உலகளாவிய வாசகர்களிடம் கொண்டு சேர்க்கும் தமிழ்நாடு அரசின் தொடர்ச்சியான முயற்சிகளில், ‘தமிழரசு’ மின்னிதழ், தமிழரசு இதழின் வளர்ச்சிப் பயணத்தில் ஒரு முக்கிய மைல்களாகவும் திகழும்.
Also Read
-
ரூ.78.41 கோடி... 13 மாவட்டங்களில் 26 முடிவுற்ற திட்டப்பணிகள்... திறந்து வைத்த முதலமைச்சர் !
-
சுப்பிரமணியபுரத்தில் ரூ.62.68 கோடி 396 அடுக்குமாடி குடியிருப்புகள்... திறந்து வைத்தார் முதலமைச்சர்!
-
தடை... அதை உடை... “கற்றனைத் தூறும் அறிவு” சிலை திறப்பு.. சிலை கூறும் செய்தி என்ன? - விவரம்!
-
ரூ.50 இலட்சம் அறிவியல் மாமேதை ஜி.டி.நாயுடுவுக்கு சிலை திறப்பு... எங்கு தெரியுமா?
-
பதிவுத்துறை சார்பில் ரூ.14 கோடியில் புதிய கட்டடங்கள்... திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!