Tamilnadu

அரசு கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை மாணாக்கர் சேர்க்கை... அமைச்சர் கோவி.செழியன் முக்கிய அறிவிப்பு!

அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் இளநிலை மற்றும் முதுநிலை பாடப்பிரிவுகளுக்கான மாணாக்கர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப்பதிவு வசதியை 30.09.2025 வரை செயல்படவுள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி. செழியன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இது குறித்து உயர்கல்வித் துறை அமைச்சர் அவர்கள் நேற்று முன்தினம் (செப்.4) தெரிவித்துள்ளதாவது:

ஏழை, எளிய மாணாக்கர்கள் உயர்கல்வியினை பெற நிதி ஒரு தடையாக இருக்கக்கூடாது என்ற நோக்கோடு புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் திட்டங்களின் மூலம் அரசுப் பள்ளியில் பயின்று உயர்கல்வி சேர்க்கை பெறும் மாணாக்கர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறார் நமது முதலமைச்சர் அவர்கள். அதுமட்டுமின்றி உயர்கல்வி பெறும் மாணாக்கர்கள் திறன் வாய்ந்தவர்களாக அவரவர் துறைகளில் முதல்வர்களாக திகழ நான் முதல்வன் திட்டம் மூலம் திறன்மேம்பாடு பயிற்சி வழங்கப்படுகிறது. இதனால் உயர்கல்வியில் மாணாக்கர் சேர்க்கை ஆர்வம் உயர்ந்து வருகிறது.

இதனை கருத்தில் கொண்டு அரசுக் கல்லூரி இல்லாத பகுதிகளில் நடப்பாண்டில் மட்டும் புதியதாக 15 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை தொடங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் ஆணையிடப்பட்டு, அவ்விடங்களில் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும், மாணவர்களின் தேவைக்கேற்ப 15,000க்கும் மேற்பட்ட மாணாக்கர் சேர்க்கை இடங்கள் பல்வேறு பாடப்பிரிவுகளில் உருவாக்கப்பட்டன. 

அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை முதலாமாண்டு மாணாக்கர் சேர்க்கைகான விண்ணப்பப் பதிவினை www.tngasa.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிப்பதற்கு உரிய வழிவகைகள் செய்யப்பட்டு மேற்கண்ட பாடப்பிரிவுகளில் மாணாக்கர் சேர்க்கை பெற்றுள்ளனர். இணையதளத்தில் விண்ணப்ப பதிவு மேற்கொள்ள தவறவிட்ட மாணாக்கர்களும் உயர்கல்வி பெற வேண்டும் என்ற நோக்குடன் விண்ணப்ப பதிவு இணையதளம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இவ்விணையதளம் 30.09.2025 வரை தொடர்ந்து செயல்பட வழிவகை செய்யப்பட்டுள்ளது.

எனவே, இவ்வாய்ப்பினைப் பயன்படுத்தி மாணாக்கர்கள் தாங்கள் சேர விரும்பும் மேற்கண்ட இளநிலை மற்றும் முதுநிலை பாடப்பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களுக்கு www.tngasa.in என்ற இணையதளத்தில் 30.09.2025-க்குள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு உயர்கல்வித் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Also Read: ஹிந்துஜா குழுமம் ரூ.5000 கோடி முதலீடு: முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தில் 13,016 கோடி முதலீடுகள் ஈர்ப்பு!