Tamilnadu

ஆடிட்டர் குருமூர்த்தியின் பொய் பரப்பல்! - தரவுகளுடன் விளக்கமளித்த தமிழ்நாடு அரசு தகவல் சரிபார்ப்பகம்!

இந்தியாவின் முதன்மை ஊடகங்களில் ஒன்றான ‘இந்தியா டுடே’ நடத்திய India Today Conclave South 2025 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஆடிட்டர் குருமூர்த்தி, தமிழ்நாட்டின் மொழிக் கல்வி குறித்து பேசியது சர்ச்சையாகியுள்ளது.

இந்தியா டுடே முன்னெடுத்த Conclave South 2025 நிகழ்வில், பல்வேறு அரசியல் தலைவர்கள் அழைக்கப்பட்டு, பல்வேறு விவாதங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலான கலந்துகொண்டு தனது பேச்சை பதிவு செய்தார்.

அதன் தொடர்ச்சியாக, அரசியல் விமர்சகர் என்கிற முறையில் ஆடிட்டர் குருமூர்த்திக்கும் இந்தியா டுடே குழு அழைப்பு விடுத்திருந்தது. அதனடிப்படையில், நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய குருமூர்த்தி, “தமிழ்நாட்டில் நடப்பு கல்வியாண்டை பொறுத்தவரை 1ஆம் வகுப்பில் தமிழ்வழி கல்வியில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை 70,000 மட்டுமே.

இதுவே, இந்தி பிரச்சார சபாவில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை 80,000 ஆக இருக்கிறது” என்ற ஆதாரமற்ற தகவலை முன்வைத்தார்.

இந்தியாவின் மற்ற மாநிலங்களைப்போல் அல்லாமல், தமிழ்நாட்டின் மொழிக்கொள்கையில் திணிப்புகளுக்கு இடமில்லாத சூழல் நிலவும் நிலையில், தமிழ்நாட்டின் இரு மொழிக்கொள்கையை பலவீனப்படுத்துவது போன்ற இந்த தகவல் பெரும் சர்ச்சையை உருவாக்கியது.

இந்நிலையில், இதனை சுட்டிக்காட்டி தமிழ்நாடு அரசு தகவல் சரிபார்ப்பகம், “தமிழ்நாட்டில் 2025-2026 கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் 1ம் வகுப்பில் தமிழ்வழிக் கல்வியில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை 2,14,769 பேர், 70,000 அல்ல.

மேலும், பள்ளிகளில் 1ஆம் வகுப்பில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கையையும், இந்தி பிரச்சார சபாவில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கையையும் (ஒரே வயதில் இருப்பதில்லை) ஒப்பிடுவது தவறானது.

இது முற்றிலும் தவறான தகவல் மற்றும் தவறான ஒப்பீடு” என திட்டவட்டமாக விளக்கமளித்துள்ளது.

Also Read: ”அனைத்து திட்டங்களையும் உடனே நிறைவேற்ற வேண்டும்” : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!