Tamilnadu
“பிரதமர் மோடி வருகை பா.ஜ.க.வுக்கு மிகப்பெரிய கெடுதலாகவே அமையும்; வருக பிரதமர்” : முரசொலி!
முரசொலி தலையங்கம் (27-01-2026)
மோடி இழைத்த அநீதிகள்!
தமிழ்நாட்டுக்கு வாக்குக் கேட்டு வரும் பிரதமர் நரேந்திர மோடி, இதுவரை தமிழ்நாட்டுக்குச் செய்தது என்ன? அநீதியும், துரோகங்களும் மட்டும்தான். இவரெல்லாம் எந்த முகத்தை வைத்துக் கொண்டு வாக்குக் கேட்டு வருகிறார் என்றே தெரியவில்லை. பீகார் மாநிலத்துக்கு வாக்குக் கேட்டுப் போன பிரதமர் மோடி அங்கு என்ன பேசினார் பீகாரிகளை தமிழ்நாட்டில் தாக்குகிறார்கள் என்று பொய் சொன்னார். கர்நாடகா, தெலங்கானாவைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள், பீகார் மக்ககளைத் தொடர்ந்து அவதூறு செய்வதாகவும், தமிழ்நாட்டிலும் பீகார் மக்கள் தொடர்ந்து துன்பத்துக்கு உள்ளாவதாகவும் பிரதமர் மோடி பேசினார். எந்த இடத்தில், எப்போது தாக்கப்பட்டார்கள் என்று அவரால் சொல்ல முடியவில்லை. அப்படி நடந்தால்தானே சொல்ல முடியும்?
தி. மு.க.வடன் பீகார் மாநிலத் தலைவர்களில் ஒருவரான லாலுவும் அவர் மகன் தேஜஸ்வீயும் நட்படன் இருக்கிறார்கள் என்ற ஒரே காரணத்துக்காக, ‘அத்தகைய நண்பர்கள் ஆளும் தமிழ்நாட்டில் பீகாரிகள் தாக்கப்படுகிறார்கள்' என்று அவதூறு பரப்புரையை பீகாரில் செய்த மோடிக்கு தமிழ்நாட்டுக்கு வாக்குக் கேட்கத் தகுதி இருக்கிறதா? இதையேதான் ஒடிசாவிலும் செய்தார் பிரதமர் மோடி. ஒடிசாவில் நவீன் பட்நாயக்குடன் ஒரு தமிழ் அதிகாரி இருந்தார். நவீன் பட்நாயக்கை அரசியல் ரீதியாக வீழ்த்த அந்த தமிழ் அதிகாரி மீது பாய்ந்தது பா.ஜ.க. 'ஒடிசாவை ஒரு தமிழர் ஆள அனுமதிக்கலாமா?' என்று கேவலமாகக் கேட்டதையும் இந்த நாடு பார்த்தது. ‘பூரி ஜெகந்நாதர் கோவில் சாவியைக் காணோம், அது திருடப்பட்டு தமிழ்நாட்டில் கொண்டு போய் வைக்கப்பட்டுள்ளது' என்று சொல்லி ஒடிசாவில் பரப்புரை செய்தது பா.ஜ.க. தமிழ்நாடு என்ன திருட்டுப் பொருளை பதுக்கி வைக்கும் மாநிலமா? இத்தகைய மோடிக்கு, தமிழ்நாட்டுக்குள் வந்து வாக்குக் கேட்கத் தகுதி இருக்கிறதா?
தமிழில் பேச முடியவில்லையே என்று வருந்தும் பிரதமர் மோடி, தமிழை உலகம் முழுக்கப் பரப்புவதாகச் சொல்லிக் கொள்ளும் மோடி, தமிழ் வளர்ச்சிக்கு ஒதுக்கிய நிதி எவ்வளவு? சமஸ்கிருத வளர்ச்சிக்கு ஒதுக்கிய நிதி எவ்வளவு? தமிழை விட எத்தனை மடங்கு அதிகம் என்பதைக் கேட்டுப் பாருங்கள்.
இருமொழிக் கொள்கை உள்ள தமிழ்நாட்டில் இந்தியைத் திணிப்பதற்காக மும்மொழித் திட்டத்தைக் கொண்டு வரும் மோடிக்கு தமிழ்நாட்டுக்குள் வந்து வாக்குக் கேட்கத் தகுதி இருக்கிறதா? இந்தித் திணிப்பில் மட்டும் தான் மோடி அரசுக்கு ஒரே அக்கறை உள்ளது.
ஒன்றியத்தில் காங்கிரஸ் கட்சி, தி.மு.க. ஆதரவுடன் இருந்த காலக்கட்டத்தில் எல்லாம் எத்தனையோ சிறப்புத் திட்டங்களைக் கொண்டு வந்தது தமிழ்நாட்டுக்கு. அப்படி ஏதாவது ஒரு சிறப்புத் திட்டம் உண்டா மோடி ஆட்சியில்? ஒன்றே ஒன்றை அறிவித்தார்கள், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை என்று. பத்தாண்டுக் காலமாக கட்டிக் கொண்டே இருக்கிறார்கள். நிதியே ஒதுக்குவது இல்லை. ஒரு எய்ம்ஸ் மருத்துவமனைக்குக் கூட தமிழ்நாடு வொர்த் இல்லையா? அப்படித்தானே மோடி நினைக்கிறார்?
”டெல்லியில் இருந்து இந்தியா முழுமைக்கும் திட்டமிடுவது என்பது அகற்றப்பட்டு - அந்தந்தப் பகுதியில் இருப்பவர் துணையோடு திட்டமிடு வதுதான் என்னுடைய அணுகுமுறையாக இருக்கும்” என்று பிரதமர் ஆனதும் சொன்னவர் தான் மோடி. இந்த அடிப்படையில் எதற்காவது மாநில அரசாங்கத்துடன் கலந்து ஆலோசனை செய்துள்ளாரா பிரதமர்?
மாநில உரிமைகள் என்று சொல்லப்பட்ட அதிகாரங்களையும் சேர்த்து ஒன்றிய அரசுதான் அனுபவித்துக் கொண்டு இருக்கிறது.
‘எங்களுக்கு ஏன் நிதி தர மறுக்கிறீர்கள்?' என்று தமிழ்நாடு முதல மைச்சர் கேட்பதை பிரிவினைவாதம் என்று கொச்சைப்படுத்துகிறார்கள். ‘குஜராத் மக்கள் ரூ.60 ஆயிரம் கோடியை டெல்லிக்கு அனுப்புகிறார்கள். ஆனால் திரும்ப வருவது மிகக் குறைவு. குஜராத் என்ன பிச்சைக்காரர்கள்மாநிலமா?” என்று 6.12.2012 அன்று குஜராத் முதலமைச்சராக இருக்கும் போது கேட்டவர்தான் பிரதமர் மோடி. அதையே தமிழ்நாடு முதலமைச்சர் இன்று கேட்கும் போது பிரிவினைவாதமாக எப்படி ஆகும்?
சென்னையில் இன்று மெட்ரோ ரயில் ஓடுகிறது என்றால் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ஒப்புதல் பெற்று தொடங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியைச் செய்வதற்குக் கூட நிதி தருவது இல்லை. ஒன்றிய அரசும், மாநில அரசும் சேர்ந்து செய்யும் திட்டத்தில் கூட ஒன்றிய அரசின் நிதியையும் மாநில அரசே போடும் நிலைமையை உருவாக்கி விட்டார்கள்.
43 லட்சம் பள்ளிக் குழந்தைகளின் நலனுக்காகச் செலவு செய்ய வேண்டிய 3, 500 கோடி ரூபாயை மும்மொழித் திட்டத்தை ஏற்க மறுக்கிறார்கள் என்று சொல்லி நிறுத்தி வைத்திருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் இருந்து 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் டெல்லிக்கு வந்து முழக்கமிடுவது மோடி தரப்புக்கு பிடிக்கவில்லை. தொகுதி வரையறை என்ற பெயரால் அதை குறைக்கச் சதி செய்கிறார்கள். ‘தமிழ்நாட்டில் தொகுதிகள் குறையாது' என்று இதுவரை அதிகாரப்பூர்வமாகச் சொல்லவில்லை.
குஜராத்தில் இயற்கை பேரிடர் நடந்தால் அன்று மாலையே 10 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்குவதும் தமிழ்நாட்டில் பேரிடர் நடந்து மூன்று ஆண்டுகள் ஆனபிறகும் ஒரு சதவிகித நிதிகூட ஒதுக்காததும்தான் மோடியின் குணம். தமிழ்நாட்-டைச் சேர்ந்தவர்களை அராஜகவாதிகள் என்று சொன்னவர் ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான். ‘தமிழ்நாட்டில் இருந்து வந்து குண்டு வைக்கிறார்கள்' என்று இன்னொரு ஒன்றிய அமைச்சர் சொன்னார். இதுதான் பா.ஜ.க.வினரின் உண்மையான குணம் ஆகும்.
இது தமிழ்நாட்டில் செல்லுபடி ஆகாது. பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு எத்தனை தடவை வருகிறாரோ, அது பா.ஜ.க.வுக்கு மிகப்பெரிய கெடுதலாகவே அமையும். தமிழுக்கு, தமிழ்நாட்டுக்கு எதிரிகள் இவர்கள் என்பதை மோடி முகம் நினைவூட்டிக் கொண்டே தான் இருக்கும். வருக பிரதமர்!
Also Read
-
“பழனிசாமிக்கு 12-வது தோல்வியை 2026 சட்டமன்ற தேர்தல் நிச்சயமாக தரும்” : அமைச்சர் ரகுபதி உறுதி!
-
சென்னையில் 4,000–வது குடமுழுக்கு : அமைச்சர் சேகர்பாபு சொன்ன தகவல்!
-
“பா.ஜ.க.வின் முரட்டு அடிமையாக எடப்பாடி பழனிசாமி செயல்படுகிறார்!”: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரை!
-
“பா.ஜ.க எந்த கெட்டப்பில் வந்தாலும் உங்களுக்கு “கெட் அவுட்”-தான்!”: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!
-
“டபுள் இன்ஜின் காலாவதியான; தோல்வியடைந்த ஒன்று” : தி.மு.க மகளிர் மாநாட்டில் கனிமொழி எம்.பி பேச்சு!