Tamilnadu

“விடுபட்ட மகளிருக்கு நிச்சயமாக வருகிற டிச.15 முதல் உரிமைத் தொகை வழங்கப்படும்!” : துணை முதலமைச்சர் உறுதி!

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று (நவ.24) நடைபெற்ற அரசு விழாவில், 37 ஆயிரம் பேருக்கு வீட்டுமனைப் பட்டாக்கள், மகளிர் குழுக்களைச் சேர்ந்த மகளிருக்கு வங்கிக்கடன் இணைப்பு மற்றும் 50,000 அடையாள அட்டைகள், 2,000 பேருக்கு குடும்ப அட்டை, 4,000 பேருக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ஆணைகள் என மொத்தம் சுமார் 1,500 கோடி மதிப்பில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான பயனாளிகளுக்கு பல்வேறு துறைகள் சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

அதனைத் தொடர்ந்து, விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் பொன்னேரி, பூந்தமல்லி, கும்மிடிப்பூண்டி சட்டமன்றத் தொகுதிகளில் ரூ.3 கோடி மதிப்பில் முதலமைச்சரின் மினி ஸ்டேடியம் அமைப்பது உட்பட சுமார் ரூ.138 கோடி மதிப்பில் பல்வேறு புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

அப்போது விழா மேடையில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “தமிழ்நாட்டில் ஊர்தோறும் நியாய விலைக் கடைகளை திறந்து வைத்து, இன்றைக்கு உணவுப் பற்றாக்குறையற்ற மாநிலம் என்ற அடையாளத்தை தமிழ்நாடு பெற்றிட வழிவகுத்தவர் முத்தமிழறிஞர் கலைஞர். அதன் அடையாளமாக இன்றைக்கு 2 ஆயிரம் பேருக்கு ரேசன் அட்டைகளை வழங்கியிருக்கிறோம்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்கள் மூலம் அரசே மக்களைத் தேடி வந்து பல சேவைகளை வழங்கியுள்ளது. அதன் தொடர்ச்சியாக, இன்றைக்கு 37,000 பேருக்கு வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கியுள்ளோம்.

பட்டா என்பது மக்களுக்கு அரசு தருகின்ற சலுகை கிடையாது. அது மக்களின் உரிமை. அதன் அடிப்படையில், கடந்த நான்கரை ஆண்டுகளில் தமிழ்நாடு முழுக்க 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப் பட்டாக்களை அரசு வழங்கியிருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டத்தில் விளையாட்டுத்துறை சார்பாக பொன்னேரி, பூந்தமல்லி மற்றும் கும்மிடிப்பூண்டி பகுதிகளில் தலா ரூ.3 கோடி செலவில் மினி ஸ்டேடியங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அப்பணிகள் விரைவில் முடிக்கப்பட இருக்கிறது.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் மூலம் 1.15 கோடி மகளிர் ஒவ்வொரு மாதமும் ரூ.1,000 உரிமைத் தொகை பெற்று வருகின்றனர். இதில் விடுபட்ட மகளிருக்கு நிச்சயமாக வருகிற டிச.15 முதல் உரிமைத் தொகை வழங்கப்படும்” என உறுதியளித்தார்.

Also Read: நேருக்கு நேர் மோதிக் கொண்ட பேருந்துகள் : 6 பேர் உயிரிழப்பு - தென்காசியில் நடந்த சோகம்!