Tamilnadu
உங்களின் Favourite Destination தமிழ்நாடு : உலக மக்களுக்கு முதலமைச்சர் சொன்ன வேண்டுகோள்!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (2.2.2026) செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில், தமிழ்நாடு உலகளாவிய சுற்றுலா உச்சி மாநாடு - 2026 (TAMIL NADU GLOBAL TOURISM SUMMIT - 2026)-யைத் தொடங்கி வைத்து, ஆற்றிய உரை:-
இன்றைக்கு மனிதர்களான நாம் இந்த அளவுக்கு பண்பாட்டு ரீதியாக முன்னேறியிருக்கிறோம் என்றால், அதற்கு மனித சமுதாயத்தின் பயணங்கள் மிக முக்கியமானது!
உணவுத் தேவைக்காக, கல்விக்காக, வணிகத்திற்காக, சமூகத்தை உணர்ந்து கொள்வதற்காக, நாடுகளை பிடிப்பதற்காக என்று மனிதர்களின் அனைத்துப் பயணங்களுக்கும் ஏதோ ஒரு நோக்கம் இருந்தது. இந்தப் பயணங்கள் நமக்கு ஏராளமானவற்றை கற்றுக் கொடுத்திருக்கிறது! சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால், பயணங்கள் என்பது புத்தகங்கள் இல்லாத வகுப்பறை! அப்படிப்பட்ட பயணங்களை ஊக்குவிக்கவும், சுற்றுலாப் பயணிகளின் அனுபவங்களை மேம்படுத்தவும், இந்த உலகளாவிய சுற்றுலாவிற்கான உச்சி மாநாடு நிச்சயம் துணைபுரிய வேண்டும் என்று நான் நம்புகிறேன்.
கூடுதல் சிறப்பு என்னவென்றால், இப்படிப்பட்ட சுற்றுலா மாநாடு முதல்முறையாக தமிழ்நாட்டில் நடைபெறுவது நமக்கெல்லாம் மகிழ்ச்சியையும், பெருமிதத்தையும் சேர்க்கிறது. அதேசமயம், கூடுதல் பொறுப்புணர்வையும் வழங்குகிறது!
இந்த மாநாட்டை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கக்கூடிய இந்தத்துறையின் அமைச்சர் ராஜேந்திரன் அவர்களுக்கும், துறையின் அதிகாரிகளுக்கும் என்னுடைய பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
அமைச்சர் ராஜேந்திரன் அவர்கள் பொறுப்பேற்ற பிறகு, சுற்றுலாத் துறையை அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார். அவருக்கு தோளோடு, தோள் நின்று துணை நின்றிருக்கக்கூடிய தொழில் துறை அமைச்சர் தம்பி டி.ஆர்.பி. ராஜா அவர்களுக்கும், தொழில் துறை அதிகாரிகளுக்கும் என்னுடைய பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, தமிழ்நாட்டின் சிறப்பைப் பற்றி இங்கே சிறப்பாக பேசிய திரு. ரவிச்சந்திரன் அஸ்வின் அவர்களுக்கும் நான் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
தமிழின் அருமை குறித்தும் எங்களின் நாகரிகத்தின் தொன்மை குறித்தும் உலக அளவிலிருந்து வந்திருக்கக்கூடிய தொழில்முனைவோர்கள் எல்லோருக்கும் தெரியும்!
தலைநகர் சென்னையில் மெரினா கடற்கரை தொடங்கி, மாமல்லபுரம் - வேடந்தாங்கல் - ஊட்டி - கொடைக்கானல் - தஞ்சை பெரிய கோயில் - கங்கைகொண்ட சோழபுரம் - செஞ்சிக் கோட்டை என்று குமரி வள்ளுவமுனையில் வானுயர்ந்து நிற்கும் அய்யன் வள்ளுவர் சிலை வரைக்கும் தமிழ்நாட்டில் ஏராளமான சுற்றுலா தலங்கள் இருக்கிறது!
இயற்கை எழில் - வியக்க வைக்கும் கட்டடக் கலை - தலைநிமிர வைக்கும் கோபுரங்கள் - வரலாற்று பெருமிதத்தை எடுத்துச் சொல்லக்கூடிய இடங்கள் என்று, தமிழ்நாட்டில் Explore பண்ணவும், Experience பண்ணவும் நிறைய இடங்கள் இருக்கிறது!
பொதுவாக, நாம் வெளிநாடுகளுக்கு பயணம் செய்யும்போது, பெரும்பாலான நாடுகளில், தங்களின் பாரம்பரிய கலைகள் என்று சில கலைநிகழ்ச்சிகளை நடத்தி காட்டுவார்கள். அதுவே, தமிழ்நாட்டை எடுத்துகொண்டால், கரகாட்டம் - காவடியாட்டம் - ஒயிலாட்டம் - மயிலாட்டம் - தெருக்கூத்து - தப்பாட்டம் – பரதநாட்டியம் என்று ஏராளமான கலைகள் இருக்கிறது!
அதேபோல், நம்முடைய பண்பாட்டு அடையாளமான ஏறுதழுவுதல் உள்ளிட்ட விளையாட்டுகளும், சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்த்திருக்கிறது! இந்தக் கலைகளையும் - கலைஞர்களையும் - நம்முடைய பண்பாட்டையும் உலகளவிற்குக் கொண்டு சேர்க்கும் வலிமை, சுற்றுலா துறைக்குதான் இருக்கிறது!
தமிழ்நாட்டில் சுற்றுலா துறையை மேம்படுத்த வேண்டும் என்று, நம்முடைய திராவிட மாடல் அரசில் ஏராளமான முன்னெடுப்புகளை நாம் எடுத்திருக்கிறோம்! செய்து கொண்டிருக்கிறோம்!
இந்த சுற்றுலா துறையில் செய்யப்பட்டிருக்கும் சாதனைகளில் முக்கியமானவற்றை சொல்ல வேண்டும் என்றால்,
கீழடி அருங்காட்சியகம் - பொருநை அருங்காட்சியகம் - கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் போன்ற முத்திரை திட்டங்கள் மட்டுமல்லாமல்,
கன்னியாகுமரியில் உள்ள அய்யன் திருவள்ளுவர் சிலைக்கு கண்ணாடிப் பாலம் அமைத்திருக்கிறோம், 3D லேசர் தொழில்நுட்பத்துடன் ஒளியூட்டி இருக்கிறோம்.
குற்றாலத்தில் அடிப்படை சுற்றுலா வசதிகளை மேம்படுத்துவதற்காக 11 கோடியே 35 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியிருக்கிறோம்!
பிச்சாவரம் படகு இல்லம் உள்ளிட்ட சுற்றுலா வசதிகளை மேம்படுத்த 14 கோடியே 7 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறோம்!
முக்கிய சுற்றுலாத் தலங்களில் புதிய காட்சிமுனைகள் அமைக்கவும், தற்போதைய காட்சிமுனைகளை மேம்படுத்தவும்
11 கோடியே 46 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியிருக்கிறோம்!
ஏற்காட்டின் உட்கட்டமைப்பு மற்றும் பிற சுற்றுலா வசதிகளை மேம்படுத்த, 9 கோடியே 70 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியிருக்கிறோம்!
இப்படி ஏராளமான திட்டங்களையும், முன்னெடுப்புகளையும் என்னால் சொல்லிக்கொண்டே போக முடியும்…
இதன் தொடர்ச்சியாகதான், இந்த நிகழ்ச்சி மூலமாக, பூம்புகாரில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் பல்வேறு அடிப்படை வசதிகள் - சிதம்பரத்தில் கட்டப்பட்டுள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக ஹோட்டல் - மாமல்லபுரம் மரகத பூங்காவில் ஒளிரும் பூங்கா மற்றும் பிற பொழுதுபோக்கு அம்சங்கள் ஆகியவற்றை துவக்கி வைத்து, திருக்கடையூரில் தமிழ்நாடு ஓட்டலுக்கு உணவகம் கட்டுவதற்கும் - தரங்கம்பாடியில் பல்வேறு சுற்றுலா வசதிகள் மேற்கொள்ளவும் அடிக்கல் நாட்டியிருக்கிறேன்.
இப்படி, கடந்த ஐந்து ஆண்டுகளில், சுற்றுலாத் துறையின் மேம்பாட்டிற்காக, 612 கோடியே 18 இலட்சம் ரூபாயை ஒதுக்கியிருக்கிறோம்! இதன் ரிசல்ட் என்ன தெரியுமா? கடந்த ஐந்தாண்டுகளில், 128 கோடியே 97 இலட்சம் உள்நாட்டு சுற்றுலா பயணிகளும், சுமார் 45 இலட்சம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் தமிழ்நாட்டிற்கு வந்திருக்கிறார்கள்! ஆனால், இது போதாது! தமிழ்நாட்டை நோக்கி சுற்றுலாப் பயணிகள் இன்னும் அதிகமாக வர வேண்டும்! “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று உலகத்தில் இருக்கும் அத்தனை மக்களையும் உறவினர்களாக நினைத்து அன்போடும், நட்போடும் பழகுபவர்கள்தான் தமிழ்நாட்டு மக்கள்! அதனால், வெளி மாநில மக்களும், வெளிநாட்டு மக்களும் தமிழ்நாட்டிற்கு அதிகமாக வர வேண்டும்!
இங்கு சிறப்பான போக்குவரத்து வசதிகள் இருக்கிறது! சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பான மாநிலமாக இருக்கிறது! சாகசச் சுற்றுலா - பொழுதுபோக்குச் சுற்றுலா - கேரவன் சுற்றுலா - கிராமிய மற்றும் மலைத்தோட்டப்பயிர் சுற்றுலா - கடலோரச் சுற்றுலா - பண்பாட்டுச் சுற்றுலா - மருத்துவம் மற்றும் உடல் நலம் பேணும் சுற்றுலா - ஆன்மீகச் சுற்றுலா - சுற்றுச்சூழல் சுற்றுலா - பாரம்பரியச் சுற்றுலா - திரைப்படச் சுற்றுலா - கூட்டங்கள், ஊக்கத்தொகைகள், மாநாடுகள் மற்றும் கண்காட்சிகள் சுற்றுலா - என்று 12 முன்னுரிமை சுற்றுலாப் பிரிவுகளின் வளர்ச்சியை மேம்படுத்துவதற்கு ‘தமிழ்நாடு சுற்றுலாக் கொள்கை-2023’-யை வெளியிட்டிருக்கிறோம்!
அனைத்து தகுதியான சுற்றுலாத் திட்டங்களுக்கும், சிங்கிள்-விண்டோ அனுமதியுடன் கூடிய, நெறிப்படுத்தப்பட்ட ஒப்புதல் செயல்முறை மேற்கொள்ளப்படும்! அதுமட்டுமல்ல, சுற்றுலாத் துறையில், தனியார் முதலீட்டை ஊக்குவிப்பதற்கு, சுற்றுலா சார்ந்த 13 தகுதியான திட்டங்களை தேர்ந்தெடுத்திருக்கிறோம்!
நிறுவனங்களின் முதலீட்டுத் திட்டங்களின் அடிப்படையில் மூன்று வகையாக வகைப்படுத்தி, முதலீட்டு மானியம் - கூடுதல் முதலீட்டு மானியம் - கட்டமைப்பு ஊக்கத்தொகை மற்றும் மின் பயன்பாட்டில் கட்டணச் சலுகை போன்ற முக்கிய சலுகைகள் வழங்கப்படும். இதையெல்லாம், உலகளவில் கொண்டு சேர்ப்பதற்கு இந்த “தமிழ்நாடு உலகளாவிய சுற்றுலா உச்சிமாநாடு” நிச்சயம் துணை நிற்கும்.
சுற்றுலா வணிகத்தில் அதிகமான தனியார் முதலீடுகளை ஈர்ப்பது -இந்தியாவின் சிறந்த சுற்றுலா முதலீட்டு தலமாக தமிழ்நாட்டை நிலைநிறுத்துவது - தனியார் முதலீட்டாளர்கள், சுற்றுலா நடத்துபவர்கள், மேம்படுத்துபவர்கள் மற்றும் தொழில்துறை பங்குதாரர்களை ஒரே தளத்தின்கீழ் அரசுடன் ஒன்றிணைப்பது மற்றும் வருவாய் வழிகளை விரிவுபடுத்தும் புதுமையான சுற்றுலா தயாரிப்புகள் மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்களை ஊக்குவிப்பது, ஆகிய இந்த மாநாட்டின் நோக்கங்கள் நிறைவேறக்கூடிய வகையில் எல்லோரும் துணை நிற்க வேண்டும் என்று கேட்டு, இந்த உச்சிமாநாட்டில் பல்வேறு சுற்றுலா பிரிவுகளில், 22 ஆயிரத்து 794 கோடியே 78 இலட்சம் ரூபாய்க்கான உறுதியளிக்கப்பட்ட முதலீடு, 65 ஆயிரத்து 937 நபர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கும் 127 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட இருக்கிறது!
தமிழ்நாட்டின் மீதும் நமது திராவிட மாடல் அரசின் மீதும் நம்பிக்கை வைத்து, முதலீடு செய்ய வந்திருக்கும் அத்தனை முதலீட்டாளர்களுக்கும் நான் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்! உங்களுக்கு தேவையான அனைத்து ஆதரவுச் சேவைகளையும், எங்களின் அரசு நிச்சயமாக, உறுதியாக வழங்கும் என்று உறுதியளிக்கிறேன்!
அதுமட்டுமல்ல, இந்த மாநாட்டின் முக்கியமான மூன்று அறிவிப்புகளை நான் வெளியிட விரும்புகிறேன்!
முதல் அறிவிப்பு - உலக சுற்றுலா வரைபடத்தில் கலை மற்றும் பண்பாட்டு சுற்றுலாத் தலமாக தமிழ்நாடு இடம்பெற, முதன்முறையாக, அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் “தமிழ் பினாலே” நடத்தப்படும்!
இரண்டாவது அறிவிப்பு - மாமல்லபுரத்திற்கு வருகின்ற சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்த, முதன்முதலாக மாமல்லபுரத்தில் ‘சிறப்பு பகுதி மேம்பாட்டு ஆணையம்’ அமைத்து, அதன்மூலமாக, 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில், உலக தரத்தில், நவீன சுற்றுலா உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும்!
மூன்றாவது அறிவிப்பு - 2023-ஆம் ஆண்டு சுற்றுலா கொள்கை அறிவிப்பை அடிப்படையாகக் கொண்டு, சிப்காட் நிறுவனம் சுற்றுலா தலங்களை கண்டறிந்து, முதலீடுகளை ஈர்த்து, புதிய சுற்றுலா வசதிகளை உருவாக்கவுள்ளது.
இதன் முதற்கட்டமாக, கன்னியாகுமரி, கள்ளக்குறிச்சி, ஈரோடு மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் நான்கு சிறப்பு சுற்றுலா இடங்கள் அடையாளம் கண்டறியப்பட்டு, முதலீடுகளை ஈர்க்க விருப்பப்பதிவு கோரிக்கைகள் அழைக்கப்பட்டிருக்கிறது.
அடுத்து, இரண்டாம் கட்டமாக தமிழ்நாடு முழுவதும் 31 இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. இவை, நகர்ப்புற சுற்றுலா, சிறப்பு அனுபவ சுற்றுலா, பெரிய சுற்றுலா மையங்கள் என்று பிரிக்கப்பட்டு, இதில் தங்குமிடங்கள், தீம் பார்க்குகள், கேம்பிங் சைட்ஸ் (Camping Sites), இயற்கை அனுபவத் தங்குமிடங்கள் ஆகியவை ஏற்படுத்தப்பட உள்ளது. இதனால், தமிழ்நாடு முழுவதும் பல இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று மகிழ்ச்சியுடன் நான் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த மாநாடு மூலமாக, உலக மக்களுக்கு நான் வைக்கக்கூடிய வேண்டுகோள் என்னவென்றால், தமிழ்நாட்டை, உங்களின் Favourite Destination-ஆக Bookmark செய்துகொள்ளுங்கள்! இங்கு இயற்கை - வரலாறு - பண்பாடு - உணவு ஆகியவற்றுடன் உங்களை வரவேற்க, அன்பால் அரவணைக்க தமிழ் மக்கள் இருக்கிறோம்!
நான் உறுதியாக சொல்கிறேன்… தமிழ்நாட்டிற்கு சுற்றுலா பயணிகளாக வரும் நீங்கள் உங்கள் நாடுகளுக்கு திரும்பும்போது, மறக்க முடியாத நினைவுகளுடன் மட்டுமல்ல, அன்பு மிகுந்த சொந்தங்களையும் உங்கள் நெஞ்சில் சுமந்துகொண்டு செல்வீர்கள்! தமிழ்நாடு எங்களின் Second Home என்று உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்வீர்கள்! எனவே, உலக மக்கள் அனைவரும் தமிழ்நாட்டிற்கு வருக... வருக...
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Also Read
-
”தலைநகரில் பேரறிஞர் அண்ணா சிலையின் மீது இழுக்கு… கொள்கையில்லா த.வெ.க கோமாளிகளின் அட்டூழியம்”
-
“காங்கிரஸின் குணம் வெளியானது... தோல்வியும் துரோகமும் எங்களுக்கு புதிது அல்ல”: டி.ஆர்.பாலு MP விளாசல்!
-
பி.எம் ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு இணையுமா? – ஒன்றிய அரசின் விவகாரம் – விஜய் எடுக்கும் முடிவு என்ன?
-
பெண்கள் பாதுகாப்பின் லட்சணம்... வாக்குப்பதிவு நாளில் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. TVK நிர்வாகி கைது!
-
“த.வெ.க.வினால் தலைகுனியும் தமிழ்நாடு” : தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!