Tamilnadu

திடீரென தூய்மை படுத்தப்பட்ட சென்னை ரயில் நிலையங்கள்... காரணம் என்ன ?

தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம், தற்போது நடைபெற்று வரும் தூய்மையே சேவை பிரச்சாரம் 2025 (Swachhata Hi Seva Campaign 2025) -இன் ஒரு பகுதியாக, தனது அனைத்து ரயில் நிலையங்களிலும் விரிவான தூய்மைப் பணிகளை மேற்கொண்டுள்ளது. பயணிகளுக்கு சுத்தமான, பசுமையான மற்றும் நட்புறவான ரயில்வே வளாகத்தை வழங்கும் தனது உறுதிப்பாட்டை இதன் மூலம் மீண்டும் நிலைநிறுத்தியுள்ளது.

இந்த பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, சென்னை சென்ட்ரல், சென்னை எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, பெரம்பூர், ஆவடி, திருவள்ளூர், அரக்கோணம் மற்றும் ஜோலார்பேட்டை உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களிலும், புறநகர் ரயில் நிலையங்களிலும் தீவிர தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. நடைமேடைகள், காத்திருப்பு அறைகள், நடை மேம்பாலங்கள், கழிப்பறைகள் மற்றும் ரயில் பாதைகள் ஆகியவை முழுமையாக சுத்தம் செய்யப்பட்டு, பயணிகளுக்கு ஒரு புத்துணர்ச்சியான மற்றும் சுகாதாரம் அளிக்கும் சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியான தூய்மையை உறுதி செய்வதற்காக, அனைத்து நிலையங்களிலும் கழிவுகளைத் தரம் பிரிப்பதற்காக செயல்படும் குப்பைத் தொட்டிகளை சென்னை கோட்டம் செய்துள்ளது. மேலும், சுகாதாரத் தரத்தை நிலைநிறுத்துவதற்காக பிரத்யேக கண்காணிப்புக் குழுக்களும் நியமிக்கப்பட்டுள்ளன.

கூடுதலாக, சென்னை கோட்டம் மரம் நடும் விழாக்கள், கலைப் படைப்புகள் உருவாக்கம் மற்றும் விழிப்புணர்வுப் பேரணிகள் உள்ளிட்ட பல்வேறு முயற்சிகளையும் முன்னெடுத்துள்ளது. ரயில் நிலைய வளாகங்கள், குடியிருப்புகள், சுகாதார மையங்கள் மற்றும் பணிமனைகள் முழுவதும் இதுவரை 1,500-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டு, பசுமைப் பகுதி அதிகரிக்கப்பட்டு, சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு பங்களிப்பு செய்யப்பட்டுள்ளது.

இந்த பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, 'ஏக் தின், ஏக் கண்டா, ஏக் சாத்' (Ek Din, Ek Ghanta, Ek Saath) (ஒரு நாள், ஒரு மணி நேரம், ஒன்றிணைந்து) மாபெரும் தூய்மைப் பணி செப்டம்பர் 25, 2025 அன்று அனுசரிக்கப்படும். இந்த மாபெரும் தூய்மைப் பணி சென்னை சென்ட்ரல், சென்னை எழும்பூர், மாம்பலம், தாம்பரம், செங்கல்பட்டு, ஜோலார்பேட்டை, பெரம்பூர், ஆவடி, காஞ்சிபுரம், எண்ணூர் மற்றும் சூலூர்பேட்டை போன்ற முக்கிய ரயில் நிலையங்கள் உட்பட சென்னை கோட்டத்தின் 49 ரயில் நிலையங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த இயக்கத்தில் சாரண சாரணியர்கள், தன்னார்வலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளனர். இந்த கூட்டு முயற்சிகள் சமூகப் பொறுப்பு மற்றும் குடிமைப் பெருமை உணர்வை வலுப்படுத்தும்.

பயணர்கள் இந்த முயற்சிக்கு அமோக வரவேற்பு அளித்துள்ளனர். தூய்மையான நிலையங்களையும் மேம்படுத்தப்பட்ட வசதிகளையும் பாராட்டியதோடு, ரயில்வே ஊழியர்களின் அர்ப்பணிப்பு மிக்க முயற்சிகளையும் பாராட்டி உள்ளனர்.

குப்பைத் தொட்டிகளைப் பொறுப்புடன் பயன்படுத்துவதன் மூலமும், குப்பைகளைத் தவிர்ப்பதன் மூலமும், பொது வசதிகளைப் பாதுகாப்பதன் மூலமும் அனைத்து பயணிகளும் தங்கள் ஒத்துழைப்பை தருமாறு சென்னை கோட்டம் கேட்டுக்கொள்கிறது.

Also Read: உச்சம் அடைந்த தனி மாநிலக் கோரிக்கை... பாஜக அலுவலகத்தை தாக்கி தீ வைத்த லடாக் பொதுமக்கள் !