Tamilnadu

”வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் (SIR) தோல்வியில் முடிவடையும்” : தி இந்து நாளிதழ் ஆய்வுக் கட்டுரை!

How inclusive is the Election Commission of India's special revision exercise? எனும் தலைப்பில் தி இந்து நாளிதழ் ஆய்வுக் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. அசாம், கேரளா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்காளம் மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களில் LOKNITI-CSDS அமைப்புடன் இணைந்து நடத்திய ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில், பீகாரில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தம் வெறும் வாக்காளர் பட்டியலைப் புதுப்பிப்பதுடன் நிற்காமல், நாடு தழுவிய ஒரு விவாதத்தை கிளப்பி உள்ளதாகவும், வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புக்கு அடையாளச் சான்று மற்றும் குடியுரிமைச் சான்று, குறிப்பாக பிறப்புச் சான்றிதழ் தேவைப்படுவது குறித்து விவாதங்கள் நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பீகாரைக் போன்று வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை மற்ற மாநிலங்களுக்கும் விரிவுபடுத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதால், இப்பிரச்சினை நாடு தழுவிய முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது என்றும் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கையால், மிக அதிகமான மக்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருவதை சுட்டிக்காட்டி உள்ள இக்கட்டுரை, ஜனநாயக நாட்டின் வாக்காளர் பட்டியலில் தகுதி உள்ள அனைவரையும் சேர்ப்பது, சுதந்திரமான- நியாயமான தேர்தல் முறையின் மிக அடிப்படையான தேவை என்றும் தெரிவித்துள்ளது.

சமூக-பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் கொண்ட நாட்டில், தேர்தல் ஆணையம் கோரும் ஆவணங்களை வாக்காளர்களால் அளிக்க முடியாது என்றும் நாட்டின் நிர்வாக உள்கட்டமைப்பு, வரலாற்று பதிவுகளை பாதுகாக்கும் முறை, கல்வியறிவு, மக்களின் விழிப்புணர்வு ஆகியவற்றில் உள்ள வேறுபாடுகள் மற்றும் குடிமக்களுக்கு ஆவணங்களை எளிதாகக் கிடைக்கச் செய்வதில் உள்ள குறைபாடுகள் உள்ளிட்ட காரணங்களால் சாதாரண மக்கள் தங்களுக்கு தேவையான ஆவணங்களை பெறுவதில் மிகுந்த சிரமங்கள் உள்ளது என்றும் தி இந்து நாளிதழ் சுட்டிக்காட்டி உள்ளது.

இவ்விவகாரம் குறித்து ஊடகங்களில் தொடர் விவாதம் நடைபெறும் நிலையிலும், மூன்றில் ஒரு பகுதி மக்கள் மட்டுமே, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு தேவையான ஆவணங்கள் குறித்து அறிந்துள்ளது ஆய்வுகளில் தெரியவந்தள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. பாதிக்கும் மேற்பட்டவர்களிடம் தங்களின் பிறப்புச் சான்றிதழ் இல்லை, 5 பேரில் 2 பேருக்கு இருப்பிடச் சான்றிதழும், சாதிச் சான்றிதழும் இல்லை, தேர்தல் ஆணையத்தால் கட்டாயப்படுத்தப்படும் 11 ஆவணங்களில் ஒன்றுகூட 5 சதவீதம் மக்களிடம் இல்லை என்பதை சுட்டிக்காட்டி உள்ள தி இந்து நாளிதழ், தேர்தல் ஆணையத்தின் நிபந்தனையின்படி, 1987-க்குப் பிறகு பிறந்தவர்கள் தங்கள் பெற்றோரில் குறைந்தபட்சம் ஒருவரின் பிறப்புச் சான்றினை வைத்திருக்க வேண்டிய கூடுதல் சுமை உள்ள நிலையில், பெற்றோரின் பிறப்புச் சான்றிதழ்கள் மூன்றில் இரண்டு பகுதி மக்களிடம் இல்லை என்பது ஆய்வுகளில் உறுதியாகி உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும், தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கையால், லட்சக்கணக்கானவர்கள், குறிப்பாக பின்தங்கிய பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் எச்சரித்துள்ள தி இந்து நாளிதழ், இந்த ஆவணங்களை பெறுவது ஏழை எளிய மக்களுக்கு பெறும் சுமையாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது. தற்போது ஆதார் அட்டை மட்டுமே நாடு முழுவதும் அனைவரிடமும் உள்ள ஆவணம் என்றும், ஆனால் தேவையான ஆவணங்களின் பட்டியலில் இருந்து இதனை தேர்தல் ஆணையம் நீக்கி விட்டது முறையல்ல என்பதை சுட்டிக்காட்டி உள்ள தி இந்து நாளிதழ், தகுதி வாய்ந்தவர்கள் அனைரும் வாக்காளர் பட்டியலில் இடம்பெறுவது ஜனநாயகத்தின் அடிப்படையாகும் எள்றும் தெரிவித்துள்ளது.

Also Read: “இது கூட்டாட்சி இந்தியாவுக்கு அழகல்ல” - மோடி அரசை சாடி கட்டுரை தீட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !