Tamilnadu

“இன்றைய அதிமுக பற்றி அன்றைக்கே ஹைக்கூ கவிதையை கூறினார் இரகுமான் கான்” - துணை முதலமைச்சர் கிண்டல்!

சென்னை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் இன்று நடைபெற்ற கழக நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் அ. இரகுமான் கான் அவர்கள் எழுதிய "நியாயங்களின் பயணம்", "மெளனமாய் உறங்கும் பனித்துளிகள்", "உலகமறியா தாஜ்மஹால்கள்", "பூ... பூக்கும் இலையுதிர் காலம்", "வானம் பார்க்காத நட்சத்திரங்கள்" ஆகிய 5 நூல்கள் மற்றும் "இடி முழக்கம்" அ. இரகுமான் கான் சட்டமன்றப் பேருரைகள் ஆகிய நூல்களை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

இந்த நிகழ்வில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

அப்போது விழா மேடையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது வருமாறு :

திராவிட முன்னேற்றக் கழகத்துடைய இடி முழக்கமாக திகழ்ந்த மதிப்பிற்குரிய இரகுமான்கான் மாமா அவர்களுடைய 5 நூல்கள் மற்றும் அவரது சட்டமன்ற உரைத்தொகுப்பு நூலின் வெளியீட்டு விழாவில், வரவேற்புரை ஆற்றுவதில் நான் மிகுந்த பெருமையடைகின்றேன்.

நேற்றைய தினம், இரகுமான்கான் மாமாவுடைய 5-ஆவது நினைவு நாள், இன்றைக்கு அவருடைய 6 நூல்கள் இங்கே நம்முடைய தலைவர் அவர்களால் வெளியிடப்பட இருக்கின்றன.

மிகுந்த சிரத்தை எடுத்து, மிகச்சரியான நேரத்தில், இந்த நூல்களை கொண்டு வந்துள்ள, கழகத்துடைய சிறுபான்மை நல உரிமைப்பிரிவுச் செயலாளர் சகோதரர் சுபேர்கான் அவர்களுக்கும், அவருடைய சகோதரர் ரியாஸ் அவர்களுக்கும் என்னுடைய பாராட்டுகளையும், வணக்கங்களையும் நான் தெரிவித்துக் கொள்கின்றேன்.

நம்முடைய கழகம் 13 ஆண்டுகள் எதிர்க்கட்சியாக இருந்த சமயத்தில் ஆளுங்கட்சியை சட்டசபையில் கேள்விகளாலும், தங்களுடைய சிறப்பான வாதங்களாலும் அதிரச் செய்தவர்கள் மூன்று பேர்.

அதில், ஒருவர், இன்றைக்கு நாம் கொண்டாடிக் கொண்டிருக் கூடிய நம்முடைய இரகுமான்கான் ஐயா அவர்கள். மற்றொருவர், நம்முடைய கழகத்துடைய பொதுச் செயலாளர் துரைமுருகன் மாமா அவர்கள், அடுத்தது அய்யா க.சுப்பு அவர்கள்!

இவர்களை தான், கழகத்தின் தலைவர் அவர்களும், கழகத்தின் உடன்பிறப்புகளும் கழகத்தின் இடி, மின்னல், மழை என்று புகழ்ந்தார்கள். அந்த வகையில், நம்முடைய இன எதிரிகள் மீது தன் பேச்சாற்றலால் இடியாக இறங்கியவர் தான் இரகுமான் கான் மாமா அவர்கள்.

இரகுமான்கான் மாமா அவர்கள், கலைஞர் அவர்களுடைய மனம் கவர்ந்த பேச்சாளராக மட்டுமின்றி எழுத்தாளராகவும் திகழ்ந்தவர். கலைஞர் அவர்களின் மீது அளவற்ற அன்பைக் கொண்டிருந்தவர். நம்முடைய தலைவர் அவர்களின் மீதும் மிகுந்த நம்பிக்கையும், அன்பும் கொண்டிருந்தவர். முரசொலியில் அவர் எழுதிய கட்டுரைகள் ‘நியாயங்களின் பயணம்’ என்ற தலைப்பில் இங்கே தலைவர் அவர்கள் வெளியிட இருக்கின்றார்கள்.

இந்தக் கட்டுரைத் தொகுப்புக்கான பணிகளை இரகுமான்கான் மாமா, பல ஆண்டுகளுக்கு முன்பே முடித்துவிட்டார். ஆனால், இந்த நூலை அவர் அப்போது வெளியிடவில்லை. காரணம், நம்முடைய தலைவர் அவர்கள், முதலமைச்சர் நாற்காலியில் அமரட்டும். அப்போதுதான் நான் வெளியிடுவேன் என்று உறுதியோடு இருந்தார். இதை நம்முடைய தலைவர் அவர்கள் தன்னுடைய முன்னுரையிலும் குறிப்பிட்டுள்ளார்கள்.

இரகுமான்கான் மாமா அவர்கள் விரும்பியது போல, இன்றைக்கு முதலமைச்சராகவே வந்து அவருடைய நூல்களை நம்முடைய தலைவர் அவர்கள் வெளியிடுகிறார்கள். இது தான் திராவிட இயக்கம். இது தான் கழகத் தொண்டர்களுக்கும் தலைவருக்கும் உள்ள பாசப்பிணைப்பு. இந்த உணர்வு தான், இந்த இயக்கத்தை இன்றைக்கும் உயிரோட்டமாக வைத்திருக்கிறது.

அதே பாச உணர்வோடு தான் நானும் இந்த நிகழ்ச்சியில் வரவேற்புரை ஆற்ற வந்திருக்கிறேன். இது என்னுடைய குடும்ப விழா என்கிற உணர்வோடு இங்கே உங்கள் அனைவரையும் வருக, வருக என வரவேற்கின்றேன்.

இரகுமான் கான் மாமா அவர்களுடைய பேச்சாற்றல் காரணமாக அவரை நாம் 'இடி' என்று சொன்னாலும், அவர் எழுதிய கவிதை நூல்களை படித்துப் பார்த்தால், அவர் தென்றலாகவும் இருந்து இருந்திருக்கின்றார் என்று உங்களுக்கெல்லாம் புரியும்.

'நடைப்பிணம்' என்கிற தலைப்பில் ஒரு கவிதை எழுதியிருக்கின்றார். மனிதனுடைய ஐம்புலன்கள் இந்த சமூகத்திற்கு எப்படி பயன்பட வேண்டும் என்று அந்தக் கவிதை சொல்கிறது. கண்கள் சாதாரணமாகப் பார்க்கக் கூடாது, அநீதிகளை பார்க்க வேண்டும், கால்கள் சாதாரணமாக நடக்கக் கூடாது, நியாயங்களை நோக்கி நடக்க வேண்டும், கைகள் பிறருக்கு நேசக்கரம் நீட்ட வேண்டும் என்பது தான் அந்தக்கவிதை.

இப்படி, எந்நாளும் சமூகத்தின் நலனுக்காக சிந்தித்து வாழ்ந்தவர் தான் இரகுமான்கான் மாமா அவர்கள்.

பெரிய கவிதைகள் மட்டுமல்ல, ஹைக்கூ கவிதைகளையும் சிறப்பாக எழுதியிருக்கின்றார். இன்றைக்கு தமிழ்நாட்டு அரசியலில் அடிமைகள் பாசிஸ்ட்டுகளைப் பார்த்து பயப்படுகிறார்கள், பம்முகிறார்கள். இந்த அடிமைகளுக்காக, அன்றைக்கே ஒரு ஹைக்கூ கவிதையை இரகுமான் கான் மாமா அவர்கள் எழுதி இருக்கின்றார். "மன்னராக இருந்தாலும்.. மண்டியிடாது.. மண் பொம்மை" . ஆனால், மண் பொம்மைகள் கூட செய்யாததை, இன்றைக்கு சில அடிமைகள் டெல்லியிடம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

முரசொலியில் இரகுமான் கான் மாமா எழுதிய கட்டுரைகளின் தொகுப்பான 'நியாயங்களின் பயணம்' என்கிற புத்தகம் இங்கே வெளியிடப்பட இருக்கிறது. முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுடைய சட்டமன்றப் பொன் விழாவையொட்டி இரகுமான்கான் அவர்கள் எழுதிய கட்டுரை ஒன்று இந்த நூலில் இருக்கிறது.

அதிலே சட்டமன்றத்திலே கலைஞர் அவர்களுடைய நகைச்சுவையான பதில்களைப் பற்றி எழுதியிருக்கிறார். அதில் ஒன்றே ஒன்றை மட்டும் இங்கே குறிப்பிட நான் விரும்புகின்றேன். 1982 ஆண்டில் திருச்செந்தூர் முருகன் கோயிலில் வேல் ஒன்று காணாமல் போய்விட்டது. அந்த கோயிலின் அதிகாரி ஒருவரும் அந்த சம்பவத்தில் கொல்லப்பட்டார். அதற்காக நீதி கேட்டு கலைஞர் அவர்கள் திருச்செந்தூரை நோக்கி தொண்டர்களோடு நடைப்பயணம் சென்றார்.

இதுபற்றி சட்டமன்றத்தில் பேசிய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர் ஒருவர், "கலைஞர் அவர்கள் திருச்செந்தூரை நோக்கி நடைப்பயணம் சென்றார். ஆனால், அங்கேயுள்ள முருகன், அவரைப் பார்க்க விரும்பாமல் எம்.ஜி.ஆருடைய ராமாவரம் தோட்டத்திற்கு போய்விட்டார்" என்று கிண்டலாக பேசியிருந்தார். அந்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்.

அப்போது, சபையில் இருந்த கலைஞர் அவர்கள் உடனே எழுந்து "இதுவரைக்கும் முருகனுடைய வேல் தான் காணவில்லை என்று நாம் நினைத்தோம். இப்போது அதிமுக உறுப்பினர் சொல்வதைப் பார்த்தால், முருகனையே காணோம் என்று தெரிய வருகின்றது. முருகன் இருக்கும் இடத்தையும் சொல்லியிருக்கிறார். பேரவைத் தலைவர் அவர்களே, முருகனை மீட்டுத் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்," என்று கலைஞர் அவர்கன் அன்று நகைச்சுவையாக சட்டமன்றத்தில் பேசினார்.

உடனே, அப்போது சபாநாயகராக இருந்த ராஜாராம் அவர்கள் அந்த அதிமுக உறுப்பினரைப் பார்த்து, "நீ கொஞ்சம் சும்மா இருக்க மாட்டியா?" என்று கேட்டிருந்தார். ஒட்டுமொத்த சட்டசபையுமே அன்றைக்கு சிரிப்பலையால் அதிர்ந்தது.

இது மாதிரி, பல சுவாரஸ்யமான தகவல்களை இந்த கட்டுரை நூலிலே நீங்கள் படிக்கலாம். இப்படி 6 நூல்களும் 6 முக்கியமான வரலாற்றுக் கருவூலங்களாக நம்மிடைய வந்திருக்கின்றன. இந்த நூல்கள் கழக உடன்பிறப்புகள், மட்டுமின்றி தமிழர்கள் அனைவரின் கரங்களுக்கும் சென்று சேர வேண்டும்.

இந்த சிறப்புக்குரிய நூல்களை வெளியிட்டு உரையாற்ற வந்திருக்கும் முதலமைச்சர், கழகத் தலைவர் அவர்களை மீண்டும் வருக, வருக என்று வரவேற்று மகிழ்கின்றேன்.

விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்திருக்கக் கூடிய இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியினுடைய தலைவர், தகைசால் தமிழர் விருது பெற்ற அண்ணன் கே.எம். காதர் மொய்தீன் அவர்களையும் வருக, வருக என்று வரவேற்கின்றேன்.

மூத்த பத்திரிக்கையாளர் அண்ணன் நக்கீரன் கோபால் அவர்களையும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் ஜெ.எம். ஆருன் அவர்களையும், தமிழ் மாநில தேசிய லீக் கட்சியினுடைய தலைவர் அண்ணன் திருப்பூர் அல்தாஃப் அவர்களையும், அமைச்சர் அண்ணன் மா.சுப்பிரமணியன் அவர்களையும், சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதியரசர்கள் அக்பர் அலி அவர்களையும், திருமதி வாசுகி அவர்களையும், முன்னாள் அமைச்சர் அண்ணன் பொன்முடி அவர்களையும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணன் முகமது சகி அவர்களையும், சிறுபான்மையினர் நல ஆணையத் தலைவர் Father ஜோ. அருண் அவர்களையும், தமிழ்நாட்டினுடைய பல்வேறு பகுதிகளிலிருந்து வந்துள்ள சிறுபான்மையினர் நல உரிமை பிரிவைச் சேர்ந்த நிருவாகிகள் அத்தனை பேரையும் வருக, வருக என வரவேற்கின்றேன்.

சகோதரர் மருத்துவர் சுபேர்கான் உள்ளிட்ட மாமா இரகுமான்கான் அவர்களுடைய உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரையும், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமை கழக நிருவாகிகள், மாவட்டக் கழக செயலாளர்கள், மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி பேரூர் நிருவாகிகள் அத்தனை பேரையும், இளைஞரணி உள்ளிட்ட அனைத்து அணிகளைச் சேர்ந்த நிருவாகிகள் உறுப்பினர்களையும், மேயர் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளுடைய பிரதிநிதிகளையும், இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கக்கூடிய கழகத்தின் அனைத்து நிருவாகிகள், தோழமை இயக்கத் தலைவர்கள், அரசு அதிகாரிகள் அனைவரையும் வருக, வருக என்று வரவேற்கின்றேன்.

பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களையும் வரவேற்கின்றேன். எல்லாவற்றிற்கும் மேலாக முத்தமிழறிஞர் கலைஞருடைய உயிரிலும் மேலான அன்பு உடன் பிறப்புக்கள் உங்கள் அத்தனை பேரையும், உடன் பிறப்புகளை கழகத்தின் தொண்டர்களில் ஒருவனாக வரவேற்று மகிழ்கின்றேன்.

இரகுமான்கான் மாமா அவர்களுடைய இந்த நூல்கள் வெளியீட்டு விழாவில் மீண்டும் கழக ஆட்சி அமைத்திட நாம் அத்தனைபேரும் உறுதியேற்போம் என்று கூறி வாய்ப்பிற்கு நன்றி கூறி விடைபெறுகின்றேன்."

Also Read: ஒன்றிய அரசின் கருப்பு சட்டத்தை எதிர்ப்போம்: இரகுமான் கான் நூல்கள் வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் சூளுரை!