Tamilnadu
“அரசின் லேப்டாப்பை பயன்படுத்தி ஆண்களைவிட அதிகமாக பெண்கள் சாதனைகளை படைக்க வேண்டும்” - துணை முதலமைச்சர்!
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று (13.1.2026) சென்னை அண்ணா சாலை காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரியில், கல்லூரி மாணவர்களின் திறன் வளர்ச்சி மற்றும் டிஜிட்டல் முன்னேற்றத்திற்கான “உலகம் உங்கள் கையில்" திட்டத்தின் கீழ் 898 மாணவிகளுக்கு மடிக்கணினிகளை வழங்குவதன் அடையாளமாக 20 மாணவிகளுக்கு வழங்கினார்.
= > இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் ஆற்றிய உரை
உங்களையெல்லாம் சந்தித்து, இன்றைக்கு இந்த மடிக்கணினியை வழங்குவதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன். முதலில் இங்கு வந்திருக்கக்கூடிய அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகளையும், பொங்கல் வாழ்த்துகளையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
நம்முடைய காயிதே மில்லத் கல்லூரி மாணவிகள் உங்களுடைய உற்சாகத்தையும், ஆரவாரத்தையும் பார்க்கும்போது, உங்களுடைய உற்சாகம், உங்களுடைய மகிழ்ச்சி என்னையும் தொற்றிக் கொள்கின்றது.
காயிதே மில்லத் கல்லூரி மாணவிகள் உங்களிடம் மிகவும் பிடித்த விசயம் என்னவென்றால், உங்களுடைய சமூக அக்கறை. கல்லூரிக்கு வந்தோம், படித்தோம், டிகிரி வாங்கினோம், வீட்டுக்கு சென்றோம், வேலைக்கு சேர்ந்தோம் என்றில்லாமல் சமூக நலன் சார்ந்த பல்வேறு விசயங்களுக்காக தொடர்ந்து குரல் கொடுக்கக்கூடியவர்கள்தான் இந்த காயிதே மில்லத் கல்லூரியைச் சேர்ந்த மாணவிகள் நீங்கள்.
பொதுவாக படித்து முடித்துவிட்டால் பெண்களுக்கு தைரியமும், தன்னம்பிக்கையும் வந்துவிடும் என்று சொல்வார்கள். ஆனால், காயிதே மில்லத் கல்லூரி மாணவிகள் நீங்கள் படிக்கும்போதே எதையுமே, உறுதியாக, தன்னம்பிக்கையாக செய்யக்கூடிய மாணவிகள் நீங்கள். பல பேருக்கு உதாரணமாக, உத்வேகமாக இருக்கக்கூடிய மாணவிகள் நீங்கள். படிப்பில் மட்டுமல்ல சமூக அக்கறையில் மட்டுமல்ல, விளையாட்டிலும் இங்கு இருக்கக்கூடிய இந்த கல்லூரி மாணவிகள் நிறைய சாதித்து கொண்டு இருக்கின்றீர்கள். அதற்கு இந்த நேரத்தில் விளையாட்டுத் துறை அமைச்சராக உங்களுக்கு என்னுடைய பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.
இப்படி பல பெருமைகள் வாய்ந்த கல்லூரி மாணவிகள் உங்களையெல்லாம் சந்தித்து இந்த லேப்டாப் கொடுக்கின்றது உண்மையிலே இந்த அரசிற்கு பெருமை. எங்களுக்கு பெருமை.
இந்த கல்லூரிக்கென்று ஒரு தனி வரலாறு உண்டு. 126 ஆண்டுகளுக்கு மேல் இந்த கல்லூரி, கல்வி சேவையில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக, சென்னையில் இருக்கக்கூடிய ஏழை, எளிய நடுத்தர குடும்பங்களை சேர்ந்த பெண் பிள்ளைகளுக்கு உயர்கல்வியை கொண்டு சென்று சேர்க்கின்ற பணியை இந்த கல்லூரி இத்தனை ஆண்டுகளாக மிகச் சிறப்பாக செய்து கொண்டிருக்கிறது. அதற்கு என்னுடைய வாழ்த்துகள்.
இந்த கல்லூரிக்கு 1974 ஆம் ஆண்டு நம்முடைய முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள்தான் காயிதே மில்லத் கல்லூரி என்று பெயர் வைத்தார்கள். அதுமட்டுமல்ல இந்த கல்லூரிக்கு புதிய கட்டடங்கள் கொடுக்கப்பட்டு, கலைஞர் அவர்கள் தான் இந்த கட்டடங்களை திறந்து வைத்தார்கள். பெயர் வைத்ததோடு நிற்கவில்லை. இந்த கல்லூரியின் வளர்ச்சிக்காக நிறைய உள்கட்டமைப்பு வசதிகளையும், நிறைய திட்டங்களையும் கலைஞர் அவர்கள் கொடுத்தார். பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு விழா கட்டடம் உள்பட ஏராளமான கட்டடங்களை கலைஞர் அவர்கள் இந்த கல்லூரிக்கு செய்து கொடுத்திருக்கிறார்.
இன்றைக்கு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் வழியில் ஆட்சி செய்கின்ற நம்முடைய முதலமைச்சர் அவர்கள் இந்த கல்லூரிக்கு நிறைய திட்டங்களை கொடுத்திருக்கிறார். சமீபத்தில் சுமார் இரண்டரை கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு கட்டுமான பணிகளை மேற்கொள்வதற்கான பணிகளை எல்லாம் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்துள்ளார்கள்.
அந்தவகையில், முதலமைச்சர் அவர்கள் உத்தரவின்பேரில் இன்றைக்கு இந்த கல்லூரிக்கு வந்து இந்த லேப்டாப்பை வழங்குவதற்கான வாய்ப்பை எனக்கு கொடுத்திருக்கின்றீர்கள். இந்த கல்லூரிக்கு வருவது எனக்கு ஒன்றும் முதல்முறை கிடையாது. புதிது கிடையாது. பல முறை வந்திருக்கின்றேன்.
குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் சார்பாக சில மாதங்களுக்கு முன்பு உங்கள் கல்லூரிக்கு பக்கத்திலே இருக்கக்கூடிய முதலமைச்சருடைய மினி ஸ்டேடியம் 3 கோடி ரூபாய் செலவில் நான்தான் திறந்து வைத்தேன். இப்போது இன்றைக்கு இந்த லேப்டாப் கொடுக்க வந்திருக்கின்றேன்.
இன்றைக்கு ஒட்டுமொத்தமாக இந்த கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கக்கூடிய கிட்டத்தட்ட 900 மாணவிகளுக்கு இந்த லேப்டாப்களை கொடுக்க இருக்கின்றேன். இந்த வருடம் மட்டும் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் 10 இலட்சம் லேப்டாப்களை இறுதி ஆண்டு படிக்கக்கூடிய மாணவ, மாணவிகளுக்கு கொடுக்க வேண்டும் என்று எங்களுக்கு உத்தரவிட்டிருக்கிறார்.
இந்த திட்டத்தை பற்றி உங்களுக்கே தெரிந்திருக்கும். இதை முன்பு, சென்ற ஆட்சியாளர்கள் பள்ளிக்கூடம் படிக்கின்ற குழந்தைகளுக்கு கொடுத்து கொண்டிருந்தார்கள். அதன் பிறகு 2019 ஆம் ஆண்டு இந்த திட்டத்தை நிறுத்திவிட்டார்கள். மீண்டும் இந்த திட்டத்தை தொடங்க வேண்டும் என்று எல்லோரும் சொல்லும் போது, பள்ளி மாணவர்களுக்கு கொடுப்பதைவிட கல்லூரி மாணவர்களுக்கு கொடுக்கும்போது அவர்களுக்கு படிப்பிற்கும் இது உதவியாக இருக்கும். அவர்கள் எங்கு வேலைக்கு சென்றாலும் உயர்கல்விக்கு உதவியாக இருக்கும் என்று நம்முடைய முதலமைச்சர் அவர்கள் சொன்னார். அவர்களுக்கு பெரிய நிறுவனங்களில் வேலை கிடைப்பதற்கும் உதவியாக இருக்கும் என்று இந்த திட்டத்தை நம்முடைய முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார்கள்.
இந்த லேப்டாப்கள் டெக்னாலஜி, தரம் என்று எந்த வகையிலும் Compromise ஆக இருக்கக்கூடாது என்று முதலமைச்சர் அவர்கள் உறுதியோடு இருந்தார்கள். அந்த அடிப்படையில் தான் இன்றைக்கு லேட்டஸ்ட் டெக்டனாலஜியோடு தயாரிக்கப்பட்ட HP, Acer, Dell லேப்டாப் இன்றைக்கு உங்களுக்கு வழங்கப்பட இருக்கின்றது. இன்னும் பெருமையாக சொன்னால், perplexity artificial intelligence வசதியோடு இந்த லேப்டாப் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
இந்த கல்விக்கான நிதியை நம்முடைய திராவிட மாடல் அரசு வெறும் செலவாக பார்க்கவில்லை. நம்முடைய தமிழ்நாடு மாணவர்களுடைய வளர்ச்சிக்கான முதலீடாகதான் நம்முடைய அரசு பார்க்கின்றது. பெண்களுடைய கைகளில் இருக்கக்கூடிய சமையில் கரண்டியை பிடுங்கி, அவர்கள் கையில் புத்தகத்தை கொடுக்க வேண்டும் என்று தந்தை பெரியார் அவர்கள் சொன்னார்.
நம்முடைய முதலமைச்சர் அவர்கள் புத்தகத்தை மட்டுமல்ல, இன்றைக்கு லேப்டாப்களையும் சேர்த்து உங்கள் கைகளில் ஒப்படைத்துள்ளார். ஏனென்றால், பெண்களுக்கு கல்வி எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்தவர் நம்முடைய முதலமைச்சர் அவர்கள்.
பெண்களுடைய கல்வியை ஊக்கப்படுத்த வேண்டும் என்றுதான், முதலமைச்சர் அவர்கள் புதுமைப் பெண் திட்டத்தை தொடங்கி வைத்தார். அந்த திட்டத்தை பற்றி உங்களுக்கு தெரியும். அரசு பள்ளியில் படித்து, கல்லூரியில் படிப்பதற்கு, எந்த கல்லூரியாக, அது தனியார் கல்லூரியாக இருந்தாலும் சரி பெண்கள் படிக்க வேண்டும் என்று அவர்களுக்கு மாதம் 1,000 ரூபாய் கல்வி ஊக்கத் தொகை நான் தருகிறேன் என்று இன்றைக்கு புதுமைப் பெண் திட்டத்தை நம்முடைய அரசு செயல்படுத்தி வருகிறது.
இந்த காயிதே மில்லேத் கல்லூரியில் மட்டும், சுமார் 2,500 மாணவிகள் பயனடைந்து வருகிறீர்கள். அதேமாதிரி நான் முதல்வன் திட்டத்தையும் நம்முடைய அரசு செயல்படுத்துகிறது. இந்த நான் முதல்வன் திட்டத்தின் மூலமாக இந்த கல்லூரியைச் சேர்ந்த சுமார் 7,000 பேருக்கு திறன் பயிற்சி கொடுக்கப்பட்டிருக்கிறது.
இன்றைக்கு லேப்டாப் வழங்குகின்ற இந்த நிகழ்ச்சியில், உங்களுடைய திறனை மேலும் மேம்படுத்தக்கூடிய நிகழ்ச்சியாக இந்த நிகழ்ச்சி நடைபெற்று கொண்டிருக்கிறது. பெரிய, பெரிய நிறுவனங்களில் வேலை வாய்ப்பு கிடைப்பதற்கு நிச்சயம் இந்த லேப்டாப் உங்களுக்கு உதவியாக இருக்கும்.
லேப்டாப்பை யுடியூப் பார்ப்பதற்கு, படம் பார்ப்பதற்கு மட்டும் உபயோகப்படுத்தாமல், தயவு செய்து இந்த லேப்டாப்பை உங்களுடைய கல்விக்கு ஆக்கபூர்வமாக பயன்படுத்துங்கள் என்று இந்த நேரத்தில் ஒரு அன்பான கோரிக்கையை வைத்துக் கொள்கிறேன்.
உங்களுக்கான வாய்ப்புகளை உருவாக்குவதற்காக இதை பயன்படுத்துங்கள். எதை கொடுத்தாலும் அதை பாதுகாத்து பன்மடங்கு ஆக்கக்கூடிய ஆற்றல் பெண்கள் ஆகிய உங்களுக்கு உண்டு. அந் தவகையில் இன்றைக்கு உங்கள் கைகளில் கொடுக்கப்படுகின்ற இந்த லேப்டாப் எதிர்காலத்தில் ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் வளர்ச்சியாக பெருகும் என்று நாங்கள் உறுதியாக நம்புகின்றோம்.
எந்த தேர்வாக இருந்தாலும், மாணவர்களைவிட மாணவிகள் நீங்கள் தான், தேர்ச்சி சதவீதமாக இருக்கட்டும், முதல் வகுப்பில் தேர்ச்சி சதவீதமாக ஆக இருக்கட்டும் எப்போதுமே மாணவர்களை சுலபமாக அடித்துவிடுவீர்கள். அதே மாதிரி இந்த லேப்டாப்பை பயன்படுத்தி வாழ்கையிலும் நீங்கள் ஆண்களைவிட சிறந்த இடத்திற்கு, ஆண்களைவிட அதிகமாக நீங்கள் சாதனைகள் படைத்து காட்ட வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.
இதை தவிர இன்னும் பல்வேறு திட்டங்களை நம்முடைய திராவிட மாடல் அரசு உங்களுக்கு தர இருக்கின்றது. எனவே இந்த அரசிற்கு எப்போது நீங்கள் துணையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டு, லேப்டாப் பெற்ற உங்கள் அத்தனைபேரினுடைய எதிர்காலம் சிறக்க அரசின் சார்பாக என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்து, இந்த வாய்ப்பிற்கு நன்றி கூறி விடைபெறுகின்றேன். நன்றி வணக்கம் என்று துணை முதலமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.
Also Read
-
“சென்னை சங்கமத்துடன் சேர்ந்து இதுவும் நடக்கும்...” - கனிமொழி எம்.பி. சொன்னது என்ன?
-
இந்தியாவின் கோரிக்கையை மீண்டும் மறுத்த வங்கதேச அணி... T20 உலகக்கோப்பையில் பங்கேற்குமா வங்கதேசம்?
-
தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு & சுழற் பொருளாதார முதலீட்டுக் கொள்கைகள்... வெளியிட்டார் முதலமைச்சர்!
-
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் தேர்வான 3-வது லட்ச நபர்... பணி ஆணை வழங்கினார் முதலமைச்சர் !
-
ரூ.80.62 கோடி செலவில்... ஆவின் நிறுவனத்தின் சார்பில் முடிவுற்ற திட்டப்பணிகள் திறப்பு... - விவரம்!