Tamilnadu
"விளையாட்டு வீரர்களை கொண்டாடுவதில் முதல் மாநிலம் தமிழ்நாடுதான்" - துணை முதலமைச்சர் உதயநிதி !
தமிழ்நாடு துணை முதலமைச்சர்உதயநிதி ஸ்டாலின் சென்னை கலைவாணர் அரங்கத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறையின் சார்பில் நடைபெற்ற விழாவில் சர்வதேச, ஆசிய மற்றும் தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் பதக்கங்கள் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத்தொகை காசோலைகளை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து விழாவில் பேசிய அவர், "முதலமைச்சர் அவர்களின் உத்தரவின் பேரில்,
சர்வதேச, ஆசிய மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை வென்று தமிழ்நாட்டுக்குப் பெருமையைத் தேடித்தந்துள்ள 819 வீரர்களுக்கு சுமார் 22 கோடி ரூபாய் மதிப்பிலான உயரிய ஊக்கத்தொகை காசோலைகளை வழங்குகின்ற இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உங்களையெல்லாம் சந்திப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன், பெருமையடைகின்றேன். உங்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகளை நான் தெரிவித்துக் கொள்கின்றேன்.
நேற்று நீங்கள் தொலைக்காட்சியில் பார்த்து இருப்பீர்கள். இன்றைக்கு செய்தித்தாளில் பார்த்து இருப்பீர்கள். நேற்று அரசு சார்பாக நம்முடைய நேரு உள்விளையாட்டு அரங்கில் கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற மிகப்பெரிய நிகழ்ச்சியை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நடத்தியிருந்தார்கள். தெலுங்கானா மாநிலத்தின் முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்கள். அரங்கம் முழுவதும் கல்வியாளர்கள், பள்ளி மாணவச் செல்வங்கள், கல்வியில் சாதித்த மாணவர்கள், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தில் பயன் பெற்ற மாணவர்கள் கலந்து கொண்டதுடன் நான் முதல்வன், புதுமைப் பெண் திட்டம், தமிழ்ப்புதல்வன் திட்டம் என்று கல்வி சார்ந்த பல்வேறு நிகழ்ச்சிகளை காண்பித்து இருந்தார்கள். அதில் நமக்கும் சின்ன ஒரு இடம் கொடுத்திருந்தார்கள். கல்வி என்றால் வெறும் பள்ளிக்கல்வி, உயர்கல்வி மட்டும் கிடையாது, அதற்கு சமமமாக உடற்கல்வியும் மிக, மிக முக்கியம் என்று சொல்லும் அளவிற்கு நம்முடைய விளையாட்டு வீரர்களை அங்கு வரவழைத்து நம்முடைய முதலமைச்சர் அவர்கள் ஊக்குவித்தார்கள்.
நேற்று அந்த அரங்கம் முழுவதும் கல்வி கற்கின்ற மாணவர்கள் எல்லாம் இருந்தார்கள். ரொம்ப பெருமையாக இருந்தாலும், கொஞ்சம் பொறாமையாக இருந்தது, அரங்கம் முழுவதும் படித்து சாதித்தவர்கள் எல்லாரும் இருக்கின்றார்கள் நமக்கும் ஒரு சின்ன இடம் கொடுத்திருந்தார்கள் என்று.
ஆனால், இன்றைக்கு இந்த அரங்கத்திற்கு வரும் போது ரொம்ப சந்தோசமாக இருக்கிறது, ரொம்ப பெருமையாக இருக்கிறது. அரங்கம் முழுவதும் விளையாட்டில் சாதித்த, பதக்கங்களை வென்ற வீரர்கள் நீங்கள் வந்திருக்கின்றீர்கள்.
அதே போல, இன்றைக்கு இந்த மேடையில் 4 பேருக்கு கருணை அடிப்படையில் நம்முடைய துறையில் வேலைவாய்ப்பு ஆணைகளையும் இங்கு கொடுக்க இருக்கின்றோம். அவர்களுக்கும் என்னுடைய வாழ்த்துகள்.
விளையாட்டு வீரர்களை கொண்டாடுவதில் இன்றைக்கு இந்தியாவுலேயே முதல் மாநிலம் என்றால், அது நம்முடைய தமிழ்நாட்டு தான், நம்முடைய அரசு தான். அந்த அளவுக்கு நம்முடைய விளையாட்டு வீரர்களுக்குத் தேவையான அத்தனை வசதிகளையும், உதவிகளையும் நம்முடைய முதலமைச்சர் அவர்கள், நம்முடைய அரசு செய்து கொண்டிருக்கிறது.
நம்முடைய அரசு அமைந்த இந்த நான்கரை வருடத்தில் மட்டும், இன்றைக்கு வரை சுமார் 4 ஆயிரத்து 510 விளையாட்டு வீரர்களுக்கு 150 கோடி ரூபாய் உயரிய ஊக்கத்தொகையை நம்முடைய முதலமைச்சர் அவர்கள் கொடுத்திருக்கிறார்கள்.
4 வருடத்தில் மட்டும் இந்தியாவுலேயே இந்த அளவுக்கு எந்த மாநிலத்திலும், இவ்வளவு விளையாட்டு வீரர்களுக்கு உயரிய ஊக்கத்தொகையை கொடுக்கப்படவில்லை.
இன்றைக்கு மட்டும் இவ்வளவு பேருக்கு உயரிய ஊக்கத்தொகையை கொடுத்திருக்கிறோம் என்றால், அதற்கும் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் தான் காரணம்.
சில மாதங்களுக்கு முன்பு நானும், நம்முடைய துறையினுடைய செயலாளரும், விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் அவர்களும் முதலமைச்சர் அவர்களிடம் சென்று ஒரு கோரிக்கை வைத்தோம். அதாவது, ELITE, MIMS, CDS திட்டங்களில் வருடா, வருடம் பயனடைகின்ற வீரர்களுடைய எண்ணிக்கை கொஞ்சம் குறைவாக இருக்கிறது. எங்களுக்கு அதை கொஞ்சம் அதிகப்படுத்தி கொடுக்க வேண்டும். திறமையான வீரர்கள் அதிகமாக இருக்கிறார்கள். அவர்களுக்கும் நாம் துணையாக இருக்க வேண்டும். கைவிட்டு விடக்கூடாது என்று முதலமைச்சர் அவர்களிடம் ஒரு கோரிக்கை வைத்தோம். உடனே எண்ணிக்கையை இரட்டிப்பாக்கி கொடுத்தார் நம்முடைய முதலமைச்சர் அவர்கள்.
பொதுவாக, போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்று வந்த பிறகு தான் விளையாட்டு வீரர்களுக்கு அரசு அந்த அங்கீகாரத்தை கொடுக்கும், அந்த பரிசுத்தொகை கொடுக்கும்.
ஆனால், நம்முடைய முதலமைச்சர் அவர்களும், நம்முடைய அரசு மட்டும் தான், போட்டியில் கலந்து கொள்வதற்கு முன்பே அந்த வீரர்களை அழைத்து அவர்களுக்கான ஊக்கத் தொகையை, நிதி உதவியை செய்கின்றது. நிதி உதவி மட்டும் அல்ல, நீங்கள் வெற்றி பெற்று வந்தீர்கள் என்றால், உங்களுக்கு அரசு வேலையையும் நம்முடைய அரசு கொடுத்துக் கொண்டிருக்கிறது.
தமிழ்நாட்டினுடைய வரலாற்றிலேயே முதன்முறையாக கடந்த வருடம் 100-க்கும் அதிகமான வீரர்களுக்கு அரசு வேலைவாய்ப்பைக் ஏற்படுத்தி கொடுத்திருக்கின்றோம்.
அந்த வகையில், இன்றைக்கு உங்களுக்கு உயரிய ஊக்கத்தொகையை கொடுத்து இருக்கின்றோம். நீங்கள் மீண்டும் வெற்றி பெற்று வரும் போது, நம்முடைய முதலமைச்சர் அவர்கள் உங்களுக்கு அரசு வேலையும் நிச்சயம் பெற்றுத் தருவார்.
இந்த அளவுக்கு, தமிழ்நாட்டினுடைய விளையாட்டு வீரர்களின் முன்னேற்றத்துக்காக தொடர்ந்து நாம் உழைத்துக் கொண்டிருக்கிறோம்.
இப்படி நம்முடைய தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம், ஆதரவு அளிக்கப்பட்ட வீரர்கள்
இந்த அரங்கம் முழுவதும் நிறைந்துள்ளீர்கள். அதில் ஒரு சில பேரை மட்டும் இங்கே நான் குறிப்பிட விரும்புகின்றேன். இந்திய அளவில் மட்டும் அல்ல, சர்வதேச அளவிலும் பல சாதனைகளை செய்து கொண்டு வருகின்றீர்கள். அதற்கு சிறந்த உதாரணமாக இன்றைக்கு இந்த மேடையில இரண்டு பேரை அமர வைத்திருக்கின்றோம்.
அதில் ஒருவர், இந்தியாவுடைய ஸ்பீடு ஸ்கேட்டிங் ஸ்டார் என்று கொண்டாடப்படுகின்ற தம்பி ஆனந்த்குமார் வேல்குமார் இங்கே வந்து இருக்கிறார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் MIMS திட்ட வீரரான தம்பி ஆனந்த்குமார், சமீபத்தில் சீனாவில் நடந்த 2025 World ஸ்பீடு ஸ்கேட்டிங் சாம்பியன் போட்டியில் கலந்து கொண்டு, இன்றைக்கு ஒட்டு மொத்த உலகத்தையும் தன்பக்கம் திரும்ப வைத்திருக்கிறார். இந்தப் போட்டியில், ஒரு பதக்கம் மட்டுமல்ல, இரண்டு தங்கப் பதக்கங்கள், ஒரு வெண்கலப் பதக்கம் என்று மொத்தம் மூன்று பதக்கங்களை வென்றிருக்கிறார் நம்முடைய தம்பி ஆனந்த்குமார் அவர்கள்.
இதன் மூலம் ஸ்பீடு ஸ்கேட்டின் போட்டியில் இந்தியாவுக்காக தங்கப்பதக்கம் வென்ற முதல் வீரர் என்ற சாதனையை தம்பி ஆனந்த்குமார் அவர்கள் இன்றைக்கு படைத்திருக்கிறார். நாம் அத்தனை பேரும் நம்முடைய வாழ்த்துகளை கைத்தட்டல்கள் மூலமாக அவருக்கு தெரிவித்துக் கொள்வோம். அவருடைய வெற்றிப்பயணத்திற்கு நம்முடைய அரசு, நாம் அத்தனைபேரும் அவருக்கு துணை நிற்போம்.
அதே மாதிரி, இங்கு வந்திருக்கக்கூடிய Chess Grandmaster என்று போற்றப்படும் தங்கை வைஷாலி அவர்கள் சில நாட்களுக்கு முன்பு, ஒட்டுமொத்த உலகத்தையும் திரும்பி பார்க்க வைத்து மிகப்பெரிய ஒரு சாதனையை படைத்துவிட்டு, இன்றைக்கு ரொம்ப அமைதியாக இங்கே உட்கார்ந்து இருக்கிறார். FIDE Women’s Grand Swiss 2025-இல் வெற்றி பெற்று, அடுத்து 2026 Candidates Tournament-க்கு இப்போது தயாராகிக் கொண்டு இருக்கிறார். Women Grandmaster, International Master, Fide Grand Swiss 2023 title winner, இப்படி இன்னும் ஏராளமான titles-ஐ வைஷாலி வென்று இருக்கின்றார்கள். தங்கை வைஷாலி அவர்களுக்கு நம்முடைய பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் கைதட்டல்கள் மூலம் தெரிவித்துக் கொள்வோம்.
வைஷாலி அவர்களுக்கும் நம்முடைய தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை மூலமாக தொடர்ந்து என்னென்ன தேவையோ அதையெல்லாம் செய்து கொண்டு வருகின்றோம்.
அதுமட்டுமில்ல, அவரே இங்கு குறிப்பிட்டது போல இரண்டு நாட்களுக்கு முன்பு, விளையாட்டு வீரர்களுக்கான 3 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தில் Junior officer பணிக்கான பணி ஆணையை நம்முடைய முதலமைச்சர் அவர்களே வழங்கினார்கள்.
ஆனந்த்குமாரும், வைஷாலியும், இங்கு உட்கார்ந்து இருக்கின்ற விளையாட்டில் சாதிக்க நினைக்கின்ற உங்கள் அத்தனை இளைஞர்களுக்கும் ஒரு Inspiration-ஆ ரோல்மாடலாக இன்றைக்கு விளங்கி கொண்டிருக்கிறார்கள்.
உங்களுடைய விடாமுயற்சியும், விளையாட்டுத் துறையினுடைய support-ம் சேர்ந்து இன்றைக்கு நல்ல பலன்களை கொடுத்திருக்கிறது. இன்றைக்கு மெடல்ஸ் வாங்கிட்டோம், அதோடு போதும் என்று நாம் நின்றுவிடக் கூடாது. ஒவ்வொரு நாளும் நீங்கள் தொடர்ந்து பயிற்சி செய்ய வேண்டும்.
வெற்றி பெறுவதற்கு பொறுமை மிக, மிக அவசியம். அதனால் பொறுமையும், முயற்சியையும் கைவிடாமல் தொடர்ந்து நீங்கள் பயிற்சி செய்யுங்கள். முயற்சி செய்து கொண்டே இருங்கள். உங்களுடைய இலக்கில் மட்டும் Focused-ஆ இருங்கள். இதை நான் விளையாட்டுத்துறை அமைச்சராக இல்ல, உங்களுடைய சகோதரனாக இந்த நேரத்தில் உரிமையோடு நான் சொல்கின்றேன்.
நீங்கள் உங்களுடைய இலக்கை அடைவதற்கு, நம்முடைய முதலமைச்சர் அவர்களும், நானும், நம்முடைய துறையும் என்றைக்கும் உங்களுக்கு உற்றத்துணையாக இருப்போம்.
உங்களுடைய முயற்சிகளை ஊக்கப்படுத்த வேண்டும் என்றுதான், இன்றைக்கு ஊக்கத் தொகையை வழங்கி இருக்கின்றோம்.
இதைப் பயன்படுத்தி ஆடுகளத்தில் மட்டுமல்ல, நீங்கள் உங்களுடைய வாழ்க்கையிலும் வெற்றி பெற வேண்டும் என்று நான் கேட்டுக் கொண்டு, இங்கு வந்ததிருக்கக்கூடிய அத்தனை பேருக்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்து, நீங்கள் இன்னும் அதிகமாக சாதிக்க வேண்டும். நம்முடைய மாநிலம் தமிழ்நாட்டிற்கும், இந்திய ஒன்றியத்திற்கும் நீங்கள் மென்மேலும் பெருமை சேர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டு, இந்த வாய்ப்பிற்கு நன்றி கூறி விடைபெறுகின்றேன். நன்றி வணக்கம்" என்று கூறினார்.
Also Read
-
“தமிழ்நாட்டின் கல்வி குறித்து போலி தரவுகள்” : ASER நிறுவனத்தின் மோசடியை அம்பலப்படுத்திய எழுத்தாளர் !
-
காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பது எப்போது ? - தமிழ்நாடு அரசு அறிவிப்பு... விவரம் உள்ளே !
-
“கல்வித்துறையில் நிகழ்த்தப்பட்ட வெற்றிகரமான முன்னெடுப்பு” : பாலசுப்பிரமணியன் முத்துசாமி பாராட்டு!
-
கல்வியில் சிறந்த தமிழ்நாடு - “எலைட் மக்களுக்கு இது கிரிஞ்சாகத்தான் தெரியும்” : இயக்குநர் கவிதாபாரதி !
-
ஆகம விதியை பின்பற்றும், பின்பற்றாத கோவில்கள் என்ன ? - 6 பேர் கொண்ட குழுவை அமைத்த உச்சநீதிமன்றம் !