Tamilnadu

“முதலமைச்சர் கோப்பை போட்டி நடத்த காரணம் இதுதான்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இன்று (19.11.2025) செங்கல்பட்டு மாவட்டம் விஐடி பல்கலைக் கழக கூட்டரங்கில் நடைபெற்ற மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளுக்கு டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்களை வழங்கும் தொடக்க விழாவில் மாணவ, மாணவிகளிடம் விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய தொகுப்புகளை வழங்கி, 19,767  எண்ணிக்கையிலான டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய தொகுப்புகளை வழங்கும்  பணியினை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆற்றிய உரை.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க, கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தை நகர்ப்புறங்களுக்கும் விரிவாக்கம் செய்கின்ற வகையில், இன்றைக்கு செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெறுகின்ற இந்த விழாவில் உங்களையெல்லாம் சந்திப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகின்றேன்.

இங்கே நம்முடைய தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக் கழக மாணவ, மாணவியர்கள் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விளையாட்டு வீரர்கள் மற்றும் பள்ளிக் குழந்தைகள், மாணவச் செல்வங்கள் நிறைய பேர் வந்திருக்கின்றீர்கள்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பு இதே செங்கல்பட்டு மாவட்டத்தில் இருக்கக்கூடிய தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக் கழக வளாகத்தில் 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒரு சர்வதேச அளவிலான நீச்சல் குளம் மற்றும் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் Olympian sharath kamal table tennis academy என இந்த இரண்டையும் திறந்து வைத்துவிட்டுதான் உங்களையெல்லாம் சந்தித்து விளையாட்டு உபகரணங்களை வழங்குவதற்கு நான் வந்திருக்கின்றேன்.

நம்முடைய அரசு தொடர்ந்து விளையாட்டு வீரர்களுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறது என்றால், உங்களுடைய தனி திறமையால் இன்றைக்கு தமிழ்நாட்டிற்கு பதக்கமும், பெருமையும் நீங்கள் குவித்துக் கொண்டிருக்கின்றீர்கள். அதற்காக இந்த அரசு தன்னுடைய முழு முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. முதலில் வந்திருக்கக்கூடிய உங்கள் அத்தனைபேருக்கும் என்னுடைய பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இங்கே நம்முடைய அமைச்சர் அன்பரசன் அவர்கள் கூறியது போல, சென்ற வருடம் 2024 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அனைத்து ஊராட்சிகளுக்கும் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டது. அந்த வகையில் இந்த ஆண்டும் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் கிராமங்களுக்கு மட்டும் கொடுத்திருக்கின்றீர்கள். நகரங்களுக்கும் கொடுக்க வேண்டும் என்று  உத்தரவிட்டார்கள்.

இன்றைக்கு தமிழ்நாட்டில்  இருக்கக்கூடிய மொத்தமுள்ள 25 மாநகராட்சிகள், 145 நகராட்சிகள், 479 பேரூராட்சிகளுக்கு 19,767 விளையாட்டு உபகரணங்களை இன்றையிலிருந்து கொடுக்க இருக்கின்றோம். அதனுடைய முதல் நிகழ்ச்சியாக இன்றைக்கு செங்கல்பட்டு மாவட்டத்தில் இந்த விளையாட்டு உபகரணங்களை முதல் முறையாக வழங்குகின்றோம்.

இந்த விளையாட்டு உபகரணங்களில் Outdoor gamesக்கு தேவையான கிரிக்கெட்டில் ஆரம்பித்து, Indoor gamesக்கு தேவையான கேரம், செஸ் என்று சுமார் 30 வகையான பொருட்கள், 30 விளையாட்டுகளுக்கு தேவையான அனைத்து பொருட்களும் உங்களுக்கு வழங்கப்பட இருக்கின்றது.

இன்றைக்கு நம்முடைய அரசு எடுத்து வருகின்ற தொடர்முயற்சியாலும், நடவடிக்கையாலும் ஏராளமான தமிழ்நாட்டு வீரர்கள் பல்வேறு சாதனைகளை உலகம் முழுவதும் படைத்து வருகிறார்கள்.

முக்கியமாக இரண்டு பேர் இன்றைக்கு இந்த மேடையில் உங்கள் முன் உட்காந்து இருக்கின்றார்கள். பாரா பாட்மிண்டன் விளையாட்டில் பல்வேறு சாதனைகளை படைத்துக் கொண்டிருக்கக்கூடிய தம்பி ஜெகதீஸ் டெல்லி அவர்கள் இங்கே வந்திருக்கின்றார். தம்பி ஜெகதீஸ் டெல்லியை பொறுத்தவரைக்கும் இன்றைக்கு உலக அளவில் பாரா பாட்மிண்டன் இரட்டையர் பிரிவில் உலக தரவரிசைப்பட்டியலில் நம்பர் 1 இடத்தில் இருக்கிறார். சகோதரர் ஜெகதீஸ் டெல்லி அவர்கள் Men’s singlesல் இன்றைக்கு உலக அளவில் ஐந்தாவது இடத்தில் இருக்கின்றார். 

2015 ஆம் ஆண்டு முதல் பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் 60-க்கும் அதிகமான பதக்கங்களை வென்று இருக்கின்றார். விரைவில் அவர் தன்னுடைய நூறாவது பதக்கத்தை வெல்லவும், அதையும் தாண்டி பல வெற்றிகளை குவிக்கவும் நாம் அத்தனைபேரும் நம்முடைய வாழ்த்துகளை கைத்தட்டல்கள் மூலம் தெரிவித்துக் கொள்வோம்.

அவரைப் போலவே இன்னொரு விளையாட்டு வீரரும் இங்கே வந்திருக்கின்றார். செஸ் விளையாட்டு வீரர் தம்பி இளம்பரிதி இங்கே வந்திருக்கின்றார். தம்பி இளம்பரிதி இந்தியாவினுடைய 90th Chess Grandmaster. அதேமாதிரி தமிழ்நாட்டினுடைய 35th Grand Master. 4 வயதில் செஸ் விளையாட ஆரம்பித்த தம்பி இளம்பரிதி, இன்றைக்கு இந்தியாவிலேயே மிக இளம் வயது  கிராண்ட் மாஸ்டர் என்றால்,  தம்பி இளம்பரிதி அவர்கள்தான். 

இன்றைக்கு, உலகம் முழுவதும் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு, பல்வேறு பதக்கங்களை வென்று இன்றைக்கு இந்தியாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துக் கொண்டிருக்கிறார். அவருக்கும்  நாம் அத்தனைபேரும்  நம்முடைய கைத்தட்டல்கள் மூலம் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்வோம்.

இன்றைக்கு விளையாட்டில் சாதித்துக் கொண்டிருக்கின்ற அந்த இரண்டு பேரும் நாம்  அத்தனைபேருக்கும் ஒரு Role Model, ஒரு inspiration அதை மறந்துவிடாதீர்கள். இவர்களுடைய வெற்றிப்பயணம் தொடர நம்முடைய  தமிழ்நாடு அரசு என்றைக்கும் துணை நிற்கும்.

அவர்களை போலவே இன்றைக்கு நிறைய வீரர்கள் உருவாக வேண்டும் என்று தான் இந்த கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் திட்டத்தை நம்முடைய முதலமைச்சர் அவர்கள் அறிவித்து, நாம் அதை செயல்படுத்தி  கொண்டிருக்கின்றோம்.

இந்த திட்டத்திற்கு முதலில் ஏன் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களுடைய பெயரை வைத்தோம் என்றால், கலைஞர் அவர்களுக்கு விளையாட்டில் இருந்த அந்த ஆர்வத்தின் காரணமாகதான் வைத்தோம். அரசியல் தலைவராக கலைஞர் அவர்கள் இருந்தாலும், மிகப்பெரிய  ஒரு Sportsman ஆகவும் இருந்தார். கால்பந்து, கிரிக்கெட் என்று எந்த போட்டிகள் நடந்தாலும் அதில் ஒரு ஆர்வம் இருக்கும், அதை தவறாமல் பார்த்துவிடுவார்.

தன்னுடைய உடன்பிறப்புகளுக்கு கடிதம் எழுதும்போது கூட விளையாட்டு சார்ந்த உதாரணங்களை நிறைய எழுதுவார். குறிப்பாக, உதாரணத்திற்கு “நீண்ட தூரம் ஓடினால் தான் அதிக உயரம் தாண்ட முடியும்” என்று கலைஞர் அவர்கள் அடிக்கடி குறிப்பிட்டு பேசுவார். 

எந்த துறையை எடுத்து கொண்டாலும், எல்லாரிடமும் ஒற்றுமை உணர்வும், சகோதரத்துவமும் வளரவேண்டும் என்றால், அதற்கு Sportsman ship மிக, மிக முக்கியம். ஏன் என்றால், விளையாட்டைப் பொருத்தவரைக்கும் ஒரு டீமில் இருக்கக்கூடிய  அனைவரும் ஒரே ஜெர்சியை போட்டுக்கொண்டால், அவர்கள்  எல்லோரும் ஒன்றாகிவிடுவார்கள். அவர்களுக்குள் இருக்கக்கூடிய மத வேறுபாடு, சாதி வேறுபாடு, பொறாமை எல்லாமே மறைந்து போய்விடும். அது தான் விளையாட்டுக்கே இருக்கக்கூடிய மிகப் பெரிய ஒரு பவர்.

விளையாட்டு திறமையாளர்கள், தமிழ்நாட்டினுடைய எந்த மூலை
முடுக்கில் இருந்தாலும், அவங்களை கண்டுபிடித்து, அவர்களை எல்லாம் சாதனையாளர்கள் ஆக்குகின்ற அந்த முயற்சியில் இந்த அரசும் நம்முடைய முதலமைச்சர் அவர்களும் மிகத் தீவிரமாக ஈடுபட்டிருக்கின்றோம்.

இது மாதிரியான, திறமையாளர்களை கண்டறியதான் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளையும் ஆண்டுதோறும் நடத்துகின்றோம். கடந்த நான்கு வருடங்களாக, இதுவரைக்கும் இல்லாத அளவில் அதிக பேர் கலந்து கொண்ட ஒரு போட்டி என்றால், அது தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிதான்.

அதுவும் செங்கல்பட்டு மாவட்டம், மிக, மிக முக்கியமான சிறப்புக்குரிய மாவட்டம். ஏன் என்றால், ஒவ்வொரு ஆண்டும், பதக்கப் பட்டியலில் முதல் இடத்தில் சென்னையும், இரண்டாம் இடத்தில் நம்முடைய செங்கல்பட்டு மாவட்டமும் ஒவ்வொரு ஆண்டும் அந்த சாதனையை படைத்துக் கொண்டு வருகிறீர்கள். இந்த ஆண்டும் இரண்டாமிடம், அடுத்த ஆண்டு நிச்சயமாக முதலிடத்திற்கு முயற்சி செய்வீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது.

தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை போட்டியின் மூலமாக கண்டறியப்படுகின்ற அந்த இளம் விளையாட்டு வீரர்களுக்கு முறையான பயிற்சியையும் நம்முடைய அரசு அளிக்கின்றது. தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை மூலமாக நிதி உதவி, விளையாட்டு உபகரணங்களைக் கொடுத்து  எந்த விதமாக Support தேவையோ, அத்தனை உதவிகளையும் முதலமைச்சர் அவர்களும் விளையாட்டு வீரர்களுக்கு தொடர்ந்து கொடுத்து ஊக்கப்படுத்தி வருகின்றார்.

விளையாட்டு போட்டிகளில், அது சர்வதே, தேசிய அளவில் இருந்தாலும் சரி வெற்றி பெற்று வந்த உடனே முதலமைச்சர் அவர்களை சந்தித்து, அவர்களுக்கு உயரிய ஊக்கத்தொகையை  எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு அதிகமாக உடனடியாக நம்முடைய முதலமைச்சர் அவர்களே கொடுத்திருக்கிறார்.

தொடர்ந்து சாதனை படைக்கின்ற வீரர்களுக்கு இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு முதன் முறையாக அதிக அளவில் 3 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ், விளையாட்டு வீரர்களுக்கு அரசுப்பணிகளை நம்முடைய முதலமைச்சர் அவர்கள் கொடுத்து வருகின்றார்.

இதுவரைக்கும் பல மாநிலங்களில் இல்லாத, முக்கியமாக தமிழ்நாட்டினுடைய வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு சென்ற வருடம்  நம்முடைய இலக்கு 100. சொன்னது போல  100 விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை வாய்ப்புகளை நம்முடைய முதலமைச்சர் அவர்கள் கொடுத்திருக்கின்றார்.

வருகின்ற ஆண்டும், எங்களுடைய துறைக்கு ஒரு இலக்கு கொடுத்திருக்கிறார். இந்த ஆண்டும் 100 விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை கொடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் அறிவுறுத்தியிருக்கிறார். அந்த பணியிலும் நம்முடைய துறை ஈடுபட்டிருக்கிறது.

அதுமட்டுமல்ல, பல்வேறு சர்வதேச மற்றும் தேசிய அளவிலான போட்டிகளையும் நம்முடைய அரசு தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறது. இப்போது இரண்டு நாளைக்கு முன்பு தொலைக்காட்சியில், செய்தியில் பார்த்திருப்பீர்கள்.

முதன்முறையாக சென்னையில் esports championship அந்த போட்டியை ஒரு வார காலம் நடத்தினோம். இன்னும் ஒரு வாரத்தில் தமிழ்நாட்டில் முதன் முறையாக Mens Junior Hockey World cup போட்டிகளை சென்னையிலும், மதுரையிலும் நடத்த இருக்கின்றோம். உலக அளவில் இருந்து 24 குழு இந்த போட்டிகளில் பங்கேற்க இருக்கின்றார்கள். நவம்பர் 28 ஆம் தேதி முதல் டிசம்பர் 10 ஆம் தேதி வரை இந்த போட்டிகள் நடக்க இருக்கின்றன. சென்னையில் இருக்கக்கூடிய மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டு அரங்கம் புதுப்பொலிவுடன் தயாராகிக் கொண்டிருக்கிறது. அதே போல் மதுரையில் சர்வதேச அளவில் புது ஹாக்கி விளையாட்டு அரங்கத்திற்கான பணிகளும் நடந்து கொண்டிருக்கிறது. 

இதையெல்லம் ஏன் செய்கிறோம் என்றால், இன்றைக்கு விளையாட்டில் தமிழ்நாடு இந்தியாவிலேயே நம்பர் 1 இடத்தை பிடிக்க வேண்டும் என்ற ஒரே இலக்கோடுதான் இந்த பணிகள் எல்லாம் நடந்து கொண்டிருக்கிறது. இந்தியாவினுடைய தலை சிறந்த வீரர்கள் எல்லோரும் தமிழ்நாட்டில் தான் இருக்கின்றார்கள் என்ற ஒரு நிலைமையை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் நம்முடைய முதலமைச்சர் அவர்களுடைய, அரசினுடைய ஒரே எண்ணம். அதற்கான முயற்சிகளில் ஒன்றுதான், இந்த கொடுக்கப்படுகின்ற இந்த கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் திட்டம்.

இந்த விளையாட்டு உபகரணங்களை எல்லோரும் நன்றாக பயன்படுத்தி கொள்ளுங்கள். முக்கியமாக அதை நன்றாக பராமரியுங்கள். வந்திருக்கக்கூடிய உள்ளாட்சி பிரதிநிதிகள் உங்கள் அத்தனைபேருக்கும் ஒரு வேண்டுகோள் இங்கு இருக்கக்கூடிய விளையாட்டு உபகரணங்களை விளையாடக்கூடிய வீரர்களுக்கு பகிர்ந்து கொடுங்கள். வந்திருக்ககூடிய அரசு அதிகாரிகள் அதை சரியாக ஆய்வு செய்து அதை பராமரியுங்கள்.

உங்கள் பகுதியில் இருக்கக்கூடிய இளம் வீரர்களை கண்டுபிடித்து அவர்களை நீங்கள் ஊக்கப்படுத்த வேண்டும். இன்னும் அதிகமான விளையாட்டு வீரர்கள் உங்களுடைய பகுதியில் இருந்து வரவேண்டும் என்று உங்களையெல்லாம் நான் கேட்டுக் கொள்கின்றேன்.

இறுதியாக கலைஞர் விளையாட்டு உபகரணங்களை பெற்றுக் கொண்டுள்ள செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து இளைஞர்கள், விளையாட்டு வீரர்கள், மாணவச் செல்வங்கள் உங்கள் அத்தனைபேருக்கும் மீண்டும் என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்து விடைபெறுகின்றேன். நன்றி, வணக்கம் என்று தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.

Also Read: ரூ.7 கோடியுடன் ATM வாகனத்தை கடத்திச் சென்ற கும்பல் : பெங்களூருவில் நடந்த துணிகரம்!