Tamilnadu
“மதவாத அமைப்பினருக்கு வளைந்து கொடுக்கும் நீதியரசர் ஜி.ஆர்.சுவாமிநாதன்” : மு.வீரபாண்டியன் குற்றச்சாட்டு!
மதவாத அமைப்பினருக்கு வளைந்து கொடுக்கும் ஜி.ஆர்.சுவாமிநாதன் நீதியரசர் ஜி.ஆர்.சுவாமிநாதனை உடனடியாக பதவி விலக்கம் செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றும் பிரச்சனை தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர், சட்ட ஒழுங்கு ஏ.டி.ஜி.பி. ஆகியோர் டிசம்பர் 17ஆம் தேதி காணொளி மூலம் ஆஜராக வேண்டுமென உயர்நீதிமன்ற நீதியரசர் ஜி.ஆர்.சுவாமிநாதன் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.இதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள ஒரு சர்வே தூணை தீபம் ஏற்றும் தூணாக உண்மைக்கு மாறாக, அரசியல் நோக்கோடு திரித்து வழக்கு தொடுத்துள்ள இந்துத்துவா அமைப்பினருக்கு சாதகமாக நீதியரசர் ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பு வழங்கி உள்ளார்.
அதில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று மதச் சார்பின்மைக்கும், மதநல்லிணக்கத்திற்கும், அரசியல் சட்டத்திற்கும் எதிராக அவர் உத்தரவை வழங்கியுள்ளார். நீதியரசர் ஜி.ஆர்.சுவாமிநாதனின் உத்தரவு தவறானது. வரலாற்று உண்மைகளுக்கு எதிரானது. வழிபாட்டுத்தலங்கள் நிலை குறித்த 1991 ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்திற்கு முரணானது.
இத்தீர்பை நடைமுறைப் படுத்தினால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும், மதநல்லிணக்கத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படும் என்பதால், அதனை அமல்படுத்தாமல் மதுரை மாவட்ட ஆட்சியர் 144 தடை உத்தரவு பிறப்பித்தார். சட்ட ஒழுங்கை சிறப்பாக பாதுகாத்துள்ளார். இது வரவேற்பிற்குரியது. இந்த வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் 120 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து நீதி அரசர் ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி விலக்கம் செய்யக் கோரி மக்களவைத் தலைவரிடம் மனு அளித்துள்ளனர். இந்த நிலையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தலைமைச் செயலாளரும், ஏடிஜிபியும் காணொளி மூலம் ஆஜராக வேண்டும் என்று நீதியரசர் ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டுள்ளார்.
அது மட்டுமன்றி மனுதாரர், மத்திய உள்துறை செயலாளரை வழக்கில் எதிர்மனுதாரராக சேர்க்க வேண்டும் எனக் கூறியதையும் ஏற்று, அதனையும் நீதி அரசர் ஜி.ஆர்.சுவாமிநாதன் செய்துள்ளார்.
இது ஆபத்தான அதிகார அத்துமீறல் ஆகும். இது மதவாத அமைப்பினருக்கு வளைந்து கொடுக்கும் நடவடிக்கையாகும். நீதியரசர் ஜி.ஆர்.சுவாமிநாதனின் இத்தகைய இந்துவா அமைப்பினருக்கு சாதகமான போக்கை, மக்கள் ஒற்றுமைக்கு எதிரான, அரசியல் சட்டத்திற்கு எதிரானப் போக்கை, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.
தமிழ்நாட்டின் மத நல்லிணக்கத்திற்கு எதிராக செயல்படும் நீதியரசர் ஜி.ஆர்.சுவாமிநாதனை உடனடியாக பதவி விலக்கம் செய்ய வேண்டும். அவரை கண்டித்தும், பதவி விலக்கம் செய்ய வலியுறுத்தியும், மதச்சார்பற்ற கட்சிகள், முற்போக்கு அமைப்பினர் ஓரணயில் திரண்டு போராட முன்வர வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“எங்களது கருப்பு சிவப்புப் படை உங்களுக்குத் தக்க பாடம் புகட்டும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
2,18,000 மெ.டன் கொள்ளளவிலான 10 நவீன நெல் சேமிப்பு வளாகங்களுக்கு அடிக்கல்! : முழு விவரம் உள்ளே!
-
ஓய்வு பெற்ற பத்திரிகையாளர்களுக்கு மாதம் ரூ.12,000 ஓய்வூதியம் : ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
இவர்கள் சித்தாத்தம் இருக்கும் வரைம் திமுகவை தொட்டுக் கூட பார்க்க முடியாது : திவ்யா சத்யராஜ் அதிரடி பேச்சு
-
தமிழ்நாட்டில் ரூ.4,000 கோடி முதலீடு செய்யும் ஜியோ ஹாட்ஸ்டார் : 15 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு!