Tamilnadu

மதுரை மீது பா.ஜ.க.வுக்கு ஏன் இத்தனை வன்மம்? : அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா சரமாரி கேள்வி!

மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளின் வளர்ச்சிக்கான முதலீட்டாளர் மாநாட்டிற்கான பணிகள் நடந்து வரும் சூழலில், அமைதியைக் குலைத்து கலவரத்தைத் தூண்டும் வகையில் மதுரையின் மீது பா.ஜ.க.வுக்கு ஏன் இத்தனை வன்மம்?. அமைதியும், வளமும், நம்பிக்கையும் மிகுந்த தமிழ்நாட்டைக் கண்டு பா.ஜ.க. ஏன் பயப்படுகிறது? என அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவு வருமாறு:-

இரவு-பகல் பார்க்காமல் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக நம் திராவிட நாயகன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலில் தொடர்ந்து வேலை செய்து முதலீடுகளைக் கொண்டு வந்து, அதன் மூலமாக தமிழ்நாட்டில் பரவலாக வேலைவாய்ப்புகளை உருவாக்கி, அமைதியும் முன்னேற்றமும் கொண்ட மாநிலமாக நமது திராவிட மாடல் அரசு உயர்த்தி வருகிற நிலையில், மதவெறி பா.ஜ.க.வும் அதன் கூட்டாளிகளும் திட்டமிட்டு கலவரத்தை உண்டாக்கி மாநிலத்தின் அமைதியை எப்படியாவது சீர்குலைத்துவிட வேண்டும் என்கிற மோசமான நோக்கத்துடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்கள். அதற்கு, சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பெருமை கொண்ட நமது மதுரை அவர்களின் இலக்காக உள்ளது !

தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பாதையில் ஒரு மாபெரும் மாற்றத்திற்கு மாமதுரை தயராகி வருகிற நேரம் இது. வரும் ஞாயிற்றுக்கிழமை மதுரையில் மிகப் பெரிய அளவிலான முதலீட்டாளர் மாநாட்டிற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கிறோம். கோயில் நகரமாகப் புகழ் பெற்றுள்ள மதுரைக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில், சர்வதேச வர்த்தக அடையாளத்தைத் தரக்கூடிய வகையில் ஐ.டி.செக்டார், நவீன உற்பத்தி நிறுவனங்கள், உலகத் தரத்திலான வேலைகள் நிறைந்த மையமாக மாற்றும் பெரும் முயற்சிக்கான முக்கிய நிகழ்வு இது.

இந்த வளர்ச்சிக்குத் துணை நிற்பதற்குப் பதில், பா.ஜ.க.வும் அதன் கூட்டாளிகளும், உலக நாடுகளின் முன்னிலையில் மதுரையின் அடையாளத்தையும் நன்மதிப்பையும் சிதைக்கும் படுமோசமான முயற்சியை மேற்கொண்டிருக்கிறார்கள்.

நேற்றுகூட தென்தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான மின்வாகன உற்பத்தி சார்ந்த பெரிய முதலீட்டை நாம் ஈர்த்துள்ளோம். உயர்தரமான வேலைகளை நம் இளையோருக்கு வழங்குவதற்கான முயற்சிகளை நாம் தொடர்ந்து மேற்கொண்டிருக்கும் நிலையில், இளையதலைமுறைக்கு கிடைக்கவிருக்கும் நல்ல வாய்ப்புகளை சிதைக்கும் நோக்கத்துடன் அவர்களின் எதிர்காலத்தையே பாழாக்கும் வகையில், மத மோதல்களை நோக்கித் தள்ளும் அபாயகரமான வேலையை பா.ஜ.க. செய்து கொண்டிருக்கிறது.

திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றவில்லை என்கிற பச்சைப் பொய்யை பா.ஜ.க.வும் அதன் கூட்டாளிகளும் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், தீவிர முருக பக்தர்களான நான் உள்பட எல்லாருமே 100 ஆண்டுகால பாரம்பரியத்தின்படி, தொடர்ந்து எந்த இடத்தில் தீபம் ஏற்றப்படுமோ அதே இடத்தில் ஏற்றப்பட்டதை நாம் அனைவரும் கண்டோம். அதன்பிறகும், பா.ஜ.க. தொடர்ந்து பொய்யை மட்டுமே பரப்பிக் கொண்டிருக்கிறது. அவர்களால் பொய் பேசாமல், வெறுப்பை விதைக்காமல், பிரிவினையை உருவாக்காமல் அரசியல் செய்யவே முடியாது.

மதுரையில் உள்ள உண்மையான பக்தர்கள் திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபத்தை பரவசத்துடன் தரிசித்த நிலையில், மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளின் வளர்ச்சிக்கான முதலீட்டாளர் மாநாட்டிற்கான பணிகள் நடந்து வரும் சூழலில், அமைதியைக் குலைத்து கலவரத்தைத் தூண்டும் வகையில் மதுரையின் மீது பா.ஜ.க.வுக்கு ஏன் இத்தனை வன்மம்?

அமைதியும், வளமும், நம்பிக்கையும் மிகுந்த தமிழ்நாட்டைக் கண்டு பா.ஜ.க. ஏன் பயப்படுகிறது?

நம் முதலமைச்சர் அவர்கள் மதுரை மக்கள் எதை எதிர்பார்க்கிறார்கள் என்பதைத் தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளார். மதுரை மக்கள் விரும்புவதும் அவர்களுக்குத் தேவைப்படுவதும் வளர்ச்சி, கண்ணியம், வாய்ப்புகள்தான் என்பதையும், மதவாத பயங்கரவாதிகளால் திட்டமிட்டு உருவாக்கப்படும் கலவரங்களல்ல என்பதையும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தெளிவுபடுத்திவிட்டார்.

நம் வளர்ச்சிக்குத் தடை போடும் எவரையும் தமிழ்நாடு ஒருபோதும் அனுமதிக்காது. ஒற்றுமையைக் கெடுத்து வன்முறையைத் தூண்ட நினைப்பவர்களை தமிழர்கள் எந்நாளும் ஏற்கமாட்டார்கள். தீய எண்ணத்துடன் குறுக்கே நிற்கும் எதையும் தகர்த்தெறிய வேண்டியது தமிழர்களாகிய நம் அனைவரின் கடமை.

முந்தைய அ.தி.மு.க.வின் பத்தாண்டுகால ஆட்சியில் தமிழ்நாட்டைப் பாழாக்கி, ஒன்றிய அரசிடம் அடிமை சாசனம் எழுதிக்கொடுத்ததை நாம் அறிவோம். கடந்த நான்காண்டுகளில் அந்த நிலைமையை மாற்றிக் காட்டி, அனைத்து துறைகளிலும் தமிழ்நாட்டை வளர்ச்சியடையச் செய்து, குறிப்பாக தென்தமிழ்நாட்டை முன்னேற்றி வரும் திராவிட மாடல் ஆட்சியின் நல்ல விளைவுகளைப் பொறுக்கமுடியாத வயிற்றெரிச்சலுடன் வெறுப்பை விதைத்து, கலவரத்திற்குத் திட்டமிடும் காவிக் கூட்டத்தை யும் அதன் அடிமை கூட்டாளிகளையும் நாம் ஒருபோதும் அனுமதிக்கவே கூடாது.

மதுரை தனது வளர்ச்சிப்பாதையில் எழுச்சி பெறும். தமிழ்நாடு இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தொடர்ந்து திகழும்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுடன் நாம் இணைந்து கைகோர்த்து நின்று தமிழ்நாட்டை காப்போம். தமிழ்நாடு தொடர்ந்து வளர்ச்சி பெற உறுதியேற்போம். தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும்.

இவ்வாறு அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.

Also Read: பக்தி நோக்கம் இல்லாமல் கலவர நோக்கம் கொண்ட இந்த செயலை அனுமதிக்க முடியாது : அமைச்சர் ரகுபதி கண்டனம்!