Tamilnadu

”முதலமைச்சருக்கு தாய்மார்கள் எப்போதுமே பக்கபலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன்...” -துணை முதலமைச்சர்!

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நேற்று (22.11.2025) மதுரை, தமுக்கம் மைதானத்தில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தியாவின் பல்வேறு மாநில சுய உதவிக் குழுக்களின் தயாரிப்பு பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்ட மதி கண்காட்சி (சாராஸ் மேளா) மற்றும்  உணவுத் திருவிழாவினை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.  

இதைத்தொடர்ந்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆற்றிய உரை வருமாறு :-

இன்றைக்கு மதி கண்காட்சி மற்றும் உணவுத் திருவிழாவை தொடங்கி வைத்து 500 சகோதரிகளுக்கு மகளிர் அடையாள அட்டை வழங்கும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகின்றேன்.

மதுரை என்றாலே எப்போதுமே ஒரு கிராமிய வாசனையோடு இருக்கக்கூடிய ஒரு நகரம். அதே மாதிரி பாசத்தை பொழிவதிலும் மதுரையை அடித்துக் கொள்வதற்கு வேறு எந்த ஊராலும் முடியாது.

இந்த உணவுத் திருவிழாவிற்கு வந்த கொஞ்ச நேரத்திலேயே உங்களுடைய பாசத்தில் நனைந்து வயிறு நிரம்பி இந்த மேடைக்கு நான் வந்திருக்கின்றேன். இந்த உணவுத் திருவிழா சென்ற வருடம் சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டு மிகப் பெரிய வரவேற்பை சென்னை மக்களிடையே பெற்றது. இந்த வருடம் மதுரையில் நடத்த வேண்டும் என்று முடிவெடுத்து, இந்த நிகழ்ச்சியை இவ்வளவு சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கின்றோம்.

தமிழ்நாட்டின் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த சகோதரிகள் மட்டுமல்ல, பல மாநிலங்களைச் சேர்ந்த சுய உதவிக்குழு சகோதரிகளும் இன்றைக்கு இந்த கண்காட்சியிலும், உணவுத் திருவிழாவிலும் பங்கேற்று இருக்கின்றீர்கள்.

நிறைய பேர் All India Tour போகவேண்டும் என்று விரும்புவார்கள். இந்த தமுக்கம் மைதானத்திற்கு அடுத்த 12 நாட்கள் வந்தால் போதும், கிட்டத்தட்ட ஒரு  All India Tour  சென்ற அந்த உணர்வு  வந்தவர்களுக்கு நிச்சயம் கிடைக்கும்.

அதே மாதிரி, தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் பிரபலமான பொருட்களையும் இங்கே சுயஉதவிக் குழுக்களைச் சேர்ந்த சகோதரிகள் விற்பனைக்கு வைத்துள்ளார்கள். தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை, கோயம்புத்தூர் ஐம்பொன் நகைகள், கள்ளக் குறிச்சி மரச்சிற்பங்கள், ஈரோடு நூல் வளையல்கள் என்று மிகப் பெரிய பட்டியலைக் கொடுத்துள்ளார்கள்.

அதே மாதிரி உணவுத் திருவிழாவை எடுத்துக் கொண்டால், சென்ற ஆண்டு மிகப் பெரிய வரவேற்பை சென்னை மக்கள் கொடுத்தார்கள். இந்த ஆண்டு மதுரையில் இருக்கக்கூடிய மக்கள் இங்கே மதுரை தமுக்கம் மைதானத்திற்கு வந்து, இந்த பல்வேறு உணவுகளை ருசித்து இதற்கு மிகப் பெரிய வரவேற்பு கொடுப்பார்கள் என்று நிச்சயம் நாங்கள்  நம்புகின்றோம்.

சென்ற  ஆண்டு சென்னையில் 5 நாட்கள் நடந்த உணவுத் திருவிழாவில் விற்பனை 1 கோடியே 55 இலட்சத்தை தாண்டியது. இன்றைக்கு மதுரையில் 12 நாட்கள் நடக்கக்கூடிய உணவுத் திருவிழாவில் விற்பனை சென்ற வருடத்தைவிட அதிகமாக இருக்கும் என்று நாங்கள் நம்புகின்றோம்.

இந்த உணவுத் திருவிழாவில் தயார் செய்திருக்கக்கூடிய உணவுப் பொருட்கள் அத்தனையும்,  சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த சகோதரிகளுடைய சொந்த தயாரிப்பு, அவர்களுடைய உழைப்பு. இந்த கண்காட்சியில் நீங்கள் வாங்குகின்ற ஒவ்வொரு பொருளும், மகளிர் சுய உதவிக்குழுவின் சகோதரிகளுக்கு நீங்கள் கொடுக்கக்கூடிய அன்பும், ஊக்கமும் ஆகும்.

இப்படி நம்முடைய அரசு எடுத்த நடவடிக்கையால், இந்த ஆண்டு இதுவரை மட்டும் 620 கோடி ரூபாய்க்கு மகளிர் சுய உதவிக்குழுக்களினுடைய பொருட்கள் விற்பனையாகி மிகப் பெரிய சாதனையை செய்து காட்டியிருக்கின்றோம். 

சென்ற ஆட்சியில் 10 ஆண்டுகளில் அரசினுடைய இதே துறையினுடைய விற்பனை எவ்வளவு என்று பார்த்தீர்கள் என்றால், அதிகபட்சம் ஒரு வருடத்திற்கு 10 கோடி ரூபாயை தாண்டவில்லை. ஆனால், நம்முடைய திராவிட மாடல் அரசு, முதலமைச்சர் அவர்கள் எடுத்துக் கொண்டிருக்கக்கூடிய முயற்சியால், இன்றைக்கு இந்த வருடம் மட்டும் 620 கோடி ரூபாய் அளவிற்கு விற்பனையை செய்து, மகளிர் சுய உதவிக்குழுக்கள் மிகப் பெரிய சாதனையை நிகழ்த்தி காட்டியிருக்கின்றீர்கள்.

மகளிர் பொருளாதாரத்தில் மேம்பட வேண்டும், சுதந்திரமாக இருக்க வேண்டும் என்று நம்முடைய முதலமைச்சர் அவர்கள் ஒவ்வொரு திட்டத்தையும் மகளிருக்காக செய்து கொண்டு வருகிறார்.

ஆட்சி பொறுப்பேற்று நம்முடைய முதலமைச்சர் அவர்கள் போட்ட முதல் கையெழுத்து மகளிருக்கான அந்த விடியல் பயணத் திட்டம்தான். இன்றைக்கு பெண்கள் கட்டணமில்லாமல் பேருந்து பயணம் மேற்கொண்டு இருக்கின்றீர்கள். வீட்டுக்குள்ளே முடக்கி வைக்கப்பட்டிருக்கக்கூடிய பெண்களுக்கு விடுதலை கொடுத்த திட்டம்தான் மகளிர் விடியல் பயணத் திட்டம்.

அதே மாதிரி குழந்தைகள் பசியில்லாமல் பள்ளிக்கூடம் செல்ல வேண்டும் என்று முதலமைச்சர் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டிருக்கிறது. பெண் குழந்தைகளின் கல்வி உயர்விற்காக புதுமைப் பெண் திட்டம். இப்படி பல்வேறு உரிமைத் திட்டங்கள். 

முதலமைச்சர் அவர்கள் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் கொண்டு வந்திருக்கிறார்கள். இந்த திட்டத்தில் ஏற்கனவே கடந்த இரண்டரை வருடங்களாக 1 கோடியே 15 இலட்சம் மகளிருக்கு மாதம் 1,000 ரூபாய் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டிருக்கிறது.

குறிப்பாக சுய உதவிக்குழுவிற்கு என்று எந்த ஒரு திட்டத்தை கூறினாலும் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் அதற்கு உடனே ஒத்துக் கொள்வார்கள். 

இன்றைக்கு இந்த நிகழ்ச்சியில் 500 குழுக்களுக்கு அடையாள அட்டை கொடுக்க இருக்கின்றோம். திருவாரூரில் மகளிர் சுய உதவிக் குழுக்களை சந்திக்கும்போது மகளிர் சுய உதவிக் குழுக்களுக்களின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் அடையாள அட்டை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். அந்த கோரிக்கை ஏற்று முதலமைச்சர் அவர்கள் உடனே ஒப்புதல் அளித்து, இன்றைக்கு 500 குழுக்களுக்கு அடையாள அட்டையை வழங்க இருக்கின்றோம்.

இந்த அடையாள அட்டை  மூலமாக நீங்கள் தயாரிக்கக்கூடிய உங்களுடைய தயாரிப்பு பொருட்களை அரசுப் பேருந்துகளில் 25 கிலோ வரை 100 கி.மீ தூரத்திற்கு கட்டணமில்லாமல் நீங்கள் எடுத்து செல்ல முடியும். அடையாள அட்டை உங்களிடம் இருந்தால் போதும், இந்த விழாவிற்கு கூட குழு சகோதரிகள் உங்களுடைய தயாரிப்பு பொருட்களை பேருந்துகளில் நீங்கள் எடுத்து வரலாம். சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த சகோதரிகளுக்கு ஒரு அன்பு வேண்டுகோள், இந்த அடையாள அட்டைகளை நீங்கள் பராமரிக்க வேண்டும். அதே போல அதிகமாக பயன்படுத்த வேண்டும்.

மகளிர் அடுத்தவர்களிடம் வேலை கேட்டு நிற்கின்ற நிலைமை மாறி, இன்றைக்கு அடுத்தவர்களுக்கு வேலை தருகின்ற நிலைமைக்கு நீங்கள் அத்தனைபேரும் வந்திருக்கின்றீர்கள். அதற்கு உங்களுக்கு தேவையான எல்லா உதவிகளையும் நம்முடைய தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் எந்த நேரத்திலும் செய்வதற்கு தயாராக இருக்கின்றது.

மகளிர் உங்களுடைய முன்னேற்றம்தான் ஒட்டுமொத்த தமிழ்நாட்டினுடைய, இந்தியாவினுடைய முன்னேற்றம். அப்படி பெண்களுக்காக நடைபெறுகின்ற இந்த திராவிட மாடல் அரசிற்கு, நம்முடைய முதலமைச்சர் அவர்களுக்கும் மகளிர் நீங்கள் தொடர்ந்து உங்களுடைய ஆதரவை கொடுக்க வேண்டும். முதலமைச்சர் அவர்கள் எடுக்கின்ற முயற்சிகளுக்கு பெண்கள், தாய்மார்கள் நீங்கள் எப்போதுமே பக்கபலமாக இருப்பீர்கள் என்ற அந்த நம்பிக்கை எங்களுக்கு உண்டு.

இன்றைக்கு சாராஸ் (SARAS) விற்பனை கண்காட்சியும், உணவுத் திருவிழாவும் திறக்கப்பட்டிருக்கிறது. இது வெற்றி பெறுவதற்கு எங்களுடைய வாழ்த்துகள். அதே போல அடையாள அட்டை பெற்ற சகோதரிகளுக்கும் என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்து, இந்த வாய்ப்பிற்கு நன்றி கூறி விடைபெறுகின்றேன்.

Also Read: சாலை விபத்தில் கூவத்தூர் காவல் நிலைய தலைமைக் காவலர் உயிரிழப்பு... முதலமைச்சர் இரங்கல் & நிதியுதவி!