Tamilnadu

“வேளாண் வணிகத் திருவிழா- 2025” நிறைவு! : 1,57,592 பேர் பங்கேற்றுப் பயன்பெற்றனர்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில் “வேளாண் வணிகத் திருவிழா 2025” 27.09.2025 அன்று தொடங்கி வைக்கப்பட்டு 27.09.2025 மற்றும் 28.09.2025 ஆகிய இரண்டு நாட்கள் சிறப்பாக நடைபெற்றது.

இது ஏற்கனவே, 2022-23ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு போன்றே இந்த ஆண்டின் இரண்டாவது நிகழ்வாகும். உழவர்களால் உற்பத்தி செய்யப்படும் வேளாண் விளைபொருட்கள், மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் ஆகியவற்றின் உள்ளூர் மற்றும் ஏற்றுமதி சந்தை வாய்ப்புகளை அதிகரித்து உழவர்கள், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள்;

உணவு பதப்படுத்தும் அமைப்புகள், ஏற்றுமதியாளர்கள், பொதுமக்கள், இயற்கை நல ஆர்வலர்கள் என அனைத்துத் தரப்பினரும் ஒருங்கே பயன்பெறும் வகையில் “வேளாண் வணிகத் திருவிழா 2025” அமைந்திருந்தது.

இந்த திருவிழாவில், சங்ககாலம் முதல் தற்காலம் வரை தமிழர்களின் வேளாண் வணிகத்தின் பரிணாம வளர்ச்சி, பனை, தென்னை, ஊட்டச்சத்துமிக்க சிறுதானியங்கள், மூலிகைப்பயிர்கள், முருங்கை, மஞ்சள், பலா, முந்திரி, நிலக்கடலை போன்ற பல்வேறு வேளாண் விளைபொருட்களின் சிறப்புகள், மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் மற்றும் மதிப்புக்கூட்டும் இயந்திரங்கள் குறித்த கருத்து விளக்கக் கண்காட்சி;

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம், முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம், உழவர் நல சேவை மையங்கள், ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம், பாரம்பரிய காய்கறிகள் போன்ற அரசின் பல்வேறு நலத்திட்டங்கள், பல்வேறு மதிப்புக் கூட்டும் இயந்திரங்கள்;

ஏற்றுமதி தொடர்பான விவரங்கள் போன்ற அரசின் அனைத்துத் திட்டங்கள் குறித்த மாதிரிகள், விளக்கங்கள் வேளாண்மை-உழவர் நலத்துறை மற்றும் சார்புத்துறைகளால் அமைக்கப்பட்டு விவசாயிகளும், பொதுமக்களும் அவற்றை பார்வையிட்டு விளக்கங்களை ஒரே இடத்தில் விரிவாகப் பெற்றுப் பயனடைந்தனர்.

இவற்றுடன், உணவே மருந்து, நகர வாழ்க்கையில் ஆரோக்கிய உணவு, ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சரிவிகித உணவு, உணவு பதப்படுத்துதலும் மதிப்புக்கூட்டுதலும், இயற்கை மற்றும் உயிர்ம வேளாண்மை, சிறுதானியங்களில் மதிப்புக்கூட்டுதல், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் செயல்பாடுகள் மற்றும் வழிகாட்டுதல், உழவர்களுக்கான மின்னணு சந்தைப்படுத்துதல், ஏற்றுமதி வாய்ப்புகள்;

நன்னெறி வேளாண் நடைமுறைகள், வேளாண்மை-உழவர் நலத்துறையின் நான்காண்டு சாதனைகள் போன்ற 12 தலைப்புகளில் நடத்தப்பட்ட கருத்தரங்குகளில் விவசாயிகளும் பொதுமக்களும் பெருந்திரளாக கலந்துகொண்டு, கலந்துரையாடி பயன்பெற்றனர்.

இவ் வேளாண் வணிகத்திருவிழாவில், இருதினங்களில் 15,420 உழவர் பெருமக்கள், 1,42,172 பொதுமக்கள் என 1,57,592 பேர் பங்கேற்றுப் பயன்பெற்றனர்.

ரூ.2.89 கோடி மதிப்பிலான 121 மெட்ரிக் டன் மதிப்புக்கூட்டப்பட்ட உணவு வகைகள், உடனடியாக உண்ணும் உணவுகள், மூலிகை உணவுப் பொருட்கள், பாரம்பரிய சிறுதானிய உணவு வகைகள் போன்ற பல்வேறு பொருட்கள் பொதுமக்களால் பெரிதும் விரும்பி வாங்கப்பட்டன.

இவை தவிர, அமர்ந்து உண்ணும் வசதியுடன் கூடிய உணவு அரங்கில் உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள், மகளிர் சுய உதவிக்குழுக்கள், தனியார் உணவகங்களால் இயக்கப்பட்ட 20 கடைகளில் விற்பனை செய்யப்பட்ட தேநீர், காபி, பழரசபானங்கள், சூப் வகைகள் உள்ளிட்ட பல்வேறு சுவையான, சத்தான உணவு வகைகள், சிற்றுண்டிகள், சாப்பாடு ஆகியவற்றை பொதுமக்கள் விரும்பி சுவைத்து மகிழ்ந்தனர் என்பதை உணவு அரங்கில் எப்போதும் பெருமளவு இருந்த கூட்டத்தைக்கொண்டு அறிய முடிந்தது.

உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், பாரம்பரிய உணவு உற்பத்தி நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்கள், உணவு பதப்படுத்தும் தொழில் நிறுவனங்கள், வேளாண் விளைபொருட்கள் மதிப்புக்கூட்டும் இயந்திர உற்பத்தி நிறுவனங்கள் தங்களின் ஏற்றுமதித் தரத்திலான மதிப்புக்கூட்டப்பட்ட பல்வேறு பொருட்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக காட்சிப்படுத்தியதுடன் விற்பனையும் செய்தன.

வேளாண் வணிகத்திருவிழாவில் 168 உழவர் உற்பத்தியாளர் நிறுவன அரங்குகள், 25 அரசு அரசுத்துறை கருத்து விளக்கக் கண்காட்சி அரங்குகள், 29 தனியார் நிறுவன அரங்குகள் ஆக மொத்தம் 222 அரங்குகள் மிகச்சிறப்பாக அமைக்கப்பட்டிருந்தன.

இவற்றுள் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு இலவசமாக அரங்குகள் வழங்கப்பட்டன.

Also Read: கரூர் துயர சம்பவம் : வதந்தி பரப்பிய 25 பேர் மீது வழக்கு பதிவு - காவல்துறை எச்சரிக்கை!