தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சமூக ஊடக சவால்களை எதிர்கொள்வது குறித்து நாட்டு நலப்பணித்திட்ட மாணாக்கர்களுக்கு நடைபெற்ற 3 நாள் பயிற்சி பட்டறையின் நிறைவு நாளில் இன்று சென்னை கலைவாணர் அரங்கில் கலந்து கொண்டு தலைமை உரையாற்றினார்கள்.
அதன் விவரம் வருமாறு:-
உங்கள் அனைவருக்கும் என்னுடைய காலை வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். சமூக ஊடக சவால்களை எதிர்கொள்வது குறித்து நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களுக்கான இந்த பயிற்சி பட்டறை விழாவில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்த சிறப்புக்குரிய நிகழ்ச்சியில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் உங்களை சந்தித்து பேசுகின்ற வாய்ப்பு கிடைத்ததை நான் பெருமையாக நினைக்கின்றேன். உங்களைப் பார்க்கும்போது, எனக்கு என்னுடைய கல்லூரி நாட்கள் நியாபகத்திற்கு வருகின்றது. நான் கல்லூரி பயிலும்போது, தேசிய மாணவர் படையில் சேர முயற்சித்தேன். ஆனால், என்னால் அதில் சேர இயலவில்லை. ஆகவே, நாட்டு நலப்பணித்திட்டத்தில் சேர்ந்தேன். இன்றைக்கு துணை முதலமைச்சராக மக்கள் பணியாற்றுகிறேன். இந்த மக்கள் சேவைக்கு தொடக்கமாக இருந்தது, கற்றுக் கொடுத்தது, நாட்டு நலப்பணித்திட்டம் தான்.
உங்கள் வயதில் இருக்கும் பலர், கேளிக்கைகள், கொண்டாட்டங்களை நோக்கி செல்வார்கள். ஆனால், நீங்கள், நாட்டு நலப்பணித்திட்டத்தில் சேர்ந்து மக்களுக்காக நாட்டு நலப்பணிகளை செய்து வருகிறீர்கள். அப்படிப்பட்ட உங்களை எவ்வளவு பாராட்டுனாலும் ஈடாகாது. அதனால் தான் நம்முடைய திராவிட மாடல் அரசு நாட்டு நலப் பணித்திட்ட மாணவர்களுக்காக ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது.
குறிப்பாக, பேரிடர் காலத்தில் உயிரைப் பணையம் வைத்து மக்களைக் காப்பாற்றும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களுக்கான வருடாந்திர ஊக்கத்தொகையை 50 லட்சத்தில் இருந்து, ஒரு கோடி ரூபாயாக நம்முடைய அரசு உயர்த்தி உள்ளது.
அதே போன்று, முன்பு எல்லாம், குடியரசு தின அணிவகுப்பில் கலந்து கொள்ள, டெல்லிக்கு இரயிலில் சென்று வருவீர்கள். அவ்வாறு சென்று வரும்போது, பயணத்துக்கு மட்டும் 5 அல்லது 6 நாட்கள் ஆகும் என என்னிடம் தெரிவித்து இருந்தீர்கள். இதனை நான் நம் முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு எடுத்துச் சென்ற போது, நம் முதலமைச்சர் அவர்கள், இனி தமிழ்நாட்டு நாட்டு நலப் பணித்திட்ட மாணவர்கள் விமானத்தில் தான் டெல்லி குடியரசு தின அணிவகுப்பிற்கு சென்று வரவேண்டுமென உத்தரவிட்டார்கள். அதனால் தான், கடந்த சில ஆண்டுகளா நீங்கள் இதுபோன்ற நிகழ்ச்சிக்கு விமானத்தில் சென்று வர வாய்ப்பாக அமைந்துள்ளது.
உங்களுக்கு நாட்டு நலப்பணித்திட்டத்தில் எவ்வளவோ பயிற்சிகள் வழங்கப்பட்டு இருக்கலாம். ஆனால், இன்றைக்கு உங்களுக்கு கொடுக்கப்படுகின்ற பயிற்சி மிக மிக முக்கியமானது.
சமூக ஊடகங்கள் பெருகியுள்ள இந்த கால கட்டத்தில், மிகப்பெரிய அளவிலான பொய்யான செய்திகளும், வதந்திகளும் பரப்பப்பட்டு வருகிறது. இன்றைக்கு இந்தியாவில் ஒரு பாசிச கும்பல், பொய்ச்செய்தி பரப்புறதையே அடிப்படை கொள்கையாக கொண்டுள்ளார்கள்.
பொய்யான செய்திகள் மூலம், மக்களிடையே குழப்பம் ஏற்படுத்தவும், அறிவை மழுங்க செய்யும் நோக்கத்தோடு தான் பொய்யான கதைகளை அவிழ்த்து விட்டுகொண்டே உள்ளார்கள். இதுபோன்ற பொய்யான செய்திகளை எவ்வாறு கையாள்வது என்ற கேள்விகள் உலகம் முழுவது எழுந்து கொண்டே உள்ளது.
வதந்திகளைப் பொறுத்தவரை இரண்டு வகைகள் உண்டு. ஒன்று பொய்யான தகவல். இரண்டாவது தவறான தகவல், பொய்யான தகவல் என்பது எந்த உள்நோக்கமும் இல்லாம பரவுகிற பொய்செய்திகள். ஆனால், இந்த தவறான தகவல் என்பது திட்டமிட்டு, உள்நோக்கத்தோடு பரப்பப்படுகிற செய்தியாகவே அமைந்துள்ளது.
பொய்யான தகவலை விட தவறான தகவல் மிக, மிக ஆபத்தானது. குறிப்பாக, உலகளாவிய அபாயங்கள் குறித்த 2024, அறிக்கையின் படி, உலகத்தில் இன்றைக்கு இருக்கிற மிகப்பெரிய ஆபத்துகளில் இண்டாவது இடத்தில் தவறான தகவல்கள் தான் உள்ளது.
இன்றைக்கு வேண்டுமானால் இரண்டாவது இடத்தில் இருக்கலாம். ஆனால், இன்னும் 2 ஆண்டுகள் கழித்து, இந்த தவறான தகவல் மற்றும் பொய்யான தகவல் இரண்டும் தான் உலகத்துலேயே மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கப் போகின்றது. போலிச் செய்திகள் மட்டுமில்ல, இன்றைக்கு வெறுப்புப் பேச்சும் பெரிய அளவில் நாட்டையே பாதித்து வருகிறது.
குறிப்பாக சிறுபான்மையின மக்கள், ஒடுக்கப்பட்ட மக்கள், வெறுப்புப் பேச்சால் மிகவும் பாதிக்கப்படுற சூழல் உள்ளது. இதற்கு பல உதாரணங்கள் உள்ளன. குறிப்பாக, வட மாநிலங்களில் பீஃப் வைத்திருப்பதாக கூறி கும்பலாக அடிப்பதை எல்லாம் பார்த்தோம்.
வட மாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுறாங்கன்னு ஒரு பொய்யை பரப்பினார்கள். உடனே பீகார்ல இருந்து அலுவலர்களை வர வைத்து, வட மாநில தொழிலாளர்கள் இருக்கிற இடங்களுக்கு எல்லாம், நம்ம அரசு சார்பில் அழைத்து சென்று காட்டினோம். அவர்கள் இங்கு மிகவும் பாதுகாப்பாகத்தான் உள்ளார்கள் என பீஹாரிலிருந்து வந்த அரசு அதிகாரிகள் உறுதி படுத்தினார்கள்.
அதுமட்டுமல்லாமல், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னால், நான் ஒரு நிகழ்ச்சியில் பேசினேன். பிறப்பால் ஏற்றத்தாழ்வு சொல்கின்ற எந்த விஷயத்தையும் அழிக்கணும் என பேசினேன். உடனே, என் பேச்சை திரித்து, நான் சொல்லாத விஷயங்களையும் சொன்னேன் என, ஒரு கும்பல் நாடு முழுக்க பரப்பிவிட்டனர்.
அதற்காக, என் தலையை சீவினால் 10 இலட்சம் தருகிறேன் என ஒரு சாமியார் சொன்னார். மற்ற மாநிலங்கள் போல தமிழ்நாடு எதையும் உடனே நம்பாது. ஏன் என்றால், இது தந்தை பெரியாரால் பண்படுத்தப்பட்ட மண். தந்தை பெரியார் அவர்கள் ஒரு விஷயத்தை யார் சொன்னாலும், ஏன் நானே சொன்னாலும் உடனே நம்பாத. “உன் பகுத்தறிவுக்கும் – புத்திக்கும் அது சரி என்று பட்டால் மட்டும் ஏத்துக்க. இல்லை என்றால், ஏன், எதற்கு என்று கேள்வி கேளு” என்று சொன்னவர் தான் நம் தந்தை பெரியார் அவர்கள்.
அந்த வழியில், தவறான தகவல்களைத் தடுப்பதுடன், இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திடவும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலோடு, அரசு சார்பில் ஒரு பிரத்யேக உண்மைச் சரிபார்ப்புப் பிரிவு தொடங்கப்பட்டது.
இன்றைக்கு தமிழ்நாடு உண்மை சரிபார்ப்புப் பிரிவு (Tamil Nadu Fact Checking Unit) செயல்படுகிற வேகத்தை பார்த்து, தவறான தகவல்கள் பரப்புகின்ற கும்பல் கதறி கொண்டு இருக்கின்றார்கள். இதற்கு கடந்த ஆண்டுகளை விட சமீப காலமாக தவறான தகவல்கள் பரப்பப்படுவது தமிழ்நாட்டில் மிகவும் குறைந்துள்ளது. அதற்கு உண்மை சரிபார்ப்புப் பிரிவுக்கு, என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.
சமூக ஊடகங்களில் தவறான தகவல்களை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து மாணவர்கள், அரசு அலுவலர்கள், பேராசிரியர்கள் என இதுவரை 47 ஆயிரம் பேருக்கு இப்பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
அதனுடைய தொடர்ச்சியாகத் தான், இன்றைக்கு இந்த பயிற்சி பட்டறை உங்களுக்காக நடத்தப்படுது. இந்த பயிற்சி பட்டறையில் கலந்து கொள்கின்ற நீங்கள் பிற நபர்களிடமும் இதை பற்றி எடுத்துச் சொல்லுங்கள். இனிமேல் நீங்கள் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கம் போனால், அதில் வருகின்ற Reels எல்லாம் Reel-ஆ இல்லை Real-ஆ என்று உறுதி செய்து கொள்ள வேண்டும்.
முக்கியமாக, நீங்கள் எல்லோரும் சமூகத்தில் தவறான தகவல்களை வீழ்த்துவதற்கான போர்வீரர்களாக செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன். அதற்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். பொய்கள் வீழட்டும், உண்மை ஓங்கட்டும்! பொய்ச் செய்தியற்ற சமூகத்தை அமைப்போம் என்று சொல்லி விடைபெறுகின்றேன். நன்றி வணக்கம்! இவ்வாறு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.