Tamilnadu

“அ.தி.மு.க-வுக்கும் - பா.ஜ.க-வுக்கும் பயம் வந்துவிட்டது.. அதனால்தான்...” - துணை முதலமைச்சர் தாக்கு!

சென்னை தெற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட வட்டம், பாக இளைஞர் அணி நிர்வாகிகள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கான அறிமுகக் கூட்டம் நேற்று மாலை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தை தலைமையேற்று நடத்திய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிர்வாகிகளிடையே பேசியது வருமாறு :

“சென்னை தெற்கு மாவட்டத்துக்குட்பட்ட சைதாப்பேட்டை - வேளச்சேரி தொகுதிகளில் புதிதாக பொறுப்புக்கு வந்துள்ள 759 பேருக்கும் என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வாய்ப்பை அளித்த மாவட்டக் கழகச் செயலாளர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. இன்று காலையில்தான் அறிவிப்பு வந்தது. மாலையில் இந்த அறிமுகக் கூட்டம் நடக்கிறது. இளைஞர் அணியால் மட்டுமே இதை சாதிக்க முடியும்.

எத்தனையோ நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டாலும் இளைஞர் அணி நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும்போது மட்டும் எனது சொந்த தம்பிகளைப் பார்க்கிற ஓர் உணர்வு. விளையாட்டுத்துறை அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர், துணை முதலமைச்சர் என இப்படி எத்தனையோ பொறுப்புகள் வந்தாலும், எனது மனதுக்கு நெருக்கமான பொறுப்பு என்றால், அது கழகத்தின் இளைஞர் அணிச் செயலாளர் என்ற பொறுப்புதான்.

இந்த சென்னை தெற்கு மாவட்டத்துக்கு மிக முக்கியமான சிறப்பு உண்டு. இந்த மாவட்டத்தில் இருக்கிற சைதாப்பேட்டை தொகுதியில் இருந்துதான் கலைஞர் அவர்கள் சட்டமன்றத்துக்குச் சென்றார். அதே போல, வேளச்சேரிக்கு இன்னொரு சிறப்பு உண்டு. நம் கழகத் தலைவர், முதலமைச்சர் அவர்களின் இல்லம் வேளச்சேரியில்தான் இருந்தது. அப்படிப்பட்ட தொகுதிகளில் இருந்து நீங்கள் வந்து இருக்கிறீர்கள் என்பது எனக்கு கூடுதல் மகிழ்ச்சி.

நம்முடைய இளைஞர் அணிக்கு மிகப்பெரிய வரலாறு உண்டு. கோபாலபுரம் தி.மு.க. இளைஞர் மன்றம் என்று ஆரம்பித்து, நம் தலைவர் விதை போட்டார். 1980-இல் மதுரை ஜான்சி ராணி பூங்காவில் அந்த விதை செடியானது. இன்று 45 வருடம் கழித்து, அந்தச் செடி இளைஞர் அணி என்ற ஆலமரமாக வளர்ந்து நிற்கிறது. இந்தியாவிலேயே ஓர் இயக்கத்துக்கு இளைஞர் அணி என்று முதலில் ஆரம்பித்தவர் நம் கழகத் தலைவர் அவர்கள்தான். தி.மு.க-வுக்குதான் அந்த சிறப்பு.

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களால், கழகத்தில் உருவாக்கப்பட்ட எத்தனையோ அணிகள் இருக்கின்றன. அந்த அணிகளுக்கு எல்லாம் முதன்மை அணி என்றால், அது இளைஞர் அணிதான். அப்படிப்பட்ட அணியில் நாமெல்லாம் நிர்வாகிகளாக இருப்பது நமக்கு பெருமை. இளைஞர் அணி இன்றைக்கு இந்த அளவு மிகப்பெரிய அளவில் வளர்ந்து இருக்கிறது என்றால், அதற்கு மாவட்ட - பகுதி - வட்டக் கழக நிர்வாகிகள் உங்களின் ஒத்துழைப்புதான் மிக முக்கிய காரணம்.

இன்றைக்கு இந்தியாவில் பல கட்சிகள், பூத் கமிட்டி அமைக்கவே சிரமப்படுகிற நேரத்தில், பூத்துக்கு ஒரு இளைஞர் அணி அமைப்பாளரை நாம் நியமித்து இருக்கிறோம் என்றால், அது நம் இளைஞர் அணியின் சாதனை. சாதாரணமாக இந்தப் பொறுப்புக்கு நீங்கள் வரவில்லை என காலரைத் தூக்கிவிட்டுச் சொல்லலாம்.

முதலில் மாவட்டக் கழகத்தில் இருந்து, பகுதி, வட்டச் செயலாளர்களின் பரிந்துரைகளை வாங்கினோம். பரிந்துரை செய்யப்பட்ட நபர்களிடம் அன்பகத்தில் இருந்து போனில் தொடர்பு கொண்டு ஒவ்வொருவரிடமும் தனித்தனியாகப் பேசினோம்.

அதில், உங்களின் பின்புலம், கொள்கை உறுதி, கழக உணர்வு, உங்கள் குடும்பத்துக்கும், கழகத்துக்கும் இருக்கின்ற தொடர்பு, சமூக வலைதளத்தில் நீங்கள் எந்த அளவுக்குத் துடிப்பாக இருக்கிறீர்கள் இப்படி எல்லாவற்றையும் கணக்கில் எடுத்துக்கொண்டு, உங்களை இந்தப் பொறுப்புக்கு நியமித்து இருக்கிறோம்.

ஆகவே, எவ்வளவு கட்டங்களைத் தாண்டி வந்து இருக்கிறீர்கள் என்பதை நீங்கள் யோசித்துப் பாருங்கள். உங்களுக்குக் கொடுத்திருப்பது, பதவி கிடையாது, பொறுப்பு என்பதை உணர்ந்து சிறப்பாக செயல்பட வேண்டும்.

இளைஞர் அணியில் நீங்கள் சரியாக உழைத்தால், நிச்சயம் உங்களுக்கான அங்கீகாரத்தை நான் வாங்கிக் கொடுப்பேன். அதற்கு இந்த மேடையே ஒரு சிறந்த உதாரணம். இங்கே மாவட்டக் கழகச் செயலாளர், மாண்புமிகு அமைச்சர் அண்ணன் மா.சுப்பிரமணியன் அவர்கள், பகுதி இளைஞர் அணி அமைப்பாளராக - மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளராக - தலைவர் அவர்கள் குழுவில் மாநில இளைஞர் அணி துணை அமைப்பாளராக சிறப்பாகச் செயல்பட்டு இன்றைக்கு மாண்புமிகு அமைச்சராக அமர்ந்திருக்கிறார்.

அவரின் இளைஞர் அணி பணிகளைப் பார்த்துத்தான் தலைவர் அவர்கள், அவரை மாவட்டக் கழகச் செயலாளராக ஆக்கி இருக்கிறார். தலைவர் அவர்கள் வகித்த சென்னை மாநகராட்சி மேயர் பொறுப்பிலும் சிறப்பாகச் செயல்பட்டவர் அண்ணன் மா.சுப்பிரமணியன் அவர்கள். அண்ணன் மா.சு அவர்கள் இளைஞர் அணிக்கு முழு சுதந்திரம் கொடுக்கிறார்.

இளைஞர் அணி தம்பிகளுக்கு, `அதைப் பண்ணாதே, இதைப் பண்ணாதே’ என்று கட்டுப்பாடு போடாமல், தட்டிக்கொடுத்து வேலை வாங்குகிற பண்புக்குச் சொந்தக்காரர்தான் அண்ணன் மா.சு அவர்கள்.

அதுமட்டுமல்ல, இளைஞர் அணியில் உங்களுடைய மண்டல பொறுப்பாளர் சகோதரர் ஜோயல், தலைவர் அவர்கள் இளைஞர் அணிச் செயலாளராக இருந்தபோது, துணைச் செயலாளராக பணியாற்றி, தலைவரின் பாராட்டைப் பெற்றவர். அன்றைக்கு தலைவருக்குத் துணையாக இருந்தார். இன்றைக்கு எனக்கு பக்கபலமாக இருக்கிறார்.

குறிப்பாக, சென்னை மண்டலத்தில் எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும், அதை ஜோயலிடம் ஒப்படைத்துவிட்டால், மிகச்சிறப்பாக, எழுச்சியோடு அதை ஏற்பாடு செய்வார். உங்களுடைய மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர், என் அருமை சகோதரர் பிரபாகர் ராஜா இங்கு இருக்கிறார். இளைஞர் அணி மாவட்டத் துணை அமைப்பாளராக சிறப்பாக பணியாற்றியவர்தான் பிரபாகர்ராஜா. அமைப்பாளராக அவர் ஆற்றிவரும் பணிகளைப் பார்த்து நம் தலைவர் அவர்கள் 2021 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுகிற வாய்ப்பைக் கொடுத்து, சிறப்பான சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றிக்கொண்டு இருக்கிறார்.

சகோதரர் சைதை கிருஷ்ணகுமார், பகுதி அமைப்பாளராக சிறப்பாக செயல்பட்டு, மாவட்ட துணை அமைப்பாளராக உயர்ந்து இருக்கிறார். அதே மாதிரி மாவட்டத் துணை அமைப்பாளர் சகோதரர் வேளச்சேரி விநாயகமூர்த்தி நீண்ட நாட்களாக அந்தப் பொறுப்பில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். மன்றத்தில் சிறப்பாக செயல்பட்ட தம்பி கோட்டூர் பிரகாஷ் அவர்கள், இன்றைக்கு மாவட்டத் துணை அமைப்பாளராக பாராட்டத்தக்க வகையில் பணியாற்றிக்கொண்டு வருகிறார்கள்.

இங்கு மட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதும், இளைஞர் அணியில் வேலை செய்தவர்கள், இன்றைக்கு அமைச்சர்களாக, மாவட்ட - ஒன்றிய - நகர - பகுதிக் கழகச் செயலாளர்களாக. நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்களாக - உள்ளாட்சி அமைப்புகளில் பிரதிநிதிகளாக மக்கள் பணியாற்றி வருகிறார்கள்.

இன்னும் சொல்லப்போனால், தமிழ்நாட்டுக்கு துணை முதலமைச்சரையும், முதலமைச்சரையும் கொடுத்த அணி நம் இளைஞர் அணிதான். அப்படிப்பட்ட பெருமை வாய்நத அணிக்கு நிர்வாகிகளாக நீங்கள் வந்து இருக்கிறீர்கள். அதனால், நான் உங்களிடம் கேட்டுக்கொள்வது எல்லாம் நீங்கள் உழைக்கத் தயாராக இருந்தீர்கள் என்றால், உங்களை உயர்த்த நாங்கள் தயாராக இருக்கிறோம்.

பொறுப்பு வாங்கிட்டோம், வாட்ஸ்-அப் ஸ்டேட்டஸ் வைத்து விட்டோம், நான்கு ஃபிளக்ஸ் பேனர் வைத்துவிட்டோம், விளம்பரம் கொடுத்துவிட்டோம் என்று இருக்கக்கூடாது, நாம் அனைவரும் களத்தில் இறங்கி வேலை பார்க்க வேண்டும் என்பதை மனதில்கொள்ள வேண்டும்.

தயவுசெய்து உங்கள் மினிட் புக்கை சரியாகக் கையாள வேண்டும். நாளைக்கு யாராவது உங்களை குறையோ, குற்றமோ சொன்னால், அதை மறுப்பதற்கான ஆதாரம்தான் உங்களிடம் இருக்கும் மினிட் புக். சிறு தவறுக்குக்கூட நாம் இடம் கொடுக்கக் கூடாது. ஏதாவது பிரச்சினை கிடைக்காதா, அதை வைத்து திமுகவுக்கு எதிராக அவதூறு பரப்பலாம் என்று எதிர்கட்சியினர் காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

இங்கு இருக்கின்ற ஒவ்வொருவரும் உங்களின் கையில் 100 வாக்காளர்களை வைத்து இருந்தீர்கள் என்றால், உங்களை யாராலும் தடுக்கவோ, தவிர்க்கவோ முடியாது. அதேமாதிரி சமூக வலைதளங்களிலும் சிறப்பாக இருக்க வேண்டும். உங்களுக்கு அன்பகத்திலிருந்து வருகின்ற அறிவுரைகளைப் பின்தொடருங்கள். தினசரி காலையில் முரசொலியை வாங்கிப் படியுங்கள்.

தலைவர் அவர்கள் இளைஞர் அணிக்கு என்று தனியாக பாசறைப் பக்கத்தை ஒதுக்கி கொடுத்து இருக்கிறார்கள். அது படிப்பதற்கு எளிதாக இருக்கும். தயவுசெய்து பாசறை பக்கத்தைத் தவறாமல் படித்துவிடுங்கள், அப்போதுதான் நம் தலைவர் அவர்களும், நமது கட்சியும் என்ன முடிவு எடுக்கிறது என்பதை நீங்கள் மக்களிடம் கொண்டுபோய் சேர்க்க முடியும்.

இங்கே பகுதிச் செயலாளர்கள் - வட்டச் செயலாளர்களும் வந்து இருக்கிறார்கள். உங்களுக்கு என்னுடைய வேண்டுகோள். புதிய பொறுப்புகளுக்கு வந்திருக்கின்ற தம்பிகள் அனைவருக்கும் பெரிதாக அரசியல் அனுபவம் இருக்காது. முதல் தலைமுறையாகக் கூட வந்து இருப்பார்கள். அவர்கள் தெரியாமல் ஏதாவது தவறு செய்தால், தயவுசெய்து அவர்களை புறக்கணிக்காதீர்கள். அவர்களை உடன் இருந்து வழி நடத்துங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்.

சென்னை தெற்கு மாவட்டம் மட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதும் நகர - பேரூர் வார்டுகள், ஊராட்சிக் கிளைகள் தோறும் இளைஞர் அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்களை நியமிக்க இருக்கிறோம். இப்படி நியமித்தால், இளைஞர் அணியில் நிர்வாகிகள் மட்டுமே 5 லட்சம் பேர் வருவார்கள். இந்தியாவிலேயே அசைக்க முடியாத ஓர் அமைப்பாக நம் திராவிட முன்னேற்றக் கழக இளைஞர் அணி இருக்கப் போகிறது.

சில இளைஞர்கள், உங்களின் நண்பர்கள், உறவினர்கள்கூட வேறுவேறு கட்சிகளில் இருப்பார்கள். அவர்களுக்கு நம் இயக்கத்தின் வரலாறுகளை, தியாகங்களை, கொள்கைகளை, அரசின் சாதனைகளை எடுத்துச் சொல்லுங்கள். இன்றைக்கு இளைஞர் அணி சார்பில், களத்தில் மட்டுமில்லாமல், கருத்தியல் ரீதியாவும் பல பணிகளை நாம் செய்கிறோம்.

இயக்கத்திற்கு என்று கொள்கைகள் இருக்கின்றன. மிகப்பெரிய வரலாறு இருக்கிறது. அதையெல்லாம் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். தமிழ்நாட்டுக்கு எது தேவை, எது தேவையில்லை என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். மாநில உரிமையை மீட்க வேண்டும் என்றால், நம் திராவிட முன்னேற்றக் கழகமும், நம் தலைவர் அவர்களும் எந்த அளவுக்கு போராடிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை நீங்கள் உணர வேண்டும்.

சட்டமன்றத் தொகுதிக்கு ஒரு கலைஞர் நூலகத்தை திறக்கத் தொடங்கி ஒரே வருடத்தில் மட்டும் 100-க்கும் அதிகமான நூலகங்களைத் திறந்து இருக்கிறது நம் கழக இளைஞர் அணி. சுமார் 200-க்கும் அதிகமான இளம் பேச்சாளர்களைத் தேர்வு செய்து தலைமையிடம் ஒப்படைத்து இருக்கிறோம். அடுத்து கலைஞர் மாணவர் பத்திரிகையாளர் திட்டத்தை, தொடங்கியுள்ளோம். திராவிட இயக்க ஆய்வாளர்கள்- எழுத்தாளர்களை ஊக்குவிக்க கலைஞர் நிதி நல்கைத் திட்டத்தை உருவாக்கி இருக்கிறோம். இதை எல்லாம் மக்களிடமும், குறிப்பாக இளைஞர்களிடமும் எடுத்துச் சொல்லுங்கள்.

அப்படி புதிய இளைஞர்களைச் சேர்ப்பது, தேர்தலுக்குப் பிறகும் நமக்கு மிகப்பெரிய பலமாக இருக்கும். ஆகவே, இந்தப் பணியை எல்லாம் நீங்கள் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்று விரும்பிக் கேட்டுக்கொள்கிறேன்.

இன்றைக்கு நம் அரசு, நம் முதலமைச்சர் அவர்கள் ஒவ்வொரு நாளும் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்திக்கொண்டு வருகிறார்கள். இந்தியாவும் இன்றைக்கு தமிழ்நாட்டைப் பாராட்டிக்கொண்டு இருக்கிறது. அது பொறுக்காமல்தான் ஒன்றிய பா.ஜ.க. அரசு, நம் அரசிற்கு பல்வேறு நெருக்கடிகளைக் கொடுத்துக்கொண்டு இருக்கிறது. நம் மாநிலத்தின் நிதி உரிமையைத் தொடர்ந்து பறித்துக்கொண்டு இருக்கிறார்கள்.

புதிய கல்விக் கொள்கை மூலம் இந்தித் திணிப்பு, தொகுதி மறுவரையறை என இவற்றை எல்லாம் எதிர்த்து குரல் கொடுக்கிற இந்தியாவிலேயே ஒரே தலைவர் நம் தலைவர் என்பதை நீங்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். இன்றைக்கு `ஓரணியில் தமிழ்நாடு’ மூலமாக 2 கோடிக்கும் அதிகமான உறுப்பினர்களைக் கழகத்தில் இணைத்திருக்கிறீர்கள்.

இதைப் பார்த்து, அ.தி.மு.க-வுக்கும் - பா.ஜ.க-வுக்கும் பயம் வந்துவிட்டது. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் இன்றைக்கு எங்குச் சென்று பேசினாலும், நம்முடைய ஓரணியில் தமிழ்நாடு திட்டத்தைப் பற்றித்தான் அவர் பேசுகிறார்.

அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணி திரும்பவும் வந்தால், தமிழ்நாட்டுக்குள் மீண்டும் இந்தித் திணிப்பு வரும், தொகுதி மறுவரையறை வரும், புதியக் கல்விக்கொள்கை வரும். ஆகவே, பா.ஜ.க. - அ.தி.மு.க-வை வீழ்த்துவதற்கான போரில், நம் இளைஞர் அணி முன்வரிசையில் நின்று களம் காண வேண்டும்.

வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில், குறைந்தது 200 தொகுதிகளில் திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணி வெற்றிபெற வேண்டும் என்று தலைவர் அவர்கள் இலக்கு கொடுத்துள்ளார். அதற்கு ஒரு தொடக்கமாக இந்த சைதாப்பேட்டை, வேளச்சேரி தொகுதி இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

கழகத்திற்காக உழைத்தீர்கள் என்றால் நிச்சயம் இன்னும் 15 வருடங்களுக்கு பிறகு, அண்ணன் மா.சுப்பிரமணியன் போல, பிரபாகர் ராஜா போல மிகப்பெரிய பொறுப்புகளில் நிச்சயம் இருப்பீர்கள், அதற்கு நான் பொறுப்பு.

புதிய வட்ட மற்றும் பாக இளைஞர் அணி அமைப்பாளர்- துணை அமைப்பாளர்கள் உட்பட இங்கே வருகை தந்திருக்கும் அத்தனைப்பேரின் பணிகளும் சிறக்கட்டும். வெல்வோம் இருநூறு, படைப்போம் வரலாறு என்றுச் சொல்லி விடைபெறுகிறேன்.”

இவ்வாறு கழக இளைஞர் அணிச் செயலாளரும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.