Tamilnadu

பேருந்து கட்டணம் இல்லை : மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு புதிய அறிவிப்பு வெளியிட்ட துணை முதலமைச்சர்!

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வேலூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் ஆற்றிய உரை:-

வேலூர் மாவட்டத்தில் நடைபெறுகின்ற இந்த அரசு விழாவில் கிட்டத்தட்ட 50 ஆயிரம் பயனாளிகளுக்கு 415 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி உங்களையெல்லாம் சந்திப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன், பெருமையடைகின்றேன்.

தமிழ்நாட்டின் பெருமைகளில் ஒன்று என்று சொல்வதில் இந்த வேலூர் மிக, மிக முக்கியமான ஒன்று. இங்கு இருக்கக்கூடிய வேலூர் கோட்டை, சி.எம்.சி. ஹாஸ்பிட்டல் என இங்கு இருக்கக்கூடிய பல விஷயங்கள் இந்திய அளவில் மிகப்பெரிய புகழ்பெற்றுள்ள இடங்கள்.

இன்றைக்கு தமிழ்நாட்டில் பல ஊர்களில் கோட்டைகள் இருக்கலாம். ஆனால், இந்த வேலூர் கோட்டைக்கு மட்டும் ஒரு தனி சிறப்பு உண்டு. அது என்னவென்றால், வேலூர் கோட்டையில் மட்டும் தான் கோயிலும் இருக்கிறது, சர்ச்சும் இருக்கிறது, பள்ளிவாசலும் இருக்கிறது. இது எதைக்காட்டுகிறது என்றால், வேலூர் கோட்டை என்பது மதச்சார்பின்மை கோட்டையாக இங்கே சிறப்போடு விளங்கி கொண்டிருக்கிறது. வேலூர் கோட்டை மட்டுமல்ல, வேலூர் பகுதி மக்களும் கூட மதச்சார்பின்மையை பாதுகாக்கிற சிறப்பான மக்களாக நீங்கள் திகழ்ந்து கொண்டிருக்கின்றீர்கள்.

வேலூர் மக்களுக்கு இருக்கக்கூடிய இந்த ஒற்றுமை உணர்வு இன்றைக்கு இந்தியா முழுவதும் இருக்க வேண்டும் என்பது தான் நாம் அனைவருடைய விருப்பமும், ஆசையும். எனவே, நாட்டுக்கே எடுத்துக்காட்டாக இருக்கக் கூடிய வேலூர் மக்கள் உங்களையெல்லாம் சந்திப்பது எனக்கு கூடுதல் மகிழ்ச்சி, கூடுதல் பெருமை. அப்படிப்பட்ட மிக, மிக முக்கியமான விழாவில் இன்றைக்கு உங்களையெல்லாம் சந்திக்கின்றேன்.

முக்கியமான விழா ஏன் ஏன்றால், குடியிருக்கக்கூடிய இடத்திற்கு இன்றைக்கு வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட இருக்கின்றது. கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் மூலம் பலபேருக்கு வீடுகள் வழங்க இருக்கின்றது.

அதேபோல மகளிர் குழுக்களைச் சேர்ந்த சகோதரிகளுக்கு வங்கிக்கடன் இணைப்புகள், அடையாள அட்டைகள், இன்னும் பல நலத்திட்டங்கன் என்று இந்த நிகழ்ச்சி மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கின்றது.

நம்முடைய முதலமைச்சர் அவர்கள், 2021 ஆம் ஆண்டு ஆட்சிப்பொறுப்பேற்ற பிறகு அந்த நாள் முதல் இன்றைக்கு வரை, எந்த திட்டத்தை செயல்படுத்தினாலும், அதில் மகளிருக்கு முக்கியத்துவம் அளிக்கக்கூடிய மகளிர் அதிக அளவு பயன்பெறக்கூடிய திட்டங்களை நம்முடைய முதலமைச்சர் அவர்கள் செயல்படுத்தியிருக்கின்றார்.

ஆட்சிக்கு வந்த உடன் முதல் நாள் அவர் போட்ட முதல் கையெழுத்தே, மகளிருக்கான கையெழுத்துதான், அதுதான் மகளிர் விடியல் பயணம் திட்டம். இன்றைக்கு அந்த மகளிர் விடியல் பயணம் திட்டத்தின் மூலமாக இந்த நான்கரை வருடங்களில் மட்டும் 820 கோடி பயணங்களை மகளிர் மேற்கொண்டு இருக்கின்றீர்கள்.

அதிலும் குறிப்பிட்டு பெருமையாக சொல்லவேண்டும் என்றால், இன்றைக்கு இந்த வேலூர் மாவட்டத்தில் மட்டும் இந்த நான்கரை வருடங்களில் 15 கோடி பயணங்களை மகளிர் விடியல் பயணம் திட்டத்தின் மூலமாக நீங்கள் மேற்கொண்டு இருக்கின்றீர்கள்.

அதே போல, முதலமைச்சருடைய காலை உணவுத்திட்டம். ஒவ்வொரு நாளும் தமிழ்நாடு முழுவதும் 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை படிக்கக்கூடிய அரசுப்பள்ளி மாணவர்கள் ஒவ்வொரு நாளும் 22 லட்சம் குழந்தைகள் இந்த திட்டத்தின் மூலம் பயன்பெறுகிறார்கள்.

முன்பெல்லாம் வேலைக்கு சீக்கிரம் எழுந்து செல்லும் பெற்றோர்கள், குழந்தைகளுக்கு காலை உணவு கொடுக்கமாட்டார்கள். சமைப்பதற்கு நேரம் இருக்காது, பள்ளிக்கூடத்திற்கு அனுப்பிவிடுவார்கள். மதிய உணவு பள்ளிக்கூடத்தில் கொடுப்பார்கள் பார்த்துக் கொள்ளலாம் என்று, ஆனால், குழந்தைகளை பள்ளிக்கூடத்திற்கு அனுப்பிவிட்டு அதே நினைப்பில் இருப்பார்கள். குழந்தை காலையில் பள்ளிக்கூடத்திற்கு வெறும் வயிற்றில் சென்றானே சாப்பிட்டானா என்று, இன்றைக்கு பெற்றோர்கள் மகிழ்ச்சியோடு வாழ்த்தி குழந்தைகளை பள்ளிக்கூடத்திற்கு அனுப்புகிறார்கள். என் குழந்தையை பார்த்துக் கொள்வதற்கு நம்முடைய திராவிட மாடல் அரசு இருக்கிறது. நம்முடைய முதலமைச்சர் அவர்கள் இருக்கின்றார். காலையில் சென்றவுடன் அவனுக்கு தரமான காலை உணவு, அதன்பிறகு தரமான கல்வி என்று வாழ்த்தி பெற்றோர்கள் இன்றைக்கு பள்ளிக்கூடத்திற்கு அனுப்புகிறார்கள்.

இந்த வேலூர் மாவட்டத்தில் மட்டும் ஒவ்வொரு நாளும் 41 ஆயிரம் பிள்ளைகள் தினமும் பள்ளிகளில் இந்த முதலமைச்சர் காலை உணவு திட்டத்தின் மூலம் பயன்பெற்று வருகிறார்கள்.

பஞ்சாப் மாநிலத்தினுடைய முதலமைச்சர் பகவந்த் சிங் அவர்கள் சமீபத்தில் சென்னைக்கு வந்து முதலமைச்சர் காலை உணவு திட்டத்தினை விரிவாக்கம் செய்த போது பாராட்டிச் பேசினார். அவர் பாராட்டி பேசும்போது குறிப்பிட்டார். முதலமைச்சர் அவர்களே இது மிகச் சிறப்பான ஒரு திட்டம். இந்த திட்டத்தை பஞ்சாப் மாநிலத்தில் நான் அடுத்த ஆண்டிலிருந்து நான் அமல்படுத்த போகிறேன் என்று, பஞ்சாப் மாநில முதலமைச்சர் தமிழ்நாட்டுக்கு வந்து நம்முடைய திட்டத்தையும், முதலமைச்சர் அவர்களையும், அரசையும் பாராட்டிச் சென்றுள்ளார்.

பள்ளிகளுக்கு செல்லுகின்ற குழந்தைகளுக்கு மட்டுமல்ல, பள்ளிக்கூடம் முடித்து அந்த குழந்தைகள் உயர்கல்வி படிக்க வேண்டும், காலேஜ் படிக்க வேண்டும் என்று, அரசு பள்ளிகளில் படிக்கக்கூடிய குழந்தைகள் உயர்கல்வியில் காலேஜ் சேர்ந்தால், தமிழ் புதல்வன் திட்டம், புதுமைப் பெண் திட்டத்தின் மூலம் மாணவ, மாணவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் கல்வி ஊக்கக்தொகையை நம்முடைய முதலமைச்சர் அவர்கள் வழங்கி கொண்டிருக்கிறார்கள்.

Gross Enrolment Ratio என்று சொல்வோம். பள்ளி படிப்பு முடித்து உயர்கல்வி சேருகின்ற மாணவர்களுடைய சதவீதம். இன்றைக்கு இந்தியாவிலேயே பல மாநிலங்களில் பார்த்தீர்கள் என்றால், 25 சதவீதம், 30 சதவீதத்திற்கு மேல் எந்த மாநிலத்திலும் கிடையாது. ஆனால் இன்றைக்கு தமிழ்நாடு தான் கிட்டத்தட்ட 50 சதவீத Gross Enrolment Ratioவுடன் இன்றைக்கு இந்தியாவிலேயே நம்முடைய தமிழ்நாடு முதல் இடத்தில் இருக்கிறது என்றால், அதற்கு காரணம் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் கல்விக்கு கொடுத்திருக்கக்கூடிய முக்கியத்துவம்.

இந்த தமிழ் புதல்வன், புதுமைப் பெண் திட்டத்தின் மூலமாக மாதம் 1,000 ரூபாய் இதுவரை 8 லட்சம் மாணவ, மாணவிகள் பயன்பெற்று வருகிறார்கள். அதுவும் குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால், இந்த வேலூர் மாவட்டத்தில் மட்டும் 16 ஆயிரம் மாணவ, மாணவிகள் இந்த திட்டத்தின் மூலம் பயன்பெற்று வருகிறார்கள்.

அதுமட்டுமல்ல, இன்றைக்கு இந்தியாவையே திரும்பி பார்க்கக்கூடிய ஒரு திட்டம். இன்றைக்கு நம்முடைய மாநிலத்தை பார்த்து, பல மாநிலங்களில், பல அரசுகள் செயல்படுத்த முயற்சிக்கின்ற ஒரு திட்டம். சென்ற தேர்தல் அறிக்கையில் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் வாக்குறுதியாக கொடுத்த திட்டம். மகளிருக்கு 1,000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று சொன்ன திட்டம்.

இதை நம்முடைய முதலமைச்சர் அவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு செப்டம்பர் 15 ஆம் தேதி அமல்படுத்தினார்கள். ஒவ்வொரு மாதமும் 1 கோடியே 20 லட்சம் மகளிருக்கு மாதம் 1,000 கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் மூலம் பயன்பெற்று வருகிறார்கள். நம்முடைய வேலூர் மாவட்டத்தில் மட்டும் ஒவ்வொரு மாதமும் கிட்டத்தட்ட 2 இலட்சம் மகளிர் உரிமைத்தொகை பெற்று பயன்பெற்று வருகிறார்கள்.

இதில் இன்னொரு கூடுதல் மகிழ்ச்சியான செய்தி, வருகின்ற டிசம்பர் மாதம் முதல் இன்னும் கூடுதலான மகளிருக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை கொடுக்கப்படும் என்று முதலமைச்சர் அவர்கள் அறிவுத்தியிருக்கிறார்கள்.

இந்த திட்டங்கள் எல்லாம் இன்றைக்கு இந்தியாவுக்கே ஒரு எடுத்துக்காட்டு திட்டமாக, ஒரு முன்மாதிரியான திட்டங்களாக இன்றைக்கு நாம் செயல்படுத்தி இருக்கின்றோம்.

தமிழ்நாட்டுக்கு வருகின்ற பல முதலமைச்சர்கள் பாராட்டி சென்றுள்ளார்கள். ஏற்கனவே கூறினேன் முதலமைச்சர் காலை உணவு திட்டத்தை பஞ்சாப் மாநிலத்தின் முதலமைச்சர் அவர்கள் பாராட்டினார். சமீபத்தில் தெலுங்கானா மாநிலத்தின் முதலமைச்சர் திரு. ரேவந்த் ரெட்டி அவர்கள் வந்திருந்தார். புதுமைப் பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம் மிகச் சிறந்த திட்டம் என்று பாராட்டி, அடுத்த கல்வி ஆண்டிலிருந்து தெலுங்கானா மாநிலத்திலும் புதுமைப் பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டத்தை அமல்படுத்தப் போகிறேன் என்று அவரும் பாராட்டி சென்றுள்ளார்.

இந்த நான்கரை வருடங்களில் நம்முடைய முதலமைச்சர் அவர்கள், இந்த வேலூர் மாவட்டத்திற்கு பல்வேறு திட்டங்களை, சாதனைகளை செய்து கொடுத்திருக்கின்றார். அதில் சிலவற்றை மட்டும், இங்கே நான் குறிப்பிட விரும்புகின்றேன்.

வேலூருக்கு மருத்துவ வசதிகளை பயன்படுத்த வருகின்ற வெளியூர் மக்களுக்கு 46 கோடி ரூபாய் மதிப்பீட்டில், டாக்டர் கலைஞர் தங்கும் விடுதி கட்டப்பட்டு வருகின்றது. வேலூரில் கிட்டத்தட்ட 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அரசு பென்ட்லேண்ட் பல்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை, குடியாத்தத்தில் 40 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், அணைக்கட்டில் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், காட்பாடியில் 14 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் அரசு மருத்துவமனைகள்,

நாட்டின் சுதந்திரத்துக்கு பிறகு முதல்முறையாக பீஞ்சமந்தை மலை கிராமத்துக்கு 5 கோடி மதிப்பீட்டில் சாலை வசதி, காட்பாடியில் 13 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அரசு கலை, அறிவியல் கல்லூரி, குடியாத்தம் நகரில் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பாக 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மினி ஸ்டேடியம் அமைக்கப்பட இருக்கின்றது. சத்துவாச்சாரியில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய பளுதூக்கும் சென்டர் விரைவில் மேம்படுத்தப்படும் என்ற அறிவிப்பை முதலமைச்சர் அவர்கள் கூறியுள்ளார்கள்.

அதே போல, சென்றாண்டு நடந்த அரசு விழாவில், நம்முடைய நீர்வளத்துறை அமைச்சர் அவர்களுடைய கோரிக்கை, மாவட்ட விளையாட்டு வளாகத்தை சுற்றி இருக்கக்கூடிய தடுப்பு சுவர். காம்பவுன்ட் சுவர் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார். முதலமைச்சர் அவர்களுடைய கவனத்திற்கு அதை எடுத்துச் சென்றவுடன் உடனடியாக அதற்கென்று 3 கோடி ரூபாய் ஒதுக்கி அதற்கான பணிகளும் விரைவில் தொடங்க இருக்கின்றது.

விவசாயிகள் நிறைந்த இந்த மாவட்டத்தில் 181 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 9 தடுப்பணைகள், அப்துல்லாபுரத்தில் 32 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மினி டைடல் பூங்கா, மினி ஜவுளி பூங்கா, இப்படி இந்த மாவட்டத்திற்கு நம்முடைய முதலமைச்சர் அவர்கள் பல்வேறு திட்டங்களை செய்துகொண்டே இருக்கின்றார். அறிவித்து கொண்டே இருக்கின்றார். அதுமட்டுமல்ல, இந்த திட்டங்களுடைய தொடர்ச்சியாக தான் இன்றைக்கு இந்த மேடையில் பல நலத்திட்டங்களை கொடுக்க இருக்கின்றோம்.

ஒவ்வொரு மனிதருக்கும் அடிப்படை தேவை என்னவென்றால், உண்ண உணவு, உடுத்த உடை, இருக்க இடம். அதில் இருக்க இடம் மிக, மிக முக்கியமானது. அந்த தேவையை பூர்த்தி செய்வதற்க்கு நம்முடைய அரசு தொடர்ந்து முன்னுரிமைக் கொடுத்து அதை செயல்படுத்தி வருகின்றது.

அதனால் தான், நம்முடைய அரசு அமைந்த இந்த நான்கரை வருடத்தில் நான் பெருமையோடு சொல்வேன் இதுவரைக்கும் 19 லட்சம் பேருக்கு பட்டாக்களை நம்முடைய அரசு கொடுத்து இருக்கின்றது. ஏன் என்றால், பட்டா என்பது வெறும் பேப்பர் கிடையாது. அது உங்களுடைய உரிமை. நீங்கள் குடியிருக்கக்கூடிய இடத்திற்க்கான சட்டப்பூர்வ உரிமை. அந்த உரிமையை நம்முடைய முதலமைச்சர் அவர்கள், நம்முடைய அரசு அதை உண்மையாக்கி இருக்கின்றது.

இனி நீங்கள் உங்கள் வீட்டில் கவலையில்லாமல் நிம்மதியாக மகிழ்ச்சியோடு தூங்கலாம். பட்டாவை வைத்து நீங்கள் லோன் எடுக்கலாம், வீடு கட்டலாம், அரசினுடைய பல்வேறு சலுகைககளையும் நீங்கள் பெறலாம். ஆகவே, பட்டாக்களை பெறுகின்ற உங்கள் அத்தனை பேருக்கும் என்னுடைய வாழ்த்துகளை நான் தெரிவித்துக் கொள்கின்றேன். அதுமட்டுமல்ல, இன்றைக்கு சுமார் 3 ஆயிரத்து 500 பேருக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் வீடுகளையும் கொடுத்து இருக்கின்றோம்.

தமிழ்நாட்டு மக்களுக்கு தன்னுடைய செயலாலும், சிந்தனையாலும், நிழலாக இருந்து தொண்டாற்றியவர் தான் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள். அப்படிப்பட்ட கலைஞர் அவர்கள் பெயரில் வீடுகளை பெற்றிருக்கக்கூடிய உங்களைப் பார்க்கும் போது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கின்றது, நெகிழ்ச்சியாக இருக்கின்றது.

சொந்த வீடு என்பது நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களின் நீண்ட நாள் கனவு. அந்தக்கனவை நம்முடைய திராவிட மாடல் அரசு அதை நம்முடைய முதலமைச்சர் அவர்கள் உண்மையாக்கி இருக்கின்றார்.

இடம், வீடு மட்டுமல்ல, நம்முடைய சுய உதவிக்குழு சகோதரிகளுக்கு, இங்கே வங்கிக்கடன் இணைப்புகளைம் கொடுக்க இருக்கின்றோம். இந்த வங்கிக்கடன் இணைப்புகள், குழு சகோதரிளுடைய வாழ்க்கையையே மாற்றுவதற்க்கான முதலீடாக தான் நம்முடைய அரசு பார்க்கின்றது.

அதுமட்டுமல்ல இந்தியாவிலேயே முதன்முறையாக குழுக்களைச் சேர்ந்த சகோதரிகளுக்கு அடையாள அட்டைகளையும் நாம் கொடுத்திருக்கின்றோம். அடையாள அட்டைகளையெல்லாம் பெறவந்துள்ள சகோதரிகளுக்கு ஒரு வேண்டுகோள். இந்த அடையாள அட்டைகளை நீங்கள் பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த அடையாள அட்டைகள் மூலம் உங்களுக்கு பல சலுகைகள் கிடைக்கும். உதாரணத்திற்கு முதன்முதலில் திருவாரூர் மாவட்டத்தில் இருக்கக்கூடிய குழுக்களைச் சேர்ந்த சகோதரிகளைச் சந்திக்கும்போது அவர்கள் ஒரு கோரிக்கை வைத்தார்கள். நாங்கள் தயாரிக்கின்ற பொருட்களை விற்பதற்காக வெளியூருக்கு பேருந்தில் ஏற்றிச் செல்லும்போது அதிக செலவாகின்றது என்று சொன்னார்கள். முதலமைச்சர் அவர்களிடம் சொன்னவுடனே, அந்த திட்டத்தில் அவர்களுக்கு அடையாள அட்டைகளை கொடுக்க வேண்டும் என்று சொன்னார். மகளிர் சுயஉதவிக் குழுக்களைச் சேர்ந்த சகோதரிகள் அந்த அடையாள அட்டைகளை வைத்திருந்தால், இனிமேல் 25 கிலோ எடையுள்ள பொருட்களுக்கு 100 கி.மீ வரை செல்ல வேண்டும் என்றால், உங்களுக்கு எந்த விதமான கட்டணமும் கிடையாது. இனிமேல் கட்டணம் இல்லாமல், நீங்கள் தயாரிக்கக்கூடிய பொருட்களை வேறு இடத்திற்கு எடுத்துச் சென்று நீங்கள் விற்கலாம்.

நீங்கள் இன்னும் பல உயரங்களை தொட நம்முடைய முதலமைச்சர் அவர்களும், நம்முடைய அரசும் என்றென்றும் துணை நிற்பார்கள்.

நம்முடைய முதலமைச்சர் அவர்கள் உங்களுக்காக இவ்வளவு திட்டங்களையும் ஒவ்வொரு நாளும் பார்த்து, பார்த்து செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த திட்டங்களைப்பற்றி நீங்கள் இன்னும் 4 பேருக்கு எடுத்து சொல்ல வேண்டும்.

இந்த அரசுக்கும், முதலமைச்சர் அவர்களுக்குமான முகமாக, பிராண்ட் அம்பாசிட்டர்களாக இங்கு வந்திருக்கக்கூடிய குழுக்களைச் சேர்ந்த சகோதரிகளும், பயனாளிகளும் நீங்கள் திகழ வேண்டும்.

உங்களுக்காக நாங்கள் தொடர்ந்து உழைக்க தயாராக இருக்கின்றோம். ஆகவே, எப்போதும் போல, நம்முடைய திராவிட மாடல் அரசுக்கு நீங்கள் உங்களுடைய ஆதரவை கொடுக்க வேண்டும்.

இந்த நிகழ்ச்சியை மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்த மாவட்ட நிர்வாகத்துக்கு மீண்டும் என்னுடைய பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் தெரிவித்து, வாய்ப்பிற்கு நன்றி கூறி விடைபெறுகின்றேன்.

இவ்வாறு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Also Read: “சென்னையில் 50 ஆண்டுகளாக இருந்த பட்டா பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது!”: துணை முதலமைச்சர் உதயநிதி!