Tamilnadu
தொடர்ச்சியாக 5-வது முறை... நீலக்கொடி சான்றிதழைப் பெறும் கோவளம் கடற்கரை...
தேசிய பொறுப்பாளர், நீலக்கொடி சான்றிதழ் வழங்கும் நிறுவனத்திடமிருந்து, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியருக்கு வந்த கடிதத்தில், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கோவளம் கடற்கரை தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக மதிப்புமிக்க சர்வதேச நீலக்கொடி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
கடற்கரைகளில் நிலைத்தகு சுற்றுலாவை ஊக்குவிக்கவும், நீலப்பொருளாதாரத்தை மேம்படுத்தவும் கடற்கரைகளுக்கு நீலக்கொடி சான்றிதழ் எனப்படுகின்ற உலகத்தர அங்கீகாரம் டென்மார்க்கைச் சார்ந்த சுற்றுச்சூழல் கல்வி அறக்கட்டளையால் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வங்கீகாரத்தினைப் பெற கடற்கரையின் தூய்மை, அதன் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பராமரிப்பு, நீரின் தரம் மற்றும் நிலைத்தகு சுற்றுலா வசதிகள் உள்ளிட்ட 33 சர்வதேச தர நிலைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும். அவ்வாறு தகுதி பெற்ற கடற்கரைகளுக்கு மட்டுமே இச்சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள கோவளம் கடற்கரை கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் 21 அன்று நீலக்கொடி சான்றிதழைப் பெற்று தமிழ்நாட்டின் முதல் நீலக்கொடிக் கடற்கரையாகத் திகழ்ந்து வருகிறது. ஒவ்வொரு வருடமும் நீலக்கொடிச் சான்றிதழ் பெற்றுள்ள கடற்கரைகள் அச்சான்றிதழைப் புதுப்பிக்க வேண்டியுள்ள நிலையில், இக்கடற்கரைகளுக்கு நீலக்கொடி சான்றிதழ் வழங்க தேசிய குழு மற்றும் சர்வதேச குழு என இரண்டு குழுக்களால், மேற்கூறிய 33 சர்வதேச தர நிலைகளும் பூர்த்தி செய்யப்பட்டு தொடர்ந்து பராமரிக்கப்பட்டு வருகின்றனவா என்பதனை ஆய்வு செய்த பின்னர், அக்குழுக்களின் பரிந்துரையின்படி இச்சான்றிதழ் வழங்கப்படுகிறது. இத்தகைய சிறப்புமிகு இச்சான்றிதழினைக் கோவளம் கடற்கரை தொடர்ச்சியாக ஐந்தாவது முறை பெற்றிருப்பது தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்க்கும் நிகழ்வாக அமைந்துள்ளது.
இங்கு வரும் பார்வையாளர்களுக்கு மூங்கில் நிழற்குடைகள், சாய்வு நாற்காலிகள், உடைமாற்றும் அறைகள், கழிவறைகள், மாற்றுத்திறனாளிகளுக்கான மிதவை ஊர்திகள் போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. பார்வையாளர்களின் பாதுகாப்பிற்காக, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அவசர அழைப்பிற்கு உயிர் காக்கும் காவலர்கள், கண்காணிப்பு கோபுரத்தில் நிறுத்தப்பட்டு உள்ளனர். கடற்கரையில் காலை 6:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
இக்கடற்கரைக்கு, கடந்த 2024 -25 ம் ஆண்டு மட்டும் சுமார் ஐந்தரை லட்சம் பேர் வரை வருகை புரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கோவளம் கடற்கரை நீலக்கொடி சான்றிதழ் பெற்ற பின்னர், மக்களிடையே பெறும் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், அதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில், சென்னை மெரீனா கடற்கரை, கடலூர் வெள்ளிக் கடற்கரை, நாகை மாவட்டத்தின் காமேஷ்வரம் கடற்கரை மற்றும் இராமநாதபுரம் மாவட்டத்தின் அரியமான் கடற்கரை போன்ற கடற்கரைகளுக்கு நீலக்கொடி சான்றிதழ் பெறுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு அவை நிறைவடையும் தருவாயில் உள்ளன.
மேலும், தமிழ்நாடு அரசு, மாநிலத்தின் அனைத்து முக்கியமான கடற்கரைகளுக்கும், குறிப்பாக கடலூர் மாவட்டத்தில் உள்ள சாமியார்பேட்டை கடற்கரை, தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் கடற்கரை, விழுப்புரம் மாவட்டம் கீழ்புதுப்பட்டு கடற்கரை, சென்னை மாவட்டம் பாலவாக்கம் கடற்கரை, திருவான்மியூர் கடற்கரை மற்றும் உத்தண்டி கடற்கரைகளுக்கு நீலக்கொடி சான்றிதழ் பெறுவதற்கான நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
Also Read
-
100 புதிய தாழ்தள மின்சாரப் பேருந்துகள் இயக்கம்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!
-
உலக தரத்தில் ரூ.20 கோடியில் ஆர்.கே.நகர் விளையாட்டு வளாகம் திறப்பு! : முழு விவரம் உள்ளே!
-
பள்ளி கட்டடம் முதல் பேருந்து நிலையம் வரை : சென்னையில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்த துணை முதலமைச்சர்!
-
“இது எண்ணிக்கைக்கான கூட்டணி அல்ல! எண்ணத்தால் உருவாக்கப்பட்டுள்ள கூட்டணி!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“அனைவருக்கும் ஒரு இன்ஸ்பிரேஷன்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பாராட்டிய ரோஜா!