Tamilnadu
இது பெண்களுக்கான ஆட்சி… நம்முடைய உழைப்புக்கான அங்கீகாரத்தை முதலமைச்சர் நிச்சயம் தருவார்: கனிமொழி எம்.பி!
தி.மு.க. மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டரணி சார்பில், சமூக வலைதளப் பொறுப்பாளர்களுக்கான சிறப்புப் பயிற்சிப் பாசறை, சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நேற்று (23/02/2026) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், திமுக துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி கலந்து கொண்டு, வரும் சட்டமன்றத் தேர்தலில் கழகத்தின் வெற்றிக்கு ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து உரையாற்றினார்.
நிகழ்வில் பேசிய கனிமொழி கருணாநிதி எம்.பி: ஒவ்வொரு காலகட்டத்திலும் திராவிட முன்னேற்றக் கழகம் தன்னை எப்பொழுதுமே தகவமைத்துக் கொண்டிருக்கிறது. நம்முடைய இயக்கம் தொடங்கப்பட்ட காலத்திலே, எழுத்தின் வடிவமாக, எழுத்தின் மூலமாக, பத்திரிக்கைகள் மூலமா கிட்டத்தட்ட ஒரு நூற்றுக்கணக்கான பத்திரிக்கைகளை நடத்தி இருக்கக்கூடிய ஒரு இயக்கம் என்ற பெருமை ஒரு இயக்கத்திற்கு இருக்குமென்றால், அது திராவிட முன்னேற்றக் கழகத்துக்குத்தான்.
அதே நேரத்தில், மேடை நாடகங்கள் வழியாக மக்களை சென்றடைந்த ஒரு இயக்கம் இருக்கிறது என்றால், மிகப்பெரிய அளவிலே அதை பயன்படுத்தியவர்கள் என்றால் அது திராவிட முன்னேற்றக் கழகம், திராவிட இயக்கம்.
இசைப்பாடல்களின் வழியாக நம்முடைய இயக்கத்தின் கருத்துக்களை பாடல்களாக பல பகுதிகளில் இருக்கக்கூடிய மக்களிடம் கொண்டு போய்ச் சேர்த்தார்கள். தலைவர் கலைஞர் அவர்கள், பேரறிஞர் அண்ணா அவர்கள், நம்ம இயக்கத்தில் இருக்கக்கூடிய பல எழுத்தாளர்கள், திரைப்படங்களை அடுத்து தன்னுடைய கையகப்படுத்தினார்கள். அதன் வழியாக நம்முடைய இயக்கக் கருத்துக்களை கொண்டுபோய் மக்களிடத்தில் சேர்த்தார்கள்.
ஒரு எழுத்தாளருக்கு, ஒரு வசனகர்த்தாவுக்கு, ஒரு படத்தில் டைட்டில் கார்டு போடுகிறார்கள், அங்கே ஒரு அரங்கமே எழுந்து கைத்தட்டுகிறது, ஆர்ப்பரிக்கிறது என்றால் தலைவர் கலைஞர் அவர்களுக்குத்தான் நடந்தது. அதனால், வார்த்தைகளை மொழியை வந்து அவ்வளவு அழகாக எடுத்து ஆண்ட இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம்.
மேடை பேச்சுக்களில், நம்ம இன்றைக்கு இதை சொன்னா மக்கள் கேட்பார்களா? இதெல்லாம் தேவையா? மக்களிடம் பேசணுமா? அப்படின்னு நாம இன்னைக்கு யோசிச்சு யோசிச்சு நம்மளே தயார் செய்து தான் பல விஷயங்களைப் பேசிவருகிறோம்.
ஆனால், பேரறிஞர் அண்ணா அவர்களுடைய பேச்சுக்களை எல்லாம் நாம் இப்பொழுது எடுத்துப் பார்த்தால் ரோம பேரரசு அதைப் பத்தி எல்லாம் வந்து பொதுக்கூட்டங்களில் பேசி இருக்கிறார். என்னுடைய மக்களுக்கு உலக சரித்திரம் தெரிய வேண்டும்.
தலைவர் கலைஞர் அவர்களுடைய நெஞ்சுக்கு நீதி படித்தால், இந்த உலகம் முழுவதும் என்னென்ன நடந்தது அப்படிங்கிற அத்தனை விஷயங்களையும் எடுத்துச் சொல்லுவார். . என்னுடைய உடன்பிறப்பிற்கு இந்தச் செய்தியை நான் சொல்ல வேண்டும். அவர்களை அரசியல் படுத்த வேண்டும் என்று அதைச் செய்த இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம். அதனால், அறிவு என்பதுதான் நம்முடைய அடிப்படை.
அது பெண்களுக்கு ரொம்ப முக்கியமான ஒரு விஷயம். அது நமக்கு இயற்கையாவே வரும். மத்தவங்களோட பெண்களுக்கு கொஞ்சம் ஜாஸ்தி தான். அதனால இயற்கையாக வரக்கூடிய ஒன்று. அதன் அடிப்படையில்தான் நாம இயக்கமே. நாம் இன்று அதைக் கட்டி அமைத்திருக்கிறோம். உருவாக்கி இருக்கிறோம். அதனாலதான் மத்தவங்களுக்கும் நமக்கும் சில வித்தியாசங்கள் இருக்கு.
சில பேர் தண்ணி பாதுகாக்கறதுக்கு தர்மகால் போடுவாங்க, அதை நாம் பண்ண மாட்டோம். ஏன்னா நமக்கு புரிதல் இருக்கு. அறிவு இருக்கு. அறிவியல் அறிவும் நமக்குச் சொல்லப்பட்டு இந்த இயக்கம் வளர்க்கப்பட்டிருக்கிறது. இது மாதிரி நிறைய விஷயங்களை நாம சொல்லலாம்.
அப்படிப்பட்ட ஒரு இயக்கம், புதுசா சோஷியல் மீடியான்னு ஒன்னு வரப்போகுது. மொதல்ல வந்து எனக்குத் தெரிஞ்ச ஒருத்தர் அதுக்குள்ள போறாரு. எனக்கும் அப்போது, ட்விட்டர் அக்கவுண்ட், பேஸ்புக் எல்லாம் இல்லை. எங்க அப்பா, தலைவர் கலைஞர் அவர்கள். எல்லாவற்றுக்கும் முன்னாடி சோஷியல் மீடியாவில் இருக்கக்கூடிய மக்களோடு உரையாடத் தொடங்கிய ஒரு தலைவர், தன்னுடைய 80வது வயதில்.
என்ன வயசா இருந்தாலும், யாரா இருந்தாலும் என்ன படிச்சு இருந்தீங்கன்னாலும் இன்னைக்கு சோஷியல் மீடியா ஹேண்டில் பண்றது ரொம்ப சாதாரண விஷயம். பெண்கள் ஒரு கருத்து சொல்லும்போது இந்தச் சமூகம் அதை மிக மோசமாகதான் சாடும். உங்களுக்கு என்ன சொன்னா வலிக்குமோ அதைத் தேடி தேடி தேடிப் போடுவாங்க. நீங்களும் நிறைய பேர் வந்து அந்த இடத்துல உடைஞ்சு போயி அழுறதை நான் பாத்துருக்கேன்.
உங்களைப் பற்றிச் சொல்லுவதற்கு யாருக்கும் உரிமை இல்லை. நீங்க யாருன்னு முடிவு பண்ற உரிமை உங்களுக்கு மட்டும்தான் இருக்கு. நீங்க யாருக்கும் விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.
அவர்கள் சொல்லும் கருத்துக்கள், நம்மை வீட்டுக்குள்ள திருப்பிக் கொண்டு போய் சமையல் அறையில வச்சுக்கனும்ங்கறதுக்காகச் சொல்றாங்க. நீ வீட்டை விட்டு வெளிய கால் வைக்கறியா? நீ உள்ள போறதுக்கு நான் என்ன வழி பண்றேன் பாரு. நீ சோஷியல் மீடியால கருத்து சொல்றியா? இனிமே நீ வாயைத் திறக்காமல் இருக்குறதுக்கு நான் என்ன சொன்னா நீ வாயை மூடிட்டு போவான்னு எனக்குத் தெரியும். நான் சொல்லுவேன். இத தான் அவங்க தொடர்ந்து செய்கிறார்கள்.
நீ ஒன்னு சொன்னியா? நான் பத்து அடி முன்னாடி வரேன் அப்படின்னு போனா நீ ஒன்னு சொன்னியா? நான் உன்ன பாத்து பயந்துட்டு போறவன் நான் இல்ல. சரியா? இன்னும் ஒரு உதாரணம் சொல்லுகிறேன் தலைவர் கலைஞரைப் பற்றி. அவர் சோசியல் மீடியாவுக்கு வந்தவுடனே. எல்லாமே நல்ல விஷயமா இருக்கு. நம்மள யாரும் திட்டவே இல்லை என்று கேட்டார்.
அதற்கு, நாங்கள் இதனை மாடரேட் பண்ணியுள்ளோம். நம்மள ரொம்ப மோசமா திட்டி வர்ற கருத்த எல்லாம் நாங்க எடுத்துடுறோம் அப்படின்னு சொன்னப்ப தலைவர் என்ன சொன்னாருன்னா. தயவு செய்து அத பண்ணாதீங்க. என்ன எதிர்த்து ஒரு கருத்தைப் பதிவு செய்ய வேண்டும் என்று நினைத்தால் அதைச் செய்யட்டும். நான் அதைப் படிக்க வேண்டும். அதுதான் திராவிட முன்னேற்றக் கழகம். எதிர்த்துப் பேசினாலும் அந்த எதிர் கருத்திலே என்ன இருக்கிறது என்று தெரிந்துகொண்டு அதற்கு எதிர்வினை ஆற்றக்கூடிய அளவிற்கு நம்மை நாம் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்றுக்கொண்ட அன்று முதல் பெண்களுக்கான இந்த ஆட்சி நம்மளோட ஆட்சி தான். நமக்கான ஆட்சி. மத்தவர்கள் எல்லாம் அடுத்து தான். மகளிர் உரிமைத் தொகை, புதுமை பெண் திட்டம் - கல்லூரிக்குப் போகக்கூடிய நம்ம வீட்டு பெண்களைப் பற்றித் தான் கவலைப்பட்டார்.
அதே போலக் காலை உணவு திட்டம், பெண்களுடைய வேலைச் சுமையை குறைப்பதற்காகக் கொண்டு வந்து இருக்கிறேன் என்று முதல்வர் சொல்கிறார். விடியல் பயணம் திட்டம், பெண்களுக்கு சுதந்திர உணர்வை உணர்ந்து கொள்ள வேண்டும் என்று கொண்டுவரப்பட்ட திட்டம். இந்த ஆட்சி நீடிக்க வேண்டும் என்று உழைப்பதிலே நமக்குத் தான் எல்லாரையும் விட அதிக பங்கு நமக்குத் தான்.
எத்தனையோ போராட்டங்களைத் தாண்டித் தான் இத்தனை திட்டங்களை நாம் தந்து கொண்டிருக்கிறோம். அதை நம்ம கொண்டு போய்ச் மக்களிடம் சேர்க்கணும். பிஜேபி தொடர்ந்து பொய் செய்திகளைப் பரப்பிக் கொண்டிருப்பார்கள். இல்லாத ஊர் பெயரைப் போட்டு இந்த இடத்துல வந்து தமிழர்கள் எல்லாம் சேர்ந்து வட இந்தியர்களை அடிச்சாங்க அப்படின்னு ஒரு செய்தியைப் பரப்பலாம். இல்லனா ஜாதி பிரச்சனையை உருவாக்கக்கூடிய ஒரு செய்தியை அது பண்ணலாம்.
நாலாயிரம் கோயிலுக்கு நாம் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தபிறகு கும்பாபிஷேகம் செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் என்ன நடந்ததுன்னா கோயில் இடிக்கிறாங்க. இப்படி எத்தனையோ பொய் செய்திகளை அவர்கள் தினம் பரப்பி கொண்டிருப்பார்கள். தேர்தல் நெருங்க நெருங்க பொய் செய்திகள் இன்னும் அதிகரித்துக் கொண்டே இருக்கும்.
அதற்குப் பதில் நாம் சொல்லி ஆக வேண்டும். ஏனென்றால், அவங்க தினம் ஒரு விஷயத்தை திரும்பத் திரும்பச் சொல்லும்பொழுது சாதாரண மக்களுக்கு எது உண்மை எது பொய் என்பது தெரியாது. அதனால், நாம் அவர்களிடம் சென்று, உண்மை என்ன அப்படின்னு சொல்ல வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.
வெல்லும் தமிழ் பெண்கள் பரப்புரை மூலம் வீடு வீடாக சென்று இளைஞர்கள், இளம் பெண்கள் இருப்பார்கள். அவர்களுக்கு, உண்மையாகவே இந்த ஆட்சி என்ன செய்திருக்கிறது? திராவிட இயக்கம் என்ன செஞ்சிருக்கு? அவர்களின் தாத்தா எப்படி இருந்தாரு? இன்னைக்கு அவங்க எப்படி இருக்காங்க? நாம இல்லன்னா அவங்களால இன்றைக்கு படிச்சு இந்தக் காலேஜுக்கு வாய்ப்பு இருந்திருக்காது என்பதை அவர்களிடம் எடுத்துச் சொல்லுங்கள்.
வீட்டுல் இருக்கக்கூடிய பெண்கள் படிக்கிறதுக்கு எத்தனை திட்டங்கள் கொண்டுவரப்பட்டது. தலைவர் கலைஞர் அவர்கள்தான் சின்ன சின்ன ஊர்களில் கல்லூரிகளை உருவாக்கினார். அந்தக் கல்லூரிகளை உருவாக்க வில்லை என்றால் பிள்ளைங்களால படிக்க முடியாது. என்ன படிக்கிறதுன்னு கூட நம்ம பிள்ளைங்களுக்கு யாரும் சொல்லித் தர்றதுக்கு வழி இல்லை அன்று.
திருமண உதவித்திட்டம் மூலம் பெண் பிள்ளைகளை பத்தாவது வரைக்கும் படிக்கவை. நான் கல்யாணம் பண்ணி வைக்கிறேன். கல்யாணத்துக்காகக் கொண்டு வந்த திட்டம் இல்ல. அந்தப் பொண்ணு படிக்கணும்ங்கறதுக்காகக் கொண்டு வந்த திட்டம். அந்தப் பொண்ணு படிச்சு பன்னிரண்டு முடிச்சு, கல்லூரிக்கு போகும்போது புதுமை பெண் திட்டம் மூலம் ஆயிரம் ரூபாய்யை முதலமைச்சர் தருகிறார்.
அந்தத் திருமண உதவித்திட்டம் இன்று புதுமைப்பெண் திட்டமாக இன்னொரு உருவத்துல அந்தப் பிள்ளைங்கள கொண்டுபோய் கல்லூரியில் சேர்த்துருக்கு. கல்லூரியில இருந்து வரக்கூடிய பிள்ளைங்களுக்கு வேலை கிடைக்குமான்னா ரிசர்வேஷன் அரசுப் பணிகளில் இன்றைக்கு 40% சதவீதம் பெண்களுக்கு இட ஒதுக்கீடு உருவாக்கப்பட்டு இருக்கு.
இன்றைக்கு தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய வொர்க் ஃபோர்ஸ் (Work Force) 42% சதவீதம் பெண்கள். கிட்டத்தட்ட 50% சதவீதம் தமிழ்நாட்டுல இருக்கக்கூடிய பெண்கள் வேலைக்குப் போகக்கூடிய ஒரு நிலையை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா உருவாக்கித் தர வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.
நீங்கள் 50% சதவீதம் கொடுத்துட்டீங்கன்னா நாங்கள் 80% தோற்றுவோம். நிச்சயமாக நம்முடைய பணியை நாம் செய்வோம். நம்முடைய முதலமைச்சர், இந்தத் தேர்தலிலேயே நம்முடைய உழைப்புக்கான ஒரு அங்கீகாரத்தை நிச்சயம் தருவார்கள் என்று நாம் அத்தனை பேரும் உறுதியோடு இருக்க முடியும். ஏனென்றால் இது பெண்களுக்கான ஆட்சி, தேர்தலிலும், அரசியல் அதிகாரத்திலும் நமக்கும் பங்கு அதிகரித்து வழங்கப்படும் என்ற நம்பிக்கையோடு இருப்போம் என்று பேசினார்.
Also Read
-
“எங்க ஸ்டேட்டு இனி ‘கேரளம்’ ஆனோ...” - மசோதாவுக்கு ஒப்புதல் அளித்த ஒன்றிய அமைச்சரவை - விவரம்!
-
நீதித்துறையில் ஊழல் : NCERT 8 ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் வெடித்த சர்ச்சை!
-
‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ புதிய உயரங்களை அடைவதில் பெருமிதம் கொள்வோம்!: முதலமைச்சர் நெகிழ்ச்சிப் பதிவு!
-
“மனிதநேயமிக்கவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்” : நடிகர் விஜய் ஆண்டனி புகழாரம்!
-
”இது நம்ம ஆட்டம் 2026”- மாநில அளவில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பதக்கங்களை வழங்கிய துணை முலமைச்சர் உதயநிதி