Tamilnadu

குழந்தைகளின் நலனை பேணிக்காத்த நிறுவனங்கள் : விருதுகள் வழங்கி கவுரவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று (27.11.2025) தலைமைச் செயலகத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், 2025-ஆம் ஆண்டிற்கான “குழந்தைகள் நலன் - சேவை விருதுகளை” தஞ்சாவூர், அன்னை சத்யா அம்மையார் நினைவு அரசினர் குழந்தைகள் இல்லம், தூத்துக்குடி புனித மரியன்னை கருணை இல்லம், சென்னை, அரசினர் கூர்நோக்கு இல்லம், இராமநாதபுரம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு ஆகியவற்றிற்கு வழங்கி, விருதுடன் பரிசுத் தொகையாக தலா ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலைகளையும் வழங்கி சிறப்பித்தார்கள்.

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் செயல்படும் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் இயக்ககத்தில், குழந்தைகளின் நலனை பேணிக் காக்க திறம்பட செயல்பட்ட நிறுவனங்களை அங்கீகரிப்பதற்காகவும், ஊக்குவிப்பதற்காகவும், “குழந்தைகள் நலன் - சேவை விருதுகள்” அரசு குழந்தைகள் இல்லங்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் கீழ் செயல்படும் குழந்தைகள் இல்லங்கள், சட்டத்திற்கு முரணாக செயல்பட்டதாக கருதப்படும் குழந்தைகளுக்கான இல்லங்கள் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகுகள் ஆகிய 4 பிரிவுகளில் தேர்வு செய்யப்பட்டு, அவற்றிற்கு பரிசுத் தொகையாக தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும் என மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் அவர்கள் 2025-2026 ஆம் நிதியாண்டிற்கான சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் மானிய கோரிக்கையின் போது அறிவித்தார்கள்.

அதன்படி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் இயக்ககத்தின் கீழ் செயல்படும் நிறுவனங்கள்/அலகுகளை அங்கீகரிப்பதற்காகவும், ஊக்குவிப்பதற்காகவும், 2025-ஆம் ஆண்டிற்கான “குழந்தைகள் நலன் - சேவை விருதுகளை” - அரசு குழந்தைகள் இல்லங்கள் என்ற பிரிவில் தஞ்சாவூர், அன்னை சத்யா அம்மையார் நினைவு அரசினர் குழந்தைகள் இல்லத்திற்கும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் கீழ் செயல்படும் குழந்தைகள் இல்லங்கள் என்ற பிரிவில் தூத்துக்குடி புனித மரியன்னை கருணை இல்லத்திற்கும், சட்டத்திற்கு முரணாக செயல்பட்டதாக கருதப்படும் குழந்தைகளுக்கான இல்லங்கள் என்ற பிரிவில் சென்னை, அரசினர் கூர்நோக்கு இல்லத்திற்கும் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு என்ற பிரிவில் இராமநாதபுரம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கும் விருதுகளை வழங்கி, விருதுடன் பரிசுத் தொகையாக தலா ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலைகளையும் வழங்கி சிறப்பித்தார்கள்.

Also Read: “தந்தையாக மட்டுமல்ல தலைவனாகவும் மகிழ்ச்சி அடைகிறேன்!” : உதயநிதி பிறந்தநாளில் முதலமைச்சர் நெகிழ்ச்சி!