Tamilnadu
பரமக்குடியில் ரூ.3 கோடி மதிப்பீட்டிலான இமானுவேல் சேகரனார் மணிமண்டபம் திறப்பு! : முழு விவரம் உள்ளே!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (17.01.2026) தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை சார்பில் இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் 3 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி வே.இமானுவேல் சேகரனார் அவர்களின் திருவுருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபத்தினை திறந்து வைத்தார்.
தமிழ்நாட்டின் புகழ்சால் பெருந்தகையாளர்கள், தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டு தமிழ்நாட்டிற்குப் பெருமைத் தேடித்தந்த அறிஞர் பெருமக்கள், சமூகநீதி, விடுதலை உணர்வுகளை ஊட்டிவளர்த்த கவிஞர்கள், இசை மேதைகள், தமிழ்நாட்டின் தியாக வரலாற்றுக்கு உன்னத சாட்சியங்களாக விளங்கும் தியாகிகள், மேதைகள் மற்றும் அறிஞர்களின் நினைவுகளைப் போற்றிப் பெருமைப்படுத்தும் வகையிலும்;
தமிழ் சமுதாயத்திற்கு அவர்களின் பங்களிப்பை பெருமைப்படுத்தும் வகையிலும், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் நினைவகங்கள், திருவுருவச் சிலைகள், அரங்கங்கள், நினைவுத் தூண்கள், நினைவுச் சின்னங்கள் ஆகியவை அமைக்கப்பட்டு, சிறந்த முறையில் பராமரிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றப் பின்னர், விடுதலைப் போரில் இன்னுயிர் ஈந்தும், சொத்து சுகங்களை இழந்தும், தியாகங்கள் புரிந்த சுதந்திரப் போராட்ட தியாகிகளைப் போற்றிப் பெருமைப்படுத்திடும் வகையில், காந்தி மண்டபத்தில் வ.உ.சி. அவர்கள் சிறையில் இழுத்த செக்கு வைக்கப்பட்டிருக்கக்கூடிய மண்டபம் பொலிவூட்டப்பட்டு அங்கு அவரது மார்பளவு சிலை;
வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களுக்கு திருவுருவச் சிலை, மருது சகோதரர்களுக்கு திருவுருவச் சிலை, கோயம்புத்தூர் வ.உ.சி. பூங்காவில் வ.உ. சிதம்பரனார் முழு உருவச் சிலை, மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் அவர்களுக்கு திருவுருவச் சிலை, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையார் அவர்களுக்கு திருவுருவச் சிலை, என பல்வேறு தியாக சீலர்களுக்கு சிலைகளை நிறுவி, மணிமண்டபங்கள் அமைத்து அவர்களின் புகழ்போற்றி வருகிறது.
சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி வே. இமானுவேல் சேகரனார் அவர்களின் திருவுருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபம் திறப்பு விழா
தியாகி வே.இமானுவேல் சேகரனார் அவர்கள் 1924-ஆம் ஆண்டு
அக்டோபர் 9 அன்று பிறந்தார். இவரது சொந்த ஊர் முதுகுளத்தூர் வட்டம், செல்லூர் கிராமம் ஆகும். இவர் 1942-இல் ஆங்கிலேயர்களுக்கு எதிராக வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்து கொண்டு சிறைவாசம் சென்றார். மேலும் ஒடுக்கப்பட்டோர் விடுதலைக்காகவும் போராடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி வே. இமானுவேல் சேகரனார் அவர்களின் சமூக பங்களிப்பினைப் போற்றும் வகையில் அவரது பிறந்தநாள் நூற்றாண்டினையொட்டி அன்னார் நல்லடக்கம் செய்யப்பட்ட இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் சுமார் ரூபாய் 3 கோடி மதிப்பீட்டில் தியாகி வே.இமானுவேல் சேகரனார் அவர்களுக்கு திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் தமிழ்நாடு அரசின் சார்பில் கட்டப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 11.9.2023 அன்று அறிவித்தார்.
அந்த அறிவிப்பிற்கிணங்க, இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் 3 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி வே. இமானுவேல் சேகரனார் அவர்களின் திருவுருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபத்தை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்றையதினம் திறந்து வைத்து பார்வையிட்டார்.
முன்னதாக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தியாகி இமானுவேல் சேகரனார் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
Also Read
-
“ரூ.2 கோடியில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கான பயிற்சி மையம்!” : முதலமைச்சரின் 2 அதிரடி அறிவிப்புகள்!
-
மதுரை அலங்காநல்லூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! : வீரர்கள் மற்றும் காளை உரிமையாளர்களுக்கு பரிசு!
-
“ரொக்கமாக…நேரடியாக…ஒரு நொடியும் தாமதமின்றி!” : பொங்கல் பரிசு குறித்து அமைச்சர் பெரியகருப்பன் பெருமிதம்!
-
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் AI கேமராக்கள்! : பெங்களூருவில் மீண்டும் IPL போட்டிகள் நடைபெறுமா?
-
திருவள்ளுவர் விருது முதல் இலக்கிய மாமணி விருது வரை!: 13 விருதாளர்களை சிறப்பித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!