Tamilnadu
வெல்வோம் 200 - படைப்போம் வரலாறு : திமுகவில் 10,000 பேர் இணைந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
தஞ்சாவூர் மாவட்டம் – செங்கிப்பட்டியில், முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் அவர்களின் ஆதரவாளர்கள் 10,000 பேர் கழகத்தில் இணையும் நிகழ்ச்சியில், இன்று கழகத் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரையின் விவரம்:
இன்று திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்திருக்கும் அன்புக்குரிய நண்பர்களே, செயல்வீரர்களே, அருமைத் தாய்மார்களே, உங்களை எல்லாம் நம்முடைய தஞ்சை மாவட்டக் கழகத்தின் சார்பில் நம்முடைய சந்திரசேகர் அவர்கள் வரவேற்றிருந்தாலும், தலைமைக் கழகத்தின் சார்பில் நான் உங்கள் அனைவரையும் வருக... வருக... வருக என்று வரவேற்கக் கடமைப்பட்டிருக்கிறேன்.
இந்த நிகழ்ச்சியில், நான் பேச வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் வருகிற வழியில் இப்படி ஒரு நிகழ்ச்சியை நாங்கள் ஏற்பாடு செய்திருக்கிறோம். நீங்கள் வந்து தலையைக் காட்டிவிட்டுச் சென்றால் போதும் என்றுதான் சொல்லி அழைத்து வந்தார்கள். நானும் அதே உணர்வோடுதான் இந்த நிகழ்ச்சிக்கு வந்தேன். ஆனால் வந்து பார்த்ததற்கு பிறகு, இது என்ன இணைப்பு விழாவா? இணைப்பு விழா மாநாடா? என்று எண்ணும் அளவிற்கு இந்த நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது.
இவ்வளவு பெரிய கூட்டத்தில் நான் பேசாமல் சென்றால், உங்களுக்கும் நிம்மதி இருக்காது; எனக்கும் நிம்மதி இருக்காது. அதனால், நான்தான் அவர்களிடத்தில் பேச வேண்டும் என்று வேண்டுகோளை எடுத்து வைத்து, உங்களிடத்தில் பேச வந்திருக்கிறேன்.
நம்முடைய முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் அவர்கள், அண்ணா அறிவாலயத்திற்கு வந்து, தாய்க் கழகமாம் நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டு, அதற்கு பிறகு, ஒரு வார காலத்திற்குள்ளாக இந்தச் சிறப்பான இணைப்பு விழா நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருக்கிறார் என்று சொன்னால், உள்ளபடியே நான் எதிர்பார்த்தது; நான் எதிர்பார்த்ததைவிட அதிகமான அளவிற்கு இந்த இயக்கத்தில் தன்னை ஒப்படைத்துக் கொண்டு சிறப்பாக பணியாற்றுவார் என்ற நம்பிக்கை எனக்கு மட்டுமல்ல; திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் வந்திருக்கிறது என்பதை இந்த நேரத்தில் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
நான் வைத்திலிங்கம் அவர்களை பல நேரங்களில் பார்த்ததுண்டு. மறைந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள், அதைத்தொடர்ந்து அம்மையார் ஜெயலலிதா அவர்களுடைய தலைமையில் நம்முடைய வைத்திலிங்கம் அவர்கள் பணியாற்றுகிற நேரத்தில், அவர்களுக்கு விசுவாசமாக இருந்து, சிறப்பாக - சுறுசுறுப்பாக அனைவரையும் கவரும் வகையில் அவர் பணியாற்றும் காட்சியை நான் பார்த்ததுண்டு.
ஆனால், எம்.ஜி.ஆர். அவர்கள் மற்றும் அம்மையார் ஜெயலலிதா அவர்கள் மறைவிற்குப் பிறகு, அ.தி.மு.க. கட்சி உடைந்து, அது சின்னாபின்னமாகி இருந்த நிலையில், அப்போது அவர் சட்டமன்றத்தில் வந்து அமர்ந்திருக்கும் காட்சிகளை நான் பார்ப்பேன். அவருடைய முகத்தில் ஒரு சோர்வு இருந்து கொண்டே இருக்கும். எதையோ பறி கொடுத்ததுபோன்று உட்கார்ந்திருப்பார். ஏதோ வேண்டா வெறுப்போடு சில கேள்விகளைக் கேட்பார். ஏதோ வேண்டா வெறுப்போடு அமர்ந்திருக்கும் காட்சிகளை நான் பல நேரங்களில் சட்டமன்றத்தில் பார்த்ததுண்டு. அது என்ன என்பதை இப்போதுதான் நான் உணர்ந்து கொண்டேன். சுயமரியாதையோடு நாம் இருக்க முடியவில்லையே; சுயமரியாதையோடு நாம் பணியாற்ற முடியவில்லையே என்ற ஏக்கம் அவருடைய உள்ளத்தில் இருந்திருக்கிறது. என்ன, அவர் சற்று லேட்டாக வந்து சேர்ந்திருக்கிறார். லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக பணியாற்றப் போகிறார். இதுதான் நமக்கெல்லாம் ஒரு மகிழ்ச்சியை தந்து கொண்டிருக்கிறது.
எனவே, தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அவ்வாறு நெருங்கும் தேர்தலில், மிகப்பெரிய வெற்றியை நாம் பெறப்போகிறோம் என்பதில் யாருக்கும் எள்ளளவும் சந்தேகம் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
எனவே, இணைந்திருக்கும் தொண்டர்களை, ஏற்கனவே நம்முடைய வைத்திலிங்கம் அவர்களை அறிவாலயத்தில் நான் வரவேற்று மகிழ்ந்திருந்தாலும், இன்று உங்களோடு சேர்ந்து அவரையும் வரவேற்று, உங்களையும் வரவேற்று, தேர்தல் பணியாற்ற உறுதி எடுப்போம்; சபதம் ஏற்போம். மீண்டும் நம்முடைய திராவிட மாடல் அரசு உதயமாகி, ஏற்கனவே செய்திருக்கும் சாதனைகளை மிஞ்சும் அளவிற்கு மேலும் பல சாதனைகளை உருவாக்கித் தருவதற்கு, நம்முடைய பணி மும்முரமாக இருக்க வேண்டும் என்று உங்களையெல்லாம் கேட்டுக் கொண்டு, ‘வெல்வோம் 200 - படைப்போம் வரலாறு’, ‘வெல்வோம் ஒன்றாக’ என்று கூறி, மீண்டும் உங்களை தாய்க் கழகத்தின் சார்பில் வருக... வருக... வருக என்று வரவேற்று விடைபெறுகிறேன்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
Also Read
-
கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்தில் 23 தங்க பதக்கங்கள் பெற்ற மாணவர் : பாராட்டிய அமைச்சர் இராஜேந்திரன்!
-
“இந்தியைத் திணிக்கிற பாசிஸ்டுகளுக்கு என்றைக்கும் தி.மு.க ஆபத்தான கட்சிதான்” : துணை முதலமைச்சர் உதயநிதி !
-
தமிழ்நாட்டில் 77வது குடியரசு தின விழா கொண்டாட்டம்! பல்வேறு துறை சாதனைகளுடன் வலம் வந்த அணிவகுப்பு ஊர்தி!
-
“நாட்டிலேயே முதன்முறையாக… சென்னையில் ‘குழந்தைகள் உயர்சிறப்பு மருத்துவமனை!’” : அமைச்சர் மா.சு தகவல்!
-
முதலமைச்சர் தலைமையில் உலக மகளிர் உச்சி மாநாடு 2026 : எங்கு? எப்போது? - விவரம் உள்ள!