Tamilnadu

“ரூ. 49.49 கோடியில் பல்வேறு மாவட்டங்களில் விளையாட்டு வளாகங்கள்!” : துணை முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் விளையாட்டுத்துறையில் இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கிடவும், அகில இந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் நடைபெறும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கு கொண்டு வெற்றி பெறும் வகையில் அவர்களுக்கு உரிய பயிற்சி அளித்தல், உயரிய ஊக்கத்தொகை வழங்குதல், விளையாட்டிற்கான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல் என பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் இலட்சியத்தை நிறைவேற்றும் வகையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் 2025-2026 ஆம் ஆண்டிற்கான சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில், தமிழ்நாடு முழுவதும் பல்வேறு விளையாட்டு உட்கட்டமைப்புகளை மேம்படுத்துவது தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டார்.

அந்த அறிவிப்புகளை செயல்படுத்தும் வகையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் 49.49 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு மாவட்டங்களில் விளையாட்டு வளாகங்களை மேம்படுத்துதல், கூடுதல் விளையாட்டு மையங்கள், விளையாட்டு விடுதிகள், பாரா விளையாட்டு அரங்கங்கள், விளையாட்டு உட்கட்டமைப்புகளை புதுப்பித்தல் உள்ளிட்ட 11 விளையாட்டு உள்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்கு இன்று (19.9.2025) அடிக்கல் நாட்டினார்.

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தலைமைச் செயலகத்தில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் 24.70 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உயர் செயல்திறன் கொண்ட மாணவர் விளையாட்டு விடுதியுடன் கூடிய பயிற்சி மையம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.

தேசிய மற்றும் சர்வதேச தடகள விளையாட்டுப் போட்டிகளின் பதக்கப் பட்டியலில் தமிழ்நாடு முக்கிய இடம் பெற்று, ஈட்டி எறிதல், குண்டு எறிதல், வட்டு எறிதல் மற்றும் சங்கிலி குண்டு எறிதல் போன்ற பிரத்யேக எறிதல் விளையாட்டுப் போட்டிகளில் சிறந்து விளங்குகிறது.

எனவே எறிதல் விளையாட்டு வீரர்களுக்காக தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளுக்கான அரங்கமாக பயன்படுத்தும் வகையில் சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டரங்கின் மைதானத்தில் 2.49 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒரு புதிய எறிதல் மையம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.

சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் 3.49 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கூடைப்பந்து மற்றும் கையுந்துப்பந்து ஆகிய விளையாட்டுகளுக்காக நிழற்கூரையுடன், வெளியே கோணப்பட்ட மெஷ், அக்ரிலிக் தரையமைப்பு, ஒளியமைப்புகளுடன் கூடிய இரண்டு நிலையான கூடைப்பந்து மைதானங்கள் மற்றும் இரண்டு கையுந்துப்பந்து மைதானங்கள் ஏற்படுத்த அடிக்கல் நாட்டினார்.

சேப்பாக்கத்தில் உள்ள அறிஞர் அண்ணா நீச்சல் குளத்தினை வடிகட்டி அமைப்புடன் முன்வயப்பட்ட கட்டமைப்பு முறையை பயன்படுத்தி 2.74 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மறுசீரமைத்து மேம்படுத்த அடிக்கல் நாட்டினார்.

சென்னை முகப்பேரில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மேசைப் பந்து விளையாட்டு வளாகத்தினை 2.97 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புரனமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.

மதுரையில் உள்ள மாவட்ட விளையாட்டு வளாகத்தில் 1,300 சதுர அடி பரப்பளவில் 5.60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 100 மாணவர்களுக்கான தங்கும் வசதி, உணவறை மற்றும் அத்தியாவசிய உட்கட்டமைப்புகளுடன் தரைத்தளம் மற்றும் மூன்று தளங்களுடன் கூடிய புதிய விளையாட்டு விடுதி அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.

மேலும், திருவள்ளுர், திருவண்ணாமலை, தஞ்சாவூர், திண்டுக்கல் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய 5 மாவட்டங்களில் தலா 1.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் என மொத்தம் 7.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பாரா விளையாட்டு மைதானங்கள் அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்கும் உட்பட 49.49 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 11 விளையாட்டு உள்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

Also Read: ரோபோ சங்கர் மறைவு : நேரில் சென்று அஞ்சலி செலுத்திய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!