Tamilnadu

"அரசு அலுவலர்கள் சிறப்பாக செயல்பட்டால்தான் அரசின் திட்டங்கள் மக்களை சேரும்" - துணை முதலமைச்சர் உதயநிதி !

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில்  திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் அனைத்துத்துறை பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில்  இன்று (8.10.2025) திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்து துறைகளின் சார்பாக செயல்படுத்தப்பட்டு வரும் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் துணை முதலமைச்சர் , அனைத்து துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது, 

நம்முடைய அரசு பொறுப்பேற்றதிலிருந்து இன்றுவரை நம்முடைய முதலமைச்சர் அவர்கள் சிறப்புக்குரிய பல்வேறு திட்டங்களை அறிவித்து அதை தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றார்.  அதுவும் கோவிட் போன்ற இயற்கை பேரிடர்களால் நிதிப்பற்றாக்குறை, ஒன்றிய அரசினுடைய பல்வேறு குறுக்கீடுகளை கடந்தும் இந்த திட்டங்களை முதலமைச்சர் அவர்கள் அறிவித்து செயல்படுத்தி இருக்கின்றார். 

இன்னும் குறிப்பாக பெண்கள், குழந்தைகள், முதியோர், மாற்றுத் திறனாளிகள், திருநங்கைகள், ஒடுக்கப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் இவர்களையெல்லாம் மனதில் வைத்துக் கொண்டுதான் பல்வேறு திட்டங்களை நம்முடைய அரசு செயல்படுத்தி வருகின்றது.

உதாரணத்திற்கு புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன், நான் முதல்வன், கலைஞர் கனவு இல்லம்,  கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம், மக்களைத் தேடி மருத்துவம் இப்படி பல்வேறு முற்போக்கான திட்டங்களை முதலமைச்சர் அவர்கள் செயல்படுத்தி வருகின்றார்கள். இத்திட்டங்கள் மக்கள் மத்தியிலும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கின்றன. மாநிலம் தழுவிய திட்டங்கள் மட்டுமின்றி, அந்தந்த மாவட்ட மக்களுடைய அடிப்படை தேவைகளை அறிந்து அதை பூர்த்தி செய்கின்ற வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றோம்.

இப்படி அரசினுடைய முத்திரை திட்டங்களாக இருக்கலாம். அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் திட்டங்களில் விடுபட்டவர்களையும் சென்றடையும் நோக்கில் தான் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உங்களுடன் ஸ்டாலின் என்ற முகாமை அறிவித்து அதை செயல்படுத்தினார். இன்றைக்கு மாநில அளவில் 10 ஆயிரம் முகாம்கள் நடத்தப்படும்  என்று அறிவித்து கிட்டத்தட்ட 8,200 முகாம்களை முடித்திருக்கின்றோம்.  நவம்பர் 15 ஆம் தேதிக்குள் அனைத்து முகாம்களும் நடத்தி முடிக்கப்பட வேண்டும் என்று முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தியிருக்கிறார்கள்.

        திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை இதுவரைக்கும் 70 சதவீத முகாம்கள் தான்  நடத்தி முடிக்கப்பட்டிருக்கிறது. மீதமுள்ள 102 முகாம்களை நடத்துவதற்கு முன்பு  அந்த முகாம் குறித்த விழிப்புணர்வை அங்கு இருக்கக்கூடிய அந்த பகுதி மக்களிடம்  ஏற்படுத்திட வேண்டும் என்றும், அனைவரும்  அந்த முகாமில் வந்து கலந்து கொள்ளும் வகையில் அதற்கான ஏற்பாடுகளை நீங்கள் இன்னும் கவனம் எடுத்து செய்ய வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கின்றேன்.

அதிக மனுக்களை பெறுவது என்பதைவிட பெறப்படுகின்ற மனுக்கள் முறையாக விசாரிக்கப்பட்டு அது சரியான முறையில் தீர்வு காணப்பட வேண்டும். அதுதான் அந்த மனுக்களுக்கான உரிய மரியாதை என்று நான் கருதுகின்றேன். 

விளையாட்டு மேம்பாட்டுத் துறையை பொறுத்தவரை பல்வேறு முன்னெடுப்புகளை நாம் எடுத்து வருகின்றோம். கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் திட்டம், அதே மாதிரி விடுதி மாணவர்களை ஊக்கப்படுத்துவதற்கு பல்வேறு திட்டங்கள். முதலமைச்சர் சிறு விளையாட்டு அரங்கம்,  முதலமைச்சர் கோப்பை போட்டிகள் இப்போது நடந்து கொண்டிருக்கின்றது, இப்படி பல்வேறு போட்டிகளை நடத்திக் கொண்டிருக்கிறோம். தேசிய அளவில், மாநில அளவில், சர்வதேச போட்டிகளில் கலந்து கொள்வதற்கு MIMS Schemes, CDS Schemes என்று பல்வேறு திட்டங்களை வகுத்திருக்கின்றோம்.

 3 சதவீத இட ஒதுக்கீட்டில் அரசு வேலை வாய்ப்பை விளையாட்டு வீரர்களுக்கு கொடுத்திருக்கின்றோம். மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு கூடுதல் கவனம் செலுத்துகின்றோம். அவர்களையெல்லாம் மேலும் ஊக்கப்படுத்துகின்ற வகையில் கிராம ஊராட்சிகளில் வழங்கப்பட்டுள்ள விளையாட்டு உபகரணங்களை முறையாக விநியோகிக்குமாறும், மினி ஸ்டேடியத்தினுடைய கட்டுமானத்தை விரைவாக முடிக்குமாறும் நான் கேட்டுக் கொள்கின்றேன்.

மக்களுடைய அடிப்படை தேவைகளான சாலை வசதி,  குடிநீர் வசதி, தடையற்ற மின்சாரம் வழங்குவது போன்ற பணிகளில் நாம் அனைவரும் கூடுதல் கவனம் எடுத்து தொய்வு ஏற்படாமல்  முறையாக நடப்பதை உறுதி செய்ய வேண்டும். குறிப்பிட்ட இடைவெளி காலத்தில் நீங்கள் நேரில் களத்திற்கு சென்று  ஆய்வு செய்ய வேண்டும். அந்த அடிப்படை வசதிகள் மக்களுக்கு தடையின்றி கிடைக்கின்றதா என நீங்கள் உறுதி செய்ய வேண்டும். அரசு அதிகாரிகளாகிய நீங்கள், அது உங்களுடைய பொறுப்பு  என்பதை நீங்கள் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதே போல அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் என மக்கள் பணியில் நீண்ட நெடிய அனுபவம் கொண்டவர்கள் தான் இந்த மாவட்டத்தில் மக்கள் பிரதிநிதிகளாக இருக்கின்றார்கள். அவர்களுடைய ஆலோசனையை நீங்கள் முறையாக பெற்று, அவர்களுடன் கலந்து ஆலோசனை செய்து பணியாற்றுமாறு நான் கேட்டுக்கொள்கின்றேன்.

பல பணிகளுக்கு முடிப்பதற்கு இலக்கு தேதிகள் கொடுத்திருக்கின்றீர்கள். அதையெல்லாம் நாங்கள் பதிவு செய்து முதலமைச்சருடைய அலுவலகத்திற்கு அவை அனுப்பி வைக்கப்பட்டு தொடர்ந்து அது கண்காணிக்கப்படும் என்று இங்கே நான் குறிப்பிட விரும்புகின்றேன்.

நம்முடைய முதலமைச்சர் அவர்கள் பல முற்போக்கு திட்டங்களை தீட்டி செயல்படுத்தினாலும், அதனுடைய பலன் மக்களிடத்தில் சென்று சேரவேண்டும் என்றால், மக்களுக்கும் அரசுக்கும் பாலமாக இருக்கக்கூடிய அரசு அலுவலர்களாகிய நீங்கள் சரியாக செயல்பட்டால்தான், சிறப்பாக செயல்பட்டால்தான் அந்த திட்டங்கள் மக்களிடத்திலே சென்று சேரும்.

எனவே நம்முடைய முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான நம்முடைய அரசுக்கும் மக்களுக்கும் இடையே பாலமாக இருந்து முதலமைச்சர் அவர்களுக்கும் இந்த அரசுக்கும் நல்ல பெயரை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டு, இந்த வாய்ப்பிற்கு நன்றி கூறி விடை பெறுகின்றேன். நன்றி வணக்கம் என்று தெரிவித்தார். 

Also Read: தமிழின் வரலாற்றை அழிக்க RSS-BJP போராடி வருகிறது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!