Tamilnadu

10 ஆண்டுகள் கழித்து.. UPSC டாப் 10-ல் இடம்பிடித்த தமிழ்நாடு மாணவர்கள் : தூத்துக்குடியில் உதயநிதி பேச்சு!

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் ஆற்றிய உரை

இன்றைக்கு தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குகின்ற இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உங்களையெல்லாம் சந்திப்பதில், நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன். பெருமை அடைகின்றேன்.

மூன்றே நாட்களில் இவ்வளவு சிறப்பான, மிகப்பெரிய ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கின்ற அமைச்சர் அவர்களுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் இங்கு வந்திருக்கக்கூடிய பயனாளிகள் சார்பாக என்னுடைய நன்றியை நான் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இந்த விழாவிற்கு வருவதற்கு முன்பு தூத்துக்குடி அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனையில் 136 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உயர்தர சிறப்பு மகப்பேறு மருத்துவமனை கட்டடத்தையும்,  திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் 38 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இதே போல உயர்தர சிறப்பு மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப் பிரிவு கட்டடத்தையும் திறந்து வைத்துவிட்டுதான் இன்றைக்கு இந்த நிகழ்ச்சிக்கு நான் வந்திருக்கின்றேன்.

இந்த புதிய மருத்துவ கட்டமைப்புகள் தூத்துக்குடி  மாவட்ட மக்கள் உங்களுக்கு  நிச்சயம் மிகப் பெரிய உதவியாக இருக்கும் என்று நாங்கள் நம்புகின்றோம். இந்த மருத்துவமனைகளின் சேவைகளை  நல்லபடியாக சிறப்பாக நீங்கள் பயன்படுத்தி கொள்ளுங்கள்.

தூத்துக்குடி என்று சொன்னாலே துறைமுகம், உப்பளம், தொழில் வளர்ச்சி, விவசாயம், மீன்பிடி தொழில் என்று அனைத்து வகையிலும் சிறந்து இருக்கக்கூடிய  ஊர் தான் இந்த தூத்துக்குடி. தொழில் வளர்ச்சியில் இன்றைக்கு சென்னையுடன் போட்டிப்போடுகின்ற அளவிற்கு தூத்துக்குடி மிக, மிக வேகமாக முன்னேறி வந்து கொண்டிருக்கின்றீர்கள். அதற்கு காரணம் தூத்துக்குடி மாவட்ட மக்கள் உங்களுடைய உழைப்பும், ஒற்றுமையும் தான் இந்த வளர்ச்சிக்கு மிக, மிக முக்கியமான காரணம்.

இன்றைக்கு இந்த நலத்திட்ட உதவிகள் வழங்குகின்ற நிகழ்ச்சியில் 4 ஆயிரம் பயனாளிகளுக்கு 110 கோடி ரூபாய் அளவிலான அரசு திட்டங்களை வழங்க இருக்கின்றோம். இந்த நிகழ்ச்சியில் பங்குபெறுவதற்கு ஆயிரக்கணக்கில் வந்திருக்கின்றீர்கள். இன்னும் பெருமை என்னவென்றால், மகளிர் நிறைய பேர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்து இருக்கின்றீர்கள். உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

இன்றைக்கு தமிழ்நாடு பொருளாதாரத்தில் மிகப்பெரிய அளவில் முன்னேற்றம் அடைந்திருக்கின்றது என்றால், அதற்கு இங்கு இருக்கக்கூடிய மகளிரின் உழைப்பு மிகப்பெரிய முக்கியமான ஒரு காரணம். அதனால் தான், நம்முடைய முதலமைச்சர் அவர்கள் ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து ஒவ்வொரு திட்டத்தையும் மகளிருக்கு என்னென்ன தேவை  என்று பார்த்து, பார்த்து செய்திருக்கிறார்கள்.

ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் போட்ட முதல் கையெழுத்து, மகளிருக்கான விடியல் பயணம் திட்டத்திற்குத்தான். இன்றைக்கு அந்த  திட்டத்தின் திட்டத்தின் கீழ் 960 கோடி பயணங்களை மகளிர் மேற்கொண்டுள்ளார்கள். இந்த தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் சுமார் 12 கோடி பயணங்களை மகளிர் விடியல் பயணத்திட்டத்தின் மூலம் மேற்கொண்டு இருக்கின்றார்கள்.

அதே போல, காலையில் எழுந்து, சீக்கிரம் வேலைக்கு செல்லும் பெற்றோர்கள். குறிப்பாக பிள்ளைகளை பள்ளிக்கூடத்திற்கு அனுப்பவதற்கு முன்பு சமைப்பதற்கு நேரம் இருக்காது. ஆனால் அதன் பிறகு பிள்ளை பள்ளிக்கூடம் சென்றானே, சாப்பிட்டானா, பசியோடு இருப்பானே, படித்தானா என்று யோசிப்பார்கள்.

அதை போக்குவதற்கு நம்முடைய முதலமைச்சர் அவர்கள் கொண்டு வந்த திட்டம்தான் முதலமைச்சருடைய காலை உணவுத்திட்டம். இன்றைக்கு தமிழ்நாடு முழுவதும் 22 இலட்சம் குழந்தைகள் இந்த திட்டத்தின் மூலம் பயன்பெற்று வருகிறார்கள். இந்த தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் ஒவ்வொரு நாளும் 52 ஆயிரம் மாணவ, மாணவிகள், குழந்தைகள் முதலமைச்சர் காலை உணவுத் திட்டத்தின் மூலம் பயன்பெற்று வருகிறார்கள்.

அடுத்து அரசு பள்ளியில் படித்து உயர்கல்வி சேருகின்ற மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டம், மாணவர்களுக்கு தமிழ்புதல்வன் திட்டம் என்று  மாதம் 1,000 ரூபாய்  கல்வி ஊக்கத்தொகையை நம்முடைய முதலமைச்சர் அவர்கள் வழங்கி வருகிறார்கள். இந்த திட்டம் மூலம், தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் சுமார் 17 ஆயிரம் மாணவ, மாணவிகள் பயன்பெற்று வருகிறார்கள்.

நம்முடைய முதலமைச்சர் அவர்களின் கனவு திட்டமான நான் முதல்வன் திட்டம் தொடங்கப்பட்ட பிறகு இன்றைக்கு தமிழ்நாடு முழுவதும் ஏராளமான வேலைவாய்ப்புகளை  நம்முடைய இளைஞர்களுக்கு நாம் உருவாக்கி இருக்கின்றோம். நேற்றைக்கு நீங்கள் செய்திகளில்  பார்த்திருப்பீர்கள் ஒன்றிய அரசினுடைய UPSC தேர்வு முடிவுகள் வெளி வந்திருக்கின்றது.

இதில் 10 ஆண்டுகள் கழித்து நம்முடைய தமிழ்நாட்டை சேர்ந்த இரண்டு பேர்  அகில இந்திய அளவில் டாப் 10 ரேங்கில் இடம் பிடித்திருக்கிறார்கள். அதில் இராண்டாம் இடத்தை நம்முடைய தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு மாணவி பிடித்திருக்கின்றார்.  இவர்கள்  இரண்டு பேருமே அரசு கொண்டு வந்த நான் முதல்வன் திட்டத்தினுடைய பயனாளிகள். இதுதான் திராவிட மாடல் அரசினுடைய நம்முடைய முதலமைச்சர் அவர்களுடைய வெற்றி. 

இதே போல் இன்றைக்கு தமிழ்நாடு முழுவதும், 10 லட்சம்
மாணவ, மாணவிகளுக்கு லேப்டாப் வழங்குகின்ற திட்டத்தையும் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் கொடுத்திருக்கிறார். தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும், சுமார் 12 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கப்பட்டு இருக்கிறது.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக மகுடம் வைத்தது போல் ஒரு திட்டம். அது தான், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம். அந்த திட்டத்தின் கீழ் கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக ஒவ்வொரு மாதமும் ஒரு கோடியே 31 லட்சம் மகளிருக்கு  மாதம் 1,000 ரூபாய் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் வழங்கி வருகிறார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் இந்த திட்டம் மூலம்  ஒவ்வொரு மாதமும் 3 லட்சத்து 24 ஆயிரம் மகளிருக்கு  மாதம் ஆயிரம் ரூபாய் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் வழங்கி வருகிறார்.

நம்முடைய திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைந்தவுடன் நம்முடைய முதலமைச்சர் அவர்கள், இந்த மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் வழங்கும் தொகையை ஆயிரம் ரூபாயிலிருந்து 2 ஆயிரம்  ரூபாயாக உயர்த்தி தருவதாகவும் வாக்குறுதி கொடுத்திருக்கிறார்கள். தேர்தலை காரணம் காட்டி மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை முடக்க வேண்டும் என்று சில பேர் முயற்சியில் ஈடுபட்டார்கள். ஆனால் நம்முடைய முதலமைச்சர் அவர்கள், அந்த முயற்சியை முறியடித்து காட்டியிருக்கிறார்கள்.

அதுமட்டும் இல்ல, ஒட்டு மொத்த இந்தியாவும் வியக்கின்ற வகையில் 1 கோடியே 32 இலட்சம் மகளிர் வங்கி கணக்கிலும் 5 ஆயிரம் ரூபாயை வரவு வைத்து கொடுத்திருக்கிறார்கள். அதே போல, கோடை கால சிறப்பு நிதியாக கைம்பெண்கள், முதியோர், மாற்றுத்திறனாளிகள் என்று 38 லட்சம் பேருக்கு 2 ஆயிரம் ரூபாய் சிறப்பு நிதியை முதலமைச்சர் அவர்கள் கொடுத்திருக்கிறார்கள்.

இந்த தூத்துக்குடி மாவட்டத்திற்கும் ஏராளமான திட்டங்களை நம்முடைய அரசு செய்து கொடுத்திருக்கிறது. 2023-இல் ஏற்பட்ட வெள்ளத்தால் வீடுகளை இழந்தவர்களுக்கு 102 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2 ஆயிரத்து 350 வீடுகள் கட்டித்தரப்பட்டு இருக்கிறது.

அதேபோல, சேதமடைந்த 476 வீடுகள் புனரமைக்கப்பட்டு இருக்கின்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் 431 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கூட்டு குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.  இதனால் 4 லட்சம் மக்கள் பயனடைந்திருக்கிறார்கள்.

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுமார் 306 கோடி ரூபாய் மதிப்பீட்டில், ஒருங்கிணைந்த வளாகம் மற்றும் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றது. உடன்குடியில் 14 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் அதிகளவு திறன் கொண்ட அனல் மின் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. 36 கோடி ரூபாய் செலவில் மினி டைடல் பார்க் உங்களுக்கு கிடைத்து இருக்கிறது.

இப்படி தூத்துக்குடி மாவட்டத்திற்கு நம்முடைய அரசு செய்திருக்கக்கூடிய திட்டங்களை சொல்லிக் கொண்டே போகலாம். இது மாதிரியான திட்டங்களால் தான்  இன்றைக்கு தமிழ்நாடு இந்தியாவிலேயே வளர்ந்து வருகின்ற மாநிலங்களில் முதல் மாநிலமாக 11.19 சதவீத வளர்ச்சியோடு அந்த சிறப்பை நம்முடைய  தமிழ்நாடு பெற்றிருக்கிறது.

இன்றைக்கு மகளிர் சுய உதவிக்குழு சகோதரிகள் நிறையபேர் வந்து இருக்கின்றீர்கள். இந்தியாவிலேயே முதன் முதலாக மகளிருக்கு சுயஉதவிக் குழுக்களை ஆரம்பித்தது நம்முடைய திராவிட முன்னேற்ற கழக அரசு, ஆரம்பித்து வைத்தவர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள்தான்.

மகளிர் சுயஉதவிக்குழு சகோதரிகளுக்கு  இந்த 5 வருடங்களில் மட்டும், சுமார் 1 லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு வங்கிக்கடன் வழங்கப்பட்டு இருக்கிறது. மற்றவர்களிடம் வேலை கேட்கின்ற நிலைமை மாறி, மகளிர் நீங்கள், இன்றைக்கு 4 பேருக்கு வேலை கொடுக்கின்ற அளவிற்கு தமிழ்நாட்டு மகளிர் நீங்கள் முன்னேறி இருக்கின்றீர்கள்.

அதனால் தான், IT கம்பெனியில் கொடுக்கின்ற மாதிரி, மகளிர் குழு சகோதரிகளுக்கு ஒவ்வொருத்தருக்கும், அவர்களுடைய பெயர், புகைப்படத்துடன் அடையாள அட்டைகள் நம்முடைய ஆட்சியில் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த அட்டைகளை முறையாக பயன்படுத்தி, உங்களுடைய குழு தயாரிப்பு பொருட்களை 25 கிலோ வரை பேருந்துகளில் 100 கிலோமீட்டர் தூரத்துக்கு  எந்தவித கட்டணம் இல்லாமல் நீங்கள் எடுத்து சென்று விற்பனை செய்ய முடியும்.

இன்றைக்கு, கடன் இணைப்பு பெற்றுள்ள சகோதரிகள் நீங்களும்,
பொருளாதார தன்னிறைவு பெற்ற தொழில்முனைவோராக வரவேண்டும் என்று நாங்கள் வாழ்த்துகின்றோம்.

அடுத்து இந்த விழாவில் கலைஞர் கனவு இல்லத்திற்கான ஆணைகளும், வீட்டுமனைப் பட்டாக்களும் வழங்க இருக்கின்றோம். குடிசை மாற்று வாரியத்தைத் தொடங்கி, தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய குடிசை வீடுகளை எல்லாம் கான்கிரீட் வீடுகளாக மாற்றியவர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள். அப்படிப்பட்ட நம்முடைய கலைஞர் அவர்களின் பெயரில் நம்முடைய முதலமைச்சர் அவர்கள், சாமானிய மக்களுக்கு வீடுகளை தந்து கொண்டிருக்கிறார்கள்.

குடி இருக்க, வீடு எவ்வளவு முக்கியமோ, அதே போல, அந்த வீட்டுக்கான பட்டாவும் மிக, மிக முக்கியம். ஆகவே, பட்டா கொடுக்கின்ற நடைமுறைகளை நம்முடைய முதலமைச்சர் அவர்கள் எளிமை ஆக்கி இருக்கின்றார்கள். 21 இலட்சம் மக்களுக்கு நம்முடைய முதலமைச்சர் அவர்கள் பட்டா கொடுத்து இருக்கின்றார்கள்.

பட்டா என்பது  உங்களுக்கு அரசு கொடுக்கின்ற சலுகை கிடையாது. அது உங்களுடைய உரிமை. அந்த உரிமையை நம்முடைய அரசு இன்றைக்கு நிலைநாட்டி இருக்கின்றது. இனிமேல்  உங்களுடைய வீடுகளில், மகிழ்ச்சியோடு  நிம்மதியாக நீங்கள் தூங்கலாம். ஆகவே, பட்டா பெற்ற உங்கள் அனைவருக்கும் எங்களுடைய வாழ்த்துகளை நாங்கள் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இங்கு நிறைய மாற்றுத்திறனாளிகள் வந்து இருக்கின்றீர்கள். மாற்றுத்திறனாளிகளான உங்களுக்கு வேண்டியது சலுகை இல்லை, உரிமை என்று நம்முடைய முதலமைச்சர் அவர்கள் சொன்னார்கள். அந்த வகையில் தான், தமிழ்நாடு முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் நியமன உறுப்பினர்களாக மாற்றுத்திறனாளிகள் நியமிக்கப்பட்டு வருகின்றார்கள்.

இதன் மூலம், மாற்றுத்திறனாளிகள் கேட்கின்ற இடத்தில் இருந்து, மற்றவங்களுக்காக குரல் கொடுக்கின்ற இடத்திற்கு வந்து இருக்கின்றீர்கள். அப்படிப்பட்ட உங்களுக்கு இன்றைக்கு மோட்டார் வாகனம் உட்பட பல்வேறு நலத்திட்டங்களை நம்முடைய அரசு கொடுத்து இருக்கின்றது. ஆகவே, மாற்றுத்திறன் தோழர்களுக்கு இந்த அரசு என்றைக்கும் பக்கபலமாக இருக்கும்.

அதேபோல, நம்முடைய முதலமைச்சர் அவர்கள், 
மீனவ மக்களுடைய கோரிக்கைகளையும் தொடர்ந்து நிறைவேற்றி வருகிறார்கள். தமிழ்நாடு முழுவதும் கடலோர மீனவ கிராமங்களுடைய உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி இருக்கின்றோம். மீன்பிடி துறைமுகங்கள், மீன் இறங்குதளங்கள், மீன் சந்தைகள் எல்லாம் நவீனப்படுத்தி இருக்கின்றோம். குறிப்பாக, மீன்பிடி தடைக்காலத்திற்கான நிவாரணத் தொகை, ஐந்து ஆயிரத்தில் இருந்து  நம்முடைய முதலமைச்சர் அவர்கள் எட்டாயிரம் ரூபாயாக உயர்த்தி கொடுத்திருக்கிறார். 

அதுமட்டுமல்ல, இன்றைக்கு தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 4 கோடி மதிப்பீட்டில் விளையாட்டு கட்டமைப்புகளை உருவாக்க அடிக்கல் நாட்டி இருக்கின்றோம். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி திருவைகுண்டம் தொகுதிகளில் தலா 3 கோடி ரூபாய்  மதிப்பீட்டில் மினி ஸ்டேடியம் உட்பட சுமார் 8 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு விளையாட்டு  கட்டமைப்புகள் ஏற்கனவே உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த விளையாட்டு கட்டமைப்புகள் இன்னும் அதிகமான விளையாட்டு  வீரர்களை தூத்துக்குடியிலிருந்து நிச்சயம் உருவாக்கும் அதற்கு  என்னுடைய வாழ்த்துக்கள்.

இப்படி, தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அனைத்து பிரிவு மக்களுக்குமான ஒரு ஆல்ரவுண்டர் ஆட்சியாக திராவிட மாடல் ஆட்சி சிறப்பாக செயல்பட்டிருக்கிறது. நேற்றைக்கு சென்னையில நடந்த ‘கனவு மெய்ப்படும் 2030’ நிகழ்ச்சியில், நம்முடைய முதலமைச்சர் அவர்கள் பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்து இருக்கின்றார்கள். 

அதில் சிலவற்றை இங்கு குறிப்பிட விரும்புகின்றேன். 2030-க்குள்,
கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் மீண்டும் 7 லட்சம் வீடுகள் கட்டப்படும் என்று முதலமைச்சர் அவர்கள் வாக்குறுதி கொடுத்திருக்கிறார்கள்.  இதுவரைக்கும் 3 இலட்சம் வீடுகள் கட்டப்பட்டு இருக்கிறது.

2030க்குள் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 100 சதவீதம் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்படும் முதலமைச்சர் அவர்கள் வாக்குறுதி கொடுத்திருக்கிறார்கள். சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் மாவட்டங்களில் திறன் மேம்பாட்டு மையம்  அமைக்கப்படும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களிடையே பள்ளி இடைநிறுத்தம் முற்றிலும் நிறுத்தப்படும். மாவட்டந்தோறும் நவீன தொழிற்பூங்கா அமைக்கப்படும் என்று இதுபோன்ற பல்வேறு அறிவிப்புகளை நம்முடைய முதலமைச்சர் அவர்கள் நேற்று வெளியிட்டுள்ளார்கள்.

Also Read: தூத்துக்குடியில் ரூ.178 கோடியில் மருத்துவமனைக் கட்டடங்கள், வகுப்பறைகள் திறப்பு! - முழு விவரம் உள்ளே!