Tamilnadu
288 Iconic Projects : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆய்வு கூட்டம்!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் 13.01.2026 அன்று தலைமைச் செயலகத்தில், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனம், உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், பள்ளிக்கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாடு, கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலன் ஆகிய துறைகளின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் தமிழ்நாடு அரசின் முத்திரை திட்டங்களின் (Iconic Projects) முன்னேற்றம் குறித்து தொடர்புடைய துறைச் செயலாளர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
மாநிலத்தின் சமூகப் பொருளாதார கட்டமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு பல்வேறு அரசு துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் பெரிய அளவிலான பயன்தரக்கூடிய உள்கட்டமைப்பு திட்டங்களான முத்திரைத் திட்டங்களை குறித்த காலத்திற்குள் திட்டமிட்டபடி நிறைவேற்றுவதற்கும், பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கும் அத்திட்டங்களின் முன்னேற்றத்தினைத் கண்காணித்திடவும் தொடர்ந்து ஆய்வுக் கூட்டங்கள் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், துணை முதலமைச்சர் அவர்கள் மற்றும் அரசு தலைமைச் செயலாளர் ஆகியோரால் நடத்தப்பட்டு வருகிறது.
அடையாளம் காணப்பட்ட 288 முத்திரைத் திட்டங்கள்
அரசின் 24 நிர்வாகத் துறைகளைச் சேர்ந்த சுமார் 3,17,693 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 288 திட்டங்கள் முத்திரைத் திட்டங்களாக அடையாளம் காணப்பட்டு அதன் செயல்பாட்டினை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. அவற்றில் 85 திட்டங்கள் இதுவரை முடிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.
முதலமைச்சர் முத்திரைத் திட்டடங்கள் குறித்த ஆய்வு
கடந்த 22.12.2025 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், 6 துறைகளைச் சார்ந்த சுமார் 87,941 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான செயல்பாட்டில் உள்ள 27 முத்திரைத் திட்டங்களின் பணி முன்னேற்றம் குறித்து தொடர்புடைய துறைச் செயலாளர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.
அதன் தொடர்ச்சியாக 30.12.2025 அன்று மேலும் 6 துறைகளைச் சார்ந்த சுமார் 58,740 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான செயல்பாட்டில் உள்ள 27 முத்திரைத் திட்டங்களின் பணி முன்னேற்றம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து, இன்று (13.01.2026) நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனம், உள் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், பள்ளிக்கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாடு மற்றும் கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலன் ஆகிய 6 துறைகளைச் சார்ந்த சுமார் 3,291 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான செயல்பாட்டில் உள்ள 27 முத்திரைத் திட்டங்களின் பணி முன்னேற்றத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொடர்புடைய துறைச் செயலாளர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.
மதுரை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஒலிம்பிக் அகாடமி. செங்கல்பட்டில் மாவட்ட விளையாட்டு மையம் மற்றும் இராமநாதபுரத்தில் தமிழ்நாடு ஒலிம்பிக் நீர் விளையாட்டு அகாடமி அமைக்கும் பணிகள் குறித்து ஆய்வு
இவ்வாய்வு கூட்டத்தில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் கீழ் மதுரை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஒலிம்பிக் அகாடமி, செங்கல்பட்டு மாவட்டத்தில் மாவட்ட விளையாட்டு மையம் மற்றும் இராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு ஒலிம்பிக் நீர் விளையாட்டு அகாடமி அமைக்கும் பணிகள் பிப்ரவரி 2026-க்குள் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட வேண்டுமென்று முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார்.
2030-ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் தமிழ்நாடு விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் பதக்கம் வெல்லுகின்ற வகையில் அவர்களுக்கு உரிய பயிற்சியினை வழங்கிட வேண்டுமென தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திற்கு உரிய அறிவுரைகளை முதலமைச்சர் அவர்கள் வழங்கினார்.
கடம்பூரில் பல்லுயிர் பாதுகாப்பு பூங்கா, மரக்காணத்தில் சர்வதேச பறவை மையம், கடலூர் மாவட்டம், பிச்சாவரத்தில் சதுப்புநில பாதுகாப்பு மையம், தஞ்சாவூரில் சர்வதேச கடல் பசு பாதுகாப்பு மையம், சென்னையில் கடல் ஆமை பாதுகாப்பு மையம் மற்றும் திண்டுக்கல்லில் தேவாங்கு பாதுகாப்பு மையம் அமைக்கும் பணிகள் குறித்து ஆய்வு
சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் கீழ் கடம்பூரில் பல்லுயிர் பாதுகாப்பு பூங்கா, மரக்காணத்தில் சர்வதேச பறவை மையம், கடலூர் மாவட்டம், பிச்சாவரத்தில் சதுப்புநில பாதுகாப்பு மையம், தஞ்சாவூரில் சர்வதேச கடல் பசு பாதுகாப்பு மையம் மற்றும் சென்னையில் கடல் ஆமை பாதுகாப்பு மையம் அமைப்பதற்காக பிப்ரவரி, 2026 இரண்டாம் வாரத்திற்குள் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் துவங்கப்பட வேண்டுமெனவும், மேலும் திண்டுக்கல்லில், தேவாங்கு பாதுகாப்பு மையம், அமைக்கும் பணி பிப்ரவரி 2026 -க்குள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட வேண்டுமென்று முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார்.
கடலூரில் புதிய நூலகம் அமைக்கும் பணி குறித்த ஆய்வு
பள்ளிக்கல்வி துறையின் கீழ், கடலூரில் புதிய நூலகம் அமைப்பதற்கான ஒப்பந்தப் பணிகளை விரைந்து முடித்து பிப்ரவரி 2026-க்குள் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் துவங்கப்பட வேண்டுமென முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார்.
ஆற்காட்டுத் துறை, வெள்ளப்பள்ளம் மீன்பிடி துறைமுகங்கள், மற்றும் திட்டக்குடியில் புதிய கால்நடை தீவன ஆலை அமைக்கும் பணிகள் குறித்து ஆய்வு
கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறையின் கீழ், ஆற்காட்டுத் துறை, வெள்ளப்பள்ளம் மீன்பிடி துறைமுகங்கள் மற்றும் திட்டக்குடியில் புதிய கால்நடை தீவன ஆலை அமைக்கும் பணிகள் பிப்ரவரி 2026-க்குள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட வேண்டுமென முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார்.
இதுதவிர, இத்துறைகளால் செயல்படுத்தப்பட்டு வரும் பிற முத்திரைத் திட்டங்களையும் விரைந்து முடித்து மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென முதலமைச்சர் அவர்கள் அறிவுரை வழங்கினார்.
Also Read
-
4,184 காவலர்களுக்கு முதலமைச்சர் பதக்கங்கள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணை!
-
ஐசிசி தரவரிசைப் பட்டியல்… 5 ஆண்டுகளுக்கு பிறகு ‘நம்பர் 1’ இடத்தில் விராட் கோலி! : முழு விவரம் உள்ளே!
-
கம்பீரின் ஆதரவால் அணிக்குள் வந்தாரா ஆயுஷ் பதோனி? - கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கொந்தளிப்பு!
-
சென்னையில் 1980-களை நினைவுபடுத்தும் ‘VINTAGE BUS’! - மக்கள் பயன்பாட்டிற்காக 5 பேருந்துகள் அறிமுகம்!
-
“உள்ளங்களிலும், இல்லங்களிலும் மகிழ்ச்சி பொங்கட்டும்!“ : பொங்கல் விழா கொண்டாட்டத்தில் முதல்வர் பேச்சு!