Tamilnadu

இந்த வாய்ப்பை இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சொன்னது என்ன?

2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1ஆம் தேதியன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அர்களால் தொடங்கப்பட்ட நான் முதல்வன் திட்டம், தமிழ்நாட்டில் உயர்கல்வியில் புரட்சியை ஏற்படுத்தும் ஒரு மாபெரும் திட்டமாகும். இத்திட்டம் பொறியியல், கலை மற்றும் அறிவியல், பாலிடெக்னிக் மற்றும் தொழிற்பயிற்சி மாணாக்கர்களுக்கு கல்வியாளர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள், வழிகாட்டிகள் மற்றும் நிர்வாகிகள் மூலம் திறன்களை வளர்க்கும் வகையில் ஒருங்கிணைந்த திறன் பயிற்சி வகுப்புகள் இத்திட்டத்தின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக, நான் முதல்வன் திட்டத்தைப் பொறுத்தவரை நகர்ப்புற மாணாக்கர்களின் திறன்களுக்கு இணையாக ஊரகப்பகுதியைச் சேர்ந்த மாணாக்கர்களுக்கும் முன்னணி தொழில் நிறுவனங்கள் மூலம் தொழில்துறை சார்ந்த திறன் பயிற்சிகள் வழங்குகிறது. இத்திறன் பயிற்சி வகுப்புகளை மாணவர்கள் எளிதில் கட்டணமின்றி பெற ஏதுவாக www.naanmudhalvan.tn.gov.in என்ற பிரத்யேகமான இணையதளம் செயல்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, நான் முதல்வன் திட்டத்தின் கீழ் திறன் பயிற்சி பெற்ற இளைஞர்களின் விவரங்களை அறிய இன்றைய தினம் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நான் முதல்வன் திட்டத்தின் ஒரு பகுதியாக தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் முயற்சியால் உருவாக்கப்பட்ட முன்னோடி டிஜிட்டல் தளமான “தமிழ்நாடு திறன் பதிவேடு” (AI-Powered TNSKILL Registry) என்ற தளத்தை தொடங்கி வைத்தார்கள்.

தமிழ்நாடு திறன் பதிவேட்டுத் தளமானது தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளைப் பயன்படுத்தி குரல் தேர்வு மூலம் AI தொழில் நுட்பத்தை பயன்படுத்தி மற்றும் Chatbot உதவியுடன் தொழில் நிறுவனங்கள் எளிதாக தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் திறன் பயிற்சி பெற்ற தமிழ்நாட்டு மாணவர்களின் விவரங்களை பெற்று, அவர்களின் திறனுக்கேற்ற வேலைவாய்ப்பினை வழங்க இயலும். பொறியியல், கலை மற்றும் அறிவியல், டிப்ளமோ, மற்றும் தொழிற்பயிற்சி போன்ற பிரிவுகளில் நான் முதல்வன் திட்டத்தின் மூலம் பயின்று இதுவரை திறன் சான்றிதழ்கள் பெற்ற 13.7 இலட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களின் விபரங்கள் இத்தளத்தில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, இத்தளத்தில் வேலைவாய்ப்பை வழங்கும் தொழில் நிறுவனங்கள் தாங்களாகவே பதிவு செய்து அவர்களுக்கு தேவையான திறன் பயிற்சி பெற்ற இளைஞர்களின் விவரங்களைக் கொண்டு தங்கள் நிறுவனங்களுக்குத் தேவையான பணியாளர்களை தேர்வு செய்திட வழிவகை செய்கிறது. மேலும், இத்தளம் தகுதி வாய்ந்த இளைஞர்களை தேர்வு செய்வதுடன், அவர்களுக்கு நேர்காணல் தொடர்பான மின்னஞ்சல், குறுஞ்செய்தி, மற்றும் வாட்ஸ்சப் மூலம் நேர்முகத் தேர்விற்கான தகவல்களை அனுப்பவும், தொடர் கண்காணிப்பு மற்றும் பணி நியமனம் பெற்ற விவரங்களைத் தெரிவிக்கவும் இத்தளத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். இதனுடன் வேலைவாய்ப்புகள், திறன் பயிற்சிகள், Hackathons போன்ற நிகழ்வுகளை அறிவிக்கவும், இளைஞர்களின் விருப்பத்தை அறிய வாக்கெடுப்பு வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம் .

மேலும், நான் முதல்வன் திட்டத்தின் மூலம் பயன்பெறும் இளைஞர்கள் பதிவு செய்த கைப்பேசி எண்ணிற்கு வரும் OTP வாயிலாக எளிதாக இதில் உள்நுழையலாம். பயனாளர்கள் அவர்களின் தொடர்பு எண், புதிய திறன் சான்றிதழ்கள், மற்றும் பணி அனுபவ விவரங்களை AI Profile Builder மூலம் மேம்படுத்திக் கொள்ளலாம். இந்த மேம்படுத்தப்பட்ட சுய விவரங்களை Whatsapp, Linkedin, and Twitter போன்ற சமூக வலைத் தளங்களிலும் பகிர்ந்து கொள்ளலாம்.

தமிழ்நாடு திறன் பதிவேடுத் தளத்தை தொடங்கி வைத்து மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தெரிவித்ததாவது:

“கல்வியை வேலைவாய்ப்புடன் இணைப்பதற்கான ஒரு முக்கிய முன்னெடுப்பான நான் முதல்வன் திட்டத்தின் கீழ் முன்னோடி டிஜிட்டல் தளமான தமிழ்நாடு திறன் பதிவேட்டைத் தொடங்குவதில் நான் பெருமகிழ்ச்சியடைகிறேன்.

தொழில் நிறுவனங்கள் அவர்களுக்கு தேவையான திறன் பயிற்சி பெற்ற நமது மாநிலத்தின் இளைஞர்களை AI – Powered Skill Registry என்ற தளத்தில் Voice Search மற்றும் Chatbot Search மூலம் முற்றிலும் கட்டணமின்றி தகவல்களைப் பெற முடியும்.

இந்தத் தளம் கல்விக்கும் வேலைவாய்ப்புக்கும் இடையிலான பாலத்தை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல், ஒவ்வொரு தமிழ்நாட்டு இளைஞருக்கும் தகுதியான வேலைவாய்ப்பு இருப்பதை உறுதி செய்கிறது.

வேலைவாய்ப்புகளை வழங்கும் தொழில் நிறுவனங்கள் தங்கள் நிறுவனப் பணியிடங்களை நிரப்ப தேவையான திறன் பயிற்சி பெற்ற இளைஞர்களை அடையாளம் காணவும், தேர்வு செய்யவும் இந்த தளத்தை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள தொழில் நிறுவனங்களை நான் கேட்டுக்கொள்கிறேன்.

நமது இளைஞர்கள் தங்கள் சுயவிவரங்களை இத்தளத்தில் தொடர்ந்து புதுப்பிக்கவும், தங்கள் திறமைகளை வெளிப்படுத்தவும், வேலைவாய்ப்புகளைத் பெறவும் இந்த முன்னோடி டிஜிட்டல் தளமான தமிழ்நாடு திறன் பதிவேட்டை பயன்படுத்துமாறும் நம் தமிழ்நாட்டு இளைஞர்களை நான் கேட்டுக் கொள்கிறேன்.

நமது திராவிட மாடல் அரசின் “உலகை வெல்லும் இளைய தமிழகம்” என்ற கூற்றிற்கினங்க தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு தேவையான திறன் பயிற்சிகளை வழங்குவதுடன் உலகலாவிய மற்றும் முன்னணி நிறுவனங்களில் அவர்களின் திறமைக்கேற்ற பணி வாய்ப்புகளை பெற்றுத் தந்து அவர்களின் நீடித்த வளர்ச்சியில் தமிழ்நாடு அரசு தொடர்ந்து பங்களிக்கும் என்பதை நான் உறுதியுடன் கூறிக் கொள்கிறேன்.

இந்த முயற்சி இந்தியாவின் திறன் தலைநகராக தமிழ்நாடு உள்ளது என்ற நிலையை மேலும் வலுப்படுத்துவதுடன் தமிழ்நாட்டின் டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை அடைய ஏதுவாக அமைகிறது. மேலும் தமிழ்நாட்டு இளைஞர்கள் உலகளவில் போட்டித்தன்மை வாய்ந்தவர்களாகவும் தொழில்துறைக்குத் தயாராகவும் இருப்பதை இதுபோன்ற நடவடிக்கைகள் உறுதி செய்கிறது.

இவ்வாறு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.

Also Read: ”பொய் செய்தியற்ற சமூகத்தை அமைப்போம்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!