Tamilnadu
தியாகத்தின் பெருவாழ்வு ; தகைசால் தமிழர் தோழர் நல்லகண்ணு காலமானார்!
எளிமைக்கு அடையாளமாகவும், தலைமுறைகளைக் கடந்து பொதுவுடைமைக் கொள்கைகளை தூக்கிச் சுமந்த நூற்றாண்டு கண்ட தலைவராகவும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த முன்னோடியாகவும் திகழ்ந்தவர் தோழர் நல்லகண்ணு.
1925 ஆம் ஆண்டு, பிரிக்கப்படாத திருநெல்வேலி மாவட்டத்தின் திருவைகுண்டத்தில் எளிமையான விவசாய குடும்பத்தில் மூன்றாவது மகனாக பிறந்தார் தோழர் நல்லகண்ணு.
தனது கல்லூரி காலத்திலேயே ஆங்கிலேயருக்கு எதிராக இளைஞர்களை ஒன்றுதிரட்டி ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில் முன்களப் போராளியாக செயல்பட்டார். இதனால் அவர் கல்லூரியில் இருந்தும் வெளியேற்றப்பட்டார்.
பிறகு, பொதுவுடைமை இயக்கத்தின் கொள்கைள் மீது கொண்ட ஈர்ப்பால் 1943 ஆம் ஆண்டு தனது 18ஆவது வயதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். அரசியல் வாழ்க்கையில் அடியெடுத்தது முதலே, விவசாயிகளுக்கு ஆதரவான அரசியல் போராட்டத்தைத் தொடங்கினார்.
நாங்குநேரி பகுதியில் விவசாயிகளின் உரிமைகளுக்காக பெரும் போராட்டத்தை நடத்தினார். ’தங்கம் செய்யாததை, சங்கம் செய்யும்’ என்ற அவரது முழக்கம் இன்று அல்ல; எட்டுத்திக்கும் எதிரொலித்து கொண்டுதான் இருக்கப் போகிறது.
சுதந்திரப் போராட்டம் முடிவடைந்தாலும், டெல்லி ஆட்சியாளர்களின் ஆதிக்கத்துவத்தால், 1949 ஆம் ஆண்டு தோழர் நல்லகண்ணு கைது செய்யப்பட்டார். அப்போது காவல்துறையினர், அவரது மீசையை பொசுக்கி சித்திரவதை செய்தனர். அன்றில் இருந்து இன்றுவரை ‘மீசை என்பது வெறும் மயிறு’ என்று சொல்லி தனது இறுதி மூச்சு வரை மீசையைத் துறந்து வாழ்ந்தார் தோழர் நல்லக்கண்ணு.
சுதந்திரப் போராட்ட காலகட்டத்தில், ‘போராட்டம் - சிறை’ என்றே தோழர் நல்லகண்ணுவின் வாழ்க்கை நகர்ந்தது. சிறையில் அடைக்கப்பட்ட காலத்திலும் உரிமைக்குரலுக்கு ஓய்வு கொடுக்காமல், சிறை கைதிகளின் உரிமைகளுக்காக போராடி, அதில் வெற்றியும் கண்டவர் தோழர் நல்லகண்ணு.
குறிப்பாக சிறையில் இருக்கக்கூடிய கைதிகளுக்கு கல்வி அறிவு வேண்டும் என்று முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில், தோழர் நல்லகண்ணுவின் பங்கு இன்றியமையாதது. அவர் எங்கு சென்றாலும் மக்களுக்கான போராட்டமே அவருக்கு முதன்மையாக இருந்தது.
1958 ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நெல்லை மாவட்டக் குழு உறுப்பினர் அண்ணாசாமியின் மகள் ரஞ்சிதத்திற்கும், தோழர் நல்லகண்ணுவிற்கும் திருமணம் நடைபெற்றது. (தோழர் நல்லகண்ணு அவர்களின் மனைவி ரஞ்சிதம் 2016 ஆம் ஆண்டு காலமானார். இவர்களுக்கு காசி பாரதி ஆண்டாள் என இரு மகள்கள் உள்ளனர்)
விவசாயிகளுக்கான உரிமைப் போராட்டம், தீண்டாமை ஒழிப்பு, கம்யூனிஸ்டு கட்சிப் பணிகள் என தோழர் நல்லுகண்ணுவின் 18ஆவது வயதில் தொடங்கிய அரசியல் போராட்டப் பயணம், நேர்மைக்கு இலக்கணமாகவும், கொள்கை உறுதியுடனும் இறுதிவரை தொடர்ந்தது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தோற்றமும் தோழர் நல்லகண்ணு பிறப்பும் ஒரே ஆண்டு என்பது கூடுதல் சிறப்புக்குரியதாய் அமைந்துள்ளது.
ஆனால், கம்யூனிஸ்ட் கட்சியை தாம்தான் வழிநடத்துவோம் என்று தோழர் நல்லுகண்ணுவிற்கு அப்போது தெரிந்து இருக்காது.
13 ஆண்டுகள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளராக இருந்து கட்சியை திறம்பட வழிநடத்தினார்.
1967,1977,1999 சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிட்டாலும், வெற்றி - தோல்வி கணக்கு பார்க்காமல், மக்கள் போராட்டமே முதன்மை என்று கருதி வாழ்நாளை வரலாறாக மாற்றியவர் தோழர் நல்லகண்ணு.
அவரது 80-வது பிறந்தநாளை முன்னிட்டு ஒரு கோடி ரூபாய் வசூலித்துக் கொடுத்த கம்யூனிஸ்ட் கட்சிக்கே, அதனை திருப்பிக் கொடுத்தார். தமிழ்நாடு அரசு ‘அம்பேத்கர் விருது’ கொடுத்து ஒரு லட்சம் ரூபாயை பரிசுத்தொகையாக வழங்கியது. அதில், பாதியைக் கட்சிக்கும் மீதியை விவசாயத் தொழிலாளர் சங்கத்துக்கும் கொடுத்துவிட்டார். இவ்வாறு, தன்னலம் கருதாது பொதுநலத்திற்காகவே வாழ்ந்து மறைந்தார் தோழர் நல்லகண்ணு.
முத்தமிழறிஞர் கலைஞர் மீது உரிமை கொண்ட தோழர் நல்லகண்ணு, அவரோடு அரசியலைக் கடந்த நட்போடு பழகியவர். அந்த நட்பு மாறாமல், தோழர் நல்லகண்ணுவின் அனைத்து பிறந்தநாளிலும் நேரில் சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து தனது அன்பை வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
அதோடு, 2022 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தன்று ‘தகைசால் தமிழர் விருது’ வழங்கியும் தோழர் நல்லகண்ணுவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவுரவித்தார்.
ஆனால், அப்போதும் தமிழ்நாடு அரசு வழங்கிய 10 லட்சம் பணத்துடன் தனது சொந்த பணம் 5,000 ரூபாயையும் சேர்த்து 10 லட்சத்து ஐந்தாயிரம் ரூபாயை தமிழ்நாடு அரசின் நிவாரண நிதிக்கு தோழர் நல்லகண்ணு வழங்கினார்.
தோழரின் வரலாற்றுப் பயணம் கரடுமுரடாக இருந்தாலும் அது இளம் தலைமுறைக்கு என்றென்றும் ஒரு பாடமாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அவர் தமிழ்நாட்டிற்காக முழங்கிய ஒவ்வொரு முழக்கமும் எட்டுத்திக்கும் எதிரொலித்துக் கொண்டே இருக்கும்.
உடலால் மறைந்தாலும், கொள்கையால் அவரது பயணம் இனியும் தொடர்கிறது.
Also Read
-
“பூஜ்ஜியமும், பூஜ்ஜியமும் சேர்ந்தால், பூஜ்ஜியம்தான்! ராஜ்ஜியம் கிடைக்காது!” : முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை!
-
கன்னியாகுமரியில் ஒரே நாளில் 3,12,082 பேருக்கு நலத்திட்ட உதவிகள்! : முழு விவரம் உள்ளே!
-
“தமிழ்நாட்டில் அம்பேத்கரியத்தை காப்பாற்ற, பாசிச - அடிமைக் கூட்டத்தை வீழ்த்துவோம்!”: உதயநிதி ஸ்டாலின் உரை!
-
கொருக்குப்பேட்டையில் கலைஞர் நூற்றாண்டு விளையாட்டு வளாகம்: எண்ணூர் கத்திவாக்கத்தில் ஆரம்ப சுகாதார நிலையம்!
-
திருட்டுப் பூனையின் உருட்டல்களுக்கு மக்கள் ஏமாறமாட்டார்கள் : EPS-க்கு அமைச்சர் பெரியகருப்பன் பதிலடி!