Tamilnadu

“எத்தனை விருது கிடைத்தாலும், தமிழக அரசின் விருதுகளான ‘தாயின் முத்தத்திற்கு’ ஈடாகாது!” : உதயநிதி பேச்சு!

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற தமிழ்நாடு அரசின் திரைப்பட விருது மற்றும் சின்னத்திரை விருதுகள் வழங்கும் விழாவில் ஆற்றிய உரை

தமிழ்நாடு அரசினுடைய சிறந்த திரைப்பட விருது,  சின்னத்திரை விருது, தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும்  தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தினுடைய மாணவர் விருது ஆகியவற்றை இன்று இங்கே வழங்குவதில் மிகுந்த மகிழ்ச்சியடைகின்றோம். 

இன்றைக்கு இந்தியாவிலேயே மிகவும் Vibrant-ஆன
industry என்றால் நம்முடைய தமிழ் film industry என்று சொன்னால் அது மிகை ஆகாது.  வருடா, வருடம் ஒவ்வொரு ஜானர்லயும் முக்கியமான படங்களை நம்முடைய தமிழ் திரையுலகம் இன்றைக்கு வழங்கிக் கொண்டிருக்கிறது. 

இன்றைக்கு தமிழ்நாட்டையும் Cinema and TV industry-ஐயும் நாம் பிரித்து பார்க்க முடியாது. அதற்கு ஒரு சிறந்த உதாரணம். தமிழ்த் திரையுலகினுடைய மிக மூத்த கலைஞர், திரு.என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களுடைய பெயரில் அமைந்திருக்கக்கூடிய அரங்கத்தில் தான் இன்றைக்கு இந்த நிகழ்ச்சியை நாம் நடத்திக் கொண்டிருக்கிறோம். 

உங்கள் அனைவருக்கும் தெரியும். கலைத்துறை சம்பந்தப்பட்ட எந்த நிகழ்ச்சியிலும், கடந்த மூன்றரை, நான்கு வருடங்களாக நான் கலந்து கொள்வதில்லை. ஆனால், இந்த நிகழ்ச்சியை என்னால் தவிர்க்க முடியவில்லை. ஏன் என்றால், நிச்சயம் நானும் உங்களில் இருந்து உருவாகி வந்தவன்தான். இன்னும் சொல்லப்போனால் ரொம்ப நாளுக்குப் பிறகு பள்ளி வகுப்பறைக்கு வந்தது போன்று ஒரு உணர்வு உள்ளது. அந்த உரிமையோடும், பெருமையோடும் உங்களையெல்லாம் சந்திக்க நான் வருகை தந்திருக்கின்றேன்.

இந்த விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டவுடனே நிறைய விமர்சனங்கள் வந்தது. அவர்களுக்கெல்லாம் நான் சொல்லக்கூடிய ஒரே பதில், பல ஆண்டு காலமாக இந்த விருதுகள் அறிவிக்கப்படாமல், வழங்கப்படாமல் இருந்தது. நம்முடைய முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்றவுடன் உடனடியாக இந்த விருதுகள் வழங்கப்பட வேண்டும் என்று அறிவித்தார்.

உடனே இதற்காக ஓய்வுபெற்ற நீதியரசர் திருமதி கே.பி.கே வாசுகி அவர்கள் தலைமையில் ஒரு தேர்வுக்குழுவையும் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் அறிவித்தார்கள். அந்த தேர்வுக்குழுவினுடைய பரிந்துரைகளின் அடிப்படையில்தான் இன்றைக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகிறது. எனவே, முழுக்க, முழுக்க credit baseல் தான் இந்த விருதுகள் இன்றைக்கு உங்களுக்கு கிடைத்துள்ளது.

கலைத்துறையில் இருக்கக்கூடிய உங்கள் அத்தனைபேருக்கும் தெரியும். விருது என்று அறிவித்து கொடுத்தால், ஒரே நேரத்தில் எல்லாருக்கும் கொடுக்க முடியாது.  எனவே விருது பெற்றவர்கள் தமிழ் கலைத்துறைக்கு எவ்வளவு பெருமைகளைத் தேடி தந்து கொண்டிருக்கிறீர்களோ, அதே அளவிற்கு மற்றவர்களும் நிச்சயமாக  நம்முடைய தமிழ்நாட்டிற்கு பெருமைகளைத் தேடிதந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கான  அங்கீகாரமும் நிச்சயமாக உரிய நேரத்தில் கண்டிப்பாக கிடைக்கும் என்று நான் தெரிவித்துக் கொள்கின்றேன். 

இன்றைக்கு இந்த விருதுகளை வாங்குவதற்கு வந்திருக்கக்கூடிய உங்கள் அத்தனை பேருக்கும் மீண்டும் என்னுடைய பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் நான் தெரிவித்துக் கொள்கின்றேன்.

பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர், இவர்கள் இரண்டு பேரும் கலைத்துறையில் எவ்வளவோ சாதித்துள்ளார்கள். கலைத்துறையில் ஈடுபட்டவர்கள் மட்டும் கிடையாது. கலைத்துறையில் மிகுந்த ஈடுபாட்டோடு இருந்தவர்கள்தான் இவர்கள் இரண்டு பேரும். இவர்கள் இரண்டு பேர் தமிழ் சினிமாவுடைய போக்கையே மாற்றியவர்கள். அதே மாதிரி, நம்முடைய முதலமைச்சர் அவர்கள் திரைத்துறையிலும் சரி, சின்னத்திரையிலும் சரி பணியாற்றி இருக்கிறார்கள்.

இன்றைக்கு தமிழ் திரையுலகம் Content wise-ஆகவும் சரி, Technical wise-ஆகவும் சரி, எல்லா வகையிலும் இன்றைக்கு இந்தியாவிற்கே ஒரு Trend setter ஆக நம்முடைய தமிழ் சினிமாத்துறை, கலைத்துறை விளங்கிக் கொண்டிருக்கிறது. இன்றைக்கு, இந்த விருதுகளை வழங்குவதற்கு ஒரே ஒரு காரணம் மட்டும் தான் உண்டு, நல்ல படைப்புகளையும், கலைஞர்களையும் கொண்டாட வேண்டும், மேலும், மேலும் அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். உத்வேகப்படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடுதான் இன்றைக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகின்றது. 

இன்றைக்கு 2016 முதல் 2022 ஆம் ஆண்டு வரை திரைப்பட விருதுகள் வழங்கப்பட இருக்கின்றது. இந்த திரைப்படங்களின் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள்,  கலைஞர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், பணியாளர்கள் அனைவருக்கும்  எங்களுடைய பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.

அதே மாதிரி, 2014 முதல் 2022 வரை சின்னத்திரை விருதுகளும் இங்கே வழங்கப்பட இருக்கிறது. சின்னத்திரை கலைஞர்களைப் பொறுத்தவரைக்கும் நீங்கள் அத்தனைபேரும் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய ஒவ்வொரு குடும்பத்தினுடைய உறுப்பினர் என்று சொன்னால், அது மிகையாகாது.

ஏன் என்றால், தொலைக்காட்சியில் நீங்கள் சிரித்தீர்கள் என்றால், தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய ஒவ்வொரு வீட்டிலும் சிரிப்பு நிச்சயம் வரும். நீங்கள் அழுதீர்கள் என்றால், தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய ஒவ்வொரு வீட்டிலும் யாரோ ஒரு அழுது கொண்டு இருப்பார்கள். அந்த அளவிற்கு ஒவ்வொரு குடும்பத்திடனும் நெருக்கமாக இருக்கக்கூடியவர்கள் தான் நீங்கள். எனவே உங்களுக்கு கிடைத்திருக்கக்கூடிய இந்த விருது, அதுவும் மக்கள் அவர்களுக்கு கிடைத்த விருதாக நிச்சயம் உங்களை கொண்டாடுவார்கள். அப்படிப்பட்ட சின்னத்திரை கலைஞர்களுக்கும் என்னுடைய பாராட்டுக்களை நான் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இது தவிர, இன்றைக்கு 2015 முதல் 2022 வரையிலான
கல்வி ஆண்டிற்கான, தமிழ்நாடு அரசு எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன  மாணவர் விருதுகளும் இங்கே கொடுக்கப்பட இருக்கின்றது. Film Institute தான், தமிழ்நாட்டினுடைய தமிழ் சினிமாவுக்கு புதுமையான இயக்குநர்களை, கலைஞர்களை, தொழில் நுட்ப கலைஞர்களை தருகின்ற ஒரு நிறுவனம். அந்த வகையில், திரைப்படக் கல்லூரியில் படித்து விருது பெறுகின்ற எதிர்கால நம்பிக்கை நட்சத்திரங்களுக்கும் எங்களுடைய பாராட்டுக்கள், வணக்கங்கள். 

திரைத்துறையினுடைய வளர்ச்சிக்கும், திரைக்கலைஞர்களின் முன்னேற்றத்துக்கும் நம்முடைய அரசு என்றைக்கும்
துணை நிற்கும். குறிப்பாக, கடந்த 5 வருடத்தில் மட்டும், நம்முடைய அரசு 805 உறுப்பினர்களுக்கு சுமார் 47 லட்சம் ரூபாய்க்கான கல்வி உதவித்தொகை, விபத்துக்காப்பீடு, திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை என்று ஏராளமான நலத்திட்டங்களை கொடுத்திருக்கிறது.

தமிழ் திரைப்படங்களுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைக்கவும், உலக திரைப்படங்களை, தமிழ் ஆடியன்ஸ்க்கு கொண்டு வந்து சேர்க்கவும், நம்முடைய அரசு உங்களுக்கு துணையாக இருக்கின்றது. கடந்த 4 வருடத்தில் மட்டும், International Film Festival நடத்த சுமார் 4 கோடியே 15 லட்சம் ரூபாயை முதலமைச்சர் அவர்கள், மானியமாக தந்திருக்கின்றார்கள். 

அதுமட்டுமல்ல, தமிழ்த்திரையுலகின் மூத்த கலைஞர்களை
கவுரவிக்கின்ற வகையில், கலைஞர் அவர்கள் பெயரில் கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதும் வருடா, வருடம் வழங்கப்பட்டு வருகின்றது.

இப்படி கலை உலகினருக்கு கழக அரசு என்றைக்குமே
உற்றதுணையாக இருந்து வருகின்றது. இந்த நேரத்தில் ஒரு முக்கியமான விசயத்தை சொல்லி நிறைவு செய்ய விரும்புகின்றேன். 2009-ஆம் ஆண்டில் கலைமாமணி விருதுகள் வழங்குகின்ற நிகழ்ச்சியில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள், வாழ்த்தி பேசும்போது குறிப்பிட்டு சொன்னார்,

“கலைஞர்களாகிய உங்களுக்கு எவ்வளவோ விருதுகள் கிடைக்கும். National Awards கிடைக்கும். International Awards நிச்சயமாக கிடைக்கும். ஆனால், எந்த விருதும் தாயினுடைய முத்தத்திற்கு ஈடாகாது. அது மாதிரி தான், தமிழ்நாடு அரசு கொடுக்கின்ற விருதுகளும். இந்த விருதுகள் அனைத்தும் உங்களுடைய தாயினுடைய முத்தத்திற்கு சமமானது” என்று கலைஞர் அவர்கள் வாழ்த்தி பேசினார்கள்.

அப்படிப்பட்ட விருதுகளைப் பெற்றுள்ள உங்கள் அனைவரையும், நாங்கள் மீண்டும் ஒருமுறை வாழ்த்தி, இந்த வாய்ப்பிற்கு நன்றி கூறி விடைபெறுகின்றேன். 

Also Read: தமிழ்நாடு அரசின் 7 ஆண்டுகளுக்கான திரைப்பட விருதுகள் மற்றும் சின்னத்திரை விருதுகள்! : முழு விவரம் உள்ளே!