Tamilnadu
ரூ.61.79 கோடியில் வேளாண்மைக் கல்லூரி, ஆராய்ச்சி நிலையம் : திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (31.01.2026) சிவகங்கை மாவட்டம் செட்டிநாட்டில் 330 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்திற்கு 61 கோடியே 79 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்களையும், அங்கு அமைக்கப்பட்டுள்ள அரங்கத்திற்கு ”பாரத ரத்னா விருது பெற்ற சி.சுப்பிரமணியம் பல்நோக்கு அரங்கம்” என்று பெயர் சூட்டி அவ்வரங்கத்தினையும் திறந்து வைத்தார்.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்
பாரம்பரியம் மிக்க, பொன்விழா ௧ண்ட தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் 1971-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு 47,888 இளங்கலை மாணவர்களுக்கும், 13,259 முதுகலை மாணவர்களுக்கும், 4,295 முனைவர் மாணவர்களுக்கும் வேளாண்மை மற்றும் வேளாண்மை சார்ந்த துறைகளில் பட்டம் வழங்கி சிறந்த முறையில் கல்வியை வழங்கி வருகிறது. இப்பல்கலைக்கழகம் வேளாண்மைக் கல்வி, ஆராய்ச்சி மற்றும் விரிவாக்கம் என மூன்று பிரிவுகளிலும் சிறப்புற செயல்பட்டு வருகிறது.
இந்த அரசு பொறுப்பேற்றது முதல், ஐந்து முறை தாக்கல் செய்யப்பட்ட வேளாண்மை-உழவர் நலத்துறையின் நிதிநிலை அறிக்கைகளில் வேளாண்மை கல்வி, வேளாண்மை ஆராய்ச்சிக்காக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திற்கு 3,065 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஐந்து ஆண்டுகளில் 101 புதிய பயிர் இரகங்கள், 21 வேளாண் நுட்பங்கள், 16 புதிய பண்ணைக் கருவிகள் நமது உழவர் பெருமக்களின் பயன்பாட்டிற்காக வெளியிடப்பட்டுள்ளன.
தமிழ்நாடு அரசின் உயர்கல்வி உறுதிக்கான இலட்சியத் திட்டமான ”புதுமைப்பெண்” திட்டத்தின் கீழ் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 2,964 மாணவியருக்கும், ”தமிழ்ப்புதல்வன்” திட்டத்தின் கீழ் 1,628 மாணவர்களுக்கும் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. ”உலகம் உங்கள் கையில்” - தமிழ்நாடு அரசு மடிக்கணினித் திட்டத்தின் கீழ் 5,407 மாணவ, மாணவியருக்கு மடிக்கணினிகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசு வழங்கிய 7.5 சதவீத மாணவர் இடஒதுக்கீட்டின் கீழ் இதுவரை 1,708 மாணவர்கள் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சேர்க்கப்பட்டு கல்வி பயின்று வருகின்றனர்.
தமிழ்வழிக் கல்வி திட்டத்தின் கீழ் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பட்டப்படிப்புகள் 2021-ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தொடங்கப்பட்டு, இதுவரை 467 மாணவர்கள் தமிழ்வழி வேளாண்மை மற்றும் தோட்டக்கலை படிப்பு பயின்றுள்ளனர். இளங்கலை மாணவர்களின் பட்டறிவினை உயர்த்திடும் நோக்கில் ஒரு மாணவர் - ஒரு வேளாண் குடும்பம் திட்டம் தொடங்கப்பட்டு 2,395 முதலாமாண்டு இளங்கலை மாணவர்கள் வேளாண் குடும்பங்களுடன் இணைக்கப்பட்டுள்ளனர்.
இந்த அரசு பொறுப்பேற்றவுடன், 2021-22ஆம் ஆண்டில் நாகப்பட்டினம், கரூர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் மூன்று புதிய அரசு வேளாண் கல்லூரிகள் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரு தோட்டக்கலைக் கல்லூரி புதிதாக தொடங்கிட ஒப்புதல் அளிக்கப்பட்டு 176 கோடியே 72 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
செட்டிநாட்டில் செயல்பட்டுவரும் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்திற்கு புதிய கட்டடங்கள் திறப்பு அவ்வகையில், சிவகங்கை மாவட்டம், செட்டிநாட்டில் செயல்பட்டுவரும் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்திற்கு 61 கோடியே 79 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்களையும், புதிதாக கட்டப்பட்ட அரங்கத்திற்கு ”பாரத ரத்னா விருதுபெற்ற
சி. சுப்பிரமணியம் பல்நோக்கு அரங்கம்” எனப் பெயர் சூட்டி, அவ்வரங்கத்தினையும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்றையதினம் திறந்து வைத்தார். பின்னர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், அவ்வளாகத்தில் மரக்கன்றை நட்டு, வகுப்பறைகள், பல்நோக்கு அரங்கம், ஆய்வுக் கூடங்கள் ஆகியவற்றை பார்வையிட்டு, மாணவ, மாணவியர்களுடன் கலந்துரையாடினார்.
இக்கல்லூரிக்கான கட்டடங்கள் சுமார் 2.52 இலட்சம் சதுரஅடி பரப்பளவில் கட்டப்பட்டு, அப்புதிய கட்டடத்தில், நிர்வாக அலுவலகக் கட்டடம், 250 மாணவர்கள் அமரக்கூடிய வகையில் இணையதள வசதியுடன் கூடிய நான்கு வகுப்பு அறைகள், 12 துறைகளுக்கான ஆய்வுக்கூடங்கள், மாணவர் மற்றும் மாணவியர் விடுதிகள், உணவக விடுதி, சிற்றுண்டி விடுதி, மருத்துவ மையம், 1,500 நபர்கள் அமரக்கூடிய பல்நோக்கு அரங்கம், நூலகம் மற்றும் மாணவர்களுக்கான இணையதள மையம் போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இக்கல்லூரியில் மானாவாரிப் பயிர்களான நிலக்கடலை, சிறுதானியங்கள், பயறுவகைகளுக்குத் தேவையான வேளாண் சாகுபடி உத்திகளை உருவாக்குதல், குறைந்த நீர் தேவைப்படும், அதிக மதிப்புள்ள பயிர்களுக்கு முக்கியத்துவம் அளித்தல், வறண்ட மண்டல பழப்பயிர்கள், மரங்கள் மற்றும் தீவனப்பயிர்கள் மேம்பாடு, வேளாண்மை, தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடி மற்றும் மரம் வளர்ப்பு போன்றவற்றின் மூலம் நில பயன்பாட்டுக்கான ஒருங்கிணைந்த பண்ணையமுறை, மானாவாரி பயிர்களுக்கான மழைநீர் சேகரிப்பு மற்றும் நுண்ணீர்ப்பாசன அமைப்புகள் நிறுவுதல், பண்ணைக்குட்டைகள் போன்ற நீர்செறிவூட்டு அமைப்புகள் மூலம் உற்பத்தித் திறன் அதிகரித்தல், மானாவாரி நிலங்களில் இயந்திரமயமாக்கல், விவசாயிகள் மற்றும் கிராமப்புர இளைஞர்களுக்கு திறன்மேம்பாட்டு பயிற்சி அளித்தல் போன்ற நோக்கங்களுடன் இக்கல்லூரி செயல்பட்டு வருகிறது.
மேலும், இக்கல்லூரியில் மானாவாரி வேளாண்மை ஆராய்ச்சி நிலையம் செயல்பட்டு வருவதுடன், புதிய உணவு செய்முறைகள் மற்றும் பதப்படுத்தும் தொழில்நுட்பங்கள், குறிப்பாக சிறுதானியங்கள், பழங்கள் மற்றும் பிற வேளாண் விளைபொருட்களில் பதப்படுத்துதல், மதிப்புக்கூட்டுதல் தொழில்நுட்பங்களை உருவாக்கவும், பயிற்சி அளிக்கவும் உணவு பதப்படுத்துதல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் ஒன்றும், மானாவாரி மேலாண்மை மகத்துவ மையம் ஒன்றும் செயல்பட்டு வருகிறது.
2025 ஆம் ஆண்டில், இக்கல்லூரி வறட்சியைத் தாங்கி வளரும், அதிக மகசூல் தரவல்ல “செட்டிநாடு 1” என்னும் புதிய நிலக்கடலை இரகம் வெளியிட்டுள்ளது. மேலும் 10 உள்ளூர் மரவகைகளைக் கொண்டு பன்முகத்தன்மை கொண்ட வேளாண் காடுகள் மாதிரி ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. இதுவரை 3,930 விவசாயிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன.
Also Read
-
சிவகங்கை மாவட்டத்தில் ரூ.13.36 கோடியில் 28 புதிய திட்டங்கள் : 15,453 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்!
-
யூ.ஜி.சி.யின் புதிய விதிமுறைகளுக்கு இடைக்கால தடைவிதித்த உச்ச நீதிமன்றம்! மௌனம் காக்கும் ஒன்றிய அரசு!
-
“இந்தியாவே உங்களுடைய சொத்து” : தோழர் ஜீவா குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொன்ன சுவாரஸ்சிய வரலாறு!
-
“தமிழ்நாடு வளர்ச்சியில் முன்னோக்கி செல்கிறது” : திராவிட மாடல் அரசை பாராட்டிய ஒன்றிய அரசு - முரசொலி!
-
T20 உலகக்கோப்பைக்கு தயாரான வாஷிங்டன் சுந்தர், திலக் வர்மா - தேர்வுக்குழு சொல்வது என்ன? : முழு விவரம்!