
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (17.1.2026) பொங்கல் திருநாளையொட்டி மதுரை மாவட்டத்தில் உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் பகுதியில் நடைபெற்ற ஏறுதழுவுதல் போட்டியை பார்வையிட்டு, வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்கள் மற்றும் காளையின் உரிமையாளர்களுக்கு தங்க மோதிரம், தங்கக் காசு உள்ளிட்ட பல்வேறு பரிசுப் பொருட்களை வழங்கி வாழ்த்தினார்.
தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை:
உங்கள் அனைவருக்கும் என் அன்பான வணக்கம். அதே நேரத்தில், உங்கள் அனைவருக்கும் என்னுடைய பொங்கல் வாழ்த்துகளையும், புத்தாண்டு வாழ்த்துகளையும் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
இந்த மதுரை மண் என்பது, வீரம் விளைந்த மண்ணாகும். அப்படிப்பட்ட இந்த மண்ணின் வீரவிளையாட்டான உலகப் புகழ் பெற்றிருக்கக்கூடிய அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டைப் பார்க்கும்போது நமக்கெல்லாம் வீரம் வருகிறது. அதனை அடக்குகின்ற காளையர்களை பார்க்கின்றபோது நம்முடைய தமிழ் மண்ணுக்கு பெருமையாக இருக்கிறது.
நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில், இந்த வீரம் விளைந்த மதுரை மண்ணில், சங்கம் வளர்த்த இந்த மாமதுரையில், அறிவு வளர்ச்சிக்காக “கலைஞர் நூற்றாண்டு நூலகம்” கட்டிக் கொடுத்திருக்கிறோம் என்பது உங்களுக்கு எல்லாம் தெரியும்.

அதேபோல, தமிழர்களின் அடையாளமான இந்த வீர விளையாட்டுக்கு “கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல்” அரங்கமும் கட்டிக் கொடுத்திருக்கிறோம் என்பதும் ஒரு மிகப் பெரிய சாதனையாகும்.
இதனை சொல்லுகின்ற நேரத்தில், இப்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கக்கூடிய ஜல்லிக்கட்டைப் பார்க்க முதலமைச்சராக வந்திருக்கக்கூடிய நான் ஏதாவது அறிவிப்புகளை வெளியிட்டுச் சென்றால்தான் உங்களுக்கும் திருப்தி, எனக்கும் திருப்தியாக இருக்கும்.
அதனால், இரண்டு அறிவிப்புகளை நான் மகிழ்ச்சியோடு உங்களிடத்தில் அறிவிக்க விரும்புகிறேன்.
முதல் அறிவிப்பு -
பாரம்பரியமிக்க ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் பங்குபெற்று, அதிக காளைகளை அடக்கி, சிறந்து விளங்கக்கூடிய வீரர்களுக்கு, முன்னுரிமை அடிப்படையில், கால்நடை பராமரிப்பு துறையில், உரிய அரசு பணி இடங்களுக்கு, பணி அமர்த்திட வழிவகை செய்யப்படும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

இரண்டாவது அறிவிப்பு -
உலகப் புகழ் பெற்ற தமிழ்நாட்டின் ஜல்லிக்கட்டு காளைகளுக்கான அலங்காநல்லூர் பகுதியில், சிறந்த உயர்தர சிகிச்சை மற்றும் பயிற்சி மையம் 2 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த இரண்டு அறிவிப்பும் உங்களுக்கு மகிழ்ச்சி தானே! அந்த மகிழ்ச்சியோடு தமிழர்கள் எல்லோரும் வெல்வோம் ஒன்றாக என்று கூறி விடைபெறுகிறேன். நன்றி, வணக்கம்!
அதனைத் தெடர்ந்து, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சிறப்பு செய்தார்கள்.






