Tamilnadu

“IPL போல அதிமுகவில் APL போட்டி நடத்தலாம்” - அதிமுகவின் பல அணிகளை குறிப்பிட்டு துணை முதலமைச்சர் கிண்டல்!

திமுக இளைஞரணி சார்பில் சட்டமன்ற தொகுதிகள் வாரியாக பகுதி, வட்ட, பாகம் வாரியாக அமைப்பாளர் , துணை அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டு புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் இளைஞரணி செயலாளரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தலைமையில், மண்டலம் வாரியான மாநில துணை செயலாளர் முன்னிலையில் நிர்வாகிகள் அறிமுக கூட்டம் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, சென்னை அண்ணா அறிவாலய கலைஞர் அரங்கில், சென்னை தென்மேற்கு மாவட்டம் தியாகராய நகர், மயிலாப்பூர், வடகிழக்கு மாவட்டம் திருவெற்றியூர் சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதி, வட்ட, பாக புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் தூத்துக்குடி.எஸ்.ஜோயல் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது,

இதில் சென்னை வடகிழக்கு மாவட்ட செயலாளர் மாதாவரம்.எஸ்.சுதர்சனம், தென்மேற்கு மாவட்ட செயலாளர் மயிலை.தா.வேலு, நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் கே.பி.சங்கர், ஜெ.கருணாநிதி, தென்மேற்கு மாவட்ட அமைப்பாளர் ராஜா அன்பழகன், வடகிழக்கு மாவட்ட அமைப்பாளர் மதன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர். நிறைவாக துணை முதலமைச்சர் புதிய நிர்வாகிகள் ஒவ்வொரு உடன் தனி தனி புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

அப்போது மேடையில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “இங்கு வந்து இருப்பவர்கள் எல்லாம் என்னை பார்க்க வந்த கூட்டம் கிடையாது. என்னுடன் செயலாற்ற வந்த கூட்டம். இது கொள்கை கூட்டம். கழக உத்தரவை முழுவதும் செயலாற்றுவேன் என்று உறுதி ஏற்று, இந்த இளைஞரணி பொறுப்பு ஏற்றது உங்கள் மீதான நம்பிக்கையில்தான்.

இந்தியாவிலே பல்வேறு கட்சிகள், இளைஞரணி உள்ளிட்ட பல்வேறு அணிகள் உருவாக்கப்பட்டு வருகிறது. ஆனால் முதல் முறை ஒரு அரசியல் கட்சியில் இளைஞரணி உருவாக்கப்பட்டது என்றால் அது திமுகவில் தான். புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் எல்லாம் சிபாரிசு என்ற அடிப்படையில் இல்லாமல், முழுவதும் தகுதி அடிப்படையில் பல்வேறு கட்ட நேர்காணல், ஆலோசனை பிறகே நியமிக்கப்பட்டுள்ளீர்கள்.

இன்று மக்கள் பிரதிநிதியாக உள்ள முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மேயர்கள் உள்ளிட்டோர் எல்லாம் இளைஞரணியில் இருந்தவர்கள்தான். ஒரு விளையாட்டு போட்டியில் நாம் ஈடுபடும்போது முதலில் பயிற்சி பெறுவோம், அது போல தான் இளைஞரணி என்பதும். மக்கள் பணிக்கு பயிற்சி அளிக்கக்கூடிய இடம்.

கழக இளைஞரணி சார்பில், ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் நூலகம் என்று 100க்கும் மேற்பட்ட நூலகத்தை நாம் திறந்து வைத்து வருகிறோம். திறந்து வைத்தது மட்டும் இல்லாமல், அவற்றை தொடர்ந்து கண்காணிப்புக்குழு மூலம் பராமரித்து வருகிறோம். பதிப்பகம் வைத்துள்ள முதல் அரசியல் இயக்கத்தின் அணி திமுகவின் இளைஞரணி.

நம் ஆட்சியில் மயிலாப்பூரில் 5000 புதிய குடியிருப்புகள், பட்டினப்பாக்கத்தில் புதிய மீனவர் அங்காடி, புதிய கால்பந்து மைதானம், 2 புதிய சமுதாய கூட்டம் கட்டப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. தியாகராயக நகரில் உஸ்மான் சாலை புதிய மேம்பாலம், மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருகிறது. திருவொற்றியூரில் எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் தூர்வாரி, அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் நெட்டுக்குப்பம் மீன்பிடிப்பு இறங்கு தளம், மீன் பதப்படுத்தும் கிடங்கு அமைக்கப்பட்டு உள்ளது. இப்படி அரசின் திட்டங்களை மக்களிடம் நீங்கள் கொண்டு சேர்க்க வேண்டும்.

எடப்பாடிபழனிசாமியின் பிரச்சார பயணத்தில் கூட்டம் குறைந்து வருகிறது. இறுதியாக அவரும் அவரின் ஓட்டுனரும் தான் அவரின் பிரச்சார வாகனத்தில் இருப்பார்கள். அதிமுக ஆட்சியில் மக்கள் எல்லாம் மகிழ்ச்சியாக இருந்ததாக பழனிசாமி கூறினார். கொரோனா காலத்தில் மக்கள் எண்ணற்ற இன்னல்களை சந்தித்தனர். அதிலிருந்து மக்களை மீட்டது திராவிட மாடல் அரசுதான். மக்களுடன் களப்பணியில் இருந்தது திமுக தான். மக்களுக்காக களப்பணி செய்து உயிரிழந்தவர் சென்னை மேற்கு மாவட்ட முன்னாள் செயலாளர் ஜெ.அன்பழகன் அவர்கள்.

RB உதயகுமார் அதிமுக வளர்ச்சி பார்த்து பொறுமையாக உள்ளதாக கூறினார். ஆம் உண்மையில் ஒரு கட்சியில் பல சார்பு அணிகள் இருக்கும், ஆனால் அதிமுகவே பல அணிகளாக உள்ளது. கிரிக்கெட்டில் ஐபிஎல் போட்டி விளையாடுவது போல, அதிமுகவில் ஏபிஎல் போட்டி நடத்தலாம் அந்த அளவிற்கு அணிகள் உள்ளது. சென்ற தேர்தலில் சிறப்பாகக் செயலாற்றி அணி என்று இளைஞரணி தலைவரிடம் வாழ்த்து பெற்றது. அதுபோல இந்த தேர்தலிலும் இளைஞர் அணி வாழ்த்து பெற வேண்டும்." என்றார்.

Also Read: “பள்ளி விடுமுறை நாட்களில்தான் கூட்டம் கூட்டுவார்..” - விஜய்க்கு தக்க பதிலடி கொடுத்த அமைச்சர் ரகுபதி!