Tamilnadu

”சென்னை வெறும் ஊரல்ல; தமிழ்நாட்டின் இதயத்துடிப்பு” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

1639 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22 ஆம் தேதி சென்னை நகரம் தோற்றுவிக்கப்பட்டது. சென்னப்ப நாயக்கர் என்பவரின் மகன் வெங்கடப்ப நாயக்கரிடம் இருந்து கிழக்கிந்திய கம்பெனியை தொடங்குவதற்காக பிரான்சிஸ்டே என்பவர் இப்போது இருக்கும் புனித ஜார்ஜ் கோட்டை இருக்கும் நிலத்தை எழுதி வாங்கினார்.

இப்படி சிறியதாக உருவான ஒரு நகரம் இன்று கடல் அளவு பரந்து பிரிந்து கிடக்கிறது. தமிழ்நாட்டின் தலைநகரமாகவும் திகழ்கிறது. சென்னை சென்றால் பிழைத்துக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கையை 386 ஆண்டுகளாக சிதைக்காமல் எல்லோரின் வாழ்க்கையிலும் ஒரு வெளிச்சத்தை இன்று வரை ஏற்றி வருகிறது இந்த சென்னை.

இந்த சிங்கார சென்னையின் 386 ஆவது ஆண்டு இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னை வெறும் ஊரல்ல; தமிழ்நாட்டின் இதயத்துடிப்பு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், "எந்தெந்த மூலைகளில் இருந்தோ நண்பர்களை அளித்து, வாழ வழிதேடுவோருக்கு நம்பிக்கையை அளித்து, பல பெண்களுக்குப் பறக்கச் சிறகுகளை அளித்து, எத்தனையோ பேருக்கு முதல் சம்பளத்தை அளித்து,சொந்த ஊரில் அடையாளத்தை அளித்து,

மொத்தத்தில் நமக்கெல்லாம் வாழ்வளித்த சீரிளம் சென்னைக்கு அகவை 386.சென்னை வெறும் ஊரல்ல; தமிழ்நாட்டின் இதயத்துடிப்பு! வணக்கம் வாழவைக்கும் சென்னை" என தெரிவித்துள்ளார்.

Also Read: அடக்குமுறையின் உச்சம் - பா.ஜ.கவின் சர்வாதிகார சட்டத்திற்கு முரசொலி தலையங்கம் கடும் கண்டனம்!