Tamilnadu
“தமிழ்நாடு அரசின் முடிவால் செவிலியர்கள் மகிழ்ச்சி!” : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!
சென்னை, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழக வளாகத்தில், ரூ.12 கோடி செலவில் புனரமைக்கப்பட்ட கட்டடங்கள், வளாகம் மற்றும் புதிய நுழைவு வாயில் ஆகியவற்றினை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.
பிறகு அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-
கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்னாள் சென்னை கிண்டியில் தோற்றுவிக்கப்பட்ட தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம். ரூ.12 கோடி செலவில் 35 ஆண்டுகளுக்குப் பிறகு நுழைவு வாயிலை புதுப்பிப்பது, துணைவேந்தர் அறையை புதுப்பிப்பது என்று பல்வேறு வகைகளில் கட்டிடங்களை புதுப்பிப்பது தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலோடு மேற்கொள்ளப்பட்டது. அந்தப் பணிகள் முடிவுற்று தற்போது பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
ஒப்பந்த செவிலியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு
அதோடு MRB ஒப்பந்த செவிலியர்களின் போராட்டம் தொடர்பாக செவிலியர் சங்கத்தினருடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டது. பேச்சுவார்த்தையில் செவிலியர்கள் கோரிக்கை மீது அரசு இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து எடுத்து கூறப்பட்டது. மேலும், அவர்களின் கோரிக்கைகள் அரசின் சார்பில் பரிசீலிக்கப்பட்டு பல்வேறு கோரிக்கைகளுக்கு விரைந்து தீர்வு காணும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அந்தவகையில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் செவிலியர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து நிறைவேற்றி தர வேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கிறார்கள். அந்தவகையில் அவர்களுடைய கோரிக்கைகளில் ஒன்றான நிரந்தரப் பணியாளர்கள் போலவே அனைத்து MRB ஒப்பந்த தொகுதிப்பூதிய செவிலியர்களுக்கும் மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார்கள். இது தொடர்பான கருத்துரு அரசின் பரிசீலினையில் இருந்து வருகிறது. மிக விரைவில் அதுகுறித்து அரசாணை வெளியிடப்படவுள்ளது.
ஒப்பந்த செவிலியர்களுக்கு பணிநிரந்தர ஆணை வழங்குதல்
ஒப்பந்த செவிலியர்கள் பணியில் இணையும்போது ரூ.14,000/- வரை சம்பளம் இருந்தது. 2014-15 ஆம் ஆண்டுகளில் தற்காலிக செவிலியர்களை மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் (MRB) மூலம் தேர்ந்தெடுத்தது, அன்றைய அரசு. தேர்வாகும்போது 2 ஆண்டு காலம் அவர்கள் பணி செய்த பிறகு செவிலியர் துறையில் காலிப்பணியிடம் உருவானால் Seniority அடிப்படையில் அவர்கள் பணியில் எடுத்துக் கொள்ளலாம் என்று சொல்லப்பட்டு அதனை ஒப்புக்கொண்டு தான் 2014லிருந்து அவர்கள் பணியில் சேர்ந்திருந்தார்கள்.
இதுவரை 7000க்கும் மேற்பட்ட செவிலியர்களின் பணி நிரந்தரமாக்கப்பட்ட நிலையில், தற்போது 8322 செவிலியர்கள் நிரந்தமாக்க கோரிக்கை வைத்துள்ளனர், அவர்களுக்கு புதிய பணியிடங்களை உருவாக்கி பணியை நிரந்தரப்படுத்த வேண்டும் என்பது.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தேர்தல் அறிக்கையில் சொன்னது போலவும், கோவிட் பேரிடர் காலத்தில் இவர்கள் பெரிய அளவில் அரசுக்கு மட்டுமல்ல பொதுமக்கள் மத்தியிலும் உயிர் காத்த விவகாரத்தில் அவர்களுக்கான பெரிய அங்கீகாரம் என்கின்ற வகையில் ரூ.14,000/- இருந்த சம்பளத்தினை ரூ.18,000/- ஆக உயர்த்தினார்கள்.
மேலும் அவர்களுக்கு காலிப்பணியிடங்கள் அவ்வபோது உருவாகும்போது அதில் MRB ஒப்பந்த செவிலியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்று சொல்லியதன் காரணமாக, இந்த அரசுப் பொறுப்பேற்றதற்கு பிறகு 3,614 ஒப்பந்த செவிலியர்கள் பணிநிரந்தரம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.
இதில் ஆண்டு தோறும் காலியாகின்ற செவிலியர்களையும் தவிர்த்து 1,200 செவிலியர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் கடந்த ஆண்டு வரை கட்டி முடித்து திறந்து வைக்கப்பட்ட 11 அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளுக்கு புதிய பணியிடங்கள் உருவாக்கி அந்தப் பணியிடங்களையும் சேர்த்து 3,614 பணியிடங்கள் நிரந்தரம் ஆக்கப்பட்டது.
செவிலியர்களின் கோரிக்கையினை தீவிரமாக பரிசீலித்து தற்போது வரை காலியாக இருக்கின்ற 169 பணியிடங்களுக்கு உடனடியாக பணிநிரந்தர ஆணைகள் தயார் செய்யும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
புதிய பணியிடங்கள் உருவாக்குதல்
செவிலியர்களின் கோரிக்கையினை ஏற்று செவிலியர் கண்காணிப்பாளர் நிலை-II என்கின்ற பதவி உயர்வு நீண்ட நாட்களாக வழங்கப்படாமல் இருந்தது, தற்போது அந்தப் பதவி உயர்வும் வழங்கப்பட்டால் 266 பணியிடங்கள் புதிதாக உருவாகும். அதேபோல் செவிலியர் போதகர் நிலை-II – 140 பணியிடங்கள் பதவி உயர்வு மூலம் நிரப்பிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவற்றின் மூலம் 406 பணியிடங்களில் காலியாக உள்ள 169 பணியிடங்கள் மற்றும் அதிதீவிர சிகிச்சைப் பிரிவு கட்டிடங்கள் 37 இடங்களில் 148 புதிய பணியிடங்கள் உருவாக்கி, ஆக மொத்தம் 723 என்கின்ற அளவிற்கு புதிய பணியிடங்கள் உருவாக்க முடியும். இப்புதிய நிரந்தர பணியிடங்களில் 723 பேருக்கு பணிநியமன ஆணைகள் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கோவிட் செவிலியர்களுக்கு பணி ஆணை வழங்குதல்
மேலும் நர்சுகள் பொதுநலச் சங்கம், தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கம், கோவிட் பேரிடர் கால நர்சுகள் சங்கம் போன்ற சங்கங்களின் சார்பிலும் அவர்கள் வைத்த கோரிக்கையும் ஏற்று 716 பேர் கோவிட் காலங்களில் பணியாற்றியவர்கள், இனசுழற்சி (communual Rotation) அடிப்படையில் இல்லாமல் பணியில் இணைந்தவர்கள். அவர்களை சேர்க்க வேண்டும் என்கின்ற கோரிக்கை நர்சுகள் சங்கத்தின் சார்பில் வைக்கப்பட்டு வந்தது.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மேற்காணும் 716 பேருக்கும் தொகுப்பூதிய அடிப்படையில் பணியினை தருவதற்கு இன்றைக்கு ஒப்புக் கொண்டு அந்தவகையில் இனசுழற்சி முறையில் MRBக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. இனசுழற்சி இல்லாமல் பணி வழங்கினால் சட்ட ரீதியிலான பிரச்சினைகள் வரும் என்பதால் MRB மூலம் அவர்களுக்கும் பணியாணைகள் வழங்கப்படவிருக்கிறது.
அதேபோல் அவர்களுக்கான இன்னொரு கோரிக்கையான புதிய அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் செவிலியர் கல்லூரி தொடங்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். ஏற்கெனவே தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடத்தில் அனுமதியினைப் பெற்று 5 கல்லூரிகளில் புதிய செவிலியர் கல்லூரிகள் தொடங்குவது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதற்கான அரசாணை மிக விரைவில் வரவிருக்கிறது.
மேற்காணும் சங்கங்களின் மற்றொரு கோரிக்கையான ஒப்பந்த செவிலியர்களின் மாதச் சம்பளம் ரூ.14,000/-லிருந்து ரூ.18,000/- உயர்த்தப்பட்ட நிலையில் மருத்துவம் மற்றும் ஊரகநலப்பணிகள் (DMS), மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி (DME) கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவமனைகளில் பணிபுரியும் சுமார் 400 பேருக்கு உயர்த்தி வழங்குவதில் சில நிர்வாக காரணங்கள் இருந்தது. அது தற்போது சரி செய்யப்பட்டு அவர்களுக்கும் மாத சம்பளம் ரூ.4,000/- உயர்த்தி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த தகவலும் செவிலியர் சங்கத்தினருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
செவிலியர்களின் பிரதான கோரிக்கைகளான 723 பேருக்கு பணிநிரந்தரம் செய்வது, தொகுப்பூதிய MRB செவிலியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்குவது, புதிய செவிலியர் கல்லூரிகள் உருவாக்குவது, 716 கோவிட் செவிலியர்களுக்கு இனசுழற்சி முறையினை சரிசெய்து பணி வழங்குவது போன்ற கோரிக்கைகள் நிறைவேற்றப்பட உள்ளது. செவிலியர் சங்கத்தினர் அரசின் இந்த முடிவிற்கு மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார்கள் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்கள்.
Also Read
-
“திராவிட மாடலின் சாதனைகள் தொடரும்; உழவர் வாழ்வு செழிக்கும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
உங்களை ஒரு பொருட்டாகவே டெல்லி மதிக்கவில்லை : பழனிசாமிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி!
-
“தமிழ்நாடு மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு வேண்டும்!” : ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் கடிதம்!
-
ரூ.165 கோடியில் கட்டப்பட்டு வரும் 700 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள்! : உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு!
-
“நாம் இன்னும் விழிப்போடு செயல்பட வேண்டும்!” : SIR குறித்து எச்சரித்த முரசொலி தலையங்கம்!