Tamilnadu

ரூ.97.65 கோடியில் கட்டப்பட்டுள்ள 342 காவலர் குடியிருப்புகள் : ரூ.21.85 கோடியில் மாநில பயிற்சிக் கழகம்!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (22.9.2025) தலைமைச் செயலகத்தில், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில் செங்கல்பட்டு மாவட்டம், காலவாக்கத்தில் ரூ.21 கோடியே 85 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள மாநில பயிற்சிக் கழகத்திற்கு அடிக்கல் நாட்டினார். மேலும், காவல்துறை சார்பில் ரூ.97 கோடியே 65 இலட்சத்து 61 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள 342 காவலர் குடியிருப்புகள் 2 காவல் நிலையங்கள், 6 காவல் துறைக் கட்டடங்கள் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில் விழுப்புரத்தை தலைமையிடமாகக் கொண்டு ரூ.1 கோடியே 4 இலட்சம் செலவில் உருவாக்கப்பட்டுள்ள புதிய மண்டல அலுவலகம் மற்றும் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்திற்கு ரூ.2 கோடியே 12 இலட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.

தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையானது, தீயிலிருந்து உயிர்களையும், உடைமைகளையும் காப்பதோடு, இயற்கை இடர்பாடுகளான வெள்ளம், புயல், நிலச்சரிவுகள் போன்றவைகளிலிருந்தும் மக்களை காப்பதும், அவசர உதவி புரிவதும் இத்துறையின் முக்கிய பணியாகும். இத்துறையின் செயல்திறனை மேம்படுத்திட புதிய தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலையங்கள் கட்டித் தருதல், பணியாளர்களுக்கு குடியிருப்புகள் கட்டித் தருதல், பல்வேறு நவீன கருவிகள் மற்றும் தீயணைப்பு ஊர்திகளை வழங்குதல் போன்ற பணிகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

செங்கல்பட்டு மாவட்டம், காலவாக்கத்தில் கட்டப்படவுள்ள மாநில பயிற்சி கழகத்திற்கு அடிக்கல் நாட்டுதல்

தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை பணியாளர்களின் பயிற்சி வசதிகளை நவீனப்படுத்தும் நோக்கில் செங்கல்பட்டு மாவட்டம், காலவாக்கத்தில் ரூ.21.85 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள மாநில பயிற்சி கழகத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அடிக்கல் நாட்டினார்.

இந்த மாநில பயிற்சி கழகம், 300 பயிற்சியாளர்கள் தங்கும் வகையிலான தங்கும் கூடங்கள் (Dormitories), பயிற்சி மைதானம் (Parade ground), சமையற்கூடம் (Kitchen cum dining halls), மாதிரி தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி நிலையம், மின்வசதி, சாலை வசதி, கழிவுநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் கட்டப்படவுள்ளது.

காவல்துறை சார்பில் திறந்து வைக்கப்பட்ட முடிவுற்ற பணிகளின் விவரங்கள்

இராமநாதபுரம் மாவட்டம் – சக்கரக்கோட்டை, தமிழ்நாடு சிறப்பு காவல் படை 12-ஆம் அணி வளாகத்தில் ரூ.55 கோடியே 66 இலட்சத்து 78 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள 342 காவலர் குடியிருப்புகள்;

செங்கல்பட்டு மாவட்டம் – ஓட்டேரியில் ரூ.2 கோடியே 15 இலட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள காவல் நிலையம் மற்றும் தஞ்சாவூர் மாவட்டம் – நாச்சியார்கோவிலில் ரூ.2 கோடியே 65 இலட்சத்து 96 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள காவல் நிலையம்;

இராமநாதபுரம் மாவட்டம் – சக்கரக்கோட்டை, தமிழ்நாடு சிறப்பு காவல் படை 12-ஆம் அணி வளாகத்தில் ரூ.34 கோடியே 3 இலட்சத்து 25 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள நிர்வாகக் கட்டடம், ஆயுத கிடங்கு மற்றும் 3 பாசறைகள் மற்றும் சென்னை மாவட்டம் – எழும்பூரில் உள்ள பழைய காவல் ஆணையர் வளாகத்தில் ரூ.3 கோடியே 14 இலட்சத்து 62 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள குதிரை இலாயங்கள்;

என மொத்தம் ரூ.97 கோடியே 65 இலட்சத்து 61 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள 342 காவலர் குடியிருப்புகள், 2 காவல் நிலையங்கள் மற்றும் 6 காவல் துறைக் கட்டடங்கள் ஆகியவற்றை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று திறந்து வைத்தார்.

தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில் திறந்து வைக்கப்பட்ட முடிவுற்ற பணிகளின் விவரங்கள்

திருச்சிராப்பள்ளியை தலைமையிடமாகக் கொண்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் மத்திய மண்டலத்தை இரண்டாகப் பிரித்து ரூ.1.04 கோடி செலவில் விழுப்புரத்தை தலைமையிடமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள புதிய மண்டல அலுவலகம் மற்றும் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்டவாறு சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்திற்கு ரூ.2.12 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடம் ஆகியவற்றை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.