Tamilnadu
”திறமையாளர்களை அடையாளம் காட்டும் முதலமைச்சர் கோப்பை” : துணை முதலமைச்சர் உதயநிதி பேச்சு!
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் அக்.7 ஆம் தேதி சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற விழாவில் 2025 ஆம் ஆண்டுக்கான முதலமைச்சர் கோப்பையை அறிமுகப் படுத்தினார். தொடர்ந்து சுடரினை ஏற்றி வைத்து 2025 ஆம் ஆண்டு முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்து, விளையாட்டு வீராங்கனைகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில்தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆற்றிய உரை:-
இன்றைக்கு தமிழ்நாட்டினுடைய ஒலிம்பிக்ஸ் என்று போற்றப்படுகின்ற முதலமைச்சர் கோப்பை 2025-னுடைய மாநில அளவிலான போட்டிகளை உங்களோடு சேர்ந்து தொடங்கி வைப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன், பெருமையடைகின்றேன்.
நம்முடைய அரசு அமைந்த பிறகு, ஒவ்வொரு வருடமும், இந்த முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளை, கிட்டத்தட்ட ஒரு திருவிழா போல நாம் கொண்டாடி அதை நடத்தி வருகின்றோம். இன்னும் பெருமையாக சொல்ல வேண்டும் என்றால், 2023ல் விளையாட்டுத் துறையினுடைய அமைச்சராக பொறுப்பேற்றதுமே நான் போட்ட முதல் கையெழுத்தே, இந்த முதலமைச்சர் கோப்பை போட்டிகளை விரிவாக நடத்துவதற்கான கையெழுத்துதான்.
2023 ஆம் ஆண்டு கிட்டத்தட்ட 3 லட்சம் பேர் இந்தப் போட்டிகளில் பங்கேற்றார்கள். அது கொஞ்சம், கொஞ்சமாக வளர்ந்து இந்த வருடம் மட்டும் சுமார் 16 லட்சம் பேருக்கு மேல் இந்த முதலமைச்சர் கோப்பை போட்டியில் பங்கேற்க இருக்கின்றார்கள்.
முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளை நம்முடைய அரசு நடத்த ஆரம்பித்த பிறகு, விளையாட்டை ஒரு மிகப்பெரிய மக்கள் இயக்கமாக நம்முடைய தமிழ்நாட்டு மக்கள் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு இந்த முதலமைச்சர் கோப்பை மிக, மிக முக்கியமான ஒரு காரணம்.
விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளை உங்களையெல்லாம் ஒரே இடத்தில் பார்க்கும் போது எப்போதுமே எனக்கு ஒரு தனி உற்சாகம் வந்துவிடும். இன்றைக்கு பெருமையாக சொல்லவேண்டும் என்றால், விளையாட்டுத்துறை சார்ந்து நாம் எடுக்கின்ற முயற்சிகளால் எண்ணற்ற தமிழ்நாட்டு வீரர்கள் உலகம் முழுவதும் சென்று பல்வேறு சாதனைகளை முறியடித்து கொண்டிருக்கிறார்கள்.
இன்றைக்கு இந்த மேடையில் சர்வதேச போட்டிகளில் பல்வேறு சாதனைகளை படைத்த இரண்டு தமிழ்நாட்டு வீரர்கள் நம்மோடு அமர்ந்து இருக்கிறார்கள்.
பாரா பாட்மின்டன் போட்டிகளில் தொடர்ந்து சாதனைகளைப் படைத்து வருகின்ற தம்பி சுதர்சன் அவர்கள் இங்கே வந்து இருக்கின்றார். உலக அளவில் Para Badminton-ல் Doubles பிரிவில் இன்றைக்கு உலக தரவரிசைப் பட்டியலில் முதல் இடத்தில் இருகின்றார் நம்முடைய தம்பி சுதர்சன் அவர்கள். இன்றைக்கு சர்வதேச, தேசிய அளவிலானப் போட்டிகளில் பங்கேற்று பல்வேறு பதக்கங்களை வென்று நம்முடைய இந்திய ஒன்றியத்திற்கும், நம்முடைய தமிழ்நாட்டு மக்களுக்கும் பெருமை தேடித்தந்து கொண்டிருக்கிறார்.
அதே போல ரோலர் ஸ்கேட்டிங் வீராங்கனை தங்கை கார்த்திகா அவர்கள் இங்கே வந்திருக்கிறார்கள். விளையாட்டில் ஈடுபட்டால் பதக்கத்தை மட்டும் அல்ல, படிப்பிலும் சாதிக்கலாம், வெற்றி பெறலாம் என்று தங்கை கார்த்திகா சாதித்து காட்டியுள்ளார்கள். ரோலர் ஸ்பீடு ஸ்கேட்டிங் போட்டியில் சாதித்தது மூலமாக தங்கை கார்த்திகா அவர்கள் ஏற்கனவே கூறியது போல ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் Sports Quota-ல மருத்துவம் படிக்கின்ற வாய்ப்பை பெற்று இருக்கின்றார்கள்.
தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தினுடைய சர்வதேச பதக்கங்களை வெல்லும் MIMS திட்ட வீராங்கனையான தங்கை கார்த்திகா இன்றைக்கு தொடர்ந்து பல்வேறு சாதனைகளை படைத்துக் கொண்டிருக்கிறார்கள். உங்கள் அனைவரின் சார்பாக அவருக்கு ஒரே ஒரு வேண்டுகோள். நீங்கள் படித்து மருத்துவரானாலும் விளையாட்டை நீங்கள் தொடர்ந்து பின்பற்றுவீர்கள். உங்களுக்கு வருகின்ற நோயாளிகளிடமும் விளையாடுவதை பரிந்துரை செய்வீர்கள் என்று உங்கள் சார்பாக நான் ஒரு வேண்டுகோள் வைக்கின்றேன்.
இன்றைக்கு முதலமைச்சர் கோப்பை போட்டிகள் என்பது சிறுவர்கள், மாணவர்களுக்காக மட்டும் இல்ல. பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழியர்களும் கலந்து கொள்ளலாம் என்கின்ற நிலையை நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உருவாக்கி கொடுத்திருக்கிறார்கள். ஆக மொத்தம் விளையாட்டில் ஆர்வம் இருக்கக்கூடிய அனைவருக்கும் ஒரு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கின்ற நோக்கம் தான் இன்றைக்கு இந்த முதலமைச்சர் கோப்பை என்பது.
திறமையாளர்கள் நகரங்களில் மட்டும் இருக்க மாட்டார்கள். கிராமங்களிலும் இருப்பார்கள், அதே போல் மலைப்பாங்கான பகுதிகளிலும் இருப்பார்கள். ஆனால், அந்த திறமையாளர்களை கண்டுபிடிக்க வேண்டியது அரசினுடைய கடமை. அந்த கடமையை தான், இந்த முதலமைச்சர் கோப்பை போட்டிகள் மூலமாக நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் செய்திருக்கிறார்கள்.
இந்தப் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுத் தொகையாக 37 கோடி ரூபாயை நம்முடைய முதலமைச்சர் அவர்கள் ஒதுக்கி தந்திருக்கிறார்கள் என்றால் இந்த முதலமைச்சர் கோப்பை போட்டிகளுக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் நம்முடைய முதலமைச்சர் அவர்கள்.
நம்முடைய அரசு அமைந்த பிறகு, முதலமைச்சர் கோப்பை மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்றால், அந்தச் சான்றிதழ்கள் மூலமாக 3 சதவீதம் இட ஒதுக்கீட்டின் கீழ், அரசு வேலை வழங்க கணக்கில் எடுத்துக் கொள்கிறது.
இந்தியாவிலேயே முதல்முறையாக, முதலமைச்சர் கோப்பை போட்டிகளை நடத்த Games Management System என்ற திட்டத்தையும் நம்முடைய அரசு பயன்படுத்தி கொண்டிருக்கிறது. இந்த மென்பொருள் மூலமாக முதலமைச்சர் கோப்பை போட்டி சம்பந்தப்பட்ட அத்தனை விஷயங்களையும் நேரலை மூலமாக நெறிப்படுத்திக் (Streamline) கொண்டிருக்கின்றோம். வெற்றியாளர்கள் பட்டியல், விளையாட்டு வீரர்களின் விவரங்கள், பதக்கம் வென்றோர் பட்டியல் எல்லாவற்றையும் நீங்கள் நிகழ் நேரத்தில் பார்க்க முடியும். ஒரே வரியில் சொன்னால், முதலமைச்சர் கோப்பை போட்டிகள் சர்வதேச தரத்துடன், வெளிப்படைத் தன்மையோடு நடந்து கொண்டிருக்கிறது.
எனவே, நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு எல்லா வகையிலும் துணை நிற்க உதவி செய்ய நம்முடைய அரசு இருக்கிறது. நம்முடைய முதலமைச்சர் இருக்கின்றார்கள். நம்முடைய துணை இருக்கின்றது.
நமக்கு போதிய வசதியில்லை, பயிற்சி எடுக்க வசதியில்லை, கிராமத்தில் இருந்து வருகின்றோம், நம்மால் வெற்றி பெற முடியுமா என்று தயவு செய்து நீங்கள் யாரும் நினைக்க கூடாது. நீங்கள் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்ட பிறகு மட்டுமல்ல. போட்டியில் கலந்து கொள்வதற்கு முன்பே உங்களுக்கு உதவிட தான் ‘தமிழ்நாடு சாம்பியன்ஸ் ஃபவுண்டேசன்’ திட்டத்தை முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார்கள்.
அதோடு மட்டும் இல்லை, நீங்கள் பதக்கங்களை வென்று வந்தால் உங்களுக்கு உயரிய ஊக்கத்தொகையையும் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் கொடுத்திருக்கிறார்.
உதாரணமாக தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்றவர்களுக்கு ஒரே மாதத்தில் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் சில நாட்களுக்கு முன்பு உயரிய ஊக்கத் தொகையை கொடுக்க உத்தரவிட்டார். பல மாநிலங்களில், தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடந்து ஒரு வருடம் ஆன பிறகும், உயரிய ஊக்கத்தொகையை கொடுக்கவில்லை. ஆனால், தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் முடிந்து ஒரே மாதத்தில் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் விளையாட்டில் வென்ற அத்தனை தமிழ்நாட்டு விளையாட்டு வீரர்களுக்கும் அந்த ஊக்கத் தொகையை வழங்கினார்.
இந்தியாவில், சாதாரண பின்னணியில் இருந்து வந்து விளையாட்டில் சாதித்தவர்கள் இன்றைக்கு பல பேர் இருக்கின்றார்கள். இந்த மேடையில் ஒரே ஒரு உதாரணத்தை மட்டும் உங்களுக்கு நான் சொல்ல விரும்புகின்றேன்.
ஹிமா தாஸ் (Hima Das) என்ற ஓட்டப் பந்தய வீராங்கனையை உங்கள் அத்தனை பேருக்கும் தெரிந்திருக்கும். அசாம் மாநிலத்தில் உள்ள திங்(Dhing) என்ற கிராமத்தில் பிறந்தவர். ஒரு விவசாயினுடைய மகள். மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றிபெற முடியுமா என்று தயக்கமாக இருந்தார்கள். அதற்காக பயிற்சி எடுத்து மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்றார்கள். மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள முடியுமா என்று யோசித்தார்கள். மாநில அளவிலும் தன்னுடைய முயற்சியினால் சாதனைகளை படைத்தார்கள். சர்வேதச அளவில் சாதிக்க முடியுமா என்று யோசித்தார்கள். அவர்களுடைய பயிற்சியும், திறமையும் இன்றைக்கு சர்வேதச அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள வைத்தது.
2018-ஆம் ஆண்டு Finland-இல் நடந்த World Athletics Under 20 Championship போட்டியில் அவர்கள் கலந்து கொண்டார்கள். அந்தப் போட்டியில் track event-இல் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை, அந்த பெண்மணி 18 வயதில் படைத்தார்கள். அவர்கள் வாழ்ந்த பகுதியில் அடிக்கடி வெள்ளப் பெருக்கு வந்துவிடும். நிறைய மழை பெய்யும். அந்த பகுதியே பெயரளவில் வளர்ச்சியடையாத ஒரு இடமாக இருந்தது. ஆனாலும், ஹிமா தாஸ் தன்னுடைய கிராமத்தில் தொடர்ந்து பயிற்சி செய்து கொண்டே இருந்தார்கள். பயிற்சிக்காக மைதானத்திற்கு சென்றால் மைதானம் முழுவதும் அன்றைக்கு பெய்த மழையில் தண்ணீர் நிற்கும். அப்படிப்பட்ட சூழலிலும் சேற்றிலும் சகதியிலும் ஓடி பயிற்சி பெற்றவர்தான் ஹிமா தாஸ் அவர்கள். அவருடைய விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும் அவரை வெற்றியை நோக்கி அழைத்து கொண்டு சென்றது.
இன்றைக்கு அந்த வீராங்கனையை என்ன சொல்லி அழைக்கின்றார்கள் தெரியுமா? ஹிமா தாஸ் என்று சொல்வதை விட அவர்களுடைய ஊர் பெயரை சொல்லி 'Dhing Express' என்று அழைக்கிறார்கள். இன்றைக்கு ஹிமாதாஸால் நாட்டின் வடகிழக்கு மூலையில் அடையாளமே இல்லாமல் இருந்த Dhing என்கின்ற சின்ன ஊர், இன்றைக்கு Dhing Express என்று சொல்கின்ற அளவுக்கு அவர்களுடைய சொந்த ஊருக்கு புகழை தேடி கொடுத்திருக்கிறார்கள்.
இதன் மூலமாக, ஹிமா தாஸ், அசாம் மாநிலத்தில் Sports Quotaவில் Police-இல் பணியாற்றுகின்ற வாய்ப்பையும் அவர் பெற்றிருக்கிறார். விளையாட்டைப் பொறுத்தவரைக்கும் இது மாதிரி இன்றைக்கு ஏராளமான முன்னுதாரணங்கள் உண்டு. மேடையில் அமர்ந்திருக்கக்கூடிய இந்த இரண்டு பேர் உட்பட இங்கு வந்திருக்கக்கூடிய அனைவருக்குமே உங்களுடைய திறமை இன்றைக்கு மிகப்பெரிய ஒரு Inspiration ஆக நிச்சயம் அமையும்.
எனவே, நீங்கள் உற்சாகமாக தொடர்ந்து பயிற்சி எடுங்கள். ஒவ்வொரு மாதமும் improvement காட்டுங்கள். நீங்கள் Focused ஆக செயல்பட வேண்டும். சமூக வலைதளங்களில் அது இதுன்னு நிறைய Distractions வரும் அது கஷ்டம் தான்.
இங்கே பேசிய இரண்டு விளையாட்டு வீரர்களும் எவ்வளவு தன்னம்பிக்கையுடன் அவர்களுடைய உணர்வுகளை உங்களிடம் பேசினார்கள் என்பதற்கு மிக, மிக முக்கியமான காரணம் படிப்பு மட்டுமல்ல, அவர்களுடைய பயிற்சி, விளையாட்டு தான் அவர்களை இவ்வளவு தன்னம்பிக்கையை ஊட்டியுள்ளது. அதனால் பயிற்சியில் நீங்கள் அதிக கவனம் செலுத்துங்கள். இங்கே இருக்க உங்களில் பலர், நிச்சயம் நாளைக்கு இந்தியாவின் சார்பில் ஒலிம்பிக்கில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பையும் நீங்கள் பெறுவீர்கள்.
அதற்கான தொடக்கமாக இந்த முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் நிச்சயம் இருக்கும் என்று நான் உங்கள் அத்தனை பேரையும் வாழ்த்துகின்றேன்.
அதே மாதிரி, அரசு ஊழியர்கள் பிரிவில் இங்கு நிறைய ஆசிரியர்கள் பெருமக்கள் வந்திருக்கின்றார்கள். எந்த பள்ளி நிகழ்ச்சிகள், எந்த விடுதி நிகழ்ச்சிகள், எந்த பள்ளிக் கல்வித்துறை நிகழ்ச்சிகளுக்கு சென்றாலும், அங்கு இருக்கக்கூடிய மாணவர்கள் என்னிடம் வைக்கின்ற ஒரு கோரிக்கையை ஆசிரியர்களிடம் நான் கோரிக்கையாக வைப்பேன். சார், எங்களுடைய கணிதம் ஆசிரியர், அறிவியல் ஆசிரியர் PET Period-ஐ கடன் வாங்கி பாடம் நடத்துகிறார்கள். எங்களை விளையாட விடுவதில்லை. நீங்கள் கொஞ்சம் சொல்லி PET Period-ஐ மட்டும் நாங்கள் விளையாடுவதற்கு சொல்லுங்கள் என்று மாணவர்கள் சொல்வார்கள். நானும், உடனே உங்களுடைய கணிதம் மற்றும் அறிவியல் Period-யும் எங்களுடைய PET Periodக்கு நீங்கள் கடன் கொடுங்கள்.
எங்களுடைய மாணவர்கள் படிப்பிலும் எப்படி சாதனை செய்கின்றார்களோ விளையாட்டிலும் அந்த சாதனையை செய்வார்கள் என்று தொடர்ந்து வலியுறுத்தி கேட்டுக் கொள்கின்றேன். விளையாட்டு வீரர்கள், மாணவர்கள் சார்பாக அதே கோரிக்கையை இன்றைக்கு இந்த ஆசிரியர்களிடம் நான் வைக்கின்றேன்.
உங்களுடைய வளர்ச்சிக்கும், வெற்றிக்கும் நம்முடைய முதலமைச்சர் அவர்களும், நம்முடைய திராவிட மாடல் அரசும், நானும் நம்முடைய துறையும் என்றைக்கும் உங்களுக்கு துணை நிற்போம் என்று சொல்லி இந்த வாய்ப்புக்கு நன்றி கூறி விடைபெறுகின்றேன். களம் நமதே!
இவ்வாறு துணை முதலமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.
Also Read
-
நடிகை விஜயலட்சுமி வழக்கு : நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்ட சீமான்!
-
SIR என்ற அநீதிக்கு எதிராகத் தமிழ்நாடு ஒன்று திரண்டு போராடும்; வெல்லும் : அமைச்சர் கே.என்.நேரு அறிக்கை!
-
“காசாவில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதலைக் கண்டித்து சட்டமன்றத்தில் தீர்மானம்!” : முதலமைச்சர் அறிவிப்பு!
-
“நான் மன்னிப்பு கேட்க மாட்டேன்!” : சனாதன திமிருதனத்தை வெளிக்காட்டிய வழக்கறிஞர் ராகேஷ்!
-
போரால் அழிந்த காசாவை மீட்க 25 ஆண்டுகள் ஆகும் : ஐ.நா வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கை!