Tamilnadu

மகளிர் விடியல் பயண திட்டத்திற்கு ரூ.4000 கோடி நிதி : பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தது என்ன?

தமிழ்நாடு அரசின் 2026-27 நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை இன்று சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.

அதன் முக்கிய அம்சங்களை இங்கு பார்ப்போம்:-

டாக்டர் கலைஞர் விளையாட்டுத் தொகுப்புகள் வழங்கும் திட்டத்தின் கீழ் 86 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் 12,525 கிராம ஊராட்சிகளுக்கு 16,798 விளையாட்டுத் தொகுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் முன்னெடுக்கப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு 101 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் இளைஞர் விளையாட்டுத் திருவிழா - இது நம்ம ஆட்டம் 2026 போட்டிகளை நடத்திட ரூ.43 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறைக்கு ரூ.718 நிதி ஒதுக்குடு செய்யப்பட்டுள்ளது.

போக்குவரத்து :-

போக்குவரத்துக் கழகங்களுக்கு சேவை அடிப்படையிலான ஊக்கத்தொகை வழங்கும் நோக்கத்தில், ஊக்க நிதியம் ரூ.2000 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டுள்ளது.

மகளிர் விடியல் பயணம் திட்டத்திற்காக ரூ.4000 கோடியும், மாணவர்கள் பேருந்துப் பயணக் கட்டணம் திட்டத்திற்காக ரூ.1,782 கோடியும், டீசல் மானியத்திற்காக ரூ.1,857 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

போக்குவரத்துத்துறைக்கு ரூ.13,062 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மெட்ரோ இரயில் திட்டங்கள்:-

கோயம்புத்தூர் மற்றும் மதுரை மாநகரங்களில் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கிட ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

சென்னை விமான நிலையம் முதல் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் அமைந்துள்ள கிளாம்பாக்கம் வரையிலும், கோயம்பேடு முதல் பட்டாபிராம் வழியாக ஆவடி வரையிலும், திருப்பெரும்புதூர் வழியாக பூந்தமல்லி முதல் சுங்குவார்ச்சத்திரம் வரையிலுமான புதிய வழித்தடங்களில் மெட்ரோ ரயில் திட்டங்களை நிறைவேற்றிட மாநில அரசு கொள்கை ரீதியிலான ஒப்புதல் வழங்கி ஒன்றிய அரசின் ஒப்புதல் மற்றும் நிதியுதவிக்கு பரிந்துரைத்துள்ளது.

இந்து சமய அறநிலையத்துறை :-

திருச்செந்தூர், சமயபுரம், பழனி உள்ளிட்ட 19 முக்கிய திருக்கோவில்களில் 1,770 கோடியில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

திருக்கோவில்களுக்குச் சொந்தமான ரூ.8,363 கோடி மதிப்பிலான 8,111 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளன.

சுற்றுலா:-

தமிழ்நாட்டில் அதிகம் அறியப்படாத 22 சுற்றுலாத் தலங்களை மேம்படுத்த ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

கன்னியாகுமரியில் திருவள்ளுவரின் சிலை மற்றும் விவேகானந்தர் பாறை ஆகியவற்றை இணைக்கும் கண்ணாடி இழைப் பாலத்தினை கடந்த ஆண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இக்கண்ணாடி இழைப் பாலத்தினால் கடந்த ஆண்டில் மட்டும் 43% சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.

சுற்றுலாத்துறைக்கு ரூ.1,394 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பால் வளம்:-

பால் கொள்முதல் விலையினை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தியதன் மூலம் 3.70 லட்சம் பால் உற்பத்தியாளர்களும், விற்பனை விலையை லிட்டருக்கு ரூ.3 குறைத்ததன் மூலம் நுகர்வோர்கள் ஆண்டொன்றுக்கு ரூ.270 கோடி சேமிப்பும் பெற்று பயனடைந்து வருகின்றனர்.

பால்வளம், மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறைக்கு ரூ.4,435 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பொதுப்பணி:-

சென்னை, கிழக்கு கடற்கரைச் சாலை, முட்டுக்காடு பகுதியில் கலைஞர் பன்னாட்டு மாநாட்டு மையம், கோயம்புத்தூர், திருச்சி, கடலூர், சேலம், திருநெல்வேலி ஆகிய இடங்களில் மாபெரும் நூலகங்கள் அமைக்கும் பணிகளை பொதுப்பணித்துறை மேற்கொண்டுள்ளது.

பொதுப்பணித்துறைக்கு ரூ.1,694 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள்:-

மதுரை மத்திய சிறைச்சாலையை மாற்று இடத்திற்கு புதியதாக அமைப்பதற்கு ரூ.229 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தஞ்சாவூர், சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் புதிய மாவட்ட சிறைச்சாலை வளாகங்கள் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறைக்கு ரூ.15,111 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நீதி நிர்வாகம்:-

நீதிபதிகள் குடியிரப்புகள், சட்ட அதிகாரிகள் வளாகம் மற்றும் பிற உட்கட்டமைப்பு வசதிகளுக்காக கடந்த 5 ஆண்டுகளில் ரூ.1,118 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நீதி நிர்வாகத்திற்கு ரூ.2,455 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Also Read: பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.48,534 கோடி நிதி ஒதுக்கீடு : இடைக்கால பட்ஜெட் - முக்கிய அம்சங்கள் என்ன?