Tamilnadu

நாகை மீனவர்கள் மீது தாக்குதல் : இலங்கை கடற்கொள்ளையர்கள் அராஜகம்!

நாகை மாவட்டம் நம்பியார் நகர் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று ம சந்திரபாபு என்பவருக்கு சொந்தமான பைபர் படகிலும், சசிக்குமார் என்பவருக்கு சொந்தமான பைபர் படகிலும் 11 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். கோடியக்கரை மற்றும் தோப்புத்துறை கிழக்கே 26 நாட்டில்கல் கடல்மயில் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது திடீரென மீனவர்கள் படகு மீது வெடிகளை வீசி இலங்கை கடற்கொள்ளையர்கள் அச்சுறுத்தியுள்ளனர்.

இதனால் சுதாரித்து தப்பிச்செல்ல முயன்ற மீனவர்கள் 11 பேரை சுற்றி வளைத்த இடங்கை கடற்கொள்ளையர்கள் சரமாரியாக தாக்குதல் நடத்தத் தொடங்கியுள்ளனர்.

இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதலில் நாகை மாவட்டம் நம்பியார்நகர் மீனவ கிராமத்தை சேர்ந்த சசிகுமார், உதயசங்கர், சிவசங்கர், கிருபா, கமலேஷ், விக்னேஷ், விமல், சுகுமார், திருமுருகன், முருகன், அருண் ஆகிய 11 மீனவர்கள் மீது அரிவாள் வெட்டு விழுந்தது. தொடர்ந்து படகின் என்ஜின், ஜிபிஎஸ் கருவி, வாக்கி டாக்கி, வலைகள், பிடித்த மீன்கள், தங்க ஜெயின், உள்ளிட்டவைகளை இலங்கை கடற்கொள்ளையர்கள் பறித்து தப்பிச் சென்றனர்.

எஞ்சின்கள் திருட்டு போனதால் சக மீனவர்களின் உதவியோடு கரை வந்து சேர்ந்த நம்பியார் நகர் மீனவர்கள் 11 பேர் நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அரிவாள் வெட்டு உள்ளிட்ட காயங்களுடன் 10 மீனவர்கள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இடது கை மணிக்கட்டு நரம்பு துண்டிக்கப்பட்டு மீனவர் சிவசங்கர் ஆபத்தான நிலையில் தஞ்சாவூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

தொடர்கதையாக நடந்து வரும் இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் சம்பவத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்று ஒன்றிய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Also Read: திருட்டு வதந்தி : பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் அடித்து கொலை - உ.பி-யில் அதிர்ச்சி!