Tamilnadu

“படிப்புதான் ஒரு பெண்ணுக்கு உலகத்திலேயே அழகான அணிகலன்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (10.2.2026) சென்னை, மகளிர் கிறிஸ்துவக் கல்லூரியில் நடைபெற்ற அகில இந்திய கிறிஸ்தவ உயர்கல்வி சங்கம் (All India Association for Christian Higher Education) மற்றும் மகளிர் கிறிஸ்துவக் கல்லூரி (Women's Christian College) இணைந்து நடத்திய நன்றி தெரிவிக்கும் விழாவில் கலந்து கொண்டு, ஆற்றிய உரை:-

முதலில் எனக்கு ஒரு சந்தேகம். இன்னும் தேர்தல் Notification அறிவிக்கவில்லை. தேர்தல் Notification அறிவிப்பதற்கு முன்பாக, எல்லோரும் இங்கே தேர்தல் பிரசாரத்தை தொடங்கிவிட்டார்கள். எனக்கு நன்றி தெரிவிக்கக்கூடிய நிகழ்ச்சி இந்த நிகழ்ச்சி. ஆனால், தேர்தல் பிரசாரத்தை நடத்தியிருக்கக்கூடிய அனைவருக்கும் என்னுடைய நன்றியை முதலில் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

All India Association For Christian Higher Education அமைப்பும், நூற்றாண்டு கடந்த W.C.C- அமைப்பும் இணைந்து நடத்துகின்ற இந்த நன்றி அறிவிப்பு விழாவில் கலந்துகொள்வதில் நான் மிகுந்த மகிழ்ச்சியும், பெருமையும் அடைகிறேன். இன்னும் கூட சொல்லவேண்டும் என்றால், ஒரு உணர்ச்சியோடும், நெகிழ்ச்சியோடும் நான் இங்கே நின்று கொண்டிருக்கிறேன். நானும், MCC பள்ளிக்கூடத்தின் பழைய மாணவன் தான். அந்த பழைய மாணவன் தான் இன்றைக்கு W.C.C-க்கு வந்திருக்கிறேன். MCC-யிலிருந்து WCC-க்கு வந்திருக்கிறேன்.

வரவேற்புரை ஆற்றிய WCC-யின் கல்லூரியின் முதல்வர் சொன்னார்; இங்கே படித்து வெற்றி பெற்ற பெண்களின் பெயர்கள், அடுத்து அந்த லிஸ்டில் வரப்போகின்ற பெண்களான உங்களுடைய பெயர்கள் வரும் என்ற நம்பிக்கையோடு உங்களுடன் கலந்து கொள்வதில் இன்னும் உற்சாக உணர்வை எனக்கு ஊட்டுகிறது.

இங்கே பேசிய பலர் நன்றி சொல்லி பேசினார்கள். நமக்குள் நன்றி சொல்லிக்கொள்ள தேவையில்லை. இதை என் மீது நீங்கள் வைத்திருக்கக்கூடிய அன்பின் வெளிப்பாடாக நான் எடுத்துக்கொள்கிறேன். அதுமட்டுமல்ல, இன்னும் இன்னும் உங்களுக்கு தேவையானதை செய்து கொடுக்க வேண்டும் என்று கூடுதல் பொறுப்புணர்வை இந்த நிகழ்ச்சி எனக்கு உருவாகியிருக்கிறது. அதுதான் உண்மை.

சகோதரர் இனிகோ இருதயராஜ் இங்கு இருக்கிறார். ஒவ்வொரு முறையும் என்னைப் பார்க்க வரும்போது, இங்கே இருக்கக்கூடிய பலருடன் சேர்ந்து வருவார். வரும்போது, நிறைய கோரிக்கைகளுடன் வருவார். அதில் பல கோரிக்கைகள் எளிதில் தீர்த்து வைக்க கூடியதாக இருக்காது. கொஞ்சம் கஷ்டமாக இருக்கும். அதில், சில சட்ட சிக்கல்கள் இருக்கும். பழைய விதிகளை எல்லாம் திருத்த வேண்டியதிருக்கும். புதிதாக G.O. போட வேண்டியிருக்கும். கூடுதலாக பல கோடி நிதியும் தேவைப்படும். இருந்தாலும், எல்லாவற்றையும் முழு முயற்சி எடுத்து அதை நாங்கள் செய்து கொடுப்பதுதான் எங்களுடைய கடமையாக கருதி, நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம்! ஏனென்றால், இனிகோ கேட்டால், இல்லை என்று சொல்லவே முடியாது.

இங்கே சொன்னதுபோல, சமீபத்தில், நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் கூட பல அறிவிப்புகளை எல்லாம் நான் நெல்லையில் வெளியிட்டேன். இப்போதும் இந்த அமைப்பின் சார்பில் இன்னும் சில கோரிக்கைகள் இருக்கிறது. அடுத்தும் நாம்தான் வருவோம்! இங்கே பேசிய பேச்சுக்களை எல்லாம் பார்த்தால், எந்த சந்தேகமும் எனக்கு வரவில்லை! அதனால், கண்டிப்பாக உங்கள் மீதமுள்ள கோரிக்கைகளை நிறைவேற்றி தருவோம்.

இங்கு இத்தனை மாணவிகளை ஒரே இடத்தில் பார்க்கும்போது, உங்களுக்காக செயல்படுத்தி வரும் திட்டங்களின் பலன்களை எல்லாம் நினைத்துப் பார்க்கிறேன். இங்கே காணொலி காட்சியின் மூலமாக சிலர் பேசினார்கள். திராவிட மாடல் அரசு ஆட்சிக்கு வந்ததும் பெண்களின் கல்விக்காக நாம் கொண்டு வந்திருக்கக்கூடிய முதல் பெரிய திட்டம் என்றால், அரசுப் பள்ளியில் படித்து கல்லூரியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமைப்பெண் திட்டம்தான்! இந்தத் திட்டம் எந்த அளவிற்கு தாக்கம் செலுத்தி இருக்கிறது என்று தெரிந்துகொள்ள, அதை நாங்கள் புரிந்து கொள்ள, ஒரு ஆய்வு செய்யுங்கள் என்று மாநில திட்டக்குழுவிடம் சொல்லியிருந்தேன். சட்டமன்ற உறுப்பினர் திரு. எழிலன் அவர்கள் அந்தத் திட்டக் குழுவில் இடம் பெற்றிருக்கிறார். திரு.ஜெயரஞ்சன் தலைமையில் அந்த குழு இருக்கிறது. அவர்கள் கொடுத்த முடிவுகளைப் பார்த்து, நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது.

நகர்ப்புறங்களை விட கிராமப்புறங்களைச் சேர்ந்த மாணவிகள்தான் இந்த திட்டத்தில் அதிகமாக பயனடைந்திருக்கிறார்கள். ஏனென்றால், கிராமப்புறங்களில்தான் பள்ளி முடித்துவிட்டு மேல்படிப்பு படிக்க முடியாமல் ஒரு சூழ்நிலை இருந்து வந்தது. அந்த நிலையை புதுமைப் பெண் மாற்றியிருக்கிறது.

இதையெல்லாம் விட ஆச்சரியமான ஒரு விளைவையும் இந்தத் திட்டம் ஏற்படுத்தியிருக்கிறது. பள்ளி முடித்துவிட்டு பணம் இல்லாத காரணத்தால், கல்லூரிக்கு போகாமல் வீட்டிலேயே பல ஆண்டுகளாக முடங்கிக் கிடந்த பலர், இப்போது மாதம் ஆயிரம் ரூபாய் கிடைப்பதன் காரணத்தினால், மறுபடியும் படிப்பதற்கு வந்திருக்கிறார்கள்.

சமீபத்தில், எடுத்த டேட்டா அடிப்படையில், புதுமைப்பெண் திட்டத்தால் மட்டும் பெண்கள் உயர்கல்வியில் சேருவது கூடுதலாக 34 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது. இதைவிட எனக்கு என்ன மகிழ்ச்சி வேண்டும்? இது ஒரு சாதாரண சாதனை இல்லை! இப்போது மறுபடியும் ஆய்வு செய்தால் இந்த சதவிகிதம் கண்டிப்பாக இன்னும் கூடியிருக்கும்! இது போன்று சுமார் 8 இலட்சம் மாணவிகள் இந்தத் திட்டத்தில் பயன்பெற்றிருக்கிறார்கள்.

அடுத்து, கடந்த ஆட்சியில் மருத்துவப் படிப்பில் மட்டும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகிதம் இட ஒதுக்கீடு கொண்டு வந்தார்கள். ஆனால், நாம்தான் அதற்காக தொடர் போராட்டம் நடத்தி, அதை கொண்டுவர வைத்தோம்! இப்போது, நாம் ஆட்சிக்கு வந்த பிறகு, Engineering, Agri, சட்டம், கால்நடை மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளிலும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இடஒதுக்கீட்டை கொண்டு வந்தோம்! இதில் தேர்வாகும் மாணவர்களுக்கு கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம் எல்லாவற்றையும் அரசே ஏற்றுக்கொள்ளும் என்று அறிவித்தோம்!

கடந்த 5 ஆண்டுகளில், 40 ஆயிரத்து 613 மாணவர்களுக்கு 911 கோடி ரூபாய் இதற்காக செலவிடப்பட்டிருக்கிறது. இந்த இட ஒதுக்கீட்டால், பயனடைந்த பார்வதி என்கிற குமரி மாவட்டத்தை சேர்ந்த மாணவி, அண்மையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசியிருந்தார்கள். ”எங்கள் அப்பா டீக்கடையில் வேலை பார்க்கிறார். எனக்கு இந்த இட ஒதுக்கீட்டால், M.I.T. Campus-ல் சீட் கிடைத்தது! இப்போது நான் படித்து முடித்து நல்ல வேலையில் இருக்கிறேன்; வீட்டையும் பார்த்துக்கொள்கிறேன். இதனால், வேலைக்கு சென்று கொண்டிருந்த எங்கள் அண்ணன் மேல்படிப்பு படிக்க இப்போது கல்லூரியில் சேர்ந்திருக்கிறார்கள்” என்று சொன்னார்கள். இப்படி ஐந்தே ஆண்டுகளில் பல குடும்பங்களின் தலையெழுத்தையே நம்முடைய திராவிட மாடல் அரசின் திட்டங்கள் மாற்றியிருக்கிறது!

அடுத்து, என்னுடைய கனவுத் திட்டமான நான் முதல்வன்! இந்தத் திட்டத்தில் ஜப்பானிய மொழியை கற்றுக்கொண்ட மாணவி, இப்போது வேலை கிடைத்து ஜப்பானிற்கு செல்ல இருக்கிறார். இதற்காக, ஜப்பானிய மொழியிலேயே அவர்கள் எனக்கு நன்றி சொன்ன வீடியோ கூட வைரல் ஆனது.

பள்ளிக் கல்வியை எடுத்துக் கொண்டால், காலை உணவுத் திட்டத்தில் 19 இலட்சத்திற்கும் அதிகமான பள்ளி மாணவர்கள், தினமும் காலையில் சூடான, சுவையான உணவை சாப்பிட்டு தெம்பாக படிக்க வருகிறார்கள்.

அடுத்து, அரசுப் பள்ளிகளை தரமுயர்த்த வேண்டும் என்று மாடல் ஸ்கூல் கொண்டு வந்தோம். இந்த பள்ளிகளில் படித்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருக்கக்கூடிய முன்னணி கல்வி நிறுவனங்களில் படிக்கிறார்கள்.

சில உதாரணங்களை சொல்கிறேன். சேலம் கல்வராயன் மலைப்பகுதியை சேர்ந்த ராஜேஸ்வரி என்கிற பழங்குடியின மாணவியின் அப்பா – புற்றுநோய் காரணமாக இறந்துவிட்டார். அம்மா கூலி வேலை செய்கிறார். குடிசை வீடுதான்! அவர்கள் இப்போது சென்னை ஐ.ஐ.டி.-யில் படிக்கிறார்.

அதேபோல், நாம் கொண்டு வந்த மாடல் ஸ்கூல் மூலமாக, ஐ.ஐ.டி. மும்பையில் ‘ஏரோ-ஸ்பேஸ் இஞ்சினியரிங்’ படிக்க சென்றிருக்கும் யோகேஸ்வரி பற்றி கூகுள் செய்து பாருங்கள். அவர்கள் அம்மா பட்டாசு தொழிற்சாலையில் வேலை பார்க்கிறார்கள்; அப்பா டீக்கடையில் வேலை பார்க்கிறார். அவர்கள் இப்போது J.E.E. தேர்வில் பாஸ் செய்துவிட்டு மும்பையில் படிக்கிறார்.

இப்படி, கடந்த 5 ஆண்டுகளில், அரசுப் பள்ளிகளிலிருந்து தேர்வான ஆயிரக்கணக்கான மாணவர்களின் கல்விச் செலவை அரசே ஏற்றுகொண்டு இருக்கிறது. நான் ஏன் இவர்களைப் பற்றியெல்லாம் உங்களிடம் சொன்னேன் தெரியுமா?

நம்முடைய திட்டங்களின் வெற்றி, இம்பாக்ட் பற்றி புரிய வைப்பதற்காக மட்டும் இல்லை! அதைதாண்டி, உங்கள் எல்லோருக்கும் இதில் ஒரு Lesson இருக்கிறது! வெற்றிக்கு ’ஷார்ட்-கட்’ கிடையாது! Hard Work செய்தால்தான் ஜெயிக்க முடியும்! சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் டயலாக் ஒன்று வரும். “கஷ்டப்படாமல் எதுவும் கிடைக்காது! கஷ்டப்படாமல் கிடைப்பது நிலைக்காது!”

இன்றைக்கு நீங்கள் எந்தத் துறையில் இருக்கும் சாதனையாளர்களை எடுத்துகொண்டாலும், எல்லோருக்குமே ஒரு பெரிய ‘Journey’ இருக்கும்! அந்த Journey, அதில் நீங்கள் போடக்கூடிய Efforts, அந்த ‘Process’-இல் நீங்கள் கற்றுக்கொள்ளும் Lessons, இதெல்லாம்தான் உங்களை பக்குவப்படுத்தும்! பக்குவத்துடன் அடையும் வெற்றிதான் நிலைத்து நிற்கும்!

உங்களுக்கு படிப்பில் பிடிமானம் இல்லாதபோது, உங்கள் அப்பா - அம்மாவை நினைத்துப் பாருங்கள். வெளிநாடுகளில் எல்லாம் ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல், பெற்றோர் சப்போர்ட் இல்லாமல் இளைஞர்களே அவர்கள் வாழ்க்கையை பார்த்துக்கொள்ளும் Culture-ஆக இருக்கிறது. ஆனால், நம்முடைய ஊரில், உங்கள் கல்விக்காக பல பெற்றோர்கள் தங்கள் உடல், பொருள், உழைப்பு எல்லாவற்றையும் செலவு செய்கிறார்கள். தங்களின் வாழ்நாள் சேமிப்பு எல்லாவற்றையுமே பிள்ளையின் படிப்பிற்காக செலவு செய்கின்ற பெற்றோர்கள் இருக்கும் ஊருதான் நம்முடைய தமிழ்நாடு! அவர்கள், உங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை காப்பாற்றுங்கள். அதுதான் என்னுடைய வேண்டுகோள். உங்களைப் பற்றி உங்கள் பெற்றோர்களிடம் நான்கு பேர் பெருமையாக பேசினால், அதைவிட அவர்களுக்கு வேறு பெரிய சந்தோஷம் எதும் இருக்க முடியாது! அந்த மகிழ்ச்சியை அவர்களுக்கு நீங்கள் கொடுங்கள். அதுதான் மிகவும் முக்கியம்!

என்னைப் பொறுத்தவரையில், பெண்கள் என்றாலே அழகுதான்! அப்படிப்பட்ட பெண்களுக்கு அறிவுதான் உண்மையான அழகு! படிப்புதான் ஒரு பெண்ணுக்கு உலகத்திலேயே அழகான அணிகலன்!

இன்றைக்கு இருக்கும் போட்டி நிறைந்த உலகத்தில் நீங்கள் நிலைத்து நிற்க வேண்டும் என்றால், சும்மா ஒரு டிகிரி படித்தால் போதாது! நீங்கள் வேலைக்கு சென்றாலும், உங்களுக்கு ஆர்வம் இருக்கும் துறையில், ஆராய்ச்சிப் படிப்பு வரை தொடர்ந்து படிக்க வேண்டும்! இது உங்களின் முன்னேற்றத்திற்காக மட்டுமல்ல, நம்முடைய State முன்னேறவும்தான் சொல்கிறேன்.

இன்னைக்கு தமிழ்நாடு நம்பர்-1 மாநிலமாக இருக்கிறது. ஆனால், வரலாற்றைப் புரட்டிப் பார்த்தோம் என்றால், 1950-களில் அப்படியே தலைகீழான நிலைதான் இருந்தது. நாட்டிலேயே வறுமையான மாநிலங்களில் ஒன்றாக இருந்த தமிழ்நாடு, இப்போது நாட்டிலேயே வறுமை குறைந்த மாநிலமாக வளர்ந்திருக்கிறது; இன்னும் பெருமையோடு சொல்கிறேன் - இரண்டாவது பெரிய Economy-ஆக இன்றைக்கு உருவெடுத்திருக்கிறோம்!

நிறைய தொழிற்சாலைகள் தமிழ்நாட்டைத் தேடி வருகிறார்கள். கடந்த 6 மாதத்தில் பார்த்தீர்கள் என்றால், வின்ஃபாஸ்ட், டாடா மோட்டார்ஸ் - ஜாகுவார் லேண்ட்ரோவர் என இரண்டு பெரிய கார் உற்பத்தி ஆலைகளை திறந்து வைத்திருக்கிறேன். இதற்கு முன்பு இவ்வளவு Short Period-ல் 2 பெரிய கார் நிறுவனங்கள் திறந்து வைத்த வரலாறே இல்லை! ஆனால், நாம் செய்து இருக்கிறோம்!

அடுத்து, ஃபோர்டு கம்பெனியும் மீண்டும் உற்பத்தியை தொடங்கப் போகிறார்கள். மற்ற மாநிலங்கள் கூட போட்டி என்ற நிலையை தாண்டி, உலக நாடுகள் கூடதான் நாம் இப்போது போட்டி போடுகிறோம்! இதற்கெல்லாம் காரணம், கல்வியில் தமிழ்நாடு செலுத்தும் கவனம்தான்! தொழில்துறையை எடுத்துகொண்டால், எந்த கம்பெனி கூட MoU கையெழுத்திட்டாலும், நான் அவர்களிடம் கேட்கும் முதல் கேள்வியே, இதனால் எத்தனை பெண்களுக்கு வேலை கிடைக்கும்?” அப்படி என்றுதான் முதலில் கேட்பேன். ஏனென்றால், பெண்களான நீங்கள் முன்னேறினால், ஒரு தலைமுறையே முன்னேறும்! நீங்கள் ஒவ்வொருவரும் படித்து நல்ல வேலைகளுக்கு சென்றால், உங்கள் குடும்பம் முன்னேறும்!

இந்தியாவிலேயே அதிக அளவிலான பெண்கள் தொழிற்சாலைகளில் பணிபுரியும் மாநிலமாக, யாரும் எட்டிப்பிடிக்க முடியாத உயரத்தில் தமிழ்நாடு இருக்கிறது. இது இன்னும் உயர்ந்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பெண்களும் வேலைக்குச் செல்லக்கூடிய நிலைமை வர வேண்டும். அதற்கு உங்களுக்கு என்ன தேவை என்றாலும் சொல்லுங்கள் - நான் செய்வதற்கு தயாராக இருக்கிறேன்! நிச்சயம் உங்கள் வளர்ச்சியில் நான் உங்களுடன் இருப்பேன். அதேபோல், உங்கள் ‘ஹெல்த்’தையும் பார்த்துக்கொள்ளுங்கள்.

இப்போது கூட 14 வயதுள்ள பெண் குழந்தைகளுக்கு கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி போடும் திட்டத்தை தொடங்கி வைத்திருக்கிறோம்! இந்தியாவில் எங்கும் இது கிடையாது! நாம்தான் ஃபர்ஸ்ட்! வெளியில் சென்று போட்டுக் கொண்டால், 14 ஆயிரம் ரூபாய் ஆகும், இந்த தடுப்பூசியை அரசே கட்டணமில்லாமல் இப்போது செலுத்துகிறோம். இதைப்பற்றி உங்களுக்கு தெரிந்தவர்களிடம் எடுத்து சொல்லுங்கள். இவ்வளவு நேரம் நான் பேசியதையெல்லாம் அட்வைஸ் என்று நினைத்துவிடாதீர்கள். நீங்களும் எனக்கு மகள்கள் போல்தான். மீண்டும் சொல்கிறேன் – நீங்கள் எனக்கு மகள்கள் போலதான். அந்த பாசத்துடன் உலகம் முழுவதும் நீங்கள் வலம் வர வேண்டும் என்று அக்கறையுடன் சொன்னதாக நினைத்துக்கொள்ளுங்கள்.

இதுபோன்ற நன்றி தெரிவிக்கும் விழாக்களை விட, நீங்கள் எல்லோரும் நன்றாகப் படித்து, வாழ்க்கையில் முன்னேறினால், அதுதான் நீங்கள் எனக்கு செலுத்தக்கூடிய உண்மையான நன்றி!

வெல்லும் தமிழ்ப் பெண்களே! All the best…! Rule the world…!

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Also Read: “அனைவருக்குமான அரசு திராவிட மாடல் அரசு... அதற்கு இதுவே சான்று...” - முரசொலி தலையங்கம் பாராட்டு!