Tamilnadu

“இது நூல் அல்ல, நமது போர் ஆயுதம்”: ப.திருமாவேலன் எழுதிய மூன்று நூல்கள் வெளியீட்டு விழாவில் கி.வீரமணி உரை!

சென்னை, அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் எழுத்தாளர் ப.திருமாவேலன் அவர்கள் எழுதிய ”தீரர்கள் கோட்டம் தி.மு.க”,”திராவிட அரசியல் - திராவிட அரசு இயல்”, ”முறை செய்து காப்பாற்றும் முதலமைச்சர்”, ஆகிய மூன்று நூல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது.

இதில்,”தீரர்கள் கோட்டம் தி.மு.க”,”திராவிட அரசியல் - திராவிட அரசு இயல்” ஆகிய நூல்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட, தி.க.தலைவர் ஆசிரியர் கி.வீரமணி பெற்றுக் கொண்டார். அதேபோல், ”முறை செய்து காப்பாற்றும் முதலமைச்சர்”, நூலை தி.க. தலைவர் ஆசிரியர் கி.வீரமணி வெளியிட, ஜெகத்ரட்சக எம்.பி பெற்றுக்கொண்டார்.

இதையடுத்து வாழ்த்துரை வழங்கிய திராவிட இயக்கத் தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன், ”முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மட்டும் தான் மக்களுக்கு இறை என்று வைக்கப்படும்” என்று வள்ளுவன் அன்றைக்கு சொன்னான். அப்படிமுறை செய்து காப்பாற்றும் நமது திராவிட நாயகன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என இந்த புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார் ப.திருமாவேலன். இந்த புத்தகங்கள் இருந்தால் அந்த வீடு தி.மு.க- காரன் வீடு என்பதற்கான அடையாளமாக இருக்க வேண்டும்" என தெரிவிதார்.

பின்னர் பேசிய ஜெகத்ரட்சகன் எம்.பி., ”என்னுடைய எதிரி தமிழ்நாட்டில் வறுமையை ஒழிப்பதுதான்” என்று முதலமைச்சராக பொறுப்பேற்றபோது செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் சொன்னவர் நமது தலைவர் மு.க.ஸ்டாலின். எப்படிப்பட்ட ஒரு சிந்தனை இது. அடையாளம் இல்லாத ஒரு தொண்டன் அறிவாலயம் வந்தால் அவரை பெயர் சொல்லி அழைக்கும் ஒரே தலைவன் தமது தளபதிதான்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கொண்டுவந்துள்ள திராவிட மாடல் அரசின் திட்டங்களால், நாடாளுமன்றத்தில் எங்களை எல்லோரும் பிரம்மிப்பாக பார்க்கிறார்கள். அப்படிப்பட்ட ஆற்றல்வாய்ந்த முதலமைச்சரை நாம் பெற்று இருக்கிறோம்." தெரிவித்துள்ளார்.

பிறகு பேசிய தி.க தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, ”திராவிட இயக்கத்தை, கொள்கையை அழித்துவிட வேண்டும் என நினைப்பவர்கள் கூட ப.திருமாவேலன் எழுதியுள்ள இந்த மூன்று நூல்களை படிக்க வேண்டும். இது வெறும் நூல்கள் அல்ல நமது போர் ஆயுதம். இந்த இனம் மீண்டும் எழுந்து நிற்கும். மீண்டும் வெற்றி பெறும். எந்த கொம்பனாலும் இந்த இயக்கத்தை அசைத்து விட முடியாது.

நீதிக்கட்சி 110 ஆண்டுகள், சுயமரியாதை இயக்கம் 100 ஆண்டுகள், திராவிடர் கழகம் 85 ஆண்டுகள். தி.மு.க 75 ஆண்டுகள் என வரிசையாக திராவிடர் கொள்கை வந்து கொண்டு இருக்கிறது. இந்த கொள்கைகளை கட்டிக்காத்து உலக அளவில் திராவிடத்தின் புகழை பரப்பி வருகிறார் நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்" என தெரிவித்தார்.

Also Read: “நமது ஆட்சியின் Diary ; எதிரிகளுக்கு பதில் சொல்லும் நூல்கள்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!