Tamilnadu
”பாசிச பாஜகவால் நெருங்க முடியாத கோட்டையாக தமிழ்மண் விளங்கி வருகிறது” : துணை முதலமைச்சர் உதயநிதி!
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூரில் அமைக்கப்பட்டுள்ள அண்ணல் அம்பேத்கர் அவர்களின் திருவுருவச் சிலையை செப். 10 அன்று திறந்து வைத்து ஆற்றிய உரை:-
சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களுடைய திருவுருவச்சிலையை இன்றைக்கு இந்த குன்றத்தூரிலே திறந்து வைப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன், பெருமையடைகின்றேன். அண்ணல் அம்பேத்கரின் சிலையை திறந்து வைப்பதன் மூலம் குன்றத்தூருக்கு மேலும் ஒரு சிறப்பு இன்றைக்கு கிடைத்திருக்கிறது.
தொடர்ந்து இரண்டு நாட்களாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் நான் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வந்திருந்தாலும், அந்த நிகழ்ச்சிகளுக்கெல்லாம் மகுடம் வைத்தது போல, அண்ணல் அம்பேத்கர் அவர்களுடைய திருவுருவச் சிலையை திறந்து வைக்கும் வாய்ப்பை எனக்கு அளித்ததற்கு உங்கள் அத்தனைபேருக்கும், நம்முடைய மாவட்ட கழக செயலாளர் அண்ணன் அன்பரசன் அவர்களுக்கும் எனது நன்றியை நான் தெரிவித்துக் கொள்கின்றேன்.
எனக்கு இன்னும் கூடுதல் மகிழ்ச்சி என்னவென்றால், சரியாக இரண்டு மாதங்களுக்கு முன்பு எழுச்சி தமிழர் அண்ணன் திருமா அவர்களும், நானும், அண்ணல் அம்பேத்கர் அவர்களுடைய சிலையை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வ கோட்டையில், திறந்து வைத்தோம். அன்றைக்கும் லேசாக மழை பெய்தது. இன்றைக்கும் மழை பயமுறுத்திக் கொண்டிருக்கின்றது. இருந்தாலும் இந்த மழைக்கு நடுவே திரண்டு இருக்கக் கூடிய உங்கள் அத்தனைபேருக்கும் மீண்டும் என்னுடைய நன்றியை நான் தெரிவித்துக் கொள்கின்றேன்.
நம்முடைய திராவிட இயக்கத்திற்கும் அண்ணல் அம்பேத்கரின் கொள்கைக்கும் கருத்துகளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இரண்டுமே சமத்துவத்தையும், சமூகநீதியையும் தான் வலியுறுத்துகின்றன. எனவே தான், அண்ணல் அம்பேத்கரையும், தந்தை பெரியாரையும் சமுதாயப் புரட்சியாளர்கள் என்று கூறிக்கொள்கின்றோம். அதனால்தான், அம்பேத்கார் அவர்களை தாடியில்லாத பெரியார் என்றும், பெரியாரை தாடி வைத்த அம்பேத்கர் என்றும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் அடிக்கடி குறிப்பிடுவார்.
ஒரு காலத்தில் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அறிவு, திறமை, தகுதி கிடையாது என்று தாங்கள் தான் அறிவுஜீவிகள் என்று ஒரு பிற்போக்குக் கூட்டம் நினைத்துக் கொண்டிருந்தது. இன்றைக்கும் ஒரு சில கூட்டம் நினைத்துக் கொண்டிருக்கிறது. அந்தக் கூட்டம் வாயடைத்து போகின்ற வகையில், இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தை எழுதித் தந்த அறிவாசான் அண்ணல் அம்பேத்கர் அவர்கள். எல்லாருக்குமான தலைவராக, எல்லாரும் கொண்டாடுகின்ற தலைவராக அவர் திகழ்ந்து கொண்டு இருக்கிறார். உயர்ந்து நிற்கின்றார்.
நம்முடைய முதலமைச்சர் அவர்கள் ஒரு வார காலம் அரசுப்பயணமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு, லண்டன், ஜெர்மனி சென்று திரும்பி வந்தார்கள். லண்டனில் உள்ள, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் நடந்த சுயமரியாதை இயக்க நூற்றாண்டு கருத்தரங்கில் கலந்துகொண்டு, தந்தை பெரியாருடைய படத்தை திறந்து வைத்து நமக்கெல்லாம் பெருமை சேர்த்தார். அதுமட்டுமல்ல, முக்கியமாக லண்டனில் இருக்கக்கூடிய அண்ணல் அம்பேத்கர் அவர்கள் வாழ்ந்த வீட்டுக்கும் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் சென்றார்கள். அண்ணல் அம்பேத்கர் அவர்கள் வாழ்ந்த அந்த இல்லத்தில், அந்த வீட்டுச்சுவற்றில் இருந்த தந்தை பெரியார் அவர்களும் அண்ணல் அவர்களும் பேசிக் கொண்டிருக்கும் ஒரு புகைப்படம், தன்னுடைய மனதை மிகவும் கவர்ந்தது, தனக்கு மிகவும் பிடித்த புகைப்படம் என்று முதலமைச்சர் அவர்கள் கூறி இருக்கின்றார்.
ஆகவே, நம்முடைய முதலமைச்சருடைய வெளிநாட்டு பயணம் என்பது முதலீடுகளை ஈர்க்க மட்டுமல்ல, தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கரின் கொள்கைகளை முதலீடு செய்வதற்கு என்று சொல்லி சென்று வந்தார் நம்முடைய முதலமைச்சர் அவர்கள்.
எந்த மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தி அதில் குளிர் காயலாம் என்று நம்முடைய இன எதிரிகள் நினைக்கின்றார்களோ, அந்த மக்கள் அனைவரும் இன்று ஒன்றுகூடி இருக்கின்றோம். இன்றைக்கு அந்த சிலைக்கு நாம் மரியாதை செலுத்தியிருக்கின்றோம். இந்த ஒற்றுமையை எப்படியாவது குலைக்க முடியுமா என்று நம்முடைய இன எதிரிகள் காத்து கொண்டிருக்கிறார்கள், முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த சூழ்ச்சிகளுக்கு எல்லாம் நம்முடைய தமிழ்நாட்டு இளைஞர்கள் என்றைக்கும் பலியாக மாட்டார்கள் என்று இந்த கூட்டத்தின் எழுச்சியை பார்க்கும்போது தெளிவாக தெரிகின்றது.
குறிப்பாக, இந்த நிகழ்ச்சிக்கு இளைஞர்கள், குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் மகளிர் வந்து இருக்கிறீர்கள். இந்த சிலையை திறந்து வைக்கும்போது, நீங்க அத்தனை பேரும் 'டாக்டர் அம்பேத்கர் வாழ்க' 'அண்ணல் வாழ்க' என்று முழக்கம் எழுப்பினீர்கள். நாம் எல்லாம், அம்பேத்கரின் சிலைக்கு முன்பாக ஒரு உறுதியை எடுத்துக் கொள்ள வேண்டும். அம்பேத்கர் அவர்கள் நமக்கு கொடுத்த இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை எப்பாடுபட்டாவது நாம் பாதுகாக்க வேண்டும். அதற்காக எந்த தியாகத்தையும் செய்ய நாம் தயாராக இருக்க வேண்டும். இந்த உறுதியை நாம் எல்லோரும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
அம்பேத்கர் அவர்கள் தந்த அரசியலமைப்புச் சட்டத்தை, எப்படியாவது மாற்றிவிட வேண்டும் என்று பாசிச பாஜக துடித்துக் கொண்டிருக்கிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், நமது தலைவர் அவர்களுடைய முயற்சியால், இந்தியா கூட்டணி உருவானது உங்களுக்குத் தெரியும்.
அதன் காரணமாக தான், தமிழ்நாட்டில் 39+1 பாண்டிச்சேரி உட்பட 40க்கு 40 தமிழ்நாட்டு மக்கள் மிகப்பெரிய வெற்றியை தேடிக்கொடுத்தீர்கள். அதன்காரணமாகத்தான் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் அடைந்த வெற்றியை தமிழ்நாட்டில் அவர்களால் பெறமுடியவில்லை, மெஜாரிட்டியை பெற முடியாமல், பாஜக தற்போது, கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறது.
தனிப்பெருன்பான்மை மட்டும் கிடைத்திருந்தால், நமது நாட்டின் அரசியல் சட்டத்தை பாசிச பாஜக கூட்டம் எப்போதோ மாற்றி இருக்கும். அதற்கு பதிலாக மனுதர்மத்தை சட்டமாக கொண்டு வந்து இருப்பார்கள். பாசிசக் கூட்டத்தின் அந்தக் கனவை நம்முடைய முதலமைச்சர் அவர்கள் உருவாக்கிய இந்தியா கூட்டணி தான் தவிடு பொடியாக்கியது.
தமிழ்நாட்டில் அந்த இந்தியா கூட்டணியின் அங்கங்களாக இருக்கும் காங்கிரஸ் பேரியக்கம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் அண்ணன் திருமா அவர்களும், கம்யூனிஸ்டு இயக்கங்களும், திமுகழகத்தோடு களத்தில் கைகோர்த்து நிற்கின்றன. அதனால் தான், பாசிச பாஜகவால் நெருங்க முடியாத கோட்டையாக நம்முடைய தமிழ்நாடு, தமிழ்மண் விளங்கி கொண்டிருக்கிறது.
அந்த ஒற்றுமையை சிதைக்க பாஜக ஏதேதோ முயற்சிகள் செய்து கொண்டிருக்கிறது. ஆனால், அவர்களின் எண்ணம் ஒரு போதும் தமிழ்நாட்டில் நிறைவேறாது. ஏனென்றால், அண்ணல் அம்பேத்கரையும் தந்தை பெரியார் அவர்களையும் தெளிவாக புரிந்துகொண்ட மண் நம்முடைய தமிழ்நாடு.
இங்கே பேசிய அண்ணன் திருமா அவர்கள் குறிப்பிட்டார், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் இந்தியாவிலேயே முதன் முதலாக, தமிழ்நாட்டில் சென்னையிலே இருக்கிற சட்டப் பல்கலைக்கழகத்துக்கு அம்பேத்கர் அவர்களுடைய பெயரைச் சூட்டினார்கள். அம்பேத்கர் அவர்களின் சொந்த மாநிலமான மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள (Marathwada University) மாரத்வாடா பல்கலைக்கழகத்திற்கு அம்பேத்கர் பெயரை வைக்க வேண்டும் என்று அப்போது பெரிய போராட்டம் நடந்தது. கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் அந்த போராட்டம் நீடித்தது. அந்த மாநிலத்தில் இருக்கக்கூடிய உயர்ஜாதி மக்கள் அதை தொடர்ந்து எதிர்த்து வந்தார்கள்.
இதைக் கேள்விப்பட்ட கலைஞர் அவர்கள், நம்முடைய திராவிட முன்னேற்றக் கழக பொதுக்குழுவில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி, அங்கு இருக்கக்கூடிய பல்கலைக்கழகத்துக்கு அம்பேத்கர் அவர்களுடைய பெயரை வைக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினார். அதுமட்டுமல்ல அம்பேத்கருடைய பெயரை வைக்கச் சொல்லி, தமிழ்நாட்டில் இருந்து திமுக உடன்பிறப்புகள் தந்தி அனுப்ப வேண்டும் என்றும் கலைஞர் அவர்கள் உத்தரவு போட்டார்கள். தமிழ்நாட்டில் இருந்து அன்றைக்கு லட்சக்கணக்கான தந்திகள் மகாராஷ்டிரா மாநிலத்திற்கு சென்றது. இன்றைக்கு அந்த பல்கலைக்கழகத்திற்கு Dr Babasaheb Ambedkar Marathwada University என்று பெயர் வந்திருக்கிறது என்றால் அதற்கு மிக, மிக முக்கியமான ஒரு காரணம் கழகத்துடைய உடன்பிறப்புகளும் ஒரு காரணம் என்று என்னால் பெருமையோடு சொல்ல முடியும். இதெல்லாம் வரலாறு.
அதேபோல, இன்றைக்கு நம்முடைய முதலமைச்சர் அவர்கள், ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 14ம் தேதி அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளை சமத்துவ நாளாக அறிவித்து அதை சிறப்பாக கொண்டாடி வருகின்றார்.
நம்முடைய திராவிட மாடல் அரசினுடைய திட்டங்களால் இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களைவிட, தமிழ்நாட்டில் மட்டும் தான் ஒடுக்கப்பட்ட மக்கள் வேகமாக முன்னேறி வருகிறார்கள்.
அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம், வெளிநாடுகளில் உயர்கல்வி படிக்க ஆதி திராவிட மாணவர்களுக்கான நிதி உதவி போன்ற திட்டங்களின் மூலம் இன்றைக்கு ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில் இருந்து ஆய்வாளர்களும், தொழிலதிபர்களும் இப்போது உருவாகி வருகிறார்கள்.
நம்முடைய அரசின் திட்டங்களால் ஒடுக்கப்பட்ட சமூகத்தில் ஆண்கள் மட்டுமல்ல, இன்றைக்கு பெண்களும் ஆண்களுக்கு நிகராக இன்னும் சொல்லப் போனால் ஆண்களைவிட அதிகமாக முன்னேறி வருகின்றார்கள்.
தமிழ்நாட்டின் வளர்ச்சி பிடிக்காமல், புதியக் கல்விக்கொள்கை, மும்மொழிக் கொள்கை, இந்தித் திணிப்பு, தொகுதி மறுவரையறை, நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம் என்று ஒன்றிய பாஜக அரசு எல்லா வகையிலும் நம்முடைய தமிழ்நாட்டுக்கு அநீதியை இழைத்து வருகின்றது. இதை எல்லாம் துணிச்சலாக எதிர்க்கக்கூடிய இந்தியாவிலே ஒரே தலைவர் நம்முடைய கழகத் தலைவர் முதலமைச்சர் அவர்கள் உருவாகி வருகிறார்.
ஆகவே, நம்முடைய தலைவர் அவர்களின் முயற்சிகளுக்கெல்லாம் வந்திருக்கக்கூடிய நீங்கள் அத்தனைபேரும் பக்கபலமாக இருக்க வேண்டும். திமுக தலைமையில் அமைந்திருக்கக்கூடிய கூட்டணி, வெறும் அரசியல் கூட்டணி அல்ல, இது கொள்கைக் கூட்டணி என்பதை மீண்டும் நாம் நிரூபித்துக் காட்ட வேண்டும்.
2026-ல் கழக அணி இருநூறுக்கும் அதிகமான தொகுதிகளில் வென்றிட வேண்டும். அதை செய்து காட்டிட வேண்டும். அந்த வெற்றிக் கணக்கு, இந்த செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து துவங்க வேண்டும் என்று அந்த உறுதி மொழியை நீங்கள் ஏற்க வேண்டும். சங்கிகளின் சூழ்ச்சிகளை முறியடிக்க அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார் தந்த அறிவாயுதத்தை நம் கைகளில் ஏந்துவோம். அண்ணல் அம்பேத்கர் புகழ் ஓங்கட்டும்!தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வென்றே தீரும்! என்று சொல்லி இந்த வாய்ப்பிற்கு நன்றி கூறி விடைபெறுகின்றேன்.
இவ்வாறு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Also Read
-
தமிழ்நாட்டில் இனி ‘நோயாளிகள்’ இல்லை! ‘மருத்துவப் பயனாளர்கள்’ தான்! : விரைவில் அரசாணை!
-
ஓசூரில் ரூ.1,100 கோடி முதலீட்டில் புதிய உற்பத்தி திட்டம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!
-
ரூ.24,307 கோடி முதலீடு - 49,353 நபர்களுக்கு வேலைவாய்ப்பு : 92 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!
-
“எஃகு போன்ற உறுதியுடன் என் இலக்குகளில் வெற்றி பெறுவேன்!” : ஓசூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!
-
“தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்!” : ஓரணியில் திரண்டவர்களை உறுதியேற்க அழைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!